ஈழ இனப்படுகொலையும் அமெரிக்காவும் – பாஷண அபேவர்த்தன

0
626

basannaஇலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1951ஆம் ஆண்டு அமெரிக்காவின் குரல் (Voice of America) வானொலி நிகழ்ச்சிகளைத் தென்னாசியப் பகுதிகளுக்கு ஒலிபரப்பும் அஞ்சல் நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டது. பிற்பாடு 1983இல் ஜே.ஆர். ஜயவர்த்தன அதிபராக இருந்தபோது 500 ஏக்கர் நிலத்தை இந்த வானொலி நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக வழங்கினார். தென்னாசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க நிலையமாக இது அமைந்தது. அக்காலகட்டத்தில் நுண் அதிர்வு அலைவரிசைகளைத் தீவிரமாகப் பயன்படுத்துகிற தளம் அமெரிக்காவுக்கு இலங்கையில்தான் இருந்தது.

•1982இல் வெளியான அமெரிக்க அரச அறிக்கை ஒன்றில் தென்னாசியப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக்குத் தேவை ஏற்படுகிறபோதெல்லாம் பயன்படுத்தக்கூடிய துறைமுகமாகத் திருகோணமலைத் துறைமுகம் குறிப்பிடப்பட்டிருந்தது. 1980 அறிக்கையொன்றில் திருகோண மலை அமெரிக்க அரசின் வழங்கு தளங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் இது பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது அந்தத் தகவல் அச்சுப் பிழையால் நேர்ந்தது என்று அப்போதைய இலங்கை அதிபர் தெரிவித்தார். அமெரிக்க அரசும் அது அச்சுப்பிழைதான் என அறிக்கை வெளியிட்டபோதிலும் எவரும் அதனை நம்பத் தயாராக இருக்கவில்லை.

• 1982இல் அமெரிக்க ஜெனரல் வேர்ணன் வால்டர் இலங்கைக்கு வந்து இஸ்ரேல் அரசின் நலன்களைப் பேணுவதற்கான ஒரு சிறப்பு நிர்வாகப் பிரிவை அமெரிக்கத் தூதரகத்தில் நிறுவ வழியமைத்தார். அதுவரை இருந்த இலங்கை அரசுகள் இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணவில்லை. எனினும் ‘பயங்கரவாத’ ஒழிப்புக்கு இஸ்ரேலிய அரசு மொஸாட், ஷின் பெத் ஆகியவற்றின் உதவியை இலங்கை அரசு பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவே அமெரிக்க அரசு இந்த ஏற்பாட்டைச் செய்தது. இலங்கைப் பாதுகாப்புப் படையின் ‘சிறப்புப் படையணி’ இஸ்ரேல் அரசின் துணையுடனேயே உருவாக்கப்பட்டு மொஸாட், ஷின் பெத் என்பவற்றால் பயிற்றப்பட்டுக் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கே ஏராளமான படுகொலைக்கு இவர்கள் பொறுப்பாக இருந்தார்கள்.

• 1996இல் இலங்கைப் படையினருடன் இராணுவப் பயிற்சி ஒத்திகைகளை அமெரிக்க அரசு துவங்கியது. Green berets, Navy Seals போன்ற அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படையணிகள் இலங்கையின் சிறப்புப் படையணிகளுக்குப் பயிற்சி அளிக்கத் துவங்கினர். இலங்கைப் படையணிகளின் எல்லாச் ‘சிறப்புப் படையணி’களும் இவ்வாறுதான் வடிவம் பெற்றன. இந்தப் படையணிகள் அமெரிக்காவின் John F Kennedy Special Warfare School, US General staff college ஆகிய இடங்களில் பயிற்சி பெற்றன. 2006 – 2007 காலப்பகுதியில் மட்டும் 382 இலங்கை இராணுவ அதிகாரிகள் இவ்வாறு அமெரிக்க அரசினால் பயிற்றுவிக்கப்பட்டனர். இது சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்திலும் தொடர்ந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

• 2002இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு நிரந்தர சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. அக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படைகளுக்குமிடையில் வலு சமநிலை காணப்பட்டது. பேச்சு வார்த்தைகளின்போது இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமத்துவம் கொண்டவர்கள் என்ற அடிப்படையிலேயே இடம்பெற்றன. ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நிகழ்ந்தன. போர் நிறுத்தம் முறிவுற்றமைக்கும் பேச்சுவார்த்தைகளில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமைக்கும் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் காரணமல்ல. திருப்திகரமான முன்னேற்றம் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டிருந்தது. எனினும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடை செய்தமையும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தித் தொடர்பாகவும் வாஷிங்டனில் அமெரிக்க அரசு ஏற்பாடு செய்த மாநாட்டுக்கு விடுதலைப் புலிகளை அழைக்க மறுத்தமையும்தான் இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர் குலைந்துபோனமைக்குக் காரணம். இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் சமத்துவம் கொண்ட தரப்புகளாக அமெரிக்கா ஏற்றுக்கொள்ளத் தொடர்ச்சியாக மறுத்து வந்தமையின் விளைவுதான் போர் மறுபடி மூண்டெழக் காரணமாக அமைந்தது. எத்தகைய பேச்சுவார்த்தைகளும் வெற்றி பெறுவதற்கு அரசியல்ரீதியான சமத்துவ நிலையிலேயே இரண்டு தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதும் அச்சமநிலை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதும் அடிப்படையான நிபந்தனைகள் ஆகும். இலங்கைச் சூழலில் இந்த அடிப்படை விதியைத் திட்டமிட்ட வகையில் உடைத்தெறிந்த பொறுப்பு அமெரிக்க அரசையே சாரும்.

• விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்கா இன்னுமொரு நடவடிக்கையிலும் இறங்கியது. 2007இல் இலங்கை அரசுடன் Acquisition and cross services Agreement (ACSA) எனப்படும் இராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. NATOவுக்கு வெளியே உள்ள நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளையும் பயிற்சிகளையும் பேணுவதற்காக அமெரிக்கா உருவாக்கியிருப்பதே ACSA. இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இரகசியமாகவே பேணப்பட்டன. ‘இராணுவத் தளபாடங்கள் இந்த ஒப்பந்தத்தில்’ சம்பந்தப்படவில்லை என ரொபர்ட் பிளேக் பத்திரிகைக் குறிப்பு ஒன்றில் சொல்லியிருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் வெளியே தெரியவரும்போது உண்மை தெளிவாகப் புலப்படும். உலகின் 89 நாடுகளுடன் அமெரிக்கா ACSA ஒப்பந்தம் செய்து வைத்துள்ளது.

• 2002இல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே அமெரிக்காவின் பசுபிக் கடற்பகுதி இராணுவக் கட்டளைத் தலைமையகம் திருகோணமலை, பலாலி, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் போர் தொடர்பான படைத்துறை சார்ந்த மதிப்பீடுகளை மேற்கொள்ளத் துவங்கியது. மார்ச் 2002இல் இந்தப் பகுதிகளுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரியான கிறிஸ்டினா ரொக்கா “எமது படைத்துறை ஆய்வுகள்மூலம் இலங்கை அரசைப் பலப்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம்” என வெளிப்படையாகவே தெரிவித்தார். திருகோணமலைப் பகுதியை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அவர்களைத் தோற்கடிக்க முடியாது. எனவே கிழக்கில் இருந்து புலிகளை இல்லாதொழிப்பது அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்தே அமெரிக்காவின் பசுபிக் கடற்பகுதி இராணுவக் கட்டளைத் தலைமையகம் தொழிற்பட்டது. 2009இல் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது “இரவிலும் குண்டு வீச்சுத் தாக்குதலில் ஈடுபடும் திறன் வாய்ந்த விமானங்களை இலங்கை விமானப்படை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இஸ்ரேலிய KFIR விமானங்கள் பெருமளவுக்குத் தரமுயர்த்தப்படுவதன் மூலம் இது சாத்தியம் ” என அவர்கள் அறிவுரை வழங்கினர்.

• கொத்துக் குண்டுகள் வீசுவதும் அவசியம் என்று அமெரிக்க ஆலோசகர்கள் அறிவுறுத்தியதாக Paul Moorcraft தன்னுடைய Total Destruction of the Tamil Tigers: The Rare victory of Sri Lanka’s Long War என்ற நூலில் குறிப்பிடுகிறார். இவர் உலகின் முக்கிய இராணுவக் கல்லூரிகளில் ஒன்றான Royal Military Academy, Sandhurstஇல் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பிரித்தானியாவின் இராணுவக் கல்லூரிகளிலும் பணியாற்றிப் பின்னர் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் தொடர்பாளராகக் கடமையாற்றினார்.

•மே 2009இல் போர் முடிவுறும்வரை இத்தகைய ஆலோசனைகளும் உதவிகளும் இலங்கை அரசுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.

• முள்ளிவாய்க்கால் பேரழிவுகள் பற்றிய ஏராளமான செய்தி ஒளிப்படங்கள் அமெரிக்காவிடம் இருந்தபோதும் அவற்றை அது வெளியிடவில்லை.

• போர் முடிந்த பிற்பாடும் அமெரிக்க அரசுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்ச்சியான, நெருக்கமான படைத்தரப்பு உறவுகள் பேணப்படுகின்றன.

• இந்த நாட்டு இராணுவங்களுக்கும் அரசுக்கும் இருக்கக்கூடிய இத்தகைய அமைப்பார்ந்த படைத்துறை உறவுகள் ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு அமெரிக்க அரசும் உடந்தை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயம்&அமர்வு 2 7-&10 டிசம்பர் 2013, பிரேமன், ஜெர்மனி

“ஈழத் தமிழர்கள்மீதான இனப்படுகொலைக் குற்றத்தை இலங்கையே செய்தது என்று நீதிபதிகள் குழு தீர்ப்பளிக்கிறது; பிரிட்டனும் அமெரிக்காவும் அதற்கு உடந்தையாக இருந்தன. தீர்ப்பாயத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான ஆதாரங்கள் ஆராயப்படுவதற்கான கால அவகாசம் போதாமையால் இந்தியா இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததா என்பது குறித்த தமது முடிவை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். எனினும் இனப்படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையென்பதைத் தீர்ப்பாயம் நம்புகிறது.”

இன்று ஜெர்மனியின் பிரேமனில் இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாம் அமர்வு அதன் தீர்ப்பை அளித்ததோடு நிறைவடைந்தது. பன்னிரண்டு நீதிபதிகளைக் கொண்ட இக்குழு, ஈழத் தமிழர்கள்மீதான இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது என்று அறிவித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனக் குழுமமாக இதில் பலியாகியிருப்பதாகத் தீர்ப்பாயம் குறிப்பிட்டது.

எனினும் ஈழத் தமிழர்கள்மீதான இனப்படுகொலை இன்னும் அவர்களது அடையாளத்தை முழுமையாக அழித்துவிடவில்லை என்று தீர்ப்பாயம் கருதுகிறது. இனப்படுகொலைக்கான ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட வழிமுறையும் திட்டமும் மே 2009இல் உச்சத்தை அடைந்தன எனத் தீர்ப்பாயம் கருதுகிறது. ஈழத் தமிழ் அடையாளத்தை ஒழிக்க வேண்டும் என்ற இலங்கை அரசின் செயல்திட்டத்தின்படி இனப்படுகொலை ஒரு நிகழ்முறை எனவும் அந்த நிகழ்முறை தொடர்கிறது எனவும் சாட்சியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இனப்படுகொலைக் குற்றவாளிகள் குறிப்பிட்ட பிராந்தியத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் இனப்படுகொலைக்கான வியூகமும் நடவடிக்கைகளும் மாறின. படுகொலைகள் தாராளமாக நடைபெறுவது நியமமாக மாறிற்று. ஈழத் தமிழ்க் குழுவினருக்கு உடல் ரீதியாகவும் அல்லது மன ரீதியாகவும் தீங்கு விளைவிப்பது இன்றும் தொடர்கிறது.

இலங்கை அரசால் பின்வரும் செயல்கள் செய்யப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ளதாகத் தீர்ப்பாயம் கருதுகிறது:

(à®…) ஒரு இனக்குழுவினரைக் கொல்லுதல் – இதில் படுகொலைகள், கட்டுப்பாடற்ற குண்டுவீச்சு, திட்டமிட்டுக் குடிமக்களைப் “போர் தவிர்ப்பு வலயங்கள்” எனப்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று பெருமளவில் கொல்லுதல், இலங்கை இனப்படுகொலைச் செயல்திட்டத்தை வெளியுலகிற்கு எடுத்துக்கூறும் திறன் கொண்ட, வெளிப்படையாகப் பேசும் ஈழத் தமிழ்க் குடிமைத் தலைவர்களைக் குறிவைத்துக் கொல்லுதல் ஆகியவை இதில் அடங்கும்.

(ஆ) குழுவினருக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ கடும் தீங்கிழைத்தல் – சித்திரவதைச் செயல்கள், மனிதத்தன்மையின்றி, இழிவாக நடத்துதல், வன்புணர்ச்சி உள்ளிட்ட பாலியல் வன்முறை, உடல் மீதான தாக்குதல்களுடன் குறுக்கு விசாரணைகள், கொலை மிரட்டல்கள், உடல்நலத்தைப் பாதிக்கும் அல்லது விகாரத்தையோ காயத்தையோ ஏற்படுத்தும் தீங்கு ஆகியவை இதில் அடங்கும்.

(இ) முழுமையாகவோ பகுதியளவிலோ உடல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட வாழ்க்கை நிலைகளைக் இனக்குழுவினர்மீது வேண்டுமென்றே சுமத்துதல் – * இலக்காகுபவர்களை அவர்களது இல்லங்களிலிருந்து வெளியேற்றுதல் * தனியார் நிலங்களைக் கையகப்படுத்துதல் * தமிழர் நிலத்தை ராணுவம் சொந்தமாக்கிக்கொள்ள உதவப் பரந்த இடங்களை ராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகப் (High Security Zone) பிரகடனம் செய்தல்.

மேலும், தீர்ப்பாயம் பின்வருபவை தொடர்பான ஆதாரங்களையும் பரிசீலித்தது:

(ஈ) இனக்குழுவுக்குள் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகள்; ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக இனப்பெருக்கத் திறன்முடக்கமும் கருத்தடை செய்வதும் இதில் அடங்கும். இவை இனப்படுகொலைச் செயல்களாகக் கருதப்பட முடியுமா என்று தீர்மானிப்பதற்கு முன்பு இந்த நடைமுறை பிற பிராந்தியங்களில் எந்த அளவுக்கு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து மேலதிகத் தகவல்களும் ஆய்வுகளும் தேவைப்படுகின்றன.

பிரிட்டனும் அமெரிக்காவும் இனப்படுகொலைக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கண்டறியப்பட்டது. இதில் பின்வருவனவும் அடங்கும்:

* ஆயுதங்கள், உபகரணங்கள் அல்லது வேறு எந்த வழிமுறைகளும் உள்பட இனப்படுகொலை செய்யப் பயன்படும் வழிமுறைகளைத் தருவிப்பதன் மூலம் உடந்தையாக இருத்தல். இத்தகைய வழிமுறைகள் இத்தகைய நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் என்று உடந்தையாளர்களுக்குத் தெரிந்தே இருந்தது.

* அறிந்தே இனப்படுகொலைச் செயல்களைத் திட்டமிடுவதில் அல்லது செய்வதில் குற்றவாளிக்கு உதவுவதன்மூலம் உடந்தையாக இருத்தல்.

இலங்கையிடம் அதன் இனப்படுகொலை இலக்குகளைப் பிறர் உதவியின்றி எட்டுவதற்கான திறன் இல்லை என்பதை இனங்கண்டும் அளிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும் பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்தைச் செய்தன என்று தீர்ப்பாயம் நம்புகிறது. இருப்பினும், கால அவகாசம் போதாமையால் இந்தியாவும் அத்துடன் பிற நாடுகளும் ஈழத் தமிழர்கள்மீதான இனப்படுகொலைக் குற்றத்திற்கு உடந்தையாகவே இருந்தன என்பதற்கான முழுமையான ஆதாரங்களைப் பரிசீலிப்பதற்காக இது தொடர்பான தீர்ப்பை ஒத்திவைக்கத் தீர்ப்பாயம் முடிவு செய்கிறது.

முப்பதுக்கு மேற்பட்ட நேரடிச் சாட்சிகளும் நிபுணர்களும் இனப்படுகொலை நிகழ்ந்தமைக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்தனர். இனப்படுகொலைக் குற்றமாகக் கூறப்படத்தக்க, நடந்ததாகக் கூறப்பட்டுள்ள பல்வேறு குற்றங்களுக்கு மட்டுமின்றி சட்ட மற்றும் வரலாற்றுப் பின்னணி போன்றன ஒத்துழைக்கும் காரணிகளாக இருந்தன என்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன.

இரண்டாம் அமர்வின் நிகழ்வுகள் இணையத்தில் உடனடியாகவே வழங்கப்பட்டன. இவை http://pptsrilanka.org என்ற வலைத்தளத்தில் கிடைக்கும்.

பிரேமனில் நிகழ்ந்த இரண்டாம் அமர்வு, ஜனவரி 2010இல் அயர்லாந்தின் டப்ளினில் நிகழ்ந்த முதல் அமர்வில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நடந்துவந்த போரின் இறுதிக் காலகட்டத்தில் தமிழர்கள்மீது போர்க் குற்றங்களும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்களும் செய்யப்பட்டன என்றும் இனப்படுகொலை நடந்ததா என்பது பற்றிய மேலதிக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் முதல் அமர்வில் முடிவு செய்யப்பட்டது.

இலங்கைக்கான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இந்த இரு அமர்வுகள் பிரேமனின் சர்வதேச மனித உரிமைகள் சங்கம் (மிவிஸிக்ஷி), இலங்கையில் சமாதானத்திற்கான ஐரிஷ் மன்றம் (Irish Forum for Peace in Sri Lanka) ஆகியவை சமர்ப்பித்த வேண்டுகோளை ஏற்று நிறுவப்பட்டுள்ளன. முதல் அமர்வைப் போலவே, இங்கும் இனப்படுகொலை ஆய்வுகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள், முன்னாள் ஐ.நா. அதிகாரிகள், சர்வதேசச் சட்டத்தில் நிபுணத்துவம் கொண்டவர்கள், புகழ்பெற்ற சமாதான மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு ஒன்று இந்தத் தீர்ப்பாயத்தில் பணிபுரிந்தது.

நீதிபதிகள் குழு

துணைத் தலைவர்கள்

டேனியல் ஃபையர்ஸ்டீன்

தேசிய த்ரெஸ் த ஃபெப்ரெரோ பல்கலைக்கழகத்தில் உள்ள இனப்படுகொலை ஆய்வுகள் மையத்தின் இயக்குநர், பியூனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை ஆசிரியர் குழுவில் பேராசிரியர், CONICET (அர்ஜென்டீனிய தேசிய அறிஞர்கள் மையம்) உறுப்பினர். இவர் ‘சர்வதேச இனப்படுகொலை அறிஞர்கள் சங்க’த்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெனிஸ் ஹாலிடே

ஐ.நா.வின் முன்னாள் துணைப் பொதுச் செயலர். பாதுகாப்புக் குழு ஈராக் மீது பொருளாதாரத் தடைகள் விதித்ததை எதிர்த்து இவர் ஐ.நா.வில் தமது 34 ஆண்டு காலப் பணியிலிருந்து விலகினார். காந்தி சர்வதேச சமாதான விருது பெற்றவர்.

நீதிபதிகள்

காப்ரியெலெ டெல்லா மோர்ட்டெ, ஆராய்ச்சியாளர், மிலான் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டத் துறைப் பேராசிரியர். இவர் சர்வதேச அமைப்பு, நிறுவனங்கள் மற்றும் விதிகளில் பேராசிரியர், ஜெனீவாவின் சர்வதேச மனிதநேயச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் கல்வியகத்தில் இளநிலை விரிவுரையாளர் (2007-&2008), ரவாண்டாவிற்கான சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயத்தின் (ICTR) வழக்கறிஞர் (2003-&2004), முன்பிருந்த யுகோஸ்லாவியாவுக்கான சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயத்தின் வழக்குத் தொடுப்பாளர் அலுவலகத்தில் சட்ட எழுத்தர் (2000), சர்வதேச குற்ற நீதிமன்றத்தை நிறுவுவதற்கான அரசு பிரதிநிதிக் குழு ஒன்றில் உறுப்பினர் (1998) ஆகிய பொறுப்புகளில் இருந்தார்.

ஹோசே எலியாஸ் எஸ்தெவெ மோல்ட்டோ, சர்வதேச வழக்கறிஞர், திபெத் குறித்த சட்ட நிபுணர். திபெத்தில் செய்யப்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்கான இரு சட்ட வழக்குகளுக்கும் பர்மாவில் நிகழ்ந்த குற்றங்களுக்கான சமீபத்திய வழக்கு ஒன்றிற்கும் ஆராய்ச்சி செய்து வரைவைத் தயாரித்த முதன்மை வழக்கறிஞர் இவர்தான். வலென்சியா பல்கலைக்கழகத்தில் சர்வதேசச் சட்டத் துறையில் பேராசிரியராக இருக்கிறார்.

செவான் கரிபியான், இனப்படுகொலையிலும் சர்வதேசச் சட்டத்திலும் நிபுணர். ஜெனீவா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியர், நூஷாத்தெல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். இங்கு இவர் சட்டத் தத்துவமும் சர்வதேசக் குற்றச் சட்டமும் கற்பிக்கிறார். இவரது பணி, அரசுக் குற்றங்களை எதிர்கொள்ளும் சட்டம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.

ஹாலுக் கெர்கெர், மதிக்கப்படும் கல்வியாளர், மத்திய கிழக்கு ஆய்வாளர். அவரது அரசியல் செயல்முனைப்பால் துருக்கியில் சிறையிடப்பட்டார். குர்து மக்களின் சுயதீர்மான உரிமைக்கு ஆதரவளிப்பவர் என்று அறியப்பட்டவர்.

கொலம்பியாவைச் சேர்ந்த இறையியலாளர், பொகோட்டாவில் உள்ள மனித உரிமைச் செயல்பாட்டாளர். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட வகுப்புகளைப் பற்றி ஆய்வு செய்வதில் இவரது பகுப்பாய்வின் வீச்சு பேர்போனது. இவர் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் துணைத்தலைவர்.

மேன்ஃப்ரெட் ஓ. ஹின்ஸ், பிரெமன் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம், அரசியல் சமூகவியல், சட்ட சமூகவியல் பேராசிரியர். ஆப்பிரிக்காவில், குறிப்பாக நமீபியாவிலும் மேற்கு சஹாராவிலும் விடுதலைப் போராட்டங்களுக்கு நீண்டகாலமாக ஆதரவு தெரிவித்துவருகிறார். இவர் பல ஆண்டுகளுக்கு நமீபியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த காலத்தில் அதன் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான யுனெஸ்கோ தலைவராக இருந்தார்.

ஹெலன் ஜார்விஸ், 1990களின் நடுவிலிருந்து கம்போடியாவில் நடந்த இனப்படுகொலை தொடர்பாகப் பணிபுரிந்திருக்கிறார். யேல் பல்கலைக்கழகத்தின் கம்போடிய இனப்படுகொலைத் திட்டத்துடன் இணைந்தும் க்மர் ரூஜ் விசாரணைகளுக்கான கம்போடிய அரசு பணிக் குழுவிலும் கம்போடிய நீதிமன்றங்களின் சிறப்பு அறைகளில் (Extraordinary Chambers in the Courts of Cambodia) பொது விவகாரங்கள் தலைவராகவும் பிறகு, பாதிக்கப்பட்டோர் ஆதரவுப் பிரிவின் தலைவராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

அய்ஸ்டைன் ட்வெட்டர், நார்வேயைச் சேர்ந்த சர்வதேசச் சட்ட அறிஞர், பிலிப்பைன்ஸில் நடந்த, சட்டம் சாராத கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் உறுப்பினர்.

மௌங் ஜார்ணி, 1995இல் சுதந்திர பர்மா கூட்டணியை நிறுவிய பர்மிய ஜனநாயகச் செயல்பாட்டாளர். ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான அதிகரித்த பாரபட்சம் மற்றும் வன்முறையை நிபந்தனையின்றி எதிர்க்க முன்வந்து இந்த விஷயத்தில் ஔங் சான் சு கீ-யைப் பகிரங்கமாக விமர்சித்த மிகச் சில பர்மிய அறிவுஜீவிகளில் ஒருவர்.

நன்றி – காலச்சுவடு