இது எதுவாக இருக்க வேண்டுமென்பதை எப்படியும் வளைத்து, நிமிர்த்திக் கூறி விடலாம். ஆனால் இப்போது அது எதுவாக இருக்கிறது அல்லது எதில் தங்கியுள்ளது என்பது குறித்து பேசும்போதே, சமகாலக் காட்சிகள் பலவற்றை தவிர்க்க முடியாமல் பார்க்க வேண்டியுள்ளது.

ltte-flag
ஜே.வி.பியின் உபயத்தில் வடக்கு கிழக்கின் நிர்வாகம் பிரிக்கப்பட்டு, இரண்டு மாகாணசபைகள் உருவாகி, பேரம்பேசும் சக்தியின் இரு களமுனைகள் திறக்கப்பட்டு விட்டன. வலுவினைக்குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது.

உள்ளூர் அதிகார மையங்களை உடைத்து, சேர்ந்தியங்கவிடாமல் தடுப்பதும் பேரினவாதச் சிந்தனையின் ஒரு செயல் வடிவமே. 83 இல் நிறைவேற்றப்பட்ட 6வது திருத்தச் சட்டமும், தேசிய இனங்களின் அரசியல் உரிமைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அடக்குமுறைச் சட்டமேயாகும்.
வாயை மூடிப் பேசச் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது தமிழ் பேசும் மக்களின் இன்றைய நிலை.

ஒருமித்த வடகிழக்கு தமிழ் தேசிய அரசியலின் பேரம்பேசும் சக்தியாக உள்ளூராட்சி மன்றங்களிலும், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திலும் மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

மூன்றில் இரண்டிற்கு மேற்பட்ட பெரும்பான்மை பலத்தைக் கொண்ட வடமாகாண சபையில், அதிகாரமற்று வீற்றிருக்கும் கூட்டமைப்பிடம் எந்தப் பலமும் இல்லை.

நாடாளுமன்றத்திலும் இதேநிலைதான். இனிவரும் தேர்தல்களில் கூட்டமைப்பின் ஆசனங்கள் மேலும் குறையும். வடக்கில் அதற்கான வேலையை, குடிசனமதிப்பீட்டுத் திணைக்களமும் , தேர்தல் ஆணையகமும் இணைந்து செய்துள்ளது. கிழக்கிலும் சிங்களைக் குடியேற்றத்தால் பிரதிநிதித்துவம் மாறலாம்.

வாக்கு வங்கி அரசியலில், மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல் கட்சியிடம் அதிகாரம் இல்லாவிட்டால், அந்த அமைப்பு பேரம்பேசும் சக்தியை இழந்து விடுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், பெரும்பான்மை பெற்று மாகாண ஆட்சியில் அமர்ந்தாலும் அதிகாரம் கிடைக்கவில்லை. இதுதான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒற்றையாட்சி முறைமையானது சிறுபான்மையாக வாழும் தேசிய இனங்களின் மீது செலுத்தும் ஆதிக்கத்தின் நிஜத்தோற்றம்.

ஜே.ஆர் அவர்கள் இராஜீவ் உடன் சேர்ந்து எழுதிய இலங்கை- இந்திய ஒப்பந்தத்திலுள்ள 13 வது திருத்தம், பெரும்பான்மை இனத்தின் முழு நாட்டிற்குமான இறைமையை மறுதலிக்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட பெரும்பான்மை சமூகத்தின் தலைவருக்கு அதிகாரச் சிக்கலை உருவாக்கவில்லை. அதிபரால் நியமிக்கப்படும் ஆளுநரே, அவரின் பிரதிநிதியாக இருந்து எல்லாவற்றையும் இயக்குவார். மாகாண நிதியத்தின் ஒதுக்கீடாக இருந்தாலும் அந்த நந்தியைக் கடந்து எதுவும் அசையாது.

வரதராஜப் பெருமாள் காலத்து முறுகல் நிலையே இப்போதும் தொடர்கின்றது. இருப்பினும் தமிழ் சட்ட நிபுணர்களுக்கு 13இல் உள்ள பலவீனங்கள் என்னவென்று ஏற்கனவே தெரியவில்லையா என்கிற கேள்வி எழாமலில்லை.

13 என்கிற குண்டுச் சட்டிக்குள் இருந்து வெளியே வரவேண்டும். இல்லையேல் அதற்குள் இருந்தவாறு அரசியல் போராட்டக் குதிரையை ஓட்டச் சொல்லியே இந்தியாவும் மேற்குலகும் தமிழர் தரப்பினை நிர்பந்திக்கும்.

18 வது திருத்தச் சட்டம் 13 இலுள்ள பல அதிகாரங்களை விழுங்கினாலும், இல்லையேல் 13ஆனது பாதிப்பில்லாமல் முழுமையாக இருந்தாலும், இப்போது நடப்பதுதான் எப்போதும் நடக்கும். இதைத்தான், 13இல் உள்ள பலவற்றை இலங்கை அரசு நிறைவேற்றிவிட்டதென , பா.ஜா.கா.வின் ‘மூலோபாய மாக்கியவல்லி’ சுப்பரமணிய ஸ்வாமி கூறுகிறாரோ தெரியவில்லை.

இவைமட்டுமல்ல, படகுகளை வைத்துக்கொண்டு மீனவர்களை விடுவித்தால், அவர்கள் திரும்பி வர படகு இருக்காது என்பதால் திரும்பிவர முடியாது என்கிற புதிய கண்டுபிடிப்பினைச் சொல்பவர்தான் பா.ஜ.கா.வின் சிந்தனைச் சிற்பி சு.சுவாமி.

சுவாமியின் தமிழின விரோத திருவிளையாடல்கள் ஒருபுறமிருக்க, ஈழத்தமிழர் தலைமையின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்க வேண்டும். அதனைத் தவிர்த்து , மக்கள் விடுதலைக்கான சரியான பாதையை கண்டு கொள்ள முடியாது. சர்வதேசத்தின் ஆதரவு தேவை என்பதற்காக , அவர்களின் வேண்டுதலின் பேரில், பிரிக்கப்பட்ட மாகாணசபையை தமிழ் தேசிய அரசியல் தலைமை ஏற்றுக்கொண்டதா?.

இக்கேள்விக்கு ‘ஆம்’ என்பது பதிலாக வந்தால், சமஸ்டிக் கோரிக்கை என்பது எக்காலத்திலும் கிட்டாது என்கிற முடிவிற்கு வருவது சுலபம்.

அதேவேளை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய இன்னும் சில விடையங்கள் உண்டு.

அதாவது ஐ.நா.தீர்மானத்தில் வடமாகாண சபைத்தேர்தலை நடாத்தும்படி ‘அழுத்தமான’ பரிந்துரை செய்தவர்கள், துளியளவு கூட அதிகாரத்தை நுகரமுடியாமல் விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையிலான சபை திண்டாடும்போது மௌனமாக இருக்கின்றார்கள்.

இது குறித்து யாரும் விவாதிப்பதில்லை. ஆதரவுக் குழுக்களை நோகடிக்கக்கூடாதென்கிற ஜாக்கிரதை உணர்வு மேலீட்டாலும் இவை தவிர்க்கப்படலாம்.

அதேவேளை, மேற்குலகம் அசமந்தமாக இருப்பதால் இந்தியாவிடம் முறையிடலாமென்று மோடியை சந்தித்து திரும்பியுள்ளார்கள் கூட்டமைப்பினர்.
சபை விவகாரங்களில் ஆளுநர் மற்றும் செயலாளர் மேற்கொள்ளும் தலையீட்டினால், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் பொறுமை இழந்து போவதை அவதானிக்கும் கூட்டமைப்பின் தலைமைப்பீடம், இதனை சரிசெய்ய இந்தியாவின் உதவியை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதெனக் கருதலாம். பதவியில் இருப்பதால் இனிப்பயனில்லை என்கிற முடிவிற்கு முதலமைச்சர் வந்தால் அதனால் பாதிப்படைவது கூட்டமைப்பு மட்டுமல்ல, இந்தியாவும்தான்.
tna-modi
இலங்கையைக் கையாளும்போது, அழுத்தக் கருவியில் ஒரு முக்கிய ஆயுதம் இழக்கப்படுவதை டெல்லியின் தென் வளாகம் (South Block ) விரும்பாது.
ஆதலால்தான் பிரதமர் நரேந்திர மோடியோ, ‘எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மோடியின் உறுதிமொழியை நம்புகிறோமென சம்பந்தன் அவர்கள் அதனை வழிமொழிந்துள்ளார். இதைத்தான் இராஜதந்திர பரிபாசையில், ‘பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது’ என்பார்களோ…!

கூட்டமைப்போடு ஒருவருட காலம் மகிந்த அரசு பேசும்போதும், இதே இராகத்தையே கேட்டோம். ‘ சிகிச்சை வெற்றி. ஆனால் நோயாளி மரணம் ‘ என்பது போன்ற பதில்தான் எப்போதும் மக்களிடம் சென்றடைந்தது .

’13 இலுள்ள அதிகாரங்களை வழங்கும்படி மகிந்த ராஜபக்சவிற்கு அழுத்தம் கொடுங்கள்’ என்று சம்பந்தன் அவர்கள் மோடியிடம் கேட்க, ‘நாட்டைப் பிரிக்க இந்தியா சென்றுள்ளது கூட்டமைப்பு’ என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மத்திய மந்திரியுமான சம்பிக்க ரணவக்க என்பவர் பேரினவாதப் பார்வையில் வியாக்கியானம் செய்கின்றார்.

சு.சுவாமியும், சாரி சேஷாஸ்திரியும் தமிழர் விரோதக் கருத்துக்களை கொழும்பில் சொல்லும்போது ஆனந்தமடைந்தவர்கள், கூட்டமைப்பு புது டெல்லிக்குச் சென்றால் கோபமடைகின்றார்கள்.

2009 இல் பேரம்பேசும் சக்தியை இழந்த தமிழர் தரப்பு, யாரிடம் சென்றாலும் இறுதியில் தங்களிடம்தான் வரவேண்டும் என்கிற இறுகிய மாறா மனநிலையில் சிங்களம் இருப்பதை உணரக்கூடிதாக இருக்கிறது.

’13இல் மீதமுள்ள அதிகாரங்களையும் தரமாட்டோம்’ என்கிற பிடிவாதத்தினைத் தளர்த்தாமல், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் வரவேண்டுமென்று அடம் பிடித்த ஆட்சியாளர்கள், தற்போது மோடியைச் சமாளிக்க கூட்டமைப்போடு மீண்டும் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க விரும்புவதாக கூறத் தொடங்கியுள்ளனர்.

அரசைப் பொறுத்தவரை , படைவலுச் சமநிலையில் இருந்த விடுதலைப்புலிகளோடு தவிர்க்கமுடியாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது போன்று, இனிமேல் எந்தவொரு நிலையிலும் தமிழர் தரப்போடு நேரடியாகப் பேசி, அவர்களுக்கும் பேரம்பேசும் அரசியல் சக்தி இருப்பதாக உலகிற்கு காட்டக்கூடாதென சிங்களம் எண்ணுகிறது. ஆனாலும் அரசின் தெரிவுக் குழுவில், பேரம்பேசும் சக்தி தமக்கு மிகக் குறைவென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்கு புரியும்.

இருப்பினும் மாகாணசபையின் குறைந்தபட்ச இயங்குநிலைக்குத் தேவையான அதிகாரங்களைப் பெறாமல், அரசோடு நேரடிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது, அடிப்படைச் சிக்கலைத் திசை திருப்பி விடலாமென கூட்டமைப்பு கருதலாம்.

இவை ஒருபுறமிருக்க, நேரடிப் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சிநிரல் எதுவாக இருக்க வேண்டுமென்பதை யார் தீர்மானிப்பது?. அதில் பார்வையாளராக அல்லது அனுசரணையாளராக இந்தியா இருக்க வேண்டுமென்கிற குரலும் எழுகிறது. இந்தியத் தரப்பு இதில் இணைந்தால், அந்த நிகழ்ச்சிநிரல் 13 ஐச் சுற்றியே வட்டமிடும்.

இந்தியா இல்லாவிட்டாலும், வடமாகாணசபையின் அதிகாரங்களை பெறும்வகையில் பேச்சுக்களை நடாத்துங்கள் என்று மோடி தரப்பிலிருந்து அறிவுரை கூறப்படலாம். 13 இற்கு அப்பால் , எம்மால் எதையும் பேசமுடியாதென தமது வழமையான ‘சிறிலங்கா நட்பு’ இராகத்தை இந்தியா பாடும்.
ஆகவே

தமிழ் தேசிய இனத்தின் பேரம்பேசும் வலுவானது, சுயநிர்ணய உரிமை கோரும் அளவிற்கு சக்தியைப் பெற்றிருக்கக் கூடாது என்பதோடு, அதனை முழு நாட்டையும் ஆட்சிபுரியும் சிங்களம் விரும்பாது என்பதையும் இந்த இந்தியா, சீனா மற்றும் மேற்குலக நாடுகள் புரிந்து வைத்திருக்கின்றன.

சமாதான காலத்தில் இவர்களின் செயற்பாடுகள் எப்படி இருந்தன என்பதைப் பார்த்தால் , ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து அவர்கள் வகுத்த எல்லைகளை அறிந்து கொள்ளலாம்.

ஒரு சாரார், அரசின் படை வலுவினை அதிகரித்தார்கள். இன்னொரு சாரார், அனுசரணை வழங்கியவாறு சர்வதேச அளவில் தடைகளைப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

உண்மையிலேயே தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தி எது?. அப்படி ஒரு சக்தி இருந்த காலத்தில், அதனை நாம், எமது செயற்பாடுகளால் இழந்தோமா? அல்லது அச்சக்தியானது இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தமது பூகோள நலனை நிலைநாட்ட எத்தனித்த மேலாதிக்கங்களால் ,ஒடுக்குமுறையாளரோடு இணைந்து சிதைக்கப்பட்டதா? என்கிற கேள்வி ஆழமான ஆராயப்பட வேண்டியதொன்று.

இப்போது இருப்பது தமிழக, தாயக மற்றும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் திரள் என்கிற சக்திதான். இவைதவிர ஐ.நா.சபையின் சுயாதீன விசாரணை ஊடாக, அந்த பேரம்பேசும் சக்தியை அதிகரிக்கலாம் என்கிற நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. அதாவது போர்க்குற்றம் அல்லது இனவழிப்பு இறுதிப்போரில் நிகழ்ந்துள்ளது என்பது நிரூபணமானால் அரசு பலவீனமடையும், தமிழர் தரப்பு பலமடையும் என்பதுதான் அந் நம்பிக்கையின் அடிப்படை.

ஆனால் அந்தச் சக்தியை மட்டுப்படுத்தும் அங்குசம் , தீர்மானத்தை கொண்டுவந்த வல்லரசாளர்களின் ஆசிய மூலோபாய திட்டத்தைப் பொறுத்து எந்த நேரத்திலும் பிரயோகிக்கப்படலாம் என்கிற ஆபத்தும் காத்திருக்கிறது.

இந்த மாற்றங்கள் குறித்து அடுத்துவரும் பத்திகளில் விரிவாகப்பார்ப்போம்.

-வீரகேசரி
7/9/2014