இலங்கையின் எல்லா துரோகங்களுக்கும் இந்தியா துணை: ராமதாஸ் குற்றச்சாட்டு!

0
657

தமிழர்களுக்கு எதிராக இலங்கையின் எல்லா துரோகங்களுக்கும் இந்தியா துணை போகிறது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

ஈழத்தமிழர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிராக கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போது தமிழினத்திற்கு எதிராக மீண்டும் ஒரு துரோகத்தை செய்திருக்கிறது. இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் 16 தமிழ் அமைப்புகளுக்கும், அவற்றுடன் தொடர்புடைய 424 செயல்பாட்டாளர்களுக்கும் இந்திய அரசு தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ramadoss-smiling-300
இலங்கையில் நடந்த போரின் போது ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசு, இப்போது அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகளையும் முடக்கிப் போடுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் 16 தமிழ் அமைப்புகளையும், அத்துடன் தொடர்புடைய 424 பேரையும் தடை செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கும்படி உலக நாடுகள் பலவற்றுக்கும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது. இலங்கை ‘எள்’ என்றால் ‘எண்ணெய்யாக’ மாறி நிற்கும் இந்திய அரசு, மறு கேள்வியே எழுப்பாமல் இந்த 16 அமைப்புகளுக்கும், அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் தடை விதித்து ஆணையிட்டிருக்கிறது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோத செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் ராஜபக்சவின் சகோதரர் இனப்படுகொலை குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச அளித்த பரிந்துரையின் பேரில் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக எந்த ஓர் ஆதாரத்தையும் இலங்கை அரசால் வெளியிட முடியவில்லை.

உண்மையில் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம், குளோபல் தமிழ் ஃபோரம், உலகத் தமிழ் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பல இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகின்றன. ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்திலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இவை குரல் கொடுத்தன.

உண்மை இவ்வாறு இருக்கும் போது ஈழத் தமிழர்களுக்காக போராடுகின்றனவா அல்லது தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனவா? என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் இந்த அமைப்புகளை இந்தியா தடை செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.

தமிழ் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டன. அதுமட்டுமின்றி, இனப்படுகொலை குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு இத்தகைய கோரிக்கையை முன்வைக்க எந்த தகுதியும் இல்லை என்று அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இவ்வளவுக்கு பிறகும் இந்த அமைப்புகளையும், அதனுடன் தொடர்புடையவர்களையும் இந்திய அரசு தடை செய்திருப்பதை பார்க்கும்போது இலங்கையின் எல்லா துரோகங்களுக்கும் இந்தியா துணை போவதாகத் தான் எண்ண வேண்டியிருக்கிறது.

எனவே, இலங்கையில் தாளத்திற்கெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தலையாட்டுவதை விடுத்து உண்மையை உணர்ந்து இந்திய அரசு செயல்பட வேண்டும், 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீதான தடையை உடனே திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.