ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழகத்தின் நிகழ்வுகள்

0
626

karunanidhi-meeting-600இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் இலங்கையில் தமிழர்கள் புத்துயிர் பெற்றும் கிளம்பும் காலம் உருவாகும். அதற்கு அச்சாரம் போடும் நாள்தான் இது. இது வெறும் சொல் அல்ல. ஆர்ப்பாட்டம் என்பது போர்பாட்டின் முன் அறிவிப்பு.

இனியும் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் அது திராவிடங்களை ஏளனபடுத்தும் செயலாக இருக்கும் என்பதை மத்திய அரசு தெரிந்து கொள்ள வேண்டும். அதை ஏற்காவிட்டால் இந்திய அரசை எதிர் காலம் சபிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.சென்னையில் இன்று டெசோ அமைப்பின் சார்பில் நடந்த தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார் கருணாநிதி.
அப்போது அவர் பேசுகையில்,தமிழர்கள் எழுச்சிக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் மத்திய அரசில் இருக்கிறார்கள். 1956-ம் ஆண்டில் இருந்து தி.மு.க. சார்பில் இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்காக, அவர்கள் விடுதலைக்காக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன் பிறகு அண்ணாவின் ஆலோசனைப்படி பல போராட்டங்களில் நான் ஈடுபட்டேன்.

அண்ணாவின் மறைவுக்குப் பின் இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் நடந்த கிளர்ச்சிகள் எதுவானாலும் அதில் திமுகவும் ஈடுபட்டது.அதன் தொடர்ச்சியாக இன்றும் உங்களை சந்திக்கிறேன். ஆனால் நமது போராட்டங்களைப் பற்றி யார் யாரோ எதை எதையெல்லாமோ பேசுவதாக குறிப்பிட்டார்கள். அதைப் பற்றி கவலை இல்லை.

உண்மையான தமிழர்கள், தமிழ் ரத்தங்கள், தமிழ் உணர்வுடையவர்கள், தமிழர்கள் தன்மானத்துடன் வாழ வேண்டும் என்று துடிப்பவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.இதே நம்பிக்கையில் தான் இலங்கையில் பெரும் போராட்டம் முடிந்த பிறகு தம்பி பிரபாகரனை இழந்து, குடும்பங்கள், உற்றார் உறவினர்களை இழந்து தவிக்கிறார்கள். இதற்கு பிறகாவது அனைத்து நாடுகள் அளவிலும் நம்மீது அனுதாபம் கொண்டு, நம்மை வாரி அணைத்து கொண்டும் கை தூக்கிவிட வரமாட்டார்களா என்று அங்கு வாழும் தமிழர்கள் ஏங்குகிறார்கள்.

இன்று தமிழ் நாட்டு வீதிகள் தோறும் நடக்கின்ற பெரும் திரள்போராட்டம் விளம்பரத்துக்காக அல்ல. ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொள்கையும் அல்ல. ஒட்டு மொத்த தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் நிகழ்ச்சி.கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘டெசோ’ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்களுக்கும் செயல் வடிவம் கொடுத்த தமிழக மக்கள் மத்தியில் நினைவூட்ட நடக்கும் நிகழ்ச்சி இது. அந்த 4 தீர்மானங்களையும் செயல்படுத்துவதற்கான அறைகூவல்தான் இந்த எழுச்சிமிக்க பெரும் திரள் போராட்டம் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இதற்கு பிறகும் இந்திய அரசு மவுனமாக இருந்தால் நாம் யாரிடத்தில் சென்று உதவி செய்யுங்கள், துணை புரியுங்கள் என்று கேட்க முடியும்? என்ற உருக்கத்தோடு மன வேதனையோடு இதை தெரிவிக்கிறேன்.

தமிழர்களுக்கு தேவை அவர்கள் வாழ்ந்த பொன் நாடு அங்கு உரிமையுடன் வாழ அனுமதி தாருங்கள். இலங்கை தமிழர்களுக்காக போராடும் எல்லா இயக்கங்களின் சிந்தனையும் இதுதான். அதை தடுக்கும் தடைகள் எதுவாக இருந்தாலும் அதை தகர்த்து எறிந்து முன்னேறும்.இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் இலங்கையில் தமிழர்கள் புத்துயிர் பெற்றும் கிளம்பும் காலம் உருவாகும். அதற்கு அச்சாரம் போடும் நாள்தான் இது. இது வெறும் சொல் அல்ல.

ஆர்ப்பாட்டம் என்பது போர்பாட்டின் முன் அறிவிப்பு. இனியும் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் அது திராவிடங்களை ஏளனபடுத்தும் செயலாக இருக்கும் என்பதை மத்திய அரசு தெரிந்து கொள்ள வேண்டும். அதை ஏற்காவிட்டால் இந்திய அரசை எதிர் காலம் சபிக்கும்.இலங்கை தமிழர்களை, தமிழக மீனவர்களை, கலை, கலாசாரம் பண்பாண்டை காப்பாற்ற முன் வர வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இந்த போராட்டத்தை அறிவித்ததாலோ என்னவோ இந்திய அரசும் இலங்கை அரசும் கலந்து பேசி தமிழக மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. அது உண்மையாக இருந்தால் அது இந்த போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார் அவர்.

தனி ஈழம் தான் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு-பொன் முத்துராமலிங்கம்


இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தனி ஈழம் தான் தீர்வாக இருக்க முடியும் என நெல்லையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் தீர்மானக்குழு தலைவர் பொன் முத்துராமலிங்கம் கூறினார்.டெசோ அமைப்பின் சார்பில் தீர்மானத்திற்கு இணங்க ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக மத்திய அரசை வலியுறுத்தி நெல்லை மாவட்ட திமுக சார்பில் நெல்லை சந்திப்பில் ஆர்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தீர்மானக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன் முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களின் வாக்குகளை பதிவு செய்து அதன் அடிப்படையில் தனி ஈழம் என்பது தான் இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.13வது அரசியல் சட்ட திருத்தத்தினை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்காக இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.கச்ச தீவில் மீன்பிடிப்பதற்கும், மீனவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் உரிமை உள்ளது என்பதற்கு சட்டம் உள்ளது. இதையும் மத்திய அரசு அக்கரையில் எடுத்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் மத்திய அரசு காப்பாற்ற தவறினால் இந்த போராட்டம் பல்வேறு வடிவம் பெறும். டெசோ போராட்டம் வெற்றி பெறும் என்றார் அவர்.ஆர்பாட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம்


இதனிடையே, தமிழகத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் தொடங்கியுள்ளது. இலங்கை காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை சிறையில் அடைபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் ஆகியவை மாணவர்களின் முதன்மை கோரிக்கைகளாகும்.

மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், காமன்வெல்த் மாநாடு கொழும்புவில் நடைபெற்றால் அதனை புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ள பட்டினிப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறதுஇந்திய- இலங்கை கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்தார்கள் என்று கூறி நமது நாட்டின் மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்குவதும், அவர்களின் வலைகளை அறுத்தெறிவதும், அவர்கள் பிடித்து வைத்துள்ள மீன்களை கவர்ந்து செல்வதும், அவர்களை மிக கீழ்த்தரமாக நடத்தி அவமானப்படுத்துவதும், பிறகு அவர்களை இலங்கைக்கு கடத்திச் சென்று சிறையில் அடைப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? என்றுதான் நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம், ஆனால் பதில் இல்லை. இப்போதுதான் முதல் முறையாக இந்தியாவிற்கான இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டித்ததாக செய்திகள் கூறுகின்றன.இலங்கை தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள தாக பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார்.

அது உண்மையானால், கொழும்புவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை வேறொரு நாட்டின் தலைநகருக்கு மாற்றினால்தான் இந்தியா பங்கேற்கும் என்று கூற வேண்டும்.இதுதான் சட்டக் கல்லூரி மாணவர்கள் வைக்கும் நியாயமான கோரிக்கையாகும்.எனவே சட்டக் கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

இது எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையீடும் இன்றி சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறது.மாணவ சமுதாயம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளே தலைமையாகும். அதையே உறுதியாக பற்றிக்கொண்டு போராட வேண்டும் என்றும், அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்று கூறியுள்ளார்.
திமுகவால் ஈழத் தமிழரையோ மீனவர்களையோ காப்பாற்ற முடியாது

திமுகவால் ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாது

திமுகவால் ஈழத் தமிழர்களையோ மீனவர்களையோ காப்பாற்ற முடியாது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி சாடியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. உள்பட சில கட்சிகள் மத்திய அரசை கண்டித்து போராட்டம், மறியல் நடத்துகின்றனர்.

அவர்களால் இலங்கை தமிழர்களையோ, தமிழக மீனவர்களையோ ஒரு போதும் காப்பாற்ற முடியாது. அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனமும் தெரிவித்துள்ளது என்றார்.