உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஒருவர் தனது வழக்கை மீளாய்வு செய்யும் வகையில் புதிய சட்ட வடிவங்களை உருவாக்க வேண்டும்

0
582

perarivalanபேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜனின் திடுக்கிடும் வாக்குமூலம் ராஜீவ் கொலை வழக்கில் பல திருப்பங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த நிமிடம் வரை வேலூர் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் பேரறிவாளனின் சட்டப் போராட்டத்தின் பெரும்பகுதி தியாகராஜனை எதிர்த்துதான் இருந்தது. பேரறிவாளனால் பல சமயங்களில் கடுமையாக விமரிசிக்கப்பட்ட சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன் ‘அறிவு நிரபராதி, நீதிப்பிழை நேர்ந்து விட்டது’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்த திருப்பத்தை பேரறிவாளன் எப்படி எதிர்கொள்கிறார்? அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பேரறிவாளனிடம் பேட்டி எடுக்க முடிவு செய்தோம். அதற்க்கான கேள்விகளை தயார் செய்து அவரது வழக்கறிஞர் சிவாவிடம் கொடுத்தோம். அவர் மூலம் பேரறிவாளன் நமக்குக் கொடுத்த உணர்ச்சிகரமான பேட்டி அவரது வரிகளில்…

எந்த போலீஸ் அதிகாரி உங்களை சித்ரவதை செய்தாரோ, அடித்து உதைத்து வாக்குமூலத்தை பெற்றாரோ, அதே அதிகாரி இன்று ‘அறிவின் வாக்குமூலத்தை நான் சரியாக பதிவு செய்யவில்லை..’ என்று தெரிவித்து உள்ளார். 22 ஆண்டுகளாக உங்கள் மனதில் எரிந்து கொண்டிருந்த ஆதங்கமே இதுதான்! இந்த தகவலை கேள்விப்பட்டபோது, உங்களின் மனநிலை எப்படி இருந்தது…?

‘‘சொற்களால் விவரிக்க முடியாத மனநிறைவு ஏற்பட்டது. 22 ஆண்டுகால இளமையும், வலியையும் இது மீட்டுத்தரப் போவதில்லை என்றாலும் ‘கொலைகாரன்’ என்ற என் மீதான குற்றச்சாட்டு துடைத்தெறியப்பட்டதே மாபெரும் ஆறுதலை தந்தது. கனவுபோல் அமைந்துவிட்ட இந்த சம்பவம் ஒரு வகையில் எனது துக்கத்தை தொல்லை செய்ய துவங்கிவிட்டது என்றுகூட சொல்லலாம்.

இந்திய நீதியியல் வரலாற்றில் இந்த அரிதான திருப்பம் எனக்கு மட்டுமே அல்லாமல் நீதிப்பிழையால் பாதிக்கப்படும் அனைவருக்குமே பயன்பட வேண்டும். தனது குற்றமற்ற தன்மையை நிரூபிக்க புதிய ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஒருவர் தனது வழக்கை மீளாய்வு செய்யும் வகையில் புதிய சட்ட வடிவங்களை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளில் இதுபோன்ற அமைப்புகள் உள்ளது. அதுபோன்ற அமைப்பு முறையை இங்கும் கொண்டுவர ஆட்சியாளர்களும், சட்ட வல்லுநர்களும் முன்வர வேண்டும்.’’

நீங்கள் மன்னிப்பு வேண்டியதில்லை. எனக்கு மறுக்கப்பட்ட நீதியை வழங்கினாலே போதும் என்றீர்கள்! உங்களின் நீண்டகால போராட்டமும் அதுதான்! இப்போது உங்களை விசாரித்து வாக்குமூலம் வாங்கிய சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் ‘நடந்துவிட்ட நீதிப்பிழையில் நானும் பங்கேற்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு உங்கள் பதில் என்ன?

‘‘ ‘நான் தவறிழைத்துவிட்டேன். வாக்குமூலத்தின் உயிரான பகுதியை பதிவு செய்யத் தவறிவிட்டேன்’ எனவும் ‘அறிவு நிரபராதி & நீதிப்பிழை நேர்ந்துவிட்டது’ எனவும் 22 ஆண்டுகளுக்கு பிறகாவது ஒரு மனிதரின் மனச்சான்று விழித்துக்கொண்டதே எனும்போது அதுகுறித்து சொல்ல என்ன இருக்கிறது. அவர் செய்யத் தவறியது குறித்தோ செய்த தவறு குறித்தோ குற்றம் சாட்டுவதை காட்டிலும் காலங்கடந்தேனும் உண்மையைச் சொன்னார் எனும்போது மன நெகிழ்ச்சியே உண்டானது. அவரை கடந்த 22 ஆண்டுகளாக மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்திருக்கிறேன். ஆகையால் அவரது மனமாற்றம் ஒரு வகையில் எனக்கு ஒரு குற்றவுணர்வை உண்டாக்கிவிட்டது என்றுகூட சொல்லலாம்.’’

உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல. உங்கள் தரப்பு நியாயமும்கூட ‘இருட்டறையிலேயே’ இருந்திருக்கிறது. இப்போது அது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாய் நினைக்கிறீர்களா?

‘‘முழுமையாக வெளிச்சத்திற்கு வந்துவிட்டன என்று கூறிவிட முடியாது. தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், அரசு வழக்கறிஞர்களும், நீதியரசர்களும் தமது மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டவர்களாக வெளிப்படையாக நடந்தவற்றை கூற முன்வந்தால் முழுமையாக வெளிவர வாய்ப்பிருக்கிறது. நீதியரசர் திரு.கே.டி.தாமஸ் மற்றும் திரு.தியாகராசன் ஆகியோர்போல் அனைவரின் மனச்சான்றும் அவர்களை உந்தி தள்ளுமா என்பது கேள்விக்குறியே! என்றாலும் நான் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை.’’

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தலைமை அதிகாரியான கார்த்திகேயன் ‘தியாகராஜன் அதிகாரி போலீஸ்காரரை போல் நடந்து கொள்ளவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரையில் ஒரு நீதிமானாகதான் நடந்துகொண்டார். மிக நேர்மையாக நடந்துகொண்டார்’ என்று நற்சான்று கொடுத்திருக்கிறார். அப்படியானால் உங்களுக்கான நீதி எப்படி மறுக்கப்பட்டது?

‘‘தியாகராஜன் குறித்து கார்த்திகேயன் எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு கருத்து கூறினார் என தெரியவில்லை. என்றாலும் தான் நீதிமானாக நடந்துகொள்ளவில்லை என்பதாலேயே தற்போது தியாகராஜன் அவர்களின் மனந்திறந்த வாக்குமூலம் வெளிவந்துள்ளது. எனக்கான நீதியை எங்கு மறுத்தேன் என்பது குறித்தும் அவரே தனது பேட்டிகளில் கூறியிருக்கிறார்.’’

கார்த்திகேயன், ரகோத்தமன், தியாகராஜன் ஆகிய சி.பி.ஐ. அதிகாரிகள் எல்லோருமே ‘மரண தண்டனை கூடாது’ என்று சொல்கிறார்கள். உங்களுக்கான நீதியை மறுத்தவர்கள் என்று நீங்கள் சுட்டிக்காட்டும் இவர்களின் இப்போதைய பேச்சை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

‘‘மூவரையும் ஒரே அளவுகோலில் அளப்பது சரியல்ல என்பது எனது கனிவான கருத்து. தியாகராஜன் அவர்கள் தன்னளவில் நேர்ந்துவிட்ட பிழையை மிக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு நான் நிரபராதி என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம் கார்த்திகேயன் மற்றும் ரகோத்தமன் ‘மரண தண்டனை கூடாது’ என்று மட்டும் கூறுகின்றனரே தவிர எனக்கு அவர்கள் இழைத்த அநீதியை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயங்குகின்றனர். ஆனாலும் அவர்களின் மன உந்துதல்தான் இவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியுள்ளது என்பதில் அய்யமில்லை.

உங்கள் மூவர் விஷயத்திலும் தமிழக அரசின் போக்கை எப்படி பார்க்கிறீர்கள்?’’

‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மூவர் விஷயத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். அது மிகவும் பாராட்டத்தக்க, உறுதியான முடிவு என்பதில் அய்யமில்லை. தியாகராசன் அவர்களின் தற்போதைய வாக்குமூலம் மாண்புமிகு முதல்வர் அவர்களின் நிலைப்பாட்டை 100 விழுக்காடு நியாயப்படுத்தியிருக்கிறது. அதேநேரம் எனது நீதிக்கான போராட்டத்தில் இன்னமும் கூடுதலான பங்களிப்பை அவரிடமிருந்து நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.’’

22 ஆண்டுகள் கடந்துவிட்டது. வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு பாதி வாழ்க்கை போய்விட்டது. எஞ்சியிருக்கும் வாழ்வும் இந்த நிமிடம்வரை கேள்விக்குறிதான் என்ற நிலையில் உங்கள் மன ஓட்டம் எப்படி இருக்கிறது?’’

‘‘வெளியுலகில் நான் வாழ்ந்ததைவிட கூடுதலான ஆண்டுகள் சிறையில் வாழ்ந்துவிட்டேன். அதிலும் மனித வாழ்வின் முகாமையான காலத்தை (Prime time) சிறைக்கம்பிகளூடாக மரண தண்டனைக் கூடத்தில் கழித்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளையும் மனத்துணிவோடு நான் எதிர்கொள்ள கற்றலில் எனக்கிருந்த ஆர்வமும், கலையுணர்ச்சியும்தான் காரணம் எனக் கருதுகிறேன். எனது பெற்றோர் எனக்குக் கற்றுத்தந்த ஒழுக்கமும், நேர்மறை சிந்தனைகளும், மனத்துணிவும்தான் என்னை வழிநடத்துகின்றன.’’

‘உயிர்வலி’ ஆவணப்படம் கிளப்பி இருக்கும் அதிர்வலைகள் எதை நோக்கி செல்ல வேண்டும், செல்லும் என்று நினைக்கிறீர்கள்?

‘‘ ‘உயிர்வலி’ என்ற மரண தண்டனைக்கு எதிரான ஆவணப்படத்தை எடுக்க முன்வந்தமைக்காக அண்ணன் திரு.செல்வராசு அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். மறுக்கப்பட்ட நீதி குறித்த மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ள இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் திரு.பிரகதீஸ்வரன் மற்றும் அவரது குழுவினர், இதன் சிறந்த நோக்கமறிந்து உதவிய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறவேண்டும்.

இந்த ஆவணப்படம் இருபெரும் விளைவுகளை உண்டாக்க வேண்டும் என விரும்புகிறேன். முதலாவதாக குற்றமற்ற ஒருவன் நீதிப்பிழையால் மரண தண்டனையை அடைந்துவிடும் நிலை நமது நீதி முறையில் இருப்பதால் அதனை தவிர்க்க சட்டப் புத்தகத்திலிருந்து மரண தண்டனையை நீக்கிட தூண்டுகோலாக இருக்கவேண்டும்.

இரண்டாவதாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் நிரபராதி என ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் வழக்கினை மீளாய்வுக்கு உட்படுத்திடும் வகையில் புதிய சட்ட வடிவத்தை ஏற்படுத்த இந்த ஆவணப்படம் காரணமாக இருக்க வேண்டும்.’’

நீங்கள் நிரபராதி என்று ஏறக்குறைய அனைவரும் ஒத்துக்கொள்ளும் நிலையில் நீங்கள் சுமந்த பழி நீங்கியதாக நினைக்கிறீர்களா? விடுதலையை எதிர் நோக்குகின்றீர்களா?

‘‘கட்டாயமாக. பழிநீங்கிய மனநிறைவுடன் எனது விடுதலையை, புதிய வாழ்வை மிக விரைவில் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எனக்கு மட்டுமல்ல எனது வழக்கில் உள்ள ஏழு பேருக்குமே மிக விரைவில் விடுதலை கிடைக்கும் என நம்புகிறேன். அந்த வகையில் நாங்கள் நிரபராதிகள் என்பதை முழுமையாக ஏற்று அதனை மக்களிடையே எடுத்துரைத்து கடுமையாக போராடிய அன்புக்குரிய அண்ணன்கள் திரு.வைகோ, திரு.சீமான் ஆகியோருக்கும், அமைப்புகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றிகூற கடன்பட்டுள்ளேன்.’’

கே.டி.தாமஸ், தியாகராசன் இவர்களை தொடர்ந்து மேலும் பலரும் உண்மைகளை வெளிக் கொணர்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

‘‘அதனை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். காவலில் துன்புறுத்தியது உண்மையே என காவல் ஆய்வாளர் (CBI/SIT) திரு.மோகன்ராஜ் அவர்கள் தற்போது வெளிப்படையாக கூற முன்வந்திருக்கிறார். தொடர்ந்தும் பல உண்மைகள் வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.’’

நீயூஸ் சைரன் வார இதழ்
பா.ஏகலைவன்