உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை !

0
666

நேற்று (21) உலகத் தாய் மொழி தினத்தில் பொதுமக்கள் தங்கள் தாய் மொழியை பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்து தாய் மொழியின் அவசியத்தை உணர்த்தினோம். இந்நிகழ்வில் பல்வேறு தேசிய இன மக்கள் தங்கள் தாய் மொழியில் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். கேரளா , ஆந்திரா , அசாம் , திரிபுரா , கர்நாடக , போன்ற மாநில மக்களும் தாய் மொழியை பாதுகாக்க உறுதி பூண்டனர். பலரும் நமக்கு நன்றி தெரிவித்தனர் . மாணவர்கள், பெரியவர்கள் , பெண்கள் , சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் .

world-tamilday1
கீழ்க்கண்ட செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களிடம் அவர்கள் தாய் மொழியேலேயே கையெழுத்து பெறப்பட்டது .

” தாய் மொழியின் அவசியத்தை புரிந்து கொண்டு நம் தாய் மொழி செழிக்க உறுதி ஏற்போம். உலகில் பல்வேறு தாய் மொழிகள் உலகமயமாக்கல் மற்றும் பிற மொழிகளின் தாக்கத்தாலும் அழிந்து வருகின்றன. இந்தியாவில் பல பழம்பெரும் மொழிகள் பேசப்பட்டாலும் அவைகள் எல்லாம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இல்லை. இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது.

அதனால் இந்தியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் நம் குழந்தைகள் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும் எனில் நாம் தான் நம் தாய் மொழிக்காக குரல் கொடுக்க வேண்டும் . எந்த மொழித் திணிப்பும் நம் மேல் நடைபெறாமல் நாம் பார்த்துக் கொள்ளவேண்டும். தாய் மொழியில் தான் பேசவேண்டும் , எழுதவேண்டும். நம் மொழி எல்லா வகையிலும் பயன்பாட்டில் இருக்கும் படி செய்ய வேண்டும். தாய் மொழியில் கல்வி, தாய் மொழியில் கையெழுத்து ,தாய் மொழியில் வங்கி பரிவர்த்தனை, கணினிப் பயன்பாடு, வணிகம், கல்வி என அனைத்தும் இருக்கும் நிலை வந்தால் தான் நம் தாய் மொழி காக்கப்படும். தாய் மொழி காப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம்.

அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம்.” என்று மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது .

இதனிடையே உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு மனுசியபுத்திரன் அவர்கள் நேற்று சன்நியூஸ் தொலைக் காட்சியில் நான் பேசியதிலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகின்றோம்.

தமிழர்களுக்கு என்று ஒரு நாடும் அரசும் உருவாகாத வரை தமிழின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த இயலாது.

தமிழர்களின் ஆங்கில மோகத்திற்கு அவர்களது சாதி சார்ந்த தாழ்வுணர்சிதான் முக்கிய காரணம். ஆங்கிலம் அதிகாரத்தின் மொழியாக இருந்ததால் அதிகாரத்தோடு நெருக்கமாக இருந்த பிராமணர்கள் அதை தன் வயப்படுத்திகொண்டிருந்தனர். பிற சாதியினர் முதன் முதலாக கல்வி- அதிகாரவர்க்க பணிகளில் வாய்ப்பு பெறும்போது அவர்கள் தங்களை பிராமணியமயப்படுத்திக்கொள்வதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டனர். அதன் விளைவுதான் இந்த ஆங்கில வெறி. இந்த தாழ்வு மனப்பான்மையை ஆங்கில தனியார் கல்வி வியபாரிகள் திறமையாக பயன்படுத்திக்கொண்டனர். தமிழ் பயிற்று மொழியாவதை அவர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

world-tamilday4
ஆங்கிலம் படிப்பதற்கும் வேலைவாய்ப்புகளுக்கும் உள்ள தொடர்பு கட்டுக் கதை. மலையாளிகள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். இந்தியா முழுக்க உயர் அதிகார மட்டங்களில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் போல தங்கள் தாய் மொழியை முற்றாக கைவிட்டு விட்டு இந்த வாய்ப்புகளை பெறவில்லை. தங்கள் தாய்மொழி சார்ந்த அடையாளத்தில் மிக உறுதியாக இருக்கிறார்கள்..

ஏழரைகோடி தமிழர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டில்தான் வேலை செய்கிறார்கள்.

ஆங்கிலம் தொடர்புமொழியாக இருப்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால் அது இன்று தமிழை அழிக்கும் கருவியாக மாறிவிட்டதை சகிக்க முடியாது.

தமிழ் நாட்டில் தமிழ் எல்லா நிலைகளிலும் கட்டாயமாக்ககபடுவதே இந்த அழிவை தடுத்து நிறுத்துவதற்கான முதன்மையான பணி..