இலக்கியச் சந்திப்பின் அரசியல் – ஈழத்திலிருந்து ஒரு கண்டனக் குரல்

0
705

deepa“இலக்கிய சந்திப்பு” என்ற போர்வையில் அண்மையில் யாழப்பாணத்தில் நடந்த இனஅழிப்பு அரசின் கைக்கூலிகளின் சந்திப்பு குறித்து தமிழகத்திலிருந்து வெளிவரும் பிரபல இலக்கிய சமூக ஏடான “உயிர்மை” இற்கு தாயகத்திலிருந்து தீபச்செல்வன் எழுதிய பதிவு இது. நடந்த – நடக்கும் இன அழிப்பிற்கு வெள்ளையடிக்கும் இந்த கைக்கூலிகளை தமிழ் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

இலக்கியச் சந்திப்பின் அரசியல் – ஈழத்திலிருந்து ஒரு கண்டனக் குரல்

“வெளிநாட்டிலிருந்து வந்து இலக்கியச்சந்திப்பெல்லாம் நடத்துறாங்களே உங்கட நாட்டில் நிலமை சரியாகிவிட்டதா?” என்று தமிழகத்திலிருந்து ஒரு நண்பர் கேட்டார். “தமிழகத்திலிருந்து உன்னிக்கிருஷ்ணன் வந்து கச்சேரி நடத்திய பொழுது மட்டுமல்ல, முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடந்தேறியவுடனேயே நிலமை சுமுகமாகிவிட்டது” என்று அவருக்கு நான் பதில் அளித்தேன். இலங்கை அரசை ஆதரித்தால் அல்லது இணைந்தால் எந்த சந்திப்பும் நடத்தலாம். நடிகை அசினைப் போல இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவியுடன் யாழ்ப்பாணம் வரை வரலாம். ஆனால் நடிகை அசின் இலங்கை அதிபருக்காகவோ அவரது அரசியலுக்காகவோ ஏதுவும் பேசவில்லை. ராஜபக்சவின் மனைவியுடன் இணைந்து வந்தார் என்பது மட்டுமே நடந்தது.

‘எங்கள் நிலத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘வாழ்க்கை’யை மறைக்கவும் உண்மையையும் மூடி மறைக்கவுமே இலக்கியச்சந்திப்பு நடந்தது’ என்பதை நான் ஈழத்தில் இருந்துகொண்டே சொல்லியிருக்கிறேன். இலக்கியச் சந்திப்பைப் பொறுத்த வரையில் இலங்கை அரசின் ஆதரவுடனே அந்நிகழ்வு நடத்தப்பட்டது என்பது எல்லோருக்குமே தெரியும். வெளிநாடுகளில் உள்ள பல நண்பர்கள் ‘இலக்கியச்சந்திப்பை நீ எதிர்க்காதே அவர்கள் அரசின் ஆட்கள்’ என்று வெளிப்படையாகவே எச்சரித்தார்கள். நான் எனது நிலத்தில் வாழ்ந்துகொண்டே சிங்கள அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துக்கொண்டே இருக்கிறேன். எனவே இலக்கியச் சந்திப்பு என்கிற பெயரில் எமது மண்ணில் செய்யப்பட்ட அநீதி குறித்து குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில், ஜெர்மனியில் வசிக்கும் ஈழக் கவிஞரான மட்டுவில் ஞானக்குமரனின் புத்தகம் ஒன்றுக்கு அறிமுக நிகழ்வொன்றை நடத்தினோம். அந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி வைக்கும்படி என்னிடம் கேட்கப்பட்டது. தினக்குரல் பத்திரிகையில் மாத்திரம் புத்தக வெளியீடு பற்றிய செய்தி வந்திருந்தது. நான் அறிமுகப்படுத்தத சபைக்கு முன்பாகச் செல்லும் பொழுது இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் வந்துவிட்டார்கள். ‘மட்டுவில் ஞானக்குமரன் என்பது அவரது பெயர் அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது ஜெர்மனியில் வாழ்கிறார்’ என்பதைத் தவிர வேறு எதையும் என்னால் பேச இயலவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிற்பாடு விடைபெற்றுக்கொள்ளாமலே ஞானக்குமரன் பேரூந்து எடுத்துச் சென்று விட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கவிஞர் கு. றஜீவன் யாழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும்பொழுது சைவசித்தாந்தம் தொடர்பான ஆய்வை செய்தார். அந்த ஆய்வை பின்னர் நுலாக வெளியிட்டார். யாழ் நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் “பெரியபுராணம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியீட்டு மண்டபத்திற்கு வந்து விசாரித்த இராணுவப்புலனாய்வுத்துறையினர் அந்த புத்தகத்தில் ஒரு பிரதியையும் வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நாங்கள் வாழும் வாழ்க்கையை குறித்து எழுதி, அதை வெளியிடவோ அது குறித்து விமர்சனக்கூட்டமோ சந்திப்போ நடத்த முடியாத நிலமையே இங்கு காணப்படுகிறது. சில புத்தகங்கள் தொடர்பான உரையாடல்கள் இலக்கிய நண்பர்களின் வீடுகளில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த சந்திப்புக்கள் எழுதக்கூடிய சிலருக்கு இடையில் மாத்திரம் நிகழ்ந்ததுடன் அதை ஒரு ஊடகத்தில் வெளியிட்டு தொடர்ச்சியாக நடத்தக் கூடிய சூழல் இல்லை. சயந்தனின் ஆறாவடு அறிமுகம், கர்ணனின் இரண்டு நூல்கள் அறிமுகம் என்பன இரகசியச் சந்திப்புக்களாக நடைபெற்றிருக்கின்றன. ஆனால் கர்ணனின் புத்தகப் பிரதிகள் இனந்தெரிய நபர்களினால் பறித்துச் செல்லப்பட்ட சம்பவமும் அப்பொழுது நடந்திருந்தது.

அண்மையில், கவிஞர் றஷ்மியின் இரண்டு கவிதை நூல்கள் பற்றிய விவாதம் கவிஞர் நிலாந்தனின் வீட்டில் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல படைப்பாளிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் அரச பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் வந்திருக்கிறார். ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயக்கட்சியைச் சேர்ந்த சந்திரகுமார் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினராக இருக்கிறார். சந்திரகுமாரையே ஒரு படைப்பாளியாக்கக்கூடிய ஒரு கவிஞரால் இலக்கியச் சந்திப்பு நடத்த முடியாதா என்ன? சந்திரகுமார் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார் என்று கேள்விப்பட்ட பொழுது இலக்கியச்சந்திப்பில் நாவல் பற்றிய அல்லது அரசியல் பற்றிய விவாதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளக்கூடுமோ என நான் நினைத்தேன்.

தாயகத்தில் இலக்கியச் சந்திப்பை முன்னின்று நடத்திய பெருமை ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான கருணாகரனையே சாரும். அவர் இல்லாவிட்டால் இந்தச் சந்திப்பு நடந்திருக்காது. நான் இலக்கியச்சந்திப்புக்குச் செல்லவில்லை. ஆனால் இலக்கியச் சந்திப்பு பற்றிய அறிவித்தல்களிலும் புகைப்படங்களிலும் கருணாகரனைக் கண்டேன். டக்ளஸ் தேவானந்தாவுடனும் சந்திரகுமாருடனும் இணைந்து செயற்படுவது குறித்துக் கேட்டால் கருணாகரன் தொடர்ந்து மறுப்பதுபோல இலக்கியச் சந்திப்பையும் தான் நடத்தவில்லை என்று கூறவும் கூடும்.

இலக்கியச்சந்திப்பு நடக்கும்பொழுது உடனுக்குடன் செய்திகளை பரபரப்பாக வெளியிட்டுக்கொண்டிருந்தார் சோபாசக்தி. கருணாகரனும் சோபாசக்தி போன்றவர்களும் இணைந்தால் இலக்கியச் சந்திப்பு சாத்தியமே.

புலத்தில் நடந்த இலக்கியச் சந்திப்புக்கள் பலவும் புலி எதிர்ப்பு இலக்கியச்சந்திப்புக்களாகவே நடந்திருக்கின்றன. எனினும் புலி எதிர்ப்பு அவதூறுகள்மீது பல படைப்பாளிகள் தமது விமர்சனங்களையும் கருத்துக்களையும் கூறியிருக்கிறார்கள். 2008இல் கனடாவில் நடந்த இலக்கியச் சந்திப்பில் தமிழ்நதி கலந்துகொண்டிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த பெண் போராளிகளை ‘மொக்குப் பெட்டையள்’என்று விளித்த நிர்மலா ராஜசிங்கமும் கலந்துகொண்டிருந்தார். அ.யேசுராசா இலண்டனில் நடந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து இலண்டனுக்கு அழைக்கப்பட்ட யேசுராசா, தான் வாழும் யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கியச்சந்திப்புக்கு செல்லாமல் புறக்கணித்தது ஏன்? இலக்கியச்சந்திப்பை நடத்தும் ஆட்கள் கடுமையான புலி எதிர்ப்பாளர்கள் என்பதையும் அதன் மூலம் இலங்கை அரசுக்கு ஆதரவு தேடுபவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பதையும் பல தசாப்தங்களாக இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அ.யேசுராசா அறிந்திருக்ககூடும். மேலும், இலண்டனில் நிலவிய கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டுச் சூழல் யாழ்ப்பாணத்தில் இல்லை என்பதை அவர் முற்றிலுமாக அறிந்திருந்தார்.

இலக்கியச் சந்திப்புக்களில் புலி எதிர்ப்பு வன்மம் காரணமாக எல்லாக் கருத்துக்களையும் பகிரக்கூடிய சுதந்திரம் வழங்கப்படுவதில்லை. “சாத்திரியையும் யமுனா ராஜேந்திரனையும் தமிழ்நதியையும் ஏன் அழைத்தீர்கள்?” என்று கேட்டு உள்ளுக்குள் முரண்படக்கூடிய பலர் இலக்கியச் சந்திப்பு ஒழுங்கமைப்பாளர்களாக இருக்கிறார்கள். முன்பு விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதாக புலம்பிய இத்தகையோர்தான், விடுதலைப் புலிகளுக்குச் சார்புடையவர்கள் என்று கருதக்கூடியவர்களின் கருத்து வெளிப்பாட்டினை மறுக்கிறார்கள். அது கருத்துச் சுதந்திர மறுப்பெனில் இதன் பெயர் என்ன? புலம்பெயர் நாடுகளில் புலிகளை எதிர்த்து அதையே ஒரு வன்ம யுத்தமாக சிங்களப் பேரினவாதத்திற்கு இணையாக செய்யக்கூடியவர்கள் தாயகத்தில் அதை செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஒரே கத்தி இரண்டு உறைகளில் மாற்றி மாற்றி வைக்கப்படுகிறது. அவ்வளவுதான். சோபாசக்தி, ராகவன், நிர்மலா ராஜசிங்கம் இப்படியானவர்கள் இணைந்தால் இலங்கையில் ஒரு இலக்கியச் சந்திப்பை எந்தவிதத் தடையுமின்றி நிச்சயமாக நடத்த முடியும்.

புலிகள் மீதான நியாயமான விமர்சனங்களைச் செய்யும் உரிமை எல்லோருக்குமுண்டு. ஆனால், இங்கு புலி எதிர்ப்பாளர்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் புலியெதிர்ப்பு அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனால் பாதிக்கப்படுவது தமிழ்மக்களானாலும் அதைக்குறித்து எந்தக் கவலையும் இல்லை. அதற்காக இலங்கை அரசிடம் தாமாகவே சென்று மண்டியிடக்கூடியவர்கள் அவர்கள். அப்படிச் செயற்படுபவர்களின் கருத்தும் செயற்பாடும் எவ்வளவு மோசமானது? எவ்வளவு அநீதியானது? புலி எதிர்ப்பாளர்களில் பலர் அரச ஆதரவாளர்கள் என்பதற்கு இலக்கியச்சந்திப்புத்தான் சாட்சி. புலத்தில் இருந்துகொண்டு அதிகாரத்தை எதிர்க்கிறோம் என்பவர்களின் முகம் இதன்மூலம் அம்பலமாகியிருக்கிறது.

யுத்தம் முடிந்தவுடன் லண்டனில் உள்ள ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியனும், மருத்துவர் நடேசனும் அவுஸ்ரேலியாவில் உள்ள முருகபூபதியும் வந்தார்கள். யுத்த நாட்களில் சிங்கள அரசின் தொலைக்காட்சிகளில் என்ன காட்டுகிறார்கள் என்பதை தவறாமல் பார்த்துக்கொண்டு வந்தேன். ஒருநாள் ரூபவாகினி சிங்களத் தொலைக்காட்சியில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணிம் பேசுகிறார்: ‘பயங்கரவாதி’களின் பிடியிலிருந்து மக்களை மீட்டு சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இலங்கை ஜனாதிபதி வைத்திருக்கிறார்’ என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அவரால் குறிப்பிடப்பட்ட சுதந்திரந்தான் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் இன்னபிற தமிழ் இடங்களிலும் துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருக்கிறது.

இவ்வாறு இலங்கை அரசின் அழைப்பில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இயங்க வந்த ராஜேஸ்வரி உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணத்திற்கு இலக்கியவாதிகளாக வந்தனர். அப்பொழுது ராஜேஸ்வரி சண்முகத்திடம் நான் நேரடியாகவே கேட்டேன்: “முள்வேலி முகாங்கள் சுவர்க்கம் நற்சான்றிதழ் வழங்குவதற்காக உங்களை இலங்கை அரசு அழைத்திருக்கிறது. முள்வேலி முகாம் சுவர்க்கம் என்று கருணாகரனோ அல்லது முள்வேலிக்குள் இருந்த வேறு எழுத்தாளர்களோ சொல்லியிருக்கலாமே? எதற்காக நீங்கள் அங்கிருந்து அழைக்கப்பட்டு சொல்ல வைக்கப்படவேண்டும்?”என்று கேட்டேன். உடனே, கோபத்தோடு “நான் எழுதியதை நீ படித்தாயா? அப்பிடி இப்பிடி…” என்று கொந்தளித்தாரே தவிர நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை.

‘இலங்கையில் இலக்கியச்சந்திப்பை நடத்த முடியாது என்பதைப் பொய்யாக்கி இலங்கையிலும் நடத்தலாம்’ என்று இலக்கியச் சந்திப்புக்கு வந்த விஜி பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். இவர்களின் பிரச்சினை இலங்கையில் ஒரு இலக்கியச்சந்திப்பை நடத்த வேண்டும் என்பதல்ல, இலக்கியச்சந்திப்பை இலங்கையில் நடத்துவதன் மூலம் இலங்கைஅரசானது கருத்துச் சுதந்திரத்திற்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் இடமளிக்கிறது என்று காட்டி இலங்கை அரசை குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதேயாகும்.

உண்மையில் உங்களால் ஒரு இலக்கியச்சந்திப்பை மட்டுமல்ல பல இலக்கியச் சந்திப்புக்களையும் நடத்த முடியும். ஏனெனில் உங்களைப்போலவே டக்ளஸ் தேவானந்தாவுக்கும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. யுத்தம் முடிந்தவுடன் அரசு பல வகையான கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது. தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாடல்களை பாடிய பாடகர் ஒருவரை அழைத்து வந்து யாழப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தி டக்ளஸ் தேவானந்தா கட்டியணைத்து பரிசு வழங்கினார். அ.மார்க்ஸ், போன்றவர்கள் இங்கு வந்த பின்னர் தமிழக இதழ்களில் பரபரப்புக் கட்டுரைகளை எல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

இலக்கியச் சந்திப்பு மிகச் சிறப்பாக நடந்தது என்று சந்திப்புக்கு வந்த சிலர் முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் போட்டிருக்கிறார்கள். உண்மையில் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை அரசும் அரச படைகளும் அமைச்சர் டக்ளஸ் போன்றவர்களும் ஏற்பாடு செய்து நடத்திய நிகழ்ச்சிகள் போல இலக்கியச்சந்திப்பும் மிகவும் சிறப்பாகவே நடந்திருக்கிறது. இலங்கை அரசின் படைப்புச் சுதந்திர முகத்தை காட்டும் இலக்கை இலக்கியச் சந்திப்பு அடைந்திருக்கிறது.

இலக்கியச் சந்திப்பில் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் இந்த நிகழ்வை புறக்கணித்திருக்கிறார்கள். இலக்கியச் சந்திப்புக்கு வராதவர்களைப் பட்டியிலிடுவது அவர்களுக்கு ஆபத்தானது. வெளிநாடுகளில் உள்ள புலியெதிர்ப்பு எழுத்தாளர்களே பெருமளவில் வந்து அரங்கை நிறைத்திருக்கிறார்கள். இவர்கள் எதைச் செய்தேனும் தாயகத்தில் வந்து இலக்கியச் சந்திப்பு நடத்திவிட்டு அதை வைத்து புலி எதிர்ப்பு புராணம் பாடும் நோக்கை கொண்டவர்கள். இந்த சந்திப்பில் சில முஸ்லீம் எழுத்தாளர்களும் மலையக எழுத்தாளர்களும் கலந்து கொண்டமை வருத்தத்திற்குரியது. புலி எதிர்ப்பாளர்களின் அரசியலுக்கு அவர்கள் பலி ஆகிவிட்டார்கள்.

இதில் கலந்து கொண்ட சில எழுத்தாளர்கள் தம்மை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டே மாலைக்கும் விருதுக்கும் அலைபவர்கள். நாட்டில் ஈழத் தமிழனம் படுகொலை செய்யப்பட்டு இரத்த ஆறு பாய்ந்த பொழுதும் இவர்கள் வேறு ஒரு உலகத்தைப் பற்றி எழுதிக்கொண்டே இருந்தவர்கள். அரசின் விருதுகள், நலன்கள், பாராட்டுக்களைப் பொற்றவர்கள். இலக்கியத்தை வளர்ப்பது மட்டுமே தமது நோக்கம் என்று சொல்லிக்கொண்டே பிழைப்பவர்கள். இலக்கியச் சந்திப்பில் காணநேர்ந்த வேறு சிலர் புலிகளின் இதழ்களில் போராளி போல எழுதிவிட்டு அரச இதழ்களில் அரச அபிமானியாக எழுதக்கூடியவர்கள். இப்படிப்பார்க்கையில் இந்தக்கூட்டத்தில் அரைவாசிப்பேர் இலக்கியவாதிகள் என்று சொல்லிப் பிழைப்பவர்களே தவிர படைப்பாளிகள் அல்ல. ஒரு படைப்பாளிக்குரிய சமூகப் பொறையும் நீதியும் இவர்களிடம் இல்லை.

இலக்கியச் சந்திப்புக்கு வந்தவர்கள் இரண்டு வகையினர். இலக்கியவாதிகள் என காட்டி பிழைப்பவர்கள் ஒரு அரைவாசிப்பேர். மற்றையவர்கள் புலம்பெயர்ந்த புலி எதிர்ப்பாளர்கள். ஒரு கொலை அரசால் எதையும் செய்ய முடியும் என்பதன் வெளிப்பாடே இலக்கியச் சந்திப்பு. உலகில் உள்ள உன்னதமான படைப்பாளிகள் அதிகாரத்திற்கும் எதிராகவே நிற்பார்கள். ஆனால் இவர்கள் புலிகளுக்கு மட்டுமே எதிராக நிற்பார்கள். அரசுக்கு இவர்கள் ஆதரவானவர்களே.

இலக்கியச்சந்திப்பு ஏற்பாட்டாளர்கள் இறுதி அரங்கில் சில சிங்களப் படைப்பாளிகளை அழைத்து இலங்கை அரசுக்கு எதிராக கொஞ்சம் பேச வைத்திருக்கிறார்கள். இலக்கியச்சந்திப்பை புனிதப்படுவதற்காக அதை சோபாசக்தி முகப்புத்தகதில் பகிர்ந்து கொண்டிருந்தார். இலக்கியச்சந்திப்பு வெற்றியளித்திருப்பதாக மகிழச்சியடைந்த தமிழக கவிஞர் லீனா மணிமேகலை இப்படியே தொடரும் எனில் இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் சாத்தியம் என்று தெரிவித்திருக்கிறார்.

இரண்டு நாட்கள் சுற்றுலாப் பயணத்தில் வந்து அதுவும் இலக்கியச் சந்திப்புக்காக வந்து இவ்வாறான ஒரு கருத்தை லீனா மணிமேகலை சொல்ல வேண்டிய தேவை என்ன? ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக கருத்துச் சொல்வதற்காகவே இலங்கை வரும் அ. மார்க்ஸ் போன்றவர்களின் அணுகுமுறையுடன் சேர்ந்ததே இதுவும். புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து புலி எதிர்ப்பு வேலைகளைச் செய்பவர்களுக்கும் லீனா மணிமேகலை போன்றவர்களுக்கும் நாம் ஒன்றைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நாங்கள் கருணாகரன்கள் போல வாழவில்லை. நாங்கள் நாங்களாக வாழ விரும்புகிறோம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கும் சிங்களப் பேரினவாதமும் உலக வல்லாதிக்க கூட்டணியும் மட்டுமல்ல காரணம், உங்களது புலி எதிர்ப்புச் செயற்பாடுகளும் காரணமே. இப்பொழுது புலிகள் இல்லை. நாங்கள் உறுதியாகச் சொல்லுகிறோம். இங்கு வாழ வேண்டுமெனில் கருணாகரன்கள் போல யாரும் வாழ முடியாது. எங்களுக்கு எந்த அரச எம்.பியும் உறவினரும் நண்பரும் அல்ல. எங்களுக்கு எந்த அமைச்சரும் உறவினரும் நண்பரும் அல்ல. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் எந்த அரசியலின் கீழ் எந்தத் தயவின் கீழ் வந்து சென்றீர்களோ அந்த தயவில் நாங்கள் வாழ விரும்பவில்லை. நாங்களாய் வாழும் வாழ்க்கை குறித்து எங்கள் வாழ்வு பற்றிய இலக்கியம் குறித்து நேர்மையாக நாங்கள் பேசும் சூழல் எங்களுக்கு வேண்டும்.

அதைச்செய்தால் எங்கள் வீட்டு நாய்கள் கொல்லப்பட்டு படலையில் தொங்கவிடப்படுகின்றன. இனந்தெரியாவர்கள் என்ற போர்வையில் தாக்குதல் நடப்படுகிறது. காணாமல் போகிறோம். கழிவு எண்ணெய் எங்கள்மீது ஊற்றப்படுகிறது. நாங்கள் இப்படியொரு அவல வாழ்க்கை வாழ்க்கையில் நீங்கள் சுதந்திரமாக இலக்கியச் சந்திப்பு நடத்தியது எப்படி?

உங்கள் அரசியலையும் உங்கள் அநீதியையும் புறக்கணித்து இந்த ஈழ மண்ணிலிருந்து கண்டித்தவனாகச் சொல்லுகிறேன். உங்கள் புலி எதிர்ப்பு வன்மத்திற்காகவும் உங்கள் நலனுக்காகவும் உங்கள் அரசியலுக்காவும் நீங்கள் எங்கள் வாழ்க்கையையும் நசுக்காதீர்கள். ஏனெனில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையே இன்றெமது போராட்டம்!

தீபச்செல்வன்