உலகத்தின் பார்வை இப்போது தமிழீழத்தை நோக்கி குவிந்திருக்கிறது

0
690

hero-132009 மே 18 இற்கு பிறகு, ஒவ்வொரு மாவீரர் நாள் அன்றும் தாயக மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தமிழினமும் யாழ் பல்கலையில் ஏற்றப்படும் தீபத்தின் முன்நின்றுதான் தமது அஞ்சலியை செலுத்தி வருகிறது. போராளிகளிடமிருந்து மாணவர்களிடம் போராட்டம் கைமாற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இது.

எதிரிகளே எதிர்பார்க்காத ஒரு திருப்பம்தான் இது. வருடத்தின் ஏனைய நாட்கள் மாணவர்கள் போராடுவதுமில்லை. பிரச்சாரம் செய்வதுமில்லை. கூட்டம் போடுவதுமில்லை. அன்றைய ஒரு நாள் ஏற்றும் ஒற்றைத்தீபம் மாணவர்களின் நெஞ்சங்களில் மட்டுமல்ல உலகத்தமிழனித்தினதும் மனதில் விடுதலைத் தீயை மூட்டிவிடுகிறது. என்றாவது ஒரு நாள் வெடிக்கப்போகும் மாணவர் – மக்கள் புரட்சியின் வித்து அது.

யாருக்கு இது புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகவே புரிந்து விட்டது. இன்றைய நாள் யாழ் பல்கலை கட்டாய விடுமுறையில் இழுத்து மூடப்பட்டிருக்கிறது. விடுதியில் இருந்து மாணவர்கள்கூட பலவந்தமாக வெளியேற்றப்பட்டு விட்டார்கள். பல்கலைக்ககழக ஆசிரியர் சங்க தலைவர் சிங்களத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் பல்கலையையும் அதன் அண்டிய பகுதிகளையும் ஒட்டி இரவிரவாக குவிக்கப்பட்டுள்ளனர். பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி பல இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஏனென்றால் அந்த ஒற்றைத்தீபம் ஏற்றப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் ஒரே காரணம். ஏனென்றால் பல்கலைக்கழகம் என்பது ஒரு இனத்தின் உளவியலை – உணர்வுகளை நாடிபிடித்துப் பார்க்கும் இடமாக இருக்கிறது.

ஒரு ஒற்றைத் தீபத்தினூடாக ஒட்டு மொத்த இனத்தின் அரசியலை – அவாவை மாணவர்கள் உலகிற்கு எடுத்தியம்பிவிடக்கூடாது என்பதும் அது ஒரு மாணவர் புரட்சிக்கு வித்திட்டதாக போய் முடியக்கூடாது என்பதும்தான் இந்த படைக்குவிப்புக்குக் காரணம்.

கடந்த வருடம் மாணவர்கள் தீபமேற்றியபோதே ஒரு புரட்சிக்கான ஒத்திகை நடந்து முடிந்துவிட்டது. யாழ்ப்பாண புரட்சி என்று அனைத்துலக ஊடகங்கள் அதை வர்ணித்ததை நாம் அறிவோம். சிங்களம் தற்போது செய்யும் கைதுகளும் அச்சுறுத்தல்களும் புலிப்பூச்சாண்டிகளும் ஒரு மக்கள் – மாணவர் புரட்சியை எப்படி அடக்குவது என்பதற்கான ஒத்திகைகளே…

ஆனால் இது எத்தனை நாளைக்கு? இந்த மாவீரர் நாள் இல்லாவிட்டால், இன்னொரு மாவீரர் நாளில் அந்த புரட்சி வெடித்தே தீரும். தொடரும் அடக்குமுறைகள் ஒரு நாள் நிரந்தரப்புரட்சியாக மாறும். மாணவர்கள், மக்கள், பேராசிரியர்கள், அறிவுஜீவிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக வீதிக்கு வரும்போது இன அழிப்பு அரசு முழுமையாகச் செயலிழக்கும். ஏனென்றால் ஆயுதப்புரட்சியை அடக்கியதுபோல் மாணவர் புரட்சியை அடக்க முடியாது.

உலகத்தின் பார்வை இப்போது தமிழீழத்தை நோக்கி குவிந்திருக்கிறது. எனவே ஒரு நவம்பர் 27 தான் தமிழீழத்தின் விடுதலை நாளாகவும் இருக்கும். இறுதியாக, இத்தனை அச்சுறுத்தல்களையும் மீறி ஒரு மாணவனாவது யாழ் பல்கலையின் ஏதோ ஒரு மூலையில் தனித்து நின்றாவது தீபத்தை ஏற்றிவிட்டு அதைச்சொல்லும் சேதிக்காக உலகத்தமிழினம் காத்திருக்கிறது – மண்ணின் மைந்தர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதற்காக..

அது நிச்சயம் நடக்கும். நாம் அஞ்சலி செலுத்துவோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”.

பரணி கிருஸ்ணரஜனியின் முகநூலில் இருந்து.
படம் – அருண் வரதன்.