ஊடகத்துறை மீதான வன்முறைகளிற்கு முகம்கொடுப்பது என்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு தொடர் அச்சுறுத்தலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசிய ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்களும் வன்முறைகளுமே அதிகமானது. தாய்நாட்டில் வைத்து எம்மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள்; தற்போது அகதிகளாக வந்து தஞ்சமடைந்துள்ள புலம்பெயர் நாடுகளிலும் பரவியுள்ளது.

eelamurasu
2009 ஆண்டில் எமது இனம் முள்ளிவாய்காலில் சந்தித்த இழப்பின் பின்னர், தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுத்திறன் புலம்பெயர் தமிழ் மக்களிடமும், உலகத் தமிழ் மக்களிடமுமே செறிந்துள்ளது. அதனை நன்கு புரிந்துகொண்ட எதிரியானவன் தற்போது தமிழ் தேசியத்தின் குரலை முற்றாக நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளான். அதன் வெளிப்பாடு தான் பாரம்பரிய தமிழ்த் தேசிய அச்சு ஊடகமான ஈழமுரசு மீதான ஆயுத வன்முறை.

1987 ஆம் ஆண்டு இந்திய படையினர் தமிழ் மக்கள் மீது போரை ஆரம்பிப்பதற்கு முன்னரும் ஈழநாதம் மற்றும் முரசொலி ஆகிய ஊடகங்களை குண்டு வைத்து தகர்த்தபின்னரே தமது தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர்.

தமிழ் மக்கள் மீதான மிகப்பெரும் வன்முறைகளை மேற்கொள்வதற்கு முன்னர் எப்போதும் எதிரியானவன் எமது ஊடகங்களையே முதலில் குறிவைப்பதுண்டு.
ஒரு கருத்தை கருத்தால் வெல்லமுடியாத கோழைத்தனமான இந்த செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதொன்று. தமிழீழத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கான ஆதரவுகளை தமிழத் தேசிய ஊடகங்களே வழங்கி வருகின்றன.

சாட்சியங்களை திரட்டுதல், மக்களுக்கு உதவுதல், அவர்களை வழிநடத்துதல் போன்ற நடைவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எமக்கு பலமான தேசியம் சார்ந்த ஊடகங்கள் அவசியம். ஆனால் இந்த தருணத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் உத்தியோகபூர்வ ஊடகமாக விளங்கிய ஈழமுரசு முடக்கப்பட்டுள்ளது.

ஒரு அச்சு ஊடகத்தின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பி.பி.சி ஊடகம் கூட அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டிருந்தது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களோ (தமிழர் ஒருங்கிணைப்பு குழுவைத்தவிர) அல்லது ஊடக அமைப்புக்களோ தொடர் மௌனம் காப்பது தேசியம் தொடர்பான அவர்களின் இரட்டை வேடங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

எமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதனை கருத்துக்களால் நாம் எதிர்கொள்ளவேண்டுமே தவிர ஆயுதமுனை மிரட்டல்களை வரவேற்று கைகட்டி மௌனம் காப்பது என்பது கண்டனத்திற்குரியது.

இன்று ஈழமுரசு மீது காட்டப்பட்ட துப்பாக்கி நாளை ஏனைய ஊடகங்கள் மீது பாய்வதற்கு அதிக காலம் எடுக்கப்போவதில்லை அல்லது அவர்களின் வலைக்குகள் நீங்கள் வீழ்வதற்கு அதிக நேரம் செல்லப்போவதில்லை.

ஈழமுரசு மீதான தாக்குதல், அச்சுறுத்தல் என்பது இன்று மட்டும் நிகழவில்லை, 1990 களில் கூட ஈழமுரசின் ஆசிரியர் பிரான்ஸ் இல் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் தேசியச் செயற்பாட்டாளர் பரிதி அவர்களும் சுடப்பட்டார். அதற்கான காரணம் தமிழீழ விடுதலை தொடர்பில் செயற்பட்டதே தவிர வேறு எதுவும் இல்லை.

ஈழமுரசின் முடக்கம் என்பது முள்ளிவாய்க்காலின் பின்னர் எமது விடுதலைப்போர் சந்தித்த மற்றுமொரு பலத்த பின்னடைவாகும். இதன் மூலம் தமிழ் மக்களின் உளவுறுதி சிதறடிக்கப்பட்டுள்ளது. அதனைக் கண்டும் காணாததுபோல் இயங்கும் தமிழ் அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் ஆகியவற்றின் செயற்பாடுகள் என்பது தமிழ்த்தேசியத்தின் அழிவுக்கு துணைபோவதாகவே கருதப்படவேண்டும்.

எனவே தமிழ் மக்கள் ஒன்றை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும் அதாவது எதிரியை மட்டும் இனங்காண்பது எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கப்போவதில்லை, எதிரியின் நடைவடிக்கையை வரவேற்பவர்களையும் இனங்காணுங்கள் அதன் மூலம் தான் எமது போராட்டத்தை காத்திரமான வழியில் உறுதியாக நகர்த்த முடியும்.

தமிழ் மக்களின் பாரம்பரிய அச்சு ஊடகம் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் தாக்குதலை ஈழம்ஈநியூஸ் மிக வன்மையாக கண்டிப்பதுடன், அதனை மேற்கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும் உறுதியாக நிற்கின்றது.

ஈழம்ஈநியூஸ்.