ஒரே ஒரு மனிதன்..
அந்த மனிதனும் ஒரு பெரும் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவரோ.. அல்லது தியாகியோ.. முக்கியமான நபரோ அல்ல..

ஆனால் அந்த ஒரு மனிதனின் கொலைக்கு இன்று அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஒரே காரணம் அந்த மனிதன் கொல்லப்பட்ட முறையும் அதற்குப் பின் இருக்கும் நிறவெறியும்தான்.

தன் கழுத்து நரம்பை நெறிக்கும் அந்த நிறவெறி முட்டுக்கு நடுவில் மூச்சு திணறலுடன்
“i can’t breathe” என்று George Floyd என்ற அந்த மனிதன் உச்சரித்த அந்த கடைசி வார்த்தைகள் இருக்கிறதே.. ஐயோ.. அதை கேட்கும்போது நம் கழுத்தே நெறி படுவதுபோல் மனம் பதறுகிறது.. அந்த இறுதி மூச்சு காணொளி பார்க்கும் எவரையும் கொதித்தெழ செய்யும்.

அந்த கொதித்தெழுதலைதான் இன்று அமெரிக்கா பிரிட்டன் உட்பட வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் கலந்து வசிக்கும் நாடுகளில் பற்றி எரியும் போராட்டங்கள் மூலம் பார்க்கிறோம்.

இந்த போராட்டங்கள் எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் நிரப்பக்கூடிய முக்கியமான போராட்டங்களாக பார்க்கப்படுகிறது.

இந்த போராட்டங்கள் உலக சமூகத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறது.

அதன் பெயர் `அறம்’….” Morality “

இந்த பூமி பந்து முழுமைக்கும் பரவியிருக்கும் மனித இனம் கற்றுக்கொள்ள வேண்டியது அந்த அறம்தான்.

காவலர் சீருடை அணிந்த ஒரு வெள்ளைக்காரனின் நிறவெறிக்கு கொல்லப்பட்டவர் ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவர்.

ஆனால் அந்த கொலையை கண்டித்து உலகத்தையே வீட்டுக்குள் முடக்கிப்போட்ட இந்த கொடூரமான கொரோனா காலத்திலும் மக்கள் வீதிக்கு வந்தார்கள்.

அப்படி வீதிக்கு வந்தவர்கள் எல்லாம் கறுப்பினத்தவர்கள் அல்ல….. என்பதும் வெள்ளை நிறவெறிக்கு எதிராக கிளர்ந்த இந்த போராட்டங்களில் முன் வரிசையில் நிற்பவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்பதுதான் பற்றி எரியும் இந்த போராட்டத்திற்கு நடுவில் நம்மை நெகிழச் செய்கிறது.

ஆம் கொன்றவன் என் இனத்தானாக இருந்தாலும் அவன் செய்தது மாபெரும் பிழை என்று அறத்தின்பால் நிற்க வீதிக்கு வந்தார்கள் வெள்ளையர்கள்.

இதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

இதை அப்படியே இந்திய அல்லது இலங்கை மனநிலைக்கு ஒப்பிட்டுப் பார்த்தால்…… அசிங்கமாக இருக்கிறது.

நடந்து போய்விடக்கூடிய தூரமான ஈழத்தில் இந்தியாவின் துணையுடன் மாபெரும் இனப்படுகொலை நடக்கிறது…….இந்தியர்கள் அனைவரும் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிங்களர்கள் ஈழத்தமிழர்களை கண்ணைக் கட்டி பின் மண்டையில் சுட்டுக் கொன்றதுபோலவே ஆந்திராவில் மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி 20 தமிழர்களை தெலுங்கர்கள் சுட்டுக்கொன்றார்கள்.

ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கர்களை விடுங்கள்…….இங்கு தமிழில் பேசி தமிழில் எழுதி தமிழால் வாழ்ந்து கொண்டு…… வெளியே தமிழராகவும் உள்ளே தெலுங்கராகவும் இருப்பவர்களே அந்த படுகொலைகளை நியாயப்படுத்தி தமிழில் தான் எழுதிக் கொண்டிருந்தார்கள்………மடை மாற்றினார்கள்.

சுத்தமான காற்று வேண்டும்….. ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்று போராடிய தூத்துக்குடி மக்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுக்கொன்றார்கள் காவலர்கள். வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை என்று மாநில முதல்வர் வெட்கமே இல்லாமல் சட்டசபையில் சொன்னார்.

தமிழர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்..

மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று கூறி இந்து மதவெறியர்களால் இஸ்லாமியர்கள் அடித்து கொல்லப்பட்டார்கள்.

இந்துக்கள் எனும் பொது சமூகம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிரு ந்தது.

கடவுள் இல்லை என்று எழுதிய காரணத்திற்காக இஸ்லாமிய இளைஞன் பரூக்கை அவன் மதத்தவர்களே வெட்டிக் கொன்றபோதும்…….

இஸ்லாமியர் ஒருவரின் நெற்றியில் திருநீற்றை பூசிவிட்டு அவர் தொப்பியை எடுத்து தன் தலையில் மாட்டியதால் ராமலிங்கம் வெட்டிக் கொல்லப்பட்டபோது இஸ்லாமிய சமூகம் முட்டுக்கொடுத்தும் கடந்தும்தான் போனார்கள்.

ஒடுக்கப்பட்ட சாதிக்காரனையும் அவனை காதலித்த மகளையும் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யும்போதும்,
ஒடுக்கப்பட்ட மக்களின் வாயில் மலம் கரைத்து ஊற்றப்படும்போதும், சேரிகள் கொளுத்தப்படும்போதும் ஊர் சமூகம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்தபடியே இருந்தது.

இந்த வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்திற்கு பச்சை தமிழன் பச்சை திராவிடன் பச்சை இந்தியன் என்ற எந்த வித்தியாசமும் இல்லை. எல்லா பொது புத்தியும் ஒன்றுதான்..

அசுரன் படத்தில்………. “செருப்பு போட்டதுக்காக அவன் என்ன அடிச்சது கூட வலிக்கல மாமா.. ஆனா சுத்தி நின்னு வேடிக்கைப் பார்த்த ஒருத்தர் கூட ஏன் அந்த பிள்ளையை அடிக்கேனு கேட்கல மாமா” என்று தனுஷ் கட்டிக்கப்போகும் பெண் சொல்வதுபோல் ஒரு அற்புதமான காட்சி வரும்.. ……அதுதான் உண்மை.

எல்லா அநீதிக்கும் துணையாக நிற்பது இந்த வேடிக்கைப் பார்க்கும் புத்திதான்.

ஆனால் மனிதம் என்பது வேடிக்கைப் பார்ப்பது அல்ல.. அநீதி நடக்கும்போது அறத்தின் பால் நிற்க வேண்டும் என்பதுதான் வெள்ளை நிறவெறியால் மூச்சு நரம்பு நெறித்து கொல்லப்பட்ட கறுப்பினத்து ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காக வீதிக்கு வந்து போராடும் வெள்ளையர்கள் இந்த உலகத்திற்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.

ஆம்….. அறம் என்பது யாதெனில் என்பதை கொஞ்சம் வெட்கத்தை விட்டு வெள்ளையர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.

source: Cartoonist Bala

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here