இன்று வந்திருக்கும் தீர்ப்பால் தமிழர்களுக்கு என்ன பயன் என்றொரு கேள்வி முன்வைக்கப்படுகின்றது. சுதந்திர தமிழீழத்தை நோக்கிய பயணத்தில், இந்தத் தீர்ப்பு இரண்டு முக்கிய பயன்களை அளிக்கின்றது. முதலாவதாக, இத்தீர்ப்பின் மூலம் இனப்படுகொலைப் பங்காளிகளின் பங்கு சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது எப்படி என்பதை அறிந்துகொள்வதற்கு முன் இத்தடை ஏன் விதிக்கப்பட்டது என்று பார்க்கவேண்டும்.

ltte-flag
இந்தியா தன்னுடைய வெளியுறவுக் கொள்கையில், வாஜ்பாய் ஆட்சியின்போது, 2000 ம் ஆண்டில் மாற்றங்கள் மேற்கொள்கின்றது. அப்பொழுதிலிருந்து இலங்கைக்கு போர்க்கப்பல்களும், ஹெலிகாப்டர்களும், தாக்குதல் ஆயுதங்கள் என்று பலவற்றையும் வழங்கத் தொடங்குகின்றது. ராணுவ ஆலோசனைகள், ராஜதந்திர உதவிகள் என்று நீளும் அந்த வேலைகள் 2005 ம் ஆண்டில் கூர்மையடைகின்றன. அப்பொழுது மன்மோகன் சிங் பிரதமராக இருக்கின்றார். எம்.கே. நாராயணன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கின்றார். இனப்படுகொலையின் முதல் பகுதியாக புலிகளுக்கான ஆதரவுத் தளத்தையும், புலிகளின் கடற்படையையும் அழிக்க திட்டமிடப்படுகின்றது.

இதன் அடிப்படையில் இனப்படுகொலை நடக்கும்போது, அதனை எதிர்த்து பெருமளவில் மக்கள் போராடக்கூடிய பகுதிகளில் அவற்றை முடக்குவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட இரண்டு பகுதிகள் தமிழகமும், ஐரோப்பிய ஒன்றியமும். ஐரோப்பாவில் மக்கள் போராட்டம் என்பதைத் தாண்டி, விடுதலைக்கான நிதியையும் முடக்க வேண்டிய தேவை இனப்படுகொலையின் பங்காளிகளுக்கு இருக்கின்றது. அதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நெருக்கடி கொடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாதிகள் அமைப்பு என்று தடை விதிப்பதோடு, வங்கிகளில் இருக்கும் நிதிகளையும் முடக்குகின்றனர். இந்தியா அளித்த நெருக்கடி குறித்து இன்று வெளியாகியிருக்கும் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போதே, இருதரப்பில் ஒருதரப்பின் மீது தடை விதிப்பதென்பது, இன்னொரு தரப்புக்கு ஆதரவான செயலாகும். தடை விதித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியமும், தடை விதிக்க அழுத்தங்கள் கொடுத்தது மூலம் இந்தியாவும் இனப்படுகொலையின் பங்காளிகளாக உருவெடுக்கின்றனர். இதே நேரத்தில் புலிகளின் கடற்படையை அழிப்பதற்கான வேலைகளும் தொடங்குகின்றன. அதனை முழுமூச்சில் இந்தியப் படைகளும், இந்தியா வழங்கிய போர்க்கப்பல்களின் உதவியோடு இலங்கையும் மேற்கொள்கின்றன.

இருக்கும் கப்பல்கள் வைத்துக்கொண்டு, புலிகளின் கடைசி இரண்டு கப்பல்களை அழிக்க முடியாமல் திணறுகின்றது இலங்கை கடற்படை. அப்பொழுது 2007 செப்டம்பரில் இந்தியா மேலும் இரண்டு போர்க்கப்பல்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குகின்றது. அதில் ஒன்று சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த CGS Vigraha என்னும் கப்பல். கோத்தபயாவிடம் அவற்றை கையளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, சென்னையில் வைத்து வழங்கினால், சென்னையில் எதிர்ப்புகள் எழக்கூடும் என்று அந்தக் கப்பல், சென்னையிலிருந்து விசாகப்பட்டிணம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து வழங்கப்பட்டது. இந்தக் கப்பல்களை வைத்து புலிகளின் கடைசி கப்பல்களை, இலங்கையில் இருந்து 1860 கடல் மைல்கள் தொலைவில் அழிக்கின்றது. பிறகு 2009 நவம்பரில், தங்களுக்கு அளிக்கப்பட்ட கப்பல்களுக்கு உரிய வேலை முடிவுற்றது; அதனால் அதனை திரும்பத் தாருங்கள் என்று இந்தியா கோரியது. இந்த இரண்டு வேலைகளிலும் இந்தியாவின் பங்கு பல்வேறு ஆதாரங்கள் வழியாக பதிவாகியுள்ளது.

(இந்தியா ஒரு முக்கியப் பங்காளி; இன்னொரு முக்கியப் பங்காளி அமெரிக்கா. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா 1997 ல் தடை செய்கின்றது. பலரும் எழுதுவது போல் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பிறகு அல்ல. சம்பந்தமே இல்லாமல் 1997 ல் ஏன் தடை செய்கிறது என்றால், ஈழத்தின் கடற்கரைகளில் இருந்து இல்மனைட் உள்ளிட்ட தாது மணலை அமெரிக்கக் கப்பல்கள் திருடிக்கொண்டிருந்தன. தம்முடைய ‘மண்’ணை விட்டுக்கொடுக்க மறுக்கும் புலிகள், அமெரிக்கக் கப்பல்களை தாக்கினார்கள். அதனால், மணல் திருடன் அமெரிக்கா புலிகளை தடை செய்து, அவர்களை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து அவர்களை அழித்தும் விட்டான். வேறொரு பதிவில் சர்வதேச அளவில் அமெரிக்க மேற்கொண்டவற்றை பற்றி விரிவாக எழுதுகின்றேன்)

இனப்படுகொலைக் குற்றம் குறித்த சட்டம் இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை மட்டுமல்லாது, இனப்படுகொலையை திட்டமிட்டவர்கள், அதற்கு துணை புரிந்தவர்கள், என்று அனைவருமே தண்டனைக்கு உரியவர்கள் என்று வரையறுக்கின்றது. இந்தியா இனப்படுகொலையில் நேரடியாகப் பங்கெடுத்தது மட்டுமின்றி, அதற்கான திட்டங்களை தீட்டுவதிலும் சர்வதேச அளவில் அதற்கான சூழலை ஏற்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றது. இந்தத் தீர்ப்பில் புலிகள் மீதான தடையை ஏற்படுத்தியதில் இந்தியாவின் பங்கு குறித்து கூறப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, எம்.கே.நாராயணன் தொடங்கி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இனப்படுகொலைக் குற்றவாளிகள் என நிரூபிக்க முடியும்.

இரண்டாவது முக்கிய பயன் என்பது, De Facto State என்னும் உரிமையை நாம் கோர முடியும் என்பதாகும். அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஒரு தரப்பை, அமைதி உடன்படிக்கை நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில் தடை செய்ததன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை சர்வதேசம் முறையற்ற வழியில் மறுத்திருக்கின்றது. தற்பொழுது இந்தத் தடை சட்டரீதியில் தவறு என்று தீர்ப்பு வந்திருப்பதை முனவைத்து, அப்பொழுது வழங்கப்பட்டிருந்த தன்னாட்சி அதிகாரம் என்னும் உரிமையை கோரி நாம் போராட்டங்களை முன்னெடுக்க முடியும்.

இந்தத் தீர்ப்பை முன்வைத்து மற்ற பகுதிகளிலும் தடைகளை தகர்ப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க தமிழர்களுக்கு இத்தீர்ப்பு துணை புரியும். தமிழர்களுக்கு மனதளவில் ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கக்கூடியது இத்தீர்ப்பு.