ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் – யாழ். ஊடக அமையம்

0
621

ஊடக அறிக்கை

சிறீலங்காவில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டிற்கு வருகை தருபவர்கள் தடைகள் எதுவும் இன்றி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லலாம் என அரசாங்கம் விடுத்திருந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், கொமன்வெல்த் மாநாட்டையொட்டி இலங்கைத் தீவுக்கு வருகை தந்த சர்வதேச ஊடகவியலாளர்களின் நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டமையை எம்மால் அவதானிக்க முடிந்துள்ளது. ஜனநாயகத்திற்கு சவாலான இந்த விடயம் தொடர்பாக எமது ஆழ்ந்த கரிசனையை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.இதேவேளை, இன்று(15-11-2013) பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, அவரை சந்தித்து மனு கொடுக்க முற்பட்ட காணமல் போனோர் குடும்பங்களின் அங்கத்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட முறையையும், அதனை சேகரிக்க முயன்ற தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டமையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

காணாமல் போனோர் குடும்பங்களின் அங்கத்தவர்களின் அமைதி வழியிலான போராட்டத்தை திசைதிருப்புவதற்காகவும், தமிழ் மக்களின் நீதி வழங்கக்கோரும் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கோடு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தமிழ் ஊடகவியலாளர்கள் சிவிலுடையினில் நின்றிருந்த பாதுகாப்பு தரப்பினை சேர்ந்தவர்களென நம்பப்படும் சிலரால் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் நீடிக்கிறது என்பதை எடுத்து காட்டி நிற்கின்றது. இந்த நிலைமையை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் பொருத்தமான நடவடிக்கைகள் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும் என இத்தருணத்தில் மீண்டுமொரு முறை நாம் கேட்டுக்கொள்கிறோம்.

ஏனெனில் இன்றைய தினம் தமது செய்தி சேகரிப்பினில் ஈடுபட்டிருந்த உள்ளுர் ஊடகவியலாளர்கள் அனைவரும் அதே குறித்த நபர்களினால் படம்பிடிக்கப்பட்டு விபரங்கள் சேரிக்கப்பட்டமை பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில் கடந்த காலங்களினில் இத்தகைய பின்னணியினிலேயே ஊடகவியலாளாகள் கடத்தப்பட்டோ கொல்லப்பட்டோவுள்ளனர்.

அதே போன்றே, தென்னிலங்கைக்கு சென்று காணமல் போன தமது உறவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற காணாமல் போனோரது குடும்பங்களின் அங்கத்தவர்கள் மீண்டும் ஒருமுறை தமது பயணத்தை தொடர விடாமல் தடுக்கப்பட்டமை இலங்கை அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரத்தை மீறும் செயல் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் எதிரான மேற்கூறப்பட்டது போன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரா வண்ணம் சிறீலங்கா அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பொருத்தமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என யாழ்ப்பாண ஊடக அமையத்தினராகிய நாம் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக கொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் உலகத்தலைவர்கள் இந்த விடயம் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.

யாழ். ஊடக அமையம்