உங்கள் கல்லறை மீதினில் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் .!

0
799

maveerarதமிழீழத்திற்கான விடுதலைப் போரில் களமாடி தமது உயிர்களை ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தியாகம் செய்த போராளிகளின் நினைவுதினம் இன்று. தமிழகம் உட்பட உலகின் எல்லா பகுதிகளிலும் வசிக்கும் தமிழ் மக்கள் இந்த நாளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

சிறீலங்காவின் ஆக்கிரப்பின் கீழ் உள்ள தமிழீழத்திலும் தமிழ் மக்கள் தமது புதல்வர்களை மௌனமாக கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்றனது.

உயிர்களைத் துறந்த மறவர்களுக்கு ஈழம்ஈநியூஸ் தனது அகவணக்கத்தை வாசகர்களுடன் இணைந்து செலுத்துவதுடன், வாசகர்களின் ஆக்கங்களையும் இங்கு பதிவு செய்கின்றது.

0000000

மாணவர்கள் மீதான அச்சுறுத்தல்களையும் மீறி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் இனஅழிப்பு இராணுவத்தினரால் விசாரணைக்குட்பட்டதையும் தாண்டி மாவீரர்களுக்கான முதல் தீபத்தை பல்கலை ஆசிரியர்கள் இன்று யாழ்பல்கலையில் ஏற்றினார்கள்.

உலகத்திற்கான தமிழர்களின் செய்தியை காவியபடி அந்த சுடர் ஓங்கி எரிகிறது.

0000000000000

வல்லமை தரும் என்று
உங்களின் வாசலில்
வந்துமே வணங்குகின்றோம் .!

உங்கள் கல்லறை மீதினில்
கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம் .!

சாவரும் போதிலும் – உடல்
தணலிடை வேகினும்
தமிழ் சந்ததி தூங்காது .!

எங்கள் தாயகம் வரும் வரை
தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது
எம் தமிழரின் தாகங்கள் தீராது …!

தமிழீழத்தின் வேங்கை

0000000000

அடந்த புல்வெளிகளில் உக்கிர
களமாடி ரத்தம் தோய்ந்திருக்கும்
தோட்டா அங்கிகளை மரக்கிளையில்
தொங்க விடப்பட்டிருக்கும் வீரம்
மாய்ந்தவனின் உடல்கள்
அக வணக்கத்தில் தொழுவப்படுகின்றன.

கோ.நா

தாயகத்தை மீட்போம் !
tamil-heros
தமிழீழம் கேட்கின்ற
தங்க மறவரை நாம்
அமிழாத வீரப்போர்

ஆங்கதனில் பறிகொடுத்தோம் !
உமிழ்கின்ற புன்பகையின்
உயிர்குடிக்கத் தவறிவிட்டோம் !
தமிழீழ மறவர்களே !
தாழ்ச்சியில்லா வீரர்களே !
மாயாத் தமிழினத்தின்

வாகைக் களிறுகளே !
சாயாத் தமிழ்மரபின்
சாகா உருவங்களே !
காயாத உங்கள்

குருதியின் மேல் ஆணையிட்டோம் !
தாயகத்தை மீட்போம் !
தமிழீழம் காண்போம் !

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

000000
hero098
என் மகனுக்கு அஞ்சலி!
இன்னும் இருக்கிறேன் என்றறி!
எழுந்திரு!
உன் அம்மாடா!

விதைக்கப்பட்டவர்களின் குரல்

வீடுகளும் கல்லறைகளும்
கோயில்களும் அழிக்கப்படுகையில்
ஒரு நாய்க்குட்டி இடமற்றுத் திரிகிறது

கல்லறையற்றிருக்கும் மரித்தோருக்கும்
வீடற்றிருக்கும் மனிதர்களுக்கும்
இடம் மறுக்கப்பட்ட கடவுள் என்ன செய்வார்
hero-11
இருப்பவர்களின் வீடுகள் அழிக்கப்படுகையில்
மாண்டுபோன தனது பிள்ளையின்
அழிக்கப்பட்ட கல்லறைக்காய்
ஒரு துண்டு நிலம் கேட்கிறாள்
கார்த்திகை மாதக் காந்தள் மலரோடு
அலையும் தாயொருத்தி

பிள்ளைகளும் இல்லை
கல்லறைகளும் இல்லை
கனவைப் போல
பூத்திருக்கும் காந்தள் பூமரங்களில்
எரிகின்றன விளக்குகள்.

வாழும்பொழுதும்
மரணத்திற்குப் பின்னரும்
இடம் மறுக்கப்படுகையில்
இறந்தவர்களும்
இருப்பவர்களும் என்ன செய்ய முடியும்

எதற்காக இறந்தோம்
எதற்காக இருந்து கொண்டிருக்கிறோம்

நீ நினைப்பாய்
கடவுளுக்குகூட நிலம் மறுக்கப்படுகையில்
என்ன நம்பிக்கையோடு இருக்கிறார்களென

எனது நிலத்தின் கல்லறைகள்
மரணத்தை விரும்புபவையல்ல
அழகியதொரு வாழ்வின் கனவோடு
புதையுண்டு போனவர்கள்
துயிலும் வீடுகள்

குழந்தைகளின் குரலாக
கல்லறைகளின் குரலாக
நாம் கேட்போம்

ஏனெனில் இது எமது தாய் நிலம்
நாம் யாருடைய நிலத்தையும் அபகரிக்கவில்லை

தீபச்செல்வன்

2013 நவம்பர்

நன்றி: குங்குமம்

0000000
hero-k89
எங்கிருக்கிறாய் தமிழா?
எழுந்து வா……!

முள்ளிவாய்க்காலும் முற்றமுமென்ன
முற்றுப்புள்ளியென்று
நினைத்தாயா?

ஆரம்பப்புள்ளியாய் அவதரி-

கடல்பல தாண்டி
நிலம்பல ஆண்ட
நெஞ்சுறம் நமதே நினைவுகொள்,

சிறுகுழல் கொண்டே
சிங்களம் சாய்த்த
சிறுத்தையும் நமதே நிமிர்ந்துநில்.,

கருவிலே இருக்கும்
குழந்தையும் புலியென
காடையன் கொன்றதை நினைவில்கொள்.,

அடிமைவிலங்கை
அகற்றவன் துணிந்ததால்
அகிலமும் எதிரி அவனுக்கு-

உலகப்படைகள் ஒருபுறம் நிற்க
அவன்படைகொண்டே
அகிலமும் தகர்த்த
ஆண்மகன் வருவான் துணிவுநில்…!

உன் உணர்ச்சியற்ற
இயலாமையை
ஒருங்கே பயன்படுத்தி
அரசியல் செய்யும் அநாதையெல்லாம்

இங்கே
தமிழின தலைவன் தான்தானென்றது

வேசியும் கூட
தேசியம் பேசியது

ஒருவேளை சோற்றுக்கும்
உயிர்கொல்லும் மதுவுக்கும்
விலைபோகும் கூட்டமே விழித்துக்கொள்-

புலிக்கொடி பிடித்த
கைகளில் நாய்களின்
புகழ்க்கொடி பிடிப்பதை நிறுத்திக்கொள்.,

அவனது பேரிலும்
அவளது பேரிலும்
ஆயிரம் ஆயிரம் சலுகைகள்

உழைப்பவன் செலுத்திய
வரிளில் நாய்களின்
புகைப்படம் வீதியில் பிணங்களாய்-

ஓட்டுகள் வாங்க
உணவுகள் இலவசம்,

கட்சிக்கொடியுடன்
உடைகளும் இலவசம்.,

விளம்பரம் எழுத
வீடுகள் இலவசம்,

மதியை மழுக்கிட
மதுவும் இலவசம்.,

தரங்கெட்ட உனக்கு
தாலியும் இலவசம்,

காமப்பசிக்கு
கன்னியர் இலவசம்.,

இலவசம்
இலவசம்
இலவசம்….
த்தூ…………………..!

ஆட்சிக்காக
ஆடையவிழ்த்தவளுக்கும்

பேராசையில்
பேனாபிடித்தவனுக்கும்

தூக்கிப்பிடித்த கொடியை
நீ தூக்கிஎறியாவிடில்

உயிரிருந்தும்
பிணங்களாய் வாழும்
ஒரே இனம் தமிழினமே…..!

….கண்ணன்….

காற்றில் நடுங்கும் மெழுகுவர்த்தி
praba-t
கல்லறையின் மேலொருத்தி
இறந்துகொண்டிருக்கிறாள்
இந்தக் கோடையில் ஏது பனித்துளி
பூங்கொத்தும் அழுகிறதா?
உள்ளே உறங்குபவனின்
பெயரும் அறியேன்
ஆனால், அவனைத் தெரியும்!

உற்சாகம் மிகுந்த மீன்குஞ்சினைப்போல்
நீரை உறிஞ்சி வானில் உமிழ்ந்தபோது
சொரிந்த வெள்ளிகளை
முன்பொருநாள் கண்டிருந்தேன்
பாலகனாய் பாலைமரத்திலிருந்தபடி
ஏனைச்சிறார்க்கு பழிப்புக்காட்டியவனை
மெலிதொரு புன்னகை சிந்திக் கடந்திருந்தேன்
மாடுகள் பட்டியடையும் மாலையொன்றில்
பாடசாலைச் சுவரில்
கரித்துண்டால் காதலை எழுதிக்கொண்டிருந்தான்
கடைசியாய்க் கண்டது சோதனைச் சாவடியில்
கைகளை உயர்த்தியபடி
உடல் தடவவிட்டவனின்
கண்களுக்குள் தளதளத்தபடியிருந்தது எரிமலைக்குழம்பு!

அவனை எனக்குத் தெரியாது
ஆனால் தெரியும்
அவளையுந்தான்.

துப்பாக்கியை அணைத்தபடி
எல்லைக்காவலில் பாடிக்கொண்டிருந்தவனை
காடு கேட்டிருந்தது
பாடலை இடைநிறுத்தி அழைத்துவந்தோம்
அவரவர் பனிப்புலத்தில்
கடவுச்சீட்டுப் பெற்ற மறுநிமிடம்
பாம்புகள் சிறுநதிகளென எதிர்ப்படும் காடுகளில்
மீண்டும் அலையவிட்டோம் அவன் குரலை.

சருகுகள் விலக்கி முகம்புதைத்து விசும்புகிறாள்
மெழுகுவர்த்தியின் சுடர் நடுங்குகிறது
இழந்த கனவுகளின் முன்னே…

புனைவுலகின் பெருங்கதையாடல்களில்
தேவதேவதைகள் பேய்களாயினர்
வலிகளிலிருந்து பிறந்த பாடலை
வெறிச்கூச்சலென மொழிபெயர்க்கிறது
நமதெல்லோருக்குமான அதிகாரம்

மயில் அகவும் வன்னியின் சிறுகூடொன்றில்
காதோரக் குழல் விலக்கி
முத்தமிட்டுத் துயில்கலைக்கும் விடியலன்றி
வேறென்ன கேட்டிருப்பாய் சிறுபெண்ணே..
குலுங்கும் உனது முதுகுப்பரப்பினை
இருள் கவிந்து மூடுகிறது

எனக்கு உன்னைத் தெரியாது
நீ நித்திலா..
யாழினி…
வாசுகி…
யாரோ
ஆனால் தெரியுமடி!

கல்லறைகள் உயிர்த்திருக்கும் நிலத்தில்
அதிமானுடக் கதைகளைக் கேட்டிருக்கும்
குழந்தைகளின் விழிகளில்
செவ்வரத்தை மலர்கிறது

இந்த மாலையில்
என்னிதயத்தின் இரத்தமெல்லாம்
கண்ணீராய் சுண்டச்செய்தாய்
அன்பே!உன்னை அறிந்திலேன்

எனின்
உன்னைப்போல் பல்லாயிரவரை
நாங்கள் அறிவோம்
வல்லுாறுகளின் சிறகிருளால் மூடப்பட்டிருக்கும்
வரலாறும் அறியும்.

0000000
hero-k
தமிழ்நாடு புதுவை மாநகரில் தமிழர் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் மிகப் பிரமாண்டமான முறையில் பதாதைகள் மற்றும் மாவீரர் திருவுருவப்படங்கள் வீதிகளில் வைக்கப்பட்டு தமிழின உணர்வாளா்களால் நிகழ்வு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். இந் நிகழ்வில் பல முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.