உலக நீதிகளில் ஒரு மனிதனுக்குள்ள மனித உரிமைகளையாவது தமிழ் மக்கள் பெற்றுவிட வழி ஏற்படுத்துங்கள்

0
797

war-crime443பொஸ்னியா போரின் ஆரம்பத்தில். 1992 ஆண்டு மே மாதம் பொஸ்னியாவில் வாழ்ந்து வந்த ஹிபா மெமெடோவிக் (Hiba Mehmedovic) நிகழ்ந்த துன்பமிது. ‘எனது வீட்டுக்குள் ஆயுதம் தாங்கிய 3 சேர்பியர் பிரவேசித்தனர் என்னையும் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்றனர். சில வாரங்கள் கழித்து ஒரு பேரூந்து ஒன்றினுள் என்னை பலவந்தமாக ஆயுதமுனையில் ஏற்றி எனது நகரத்தின் மேற்குபுறமுள்ள முன்னனி எல்லையில் இறக்கிவிட்டனர். ஆனால் எனது இரு மகன்களையும் இன்று வரை நான் மீண்டும் காணவில்லை’ என கண்ணீருடன் கூறினார். இது சேபியர்களால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவரது கதை.

சிறீலங்காவில் நடைபெற்ற பல நூறு சம்பவங்களும் இதே போன்றதே. சிங்கள இனவாதத்தின் படுகொலைகளில் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரில் இருந்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மதகுருக்கள், அப்பாவி குடிமக்கள் என யாரும் தப்பவில்லை. படுகொலைகள், கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் என்பன துணை இராணுவக்குழுக்களை கொண்டும், துணை இராணுவக்குழுவினர் என்ற போர்வையில் சிவில் உடையில் வரும் படையினராலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இனச்சுத்திகரிப்பு (Ethnic cleansing) என்றால் என்ன? இந்த வார்த்தை 1990 களில் தான் ஆங்கில அகராதியில் இடம்பிடித்துக் கொண்டது, பின்னர் 1992 களில் அனைத்துலக மட்டத்தில் பிரபல்யம் பெற்றிருந்தது. அதாவது அப்பாவி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வர்ணிக்க என வரையப்பட்ட சொல் இது என்றால் மிகையாகாது.

தமது இனத்தை முதன்மைப்படுத்துவதற்காக ஒரு இனத்தை சேர்ந்த ஆட்சியாளர்கள் அல்லது குழுவினர் மறு இனத்தை சேர்ந்த மக்களை அவர்களின் நகரங்கள், கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றுதல், படுகொலை செய்தல், பாரபட்சமாக நடத்துதல், எழுந்தமானமாக கைதுசெய்தல் போன்றனவாகும். இது ஒரு அரசியல், இராணுவ வியூக கொள்கைகளின் சேர்க்கையாகும்.

இந்த இனச்சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கு அரசுகள் பயங்கரவாத செயல்களில் இறங்குவதுண்டு. படுகொலைகள், பலவந்தமாக காணாமல் போகச்செய்தல், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பன இதன் முதற்படியாகும், பலவந்தமான வெளியேற்றம் நில ஆக்கிரமிப்புக்கள் என்பன அதன் அடுத்த நிலையாகும்.

உலகம் காலத்துக்கு காலம் சந்தித்த இனச்சுத்திகரிப்புக்கள் அதிகம், அவை பண்டைய காலம் தொடக்கம் 21 ஆம் நூற்றாண்டு வரை தொடர்கின்றன.

ஸ்பெயின் இல் இருந்து சிறுபான்மை இனத்தவரான முஸ்லீம் மற்றும் யூத இன மக்கள் 1502 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டனர். பின்னர் காலணித்துவ ஆட்சிகளின் கீழ் இருந்த பல்கன் குடியரசுகள் சுதந்திரம் பெற்ற போது அங்கிருந்த துருக்கி இனத்தவர்கள், முஸ்லீம், யூதர்கள் ஆகியோர் 1800 – 1900 காலப்பகுதியில் வெளியேற்றப்பட்டனர்.

இரண்டாம் உலகப்போரில் 1940 களின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில் இருந்த யூதமக்கள் மீது ஹிட்லரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் ஒரு மோசமான இனச்சுத்திகரிப்பாகும். ஐரோப்பாவில் குறிப்பாக ஜேர்மனி, ஒஸ்ரியா போன்ற நாடுகளில் வாழ்ந்த யூதமக்கள் மீது படுகொலைகளை முடுக்கிவிட்டதுடன், செறிவாக்கப்பட்ட முகாம்களுக்கு (concentration camp) கொண்டு செல்லப்பட்ட மக்களும் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டனர். ஏனைய மக்கள் நாடுகளை விட்டு துரத்தப்பட்டனர்.

தென்ஆபிரிக்காவில் இருந்த கறுப்பின மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டனர் மற்றும் படுகொலை செய்யப்பட்டனர்.

இரண்டாம் உலகப்பேரை தொடர்ந்து இனப்பாகுபாடு தொடர்பாக ஐ.நா பல தீர்மானங்களை கொண்டுவந்த போதும். 1991 ஆம் ஆண்டு உச்சம் பெற்ற யூகோஸ்லாவாக்கிய அரசின் இனப்பாகுபாடு தான் உலக அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதன் வழியாகத் தான் Ethnic cleansing என்ற சொல்லும் உருவாகியது.

Dublin_01_84807_445
பல்கன் குடியரசுகளில் ஏற்பட்ட மோதல்களால் 1991 – 1999 காலப்பகுதியில் பெருமளவான அல்பேனியர்கள், குறொசியர்கள், பொஸ்னியாக்ஸ் ஆகியோர் அரச படையினரால் தமது வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டனர் மற்றும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனசுத்திகரிப்பானது அனைத்துலக குற்றவியல் நீதிமன்னறத்தினால் போர் குற்றமாக கருதப்பட்டதுடன், அது மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு தனியான குற்றமாகவும் நோக்கப்பட்டது.

உலக ஒழுங்கில் சிறுபான்மை இனங்களை பெரும்பான்மை அரசுகளிடம் இருந்து அல்லது வலிமையான இனங்களிடம் இருந்து வலிமையற்ற இனங்களை காப்பாற்ற என பல சட்டங்கள் காலத்துக்கு காலம் இயற்றப்பட்டு வந்துள்ளன. அதன் ஆரம்பமாக 1949 ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானம் 49 கொண்டுவரப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக பல்கன் குடியரசுகளை முன்நிறுத்தி 1992 ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்பு சபை தீர்மானத்தில் 780 ஆவது தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின் படி இனச்சுத்திகரிப்பானது இனப்படுகொலையின் வரைமுறைகளுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

Ethnic cleansing “constitute crimes against humanity and can be assimilated to specific war crimes. Furthermore … such acts could also fall within the meaning of the Genocide Convention.

இந்த சட்டங்களுக்கு அமையவே முன்னாள் யூக்கோஸ்லாவாக்கியா அதிபர் போர் குற்றவாளியாக கைது செய்யப்படடிருந்தார், ஈராக் அதிபர் தூக்கில் தொங்கினார்.

ஆனால் சிறீலங்காவின் விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறைகள் தான் இன்றைய அரசின் போக்கிற்கான காரணம் என்றால் அதில் தவறில்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா மீது ஒரு அழுத்தத்தை கொண்டுவரப்போவதாக அதன் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களும், பிரித்தானியாவும் எச்சரித்துவரும் நிலையிலும் யப்பானின் முன்னாள் அமைதிக்கான பிரதிநிதி சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் கேட்டும் முயற்சியாக தமிழ் மக்களிடம் சென்றிருந்தார். அறிக்கைகளின் மூலம் சிறீலங்காவை மிரட்டும் இந்தியா, பின்னர் ஓடிச்சென்று அரவணைத்தும் கொள்கின்றது.

missi09
அடிமட்ட சிங்களவர் தொடக்கம் அரச தலைவர் வரை இனவாதியாக மாற்றம் பெற்றுள்ள நிலையில். உலக வரைபடத்தில் தமக்கு ஜனநாயகச் சாயம் பூசிய நாடுகளின் சாயம் கலைந்து வருகின்றது.

காலம் காலமாக ஏமாற்றி வரும் சிங்கள அரச தலைவர்கள் மீதோ அல்லது சிங்கள மக்களின் மீதோ தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் உலகின் ஏதாவது ஒரு முலையில் மறைந்திருக்கும் நீதி என்ற சொல்லின் அர்த்தம் தேடி அலைகின்றனர்.

போர் நிறைவடைந்து நான்கு வருடங்கள் அண்மிக்கும் நிலையில் கூட தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுத் தரமுயற்சிக்காத அனைத்துலக சமூகம் மனித உரிமைகளையாவது பாதுகாக்குமா அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியையாவது பெற்றுத் தருமா என்பது தான் தற்போது அப்பாவி மக்களின் எதிர்பார்ப்பு.

அதாவது பொஸ்னியர்களுக்காக உருவாக்கியதை போல புதிய சொல்லை உருவாக்குங்கள் என தமிழ் மக்கள் கேட்கவில்லை. உலக நீதிகளில் ஒரு மனிதனுக்குள்ள மனித உரிமைகளையாவது தமிழ் மக்கள் பெற்றுவிட வழி ஏற்படுத்துங்கள், அதற்கான அழுத்தங்களை சிறீலங்கா அரசு மீது போடுங்கள் என்று தான் கேட்கின்றனர். ஏற்படுத்துமா அனைத்துலகம்?

ஈழம்ஈநியூஸ் இற்காக
வேல்ஸ் இல் இருந்து அருஷ்