இலங்கையின் “நல்லிணக்க” நாடகத்தை நிராகரிக்குமாறு, பிரித்தானியத் தமிழர் பேரவை, சர்வதேசத்திற்கு அழைப்பு!

0
573

BTFlogosஇலங்கையில் போர் முடிவுற்று நான்கறையாண்டுகள் தாண்டிய போதிலும் இன்னும் 146,679 மக்களின் உண்மை நிலை பற்றி எவ்வித நம்பகத்தன்மையுள்ள விபரங்கள் வெளிவரவில்லை. போர்க் காலத்தில் இலங்கையரசின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தும் எண்ணிலடங்கா ஆதாரங்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக சர்வதேச சமூகம் விடும் அனைத்து அழைப்புக்களையும் இதுவரை இலங்கையரசு நிராகரித்த வண்ணமே இருந்து வந்திருக்கிறது.

ஆனால், தற்சமயம் சர்வதேச அழுத்தங்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதனால், இலங்கையரசு சில தந்திர நாடகங்களை மேடையேற்ற முனைகிறது. அதன் ஒரு கட்டமாக, அண்மையில் தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (Truth and Reconciliation Commission ) உதவியை நாடியுள்ளது.

தமிழ் தேசியப் பிரச்சனையின் நதி மூலத்தை அலசி, அதன் காரணங்களை ஆராய்ந்து, தாம் இழைத்த கொடுமைகளுக்கு பொறுப்பேற்பதை தவிர்த்து, சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்ப இலங்கையரசு மேற்கொள்ளும் இவ்வகையான முய்ற்சிகளை பிரித்தானியத் தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

போலியான ஆணைக்குழுக்களுக்கு பெயர் பெற்ற நாடான இலங்கையில், கடந்த 50 வருடங்களில், எந்தவொரு விசாரணைக் குழுவுமே, அர்த்தமுள்ள தீர்ப்பெதனையும் வழங்கவில்லை. இலங்கையின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவென்பது, தமிழருக்கெதிரான தனது திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேசத்தின் கண்களிலிருந்து மறைக்கும் ஒரு திரைச் சீலையாகவே பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

தனது அரசாங்கத்தை ஐ.நாவின் மனித உரிமை சபையெடுக்கக் கூடிய தீர்மானங்களிலிருந்து காப்பற்றவும், போர்க்கால குற்றங்களைப் பற்றிய சுயாதீன சர்வதேச விசாரணையை தவிர்ப்பதற்காகவுமே இலங்கை இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு என்ற புதியதோர் சித்தாந்தை முன் வைக்கிறது.

தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் முடிவிற்கு வராத நிலையில், நல்லிணக்கம் காண்பதோ, அமைதியை கட்டியெழுப்புவதென்பதோ முடியாத காரியம். தென்னாப்ரிக்க போலன்றி, போர் முடிவுற்ற பின்னாலும் இலங்கையில் முரண்பாடுகள் இன்னும் கடுமையாகி உள்ளது. இருதரப்பு, ஆயுத முரண்பாடு 2009இல் முடிவிற்கு வந்த போதும், தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான மூல காரணிகள் எதுவும் களையப்படவில்லை. போர் முடிவுற்ற நிலையில் இலங்கையில் இன முனைவாக்கம் (Ethnic polarization) மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது,

தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவம் தொடரும் இனவழிப்பு தாக்குதல்கள், சிங்கள தேசம் தொடரும் தமிழ் தேச ஆக்கிரமிப்பு ஆகியவை இன முனைவாக்கத்திற்கு முக்கிய காரணங்களாக அமைகிறது. துரித கதியில் நடைபெறும், கொலைகள், ஆட்கடத்தல்கள், கற்பழிப்புக்கள் , கட்டாய பிறப்புக் கட்டுப்பாடு மற்றும் கருக் களைப்புகள், தமிழ் பள்ளிகள் அழித்தல், தமிழ் நிலங்களை ஆக்கிரமித்தல் போன்றவை சர்வதேச சமூகத்தால் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை. தமிழர் தாயகங்களில் இனப்படுகொலை செயல்களை தொடர்ந்த வண்ணம் இருக்கும் பொது, இனங்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.

ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டுவருவதன் மூலம் இலங்கையில் இனங்களுக்குள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்ற ஒரு சிந்தனை சர்வதேசத்திடம் இருக்கிறது. இலங்கையின், அடிப்படை அரசியல் கட்டமைப்புகளும், அரசியல் சாசனமுமே, இந்த முரண்பாடுக்களுக்கு மூல காரணம். ஆட்சி மாற்றம் ஒன்றை மட்டும் வைத்து இலங்கைத் தீவினில் அமைதியையோ நல்லிணக்கத்தையோ உருவாக்க முடியாது.

தமிழ் மக்களது ஜனநாயக விருப்புகளையும், அவர்கள் வேண்டும் சுய நிர்ணய உரிமையையும் தொடர்ந்து சிங்கள தேசம் நிராகரித்துக் கொண்டிருப்பதே, இலங்கையிலுள்ள இன முரண்பாட்டிற்கு மூல காரணம். தமிழ் மக்களது இந்த அரசியல் அபிலாசைகள் தாமதமின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆதிக்கம் முடிவடையும் போது தான், இரு இனங்களுக்கிடையே நல்லிணக்கம் உருவாகும்.

நீதி மற்றும் பொறுப்பேற்கும் தன்மை ஆகியவை எந்தவொரு, குறிப்பாக, சிறுபான்மையினம் மற்றும் இனவழிப்பு பரிணாமங்களைக் கொண்ட ஒரு முரண்பாட்டுக்கான தீர்விற்கு முக்கியமானவை. ஆதலினால், இலங்கையரசு முன்வைக்கும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரிக்கக் கோரியும், சர்வதேச நீதிமன்றம் ஒன்றையமைத்து, போரில் பங்கு பற்றிய அனைத்து தரப்பினர் மேற்கொண்ட, போர் குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள், ஆகிவற்றை தாமதமின்றி விசாரிக்குமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான ஆணைக்குழுவை பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

பிரித்தானியத் தமிழர் பேரவை.