இலங்கைதீவின் இனப்பிரச்சினையில் தேர்வுகள் அற்றநிலையில் பன்னாட்டு சமூகம் -புரட்சி (தாயகம்)

0
668

Pulithevan_TC_0715ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில் அனைத்துலக சமூகம் சிறீலங்கா அரசுடன் இணைந்து எவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றியிருந்தது என விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும், இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டத்திற்கு அமைவாக சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் சிங்கள இராணுவத்தால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டவருமான காலம் சென்ற சி.புலித்தேவன் அவர்கள் புரட்சி என்ற பெயரில் 2007 – 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதிய பத்தியை தற்போதைய காலத்தின் தேவை கருதி ஈழம் ஈ நியூஸ் தனது வாசகர்களுக்கு தருகின்றது.

சிங்கள அரசுகள் காலத்திற்கு காலம், தமது தேவைக்கேற்றபடி அமைதித் தீர்விலே மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களாகவும் கௌதம புத்தரின் அகிம்சை, சமாதானம், நல்லிணக்கம் போன்ற அன்புவழிக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களில் தாம் முதன்மையானவர்களாகவும் உலகத்திற்கு நாடகமாடி வருவது வழமையான ஒன்றாகும்.

அதாவது தமக்கெதிராக பன்னாட்டு சமூகமோ அல்லது பிராந்திய வல்லரசுகளோ இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான நியாயமான தீர்வினை முன்வைக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போதும், உள்நாட்டிலே அரசியல் சிக்கல்கள் கொந்தளிப்புக்கள் ஏற்படும்போதும் அல்லது பாரிய பின்னடைவுகளை படைத்துறை ரீதியாக எதிர்கொள்ளும்போதும் பேச்சுவார்த்தை நாடகத்தினை சிங்கள அரசுகள் அரங்கேற்றுவது வழக்கமாகும்.

இதேபோன்று சிங்கள அரசுகள் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஒவ்வொரு தடவையும் தாம் குழப்பியடிக்கும்போது உடனடியாகவே அனைத்துக்கட்சி மகாநாடு, வட்டமேசை மகாநாடு என்று பல்வேறு மகாநாடுகளை கூட்டி காலத்தை தேவையானளவிற்கு இழுத்தடித்து தமது அரசியல் மற்றும் படைத்துறை நெருக்கடிகள் தணியும் வரைக்கும் அல்லது பன்னாட்டு சமூகத்தின் அழுத்தங்கள் குறையும் வரைக்கும் அமைதி விரும்பிகளாக நடிப்பதில் சிங்களத் தலைவர்களும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் மிகவும் திறமைசாலிகள்.

திம்பு பேச்சுவார்த்தையின் போது அனைத்து தமிழர் தரப்பும் ஒருமித்த குரலில் தாயகம், தேசியம் மற்றும் தன்னாட்சி என்பனவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான தீர்வு அமைய வேண்டும் என்று வலியுறுத்தியபோது பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே முறித்துக்கொண்ட அப்போதைய ஜெயவர்த்தன அரசு உடனடியாகவே அனைத்துக் கட்சி மகாநாட்டை கொழும்பில் கூட்டியது. நீண்ட காலந்துரையாடல்களுக்கும் அரசியல் ஆய்வுகளுக்கும் பிறகு உப்புச் சப்பற்ற மாவட்டசபை என்ற எலும்புத்துண்டை தமிழ் மக்களுக்கு தீர்வாக முன்வைத்தது.

இதேபோன்று சந்திரிகா அம்மையார் சமாதான தேவதையாக 1994 ஆம் ஆண்டு பதவியேற்ற உடனேயே பேச்சுவார்த்தை என்ற பழைய நாடகத்தையே அரங்கேற்றினார். விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உயர்மட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு சந்திரிகா அரசானது பொறியியலாளர்களையும் வங்கி முகாமையாளர்களையும் அனுப்பிவைத்தது. இப்பேச்சுவார்த்தையும் எதுவித முன்னேற்றமும் இல்லாது சில மாதங்களிலே முறிவடைந்துவிட்டது.

இதன்பின்பு சந்திரிகா அரசு சமாதானத்திற்கான போரினை தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இனப்படுகொலை செய்தும் அகதிகளாக இடம்பெயர வைத்தும் எமது மக்களுக்கு அவலங்களை ஏற்படுத்திக்கொண்டு மறுபக்கத்தில் அனைத்துக் கட்சி மாகாநாடு என்ற பழைய தந்திரோபாயத்தினை பன்னாட்டு சமூகத்தினை ஏமாற்றுவதற்காக பயன்படுத்தியது.

இக்குழுவினர் தீர்வுப்பொதி என்று அரைகுறையான வரைபொன்றை சமர்ப்பித்தனர். சிங்களப் பேரினவாதிகள் சந்திரிகா அரசு தமிழீழத்திற்கான நகலை முன்வைத்திருப்பதாக உடனடியாகவே கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் காரணமாக இவ்வரைபின் கை, கால், தலை என அதன் அங்கங்கள் வெட்டப்பட்டு அங்கவீனமாக்கப்பட்டது. இறுதியில் சந்திரிகா அம்மையாரின் தீர்வுப்பொதி என்ற இந்த முண்டத்தை 2000 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றத்தில் கொளுத்தி அதற்கு ஈமக்கிரியைகளையும் செய்துவைத்தனர்.

இதன்பின்பு தற்போது நோர்வேயின் அனுசரணையுடன் பன்னாட்டு சமூகத்தின் ஆதரவுடன் இடம்பெறும் சிங்கள அரசிற்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் தமது முந்தைய சிங்கள அரசியல் தலைவர்கள் பயன்படுத்திய அதே தந்திரோபாயங்களையே மகிந்த அரசும் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றது.

போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட 2002 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதிகளில் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலே பாரிய குற்றமாக கருதப்பட்டு கண்காணிப்புக்குழுவினரும் நோர்வே அனுசரணையாளர்களும் இரண்டு தரப்பினர்களுடன் அவசரமான கலந்துரையாடல்களை மேற்கொள்வார்கள்.

ஆனால் தற்போது சிறிலங்கா அரசானது தனது முப்படைகளையும் பயன்படுத்தி பாரியளவில் ஆட்லறிகள், மோட்டார்கள் என்பனவற்றை பயன்படுத்தி வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு தமிழர் தாயகம் எங்கும் மனித அழிவுகளையும் சொத்துக்களுக்கு சேதங்களையும் தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற போதிலும் பன்னாட்டு சமூகமோ அல்லது நோர்வே அனுசரணையாளர்களோ இதனைத் தடுப்பதற்கு வக்கில்லாமல் இருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபு சிறிலங்கா அரசினால் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படையாகக்கூட ஏற்க மறுத்தமை, சுனாமி பொதுக்கட்டமைப்பு சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தினால் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டமை மற்றும் கடந்த வருடம் ஜெனிவாவில் இடம்பெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தமை ஆகிய நிகழ்வுகளினால் அமைதி முயற்சிகளை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் நோர்வே அனுசரணையாளர்கள் திணறிக்கொண்டிருக்கின்றார்கள். சிறிலங்கா அரசோ போர் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை கொடுப்பதோடு பன்னாட்டு சமூகத்தினையோ அல்லது நோர்வே அனுசரணையாளர்களையோ ஒரு பொருட்டாகவே மதித்து நடத்துவதற்கு மறுத்து வருகின்றது.

puliththevan
இவ்வாறான சூழ்நிலையில்தான் கடந்த மாத நடுப்பகுதியில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜெனிவாவிற்கு பயணம் மேற்கொண்டார். ஜெனிவாவில் நோர்வே பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சமாதான முன்னெடுப்புகளுக்கு தலைமை தாங்குபவருமான எரிக் சூல்கெய்ம் மகிந்த குழுவினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதன்போது நோர்வே அனுசரணையாளர்கள் விடுதலைப் புலிகளை கிளிநொச்சிக்கு சென்று சந்திக்க வேண்டியதன் அவசியத்தை நோர்வே குழுவினர் விளங்கப்படுத்தியதுடன் அதற்கான அனுமதியினை வழங்குமாறு மகிந்தவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. உடனடியாகவே மகிந்த இதனை நிராகரித்ததோடு இவ்வாறான புனித தல யாத்திரைகளை நோர்வேயினர் கொழும்பிற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை என்று முகத்திலடித்தது போன்று தெரிவித்துள்ளார். இறுதியில் இக்கலந்துரையாடலானது எதுவித பிரயோசனமோ முன்னேற்றமோ இன்றி முடிவடைந்தது.

இதன்பின் கடந்த மாதம் 26 ஆம் திகதி ஒஸ்லோவில் கூடிய நன்கொடையாளர்கள் மகாநாட்டிலே ஜெனிவாவில் எரிக்-மகிந்த ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலே பிரதான விடயமாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் சிறிலங்கா அரசிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு ஐ.நா மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்கள் மக்களிடம் செல்வதற்கு சிறலங்கா அரசு தடை விதிக்கின்றமை, பன்னாட்டு நிறுவன பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றமை மற்றும் தடயங்களை மறைக்கின்ற முயற்சிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசிற்கு கடுமையான அழுத்தங்களும் நெருக்குதல்களும் கொடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான் மற்றும் நோர்வே ஆகிய நான்கு நன்கொடை நாடுகளினாலும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த விடயங்களை சிறிலங்கா அரசிற்கு தெரியப்படுத்;துவதற்கு ஜேர்மன் தூதுவரும் கொழும்பிலே இருக்கின்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கான தூதுவர்களுக்கு தற்போது தலைமை தாங்குபவருமான ஜோர்கன் வேர்த் பணிக்கப்பட்டுள்ளார்.

நோர்வேயில் இலங்கைத் தீவின் நன்கொடையாளர்களின் மகாநாடு முடிவடைந்த கையோடு அமைதி முயற்சி மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வுகளை உருவாக்குதல் தொடர்பான ஒஸ்லோ அமைப்பினது வருடாந்த மகாநாடு கடந்த மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதிவரை ஒஸ்லோவில் இடம்பெற்றது. இந்த மகாநாடு தொடர்பாக பெரிதாக செய்திகள் எதுவும் வெளி வராததும் இம்மகாநாடு நடைபெற்றது தொடர்பாக பலருக்குத் தெரியாமல் இருப்பதும் உண்மையிலே வியப்புக்குரியது.

இம் மகாநாட்டிலே ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் விசேட உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அத்துடன் உலகளாவிய ரீதியிலே முரண்பாடுகளை அமைதி வழியில் தீர்ப்பதில் அனுபமும் ஆற்றலும் கொண்ட பலர் இம்மகாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மற்ரி அற்றசாரி, யப்பானிய விசேட தூதுவர் யசுசி அக்காசி, மனித உரிமை ஆர்வலர் இயன் மார்டின், முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் சியாம் சரன், நோர்வே பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கெய்ம், விசேட தூதுவர் ஜோன் பௌயர், நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், சுவிஸ் வெளிநாட்டு அமைச்சைச் சேர்ந்த தூதுவர் தோமஸ் கிரமின்கர் எமது பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் முக்கிய பங்காற்றியிருந்தார்கள்.

இக்கலந்துரையாடல்களில் ஆபிரிக்கா நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், இலங்கைத்தீவு ஆகிய இடங்களில் இடம்பெறும் மோதல்கள் தொடர்பாகவும் அதனை எவ்வாறு அமைதி வழியில் தீர்த்துவைப்பது என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது, பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும் போர்நிறுத்தம் தொடர்பாகவும் மிகவும் நம்பிக்கையீனங்களே கலந்துரையாடியோரின் உரையில் தென்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது இடம்பெறும் போர் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மிகவும் தீவிரமடைவதற்கே வாய்ப்புக்கள் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பன்னாட்டு சமூகத்திடம் இதனை நிறுத்துவதற்கான வல்லமையோ அல்லது ஒருமித்த முயற்சிகளோ கிடையாது என்பதனால் மகிந்த அரசினால் முன்னெடுக்கப்படும் அனைத்துக்கட்சி மகாநாட்டின் மூலம் ஏதாவது உருப்படியான தீர்வு கிடைக்குமா என்று காத்திருப்பதுதான் தற்போது பன்னாட்டு சமூகத்திடம் உள்ள ஒரேயொரு தேர்வு என்று இறுதியில் இக்கலந்துரையாடிலில் முடிவெடுக்கப்பட்டது.

பன்னாட்டு சமூகம் வேண்டுமென்றால் இலவு காத்த கிளியாக மகிந்தவின் அனைத்துக்கட்சி மகாநாட்டின் கனிக்காக காத்திருக்கட்டும். ஆனால் தமிழ் மக்களின் தலையில் உருப்படியற்ற அரைகுறைத் தீர்வுகளை கட்டியடித்து விடலாம் என்று யாரும் தவறுதலாகக் கூட கனவு கண்டுவிடக்கூடாது. தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களது அமைதியான வாழ்விற்காகவும் ஆயிரமாயிரம் புலி வீரர்களும் வீராங்கனைகளும் இதனிலும் மேலாக தமது இன்னுயிர்களையே தற்கொடையாக வழங்கி கரும்புலிகளும், உயரிய அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்து இப்போராட்டத்தினை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். எமது தேசியத் தலைவரின் சிறந்த வழிகாட்டலிலே எமது விடுதலையானது உலகத் தமிழினத்தின் ஒருமித்த ஆதரவுடன் விரைவில் வென்றெடுக்கப்படும் என்பதே இன்றைய செய்தியாக இருக்கின்றது.