TN-Tamileelamஅண்மைக்கால தமிழ் அரசியல் கள நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கும் போது ஒன்று புரிகிறது. களம், புலம் மற்றும் தமிழகம் என்ற 3 தளங்களிலும் தமிழீழ விடுதலையை ஒரு முட்டுசந்தை நோக்கி இழுத்துச் சென்று முடக்க ஒரு மர்மமான வலைப்பின்னல் பின்னப்பட்டுக் கொண்டிருப்பது தான் அது. இந்த வலைப்பின்னலில்  தெரிந்தோ, தெரியாமலோ பலர் தம்மைப் பங்காளிகளாக்கியிருப்பது தான் பெரும் வரலாற்றுச் சோகம்.

 

புலிகள் நந்திக்கடலில் வைத்து தமது ஆயுதங்களை மவுனித்ததை எல்லோருமே தமிழீழ விடுதலையின் இறுதி அத்தியாயமாகவே கணித்தார்கள் அல்லது அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் உண்மையும் அன்றைய களச் செய்தியும் இதற்கு முற்றிலும் மாறானது.

 

நீட்டி முழக்காமல் மிக எளிமையாக அன்றைய கள செய்தியை விளக்கி சொல்வதென்றால, தமிழீழம் என்ற நடைமுறை அரசின் (Defacto state) அங்கீகாரத்தை ஐ.நா வாசலில் கொண்டு வந்து நிறுத்தியதுடன் இனஅழிப்பின் சாட்சிகளாக மடிந்து  ஐ.நா உட்பட மேற்குலக பிராந்திய அரசுகளுக்கு தமிழீழ விடுதலையைத் தாண்டி வேறொரு தெரிவை நோக்கி வெட்டி கொண்டு  ஓட முடியாத படி ஒரு ‘செக்’ கும் வைத்தது தான் அது.

 

ஆனால் இன அழிப்புக்கு உடந்தையாக இருந்து, தமிழீழ விடுதலைக்கு எதிராக இயங்கிய மேற்படி சக்திகள் அனைத்தும் இந்த ‘செக்’ லிருந்து விடுபட அனைத்து பகடை காய்களையும் உருட்டுவார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். நடைமுறையில் நாம் அதைத் தினமும் பார்த்துக் கொண்டும் தான் இருக்கிறோம்.

 

ஆனால் தமிழ்த் தரப்பிலிருந்தும் இந்த ‘செக்’ கை உடைக்க பலர் பகடைகளை உருட்டுவார்கள் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்று தான். இதற்காக பலர் ஏற்கனவே களமிறங்கியுள்ள சூழலில் அமைப்பு, கட்சி வேறுபாடின்றி களம், புலம், தமிழகமெங்குமிருந்து பலர் புதிதாகக் குதித்துள்ளது தான் வேதனை.
இங்கு யாரை நம்புவது என்று தெரியாத சூழலில். தமிழீழ விடுதலைக்கு எதிரான அனைத்துலக – பிராந்திய வலைப் பின்னலை அறுத்தெறிவதற்கு முன்பாக தமிழ்ப் பரப்பில் பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வலைப் பின்னலை அறுத்தெறிந்து வெளியேறுவது அவசியமாகிறது.

 

திசை மாறும் போராட்டங்கள்:

 

அண்மையில் யாழ் நகரில் ஐ.நா விசாரணை குழு தமது அறிக்கையை தாமதமின்றி உடனடியாக வெளியிடுமாறும் காணாமல் போன உறவினர்களை உடனடியாக விடுவிக்குமாறும் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக சமூகம்  நடத்திய போராட்டத்திற்கு சில நாட்கள்  முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டடது.

 

அனைத்துலக சமூகத்தின் கவனத்தை குவிக்க அல்லது அவர்களை நோக்கி நடத்தப்பட்ட அந்த போராட்டத்தில், திடீரென்று கூட்டமைப்பின் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் உருவப்பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டதுடன் அங்கு பேசிய வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன், ஐ.நா அறிக்கை தாமதமாக வெளியிடப்படுவதற்கு கூட்டமைப்புத் தான் – குறிப்பாக சுமந்திரன் தான் காரணம் என்ற தோணியில் பேசியது பெரும் அதிர்ச்சியும், போராட்டம் தொடர்பான பெரும் நம்பிக்கையீனத்தையும் விதைத்தது.

 

கூட்டமைப்பு, குறிப்பாக சுமந்திரன் குறித்து எல்லோருக்குமே விமர்சனம் உண்டு. அவரை தமிழ்த் தேசிய அரசியற் பரப்பிலிருந்து முற்றாகவே வெளியேற்ற வேண்டும் என்ற கருத்தும் எம் போன்றவர்களுக்கு உண்டு. ஏனெனில் அத்தகைய ஆபத்தான சக்தியாக அவர் உருவெடுத்து வருகிறார்.

 

ஆனால் நாம் என்ன நோக்கத்திற்காக, யாரை நோக்கி போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்ற புரிதல் இன்றி ஆட்சி மாற்றத்திற்கு துணை நின்ற அனைத்துலக சமூகத்தையும், இனஅழிப்புக்கு துணை போகும் ஐ.நா வையும் கண்டிக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தேவையற்று சுமந்திரனின் உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தின் நோக்கத்தை மடைமாற்றி நீர்த்துப் போக செய்ததுடன் ஐ.நா அறிக்கை தாமதத்தின் பின்னணியில் மறைமுகமாக இயங்கிய இந்திய, மேற்குலக சதியை சுமந்திரன் மேல் சுமத்தி பிராந்திய – மேற்குலக சதியை இருட்டடிப்பு செய்ததை என்னவென்று சொல்வது?

 

எமது விடுதலை தொடர்பான நம்பிக்கைகள் முற்றாகத் தகர்ந்து போன தருணம் அது.  புலிகளின் பின்னணியில் தமிழ் அரசியல் பரப்புக்குள் புகுந்த, இன்றைய நமது தாயகத்து பெண்களின் அவலத்தின் ஒட்டு மொத்த குறீயீடாக இருக்கும் அனந்தி போன்றவர்கள் இதன் பின்னணியில் இருப்பதும் பிராந்திய – சர்வதேச வலைப்பின்னலின் சதியை உணரமால் உள்ளுர் அரசியல்வாதிகளை குற்றவாளிகளாக்குவதும் எமது விடுதலை தொடர்பான நம்பிக்கையை முற்றாகச் சிதறடித்திருக்கிறது.

 

இதில் என்ன வேடிக்கை என்றால்,  எல்லோரும் (நாம் உட்பட) ஐ.நா வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, அதன் விசாரணைக் குழுவை எதிர்க்க அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது கூட்டமைப்புத் தான்..

 

இப்போது ‘அந்த தீர்மானத்தில், அதன் விசாரணைப் பொறிமுறையில் ஒன்றுமில்லை, அது ஏமாற்று வேலை’ என்று அறிக்கை முதற்கொண்டு ஊடக சந்திப்புக்கள் வரை நடத்தியவர்கள் இன்று அறிக்கை தாமதமாவதற்குக் கூட்டமைப்பு மேல் பழி போடுவது எத்தகைய அபத்தம்.? ஆதரித்தவர்களுக்குத் தானே அறிக்கை தாமதமாவதை விமர்சிக்கவும் அதன் கால எல்லையை தீர்மானிக்கவும் உரிமை உண்டு என்ற கேள்விக்கு இங்கு பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை.

 

இங்கு கூட்டமைப்பு ஒரு கருவி தான்.. இதற்கு கூட்டமைப்பு மேல் பழிபோடுவது நம்மை நாமே ஏமாற்றுவது மட்டுமல்ல அனைத்துலக சதியை மறைப்பதுமாகும். தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக வரலாற்றை திரிக்கும் வேலைகளில் பலர் இறங்கியிருப்பது வேதனை.

 

முன்பு இனப்படுகெலைக்கு துணைபோன, தற்போது ஆட்சி மாற்ற அரசியல் பின்னணியில் இயங்கிய அனைத்துலக – பிராந்திய சதிகளின் விளைவாகவே அறிக்கை தாமதமாகியது என்பது வெளிப்படை உண்மை. ஆனால் நாம் நமக்குள் பாஸ்பரம் பழியை சுமத்திக் கொள்வது எத்தகைய அரசியல் புரிதல் என்று நமக்கு புரியவில்லை.

 

ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்த ஒரே காரணத்திற்காக கூட்டமைப்பு மேல் அறிக்கை தாமதத்திற்கான பழியை சுமத்துவது முதிர்ச்சியான அரசியல் புரிதல் அல்ல. இது kindergarten அரசியல் மட்டுமல்ல தமது குறுகிய சுய நலன் சார்ந்த அரசியல் தேவைகளுக்காக வரலாற்றைத் திரிப்பதுமாகும்.

 

அண்மையில் களம், புலம், மற்றும் தமிழகமெங்கும் பரந்திருக்கும் லெட்டர்பேட் காகித அமைப்புக்கள், கட்சிகள், ஊடகங்கள் (நாமும்தான்..) ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி மறைமுகமாகவும், நேரடியாகவும் மக்களிடம் கோரிக்கை விடுத்தும் இறுதியாக என்ன நடந்தது.? கிட்டத்தட்ட முழுமையான வாக்களிப்பில் தமிழ் மக்கள் ஈடுபட்டது இங்கு வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

உண்மையில் தேர்தலை மக்கள் புறக்கணித்திருக்க வேண்டும். அதுதான் சரியான அரசியல். ஆனால் அது நடக்கவில்லை. இது யாருடைய தவறு? இது நமது ஒட்டுமொத்த தவறு. தேர்தலை புறக்கணியுங்கள் என்று சொல்ல முன், அதற்கான தெளிவான நியாயங்களை உடனடியாக அல்ல படிப்படியாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். இனஅழிப்பை சந்தித்து தொடர்ந்து அதற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் மக்களிற்கு ஒரு அரசியல் புரிதலை கொண்டு போய் சேர்ப்பது என்பது கடினமான செயல். ஆனால் அந்த மக்களுக்குள் அரசியல் செய்ய புகுந்தவர்கள் அதையும்  மீறி அந்த புரிதலை ஏற்படுத்த படிப்படியாகவே முனைய வேண்டும். திடீரென்று நித்திரையால் எழுந்தவன் போல் பிதற்றுவது மக்கள் தொகுதிக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. மாறாக தமது நிலையை ஓரளவு உணர்ந்து, தமக்கு உடன்பாடில்லாவிட்டாலும் கள யதார்த்தத்தின் அடிப்படையில் அரசியல் செய்யும் கூட்டமைப்பின் கருத்தை பெரும்பாலான மக்கள் பின் தொடர்கிறார்கள். கூட்டமைப்பிற்கு வாக்கு அறுவடை செய்யும் கதையின் பின்புலம் இதுதான்.

 

இனி நாம் விடயத்திற்கு வரலாம். மக்கள் தேர்தலை புறக்கணிக்காமல் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தது கூட பிராந்திய மேற்குலக சதியின் ஒரு பகுதி தான். சிங்கள ஜனாதிபதி தேர்தல் என்பது தமிழ் மக்களுக்கானது அல்ல. ஆனால் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக என்றைக்கும் தமிழர்கள் இருப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை. இரு சிங்கள சக்திகள் மோதும் போது சிங்கள மக்கள் தமது வாக்கை சரிசமமாக இருவருக்கும் பகிர்ந்தளிப்பார்கள் என்ற அடிப்படையில் வெற்றியை தீர்மானிக்கிற சக்தியாக தமிழ் மக்களின் இடம் இங்கு முக்கியமாகிறது.

 

நேரடியாக 2009 இல் இனஅழிப்பில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச மீதான வன்மத்தைத் தீர்க்க எந்தக் கணமும் தயாராக இருந்த மக்களின் கூட்டுக் கோபத்தை தமது ஆட்சி மாற்ற அரசியலுக்கு பிராந்திய – மேற்குலக சக்திகள் பயன்படுத்திக் கொண்டது தான் நடந்த உண்மை. ஆட்சி மாறினால் தமக்கான நீதி தடம் புரண்டு விடும் என்ற யதார்த்தத்தைக் கூட மறந்து போகும் அளவிற்கு மக்களின் மனநிலை மாறியிருந்தது ஒருவகையில் துயரம் தான். எமது கையைக் கொண்டே எமது கண்ணைக் குத்திய மாதிரி ஆகிவிட்டது. இங்கு ஆட்சி மாற்ற அரசியல் செய்யப் புகுந்த  மேற்குலக – பிராந்திய சதிக்கு நமது மக்களே ஒரு கருவியாக பாவிக்கப்பட்டார்கள்.

 

அதற்காக இப்போது மக்களின் உருவப் படத்தை அரசியல்வாதிகள் எரிக்கலாமா? ஐ.நா அறிக்கை தாமதமானதற்கு கூட்டமைப்பினரின் உருவப் படத்தை எரித்து கூட்டமைப்பு மேல் பழி போடுவதும், இத்தகைய அரசியல் போக்குத் தான்.. கூட்டமைப்பு வேறு தெரிவின்றி பிராந்திய மற்றும் அனைத்துலக சதிக்குள் தன்னை சிக்க வைத்து ஆட்சி மாற்ற அரசியலுக்கு உடந்தையாக இருந்ததனூடாக ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதே நடந்த உண்மையாகும்.

 

இந்த அடிப்படையில் கூட்டமைப்பை – குறிப்பாக தமிழரசுக் கட்சியைக் கண்டிப்பதென்றால் குறைந்தது தனியாக இதற்கு என்று ஊர்வலத்தை ஒழுங்கு செய்து சுமந்திரனின் அலுவலகத்திற்கு முன்பு போய் ஆர்ப்பட்டம் செய்யலாமே ஒழிய அனைத்துலக கவனத்தை குவிக்க வேண்டிய காணாமல் போனோர் தொடர்பான ஆர்பாட்டங்களில் இப்படியாக தனிப்பட்ட அரசியல் பகைமைகளை தீர்த்துக் கொள்வது என்றைக்கும் விடுதலையைப் பெற்றுத் தராது.. அத்துடன் இவை கண்டிக்கப்பட வேண்டிய செயல்களும் கூட. இந்தப் போக்கை சம்பந்தப்பட்டவர்கள் கைவிட வேண்டும். குறிப்பாக அனந்தியின் பெயர் இவற்றின் பின்னணியில் பேசப்படுவதால்  அவர் தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்களை திசைமாற்றும் அரசியில் ஈடுபடுவதை முடிந்தவரை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனபதே அனைவரினதும் அவா.

 

ஐநாவும் நமது அணுகுமுறைகளும்..

 

தமிழின அழிப்பில் ஐ.நா ஒரு பங்காளி என்ற பொழுதும் தமிழ்த்தேச விடுதலைக்கான அங்கீகாரத்தில் ஐ.நா வின் இடம் மறுக்க முடியாத ஒரு பாத்திரமாகிறது. புலிகளின் மே 18 செய்தி என்பதே ஐ.நா வை சுற்றி வைக்கப்பட்ட – வரையப்பட்ட பொறி(முறை)கள்தான். எனவே நாம் வளைத்தும், சுற்றியும் ஊடறுத்தும் ஓட வேண்டிய பாதை ஐ.நாவை மையமாகக் கொண்டது தான் என்பது வெளிப்படை.

 

ஐ.நா வுடன் உடன்பட்டும், உடன்படாமலும் அதாவது ஐ.நா வின் இனஅழிப்பு பங்களிப்பை அம்பலப்படுத்துவது தொடக்கம், இனஅழிப்பில் ஐ.நா வை குற்றவாளியாக்குவது வரை எதிர்த்தும் ஐ.நா வின் தலையீட்டை மிக தந்திரமாக எதிர்கொண்டு, அதனோடு ஒத்தோடுவது வரை இதன் உள்ளடக்கத்தை பலவாறாக விபரிக்கலாம்.

 

ஆனால் மே 18 இற்கு பிறகு அரசியல் செய்ய புகுந்த யாருமே இதைக் கவனத்தில் கொள்ளவில்லை அல்லது இந்த உண்மையின் ஒரு பகுதியை மட்டும் நம்ப விரும்பினார்கள். அல்லது தாம் தெரிந்தே உருவாக்கிய – தம்மை இயக்கும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் ஊடாக இந்த உண்மையை மழுங்கடிக்க முனைந்தார்கள்.

 

2009 மே மாதத்திலிருந்து ஐ.நா தான் தமிழின அழிப்பின் பிரதான குற்றவாளி என்ற அடிப்படையில், போராட்டத்தை பன்முகப்படுத்தவும், எமது நீதிக்கான பயணத்தின் முதல் அடியாகவும் ஐ.நா.விற்கு எதிராக மக்களை திரட்டி போராட அழைப்பு விடுத்தது தொடக்கம் ஐ.நா விற்கு எதிராக வழக்கு பதிவு செய்வது (குறித்த அனைத்து புரிதல்களின் அடிப்படையிலும் தான் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது) வரை நம்மைப் போன்றவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பு அன்று மட்டுமல்ல இன்று வரை தமிழ் அமைப்புக்களாலும், கட்சிகளாலும், செயற்பாட்டாளர்களாலும் உதாசீனம் செய்யப்பட்டே வருகிறது.

 

ஏதோ ஒரு வகையில் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலை தெரிந்தோ தெரியாமலோ செய்யப் புகுந்த யாராலும் இந்த அழைப்பை ஏற்க முடியாது என்ற யதார்த்தத்தை நாமும் உணர்ந்துள்ளளோம். எனவே நாம் அதற்கான மாற்று வழிகளை யோசிக்கிறோம். அதை செயற்படுத்த முனைந்தும் கொண்டிருக்கிறோம். அது வேறு கதை அது ஒரு புறம் இருக்கட்டும்.

 

இத்தகைய புரிதல் உள்ள நாம் தான் ஐ.நா வுடன் ஒத்தோட வேண்டிய புள்ளிகளையும் அடையாளம் கண்டு அதனோடு இசைந்து பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நமது அமைப்புக்கள் அதைக்கூட பயன்படுத்திக்கொண்டார்களா என்றால் அதுதான் இல்லை.

 

ஐ.நா மனித உரிமைச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்கொண்டது தொடக்கம் தற்போது ஐ.நா அறிக்கை தாமதமானதுவரை விதிவிலக்கில்லாமல் களம், புலம், தமிழகம் என்று எல்லோருமே பல தகிடுதத்தங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு யாருமே யோக்கியர்களாகத் தெரியவில்லை.

 

புலிகளைப் போர்க்குற்றவாளிகளாக்கும் தந்திரத்தில் தமிழ்த்தேசியம் பேசுவோர்:

 

இனஅழிப்புக்கு துணைநின்ற மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை தெளிவான அரசியல் புரிதல் உள்ள யாராலுமே ஏற்க முடியாது. இனஅழிப்பை படிப்படியாக போர்க்குற்றமாகச் சுருக்கி அதையும் காலப் போக்கில் மனித உரிமை மீறல் பிரச்சினையாக்கி  முன்மொழியப்படும் தீர்மானத்தை இனஅழிப்பை எதிர்கொண்ட – தொடர்ந்து எதிர்கொண்டுள்ள ஒரு இனமாக எப்படி ஏற்க முடியும்? எனவே தான் பல தளங்களில் இந்த தீர்மானத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

ஆனாலும் நமக்கு இதை விடுத்தால் வேறு தெரிவில்லை என்ற தெளிவான புரிதலுடன் தான் தீர்மானத்தை முடிந்தவரை வலிமையானதாக மாற்ற எம்மைப்போன்ற பலர் நமது எதிர்ப்பை பதிவு செய்தோம். ஆனால் இந்த தீர்மானத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த சில கட்சிகள், அமைப்புக்கள் இதை எதிர்ப்பதிலே குறியாக இருந்தார்களே ஒழிய இதன் அடுத்த பக்கத்தை பார்க்கவில்லை.

 

எதிர்ப்பு ஒன்றையே குறியாகக் கொண்டு இயங்கிய இவர்கள் தமது ஊடக சந்திப்புக்கள், அறிக்கைகள் வாயிலாக மக்களுக்கு இந்த விசாரணை முறையில் தொடர்ந்து நம்பிக்கையீனத்தை விதைத்தார்கள். விளைவாக மக்களில் ஒரு தொகுதியினர் இந்த தீர்மானத்திலும் இதன் விசாரணைக்குழுவிலும் முற்றாக நம்பிக்கை இழந்தார்கள்.

 

பிரச்சினை அதுவல்ல. ஏனென்றால் ஐநா தீர்மானமோ அதன் விளைவான விசாரணைக் குழுவோ எமக்கு விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை என்பது பகுதியளவு உண்மைதான். ஆனால் இந்த தொடர் பிரச்சாரங்களின் விளைவாக மக்கள் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தமது இனஅழிப்பு சாட்சியங்களை வழங்காமல்  பின் வாங்கியது தான் பெரும் வரலாற்றுத் தவறாக மாறியிருக்கிறது.

 

இதன் விளைவாக இலங்கையை குறித்து போதியளவு சாட்சியங்கள் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு சென்றடையவில்லை. இதுதான் உண்மை. ஆனால் போதியளவு சாட்சியங்கள் சென்று விட்டதாக சில விசமிகள் பரப்புரை செய்து வருகிறார்கள். ஆனால் “ஐ.நா விசாரணைக் குழுவை அனுமதிக்க மாட்டோம்” என்று ஒரு புறம் கூறிக்கொண்டு கருணா, கே.பி, டக்ளஸ் போன்ற துரோகிகளிடமும், அவர்களின்  அடிவருடிகளிடமும் “இரத்த சாட்சி” என்ற பெயரில் விலைபோன பல இலக்கிய கும்பல்களின் பிதற்றல்களையும் அச்சுறுத்தி பெறப்பட்ட புலிகளுக்கு எதிரான மக்களின் வாக்குமூலங்களையும் ஒன்றிணைத்து மொழி பெயர்த்து சிங்களம் ஐ.நா விசாரணைக் குழுவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. கூடவே இனஅழிப்பு அரசு தானே உருவாக்கிய போலி ஆணையங்கள், அரச ஆணைக் குழுக்கள் ஊடாக பெறப்பட்ட புலிகளுக்கு எதிரான சாட்சியங்களையும் தெளிவாக அனுப்பி வைத்திருக்கிறது

 

இது எத்தனை பேருக்கு தெரியும்.? இது வரை ஐ.நாவிற்கு கிடைக்கப் பெற்ற குற்றச்சாட்டுகளில் புலிகளுக்கு எதிரானது தான் அதிகம் என்பதாவது நம்மவர்களுக்கு தெரியுமா?

 

ஐ.நா விசாரணைக் குழுவிற்கு தாயகத்திலிருந்தும், புலத்திலிருந்தும் மட்டுமல்ல, அதே போல் இனஅழிப்பிலிருந்து தப்பி தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்கள் அனைவரிடமும் வாக்கு மூலங்களை பெற்று ஐ.நா விசாரணைக் குழுவிற்கு நாம் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?

 

தாயகத்தில் உள்ள மக்கள் ஒரு தொகுதியினர் அச்சத்தின் காரணமாகவும் இன்னொரு தொகுதியினர் ஏற்கனவே தமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்ற விரக்தி மனநிலையிலிருந்த போது சிலரால் மேற்கொள்ள பட்ட பிரச்சாரத்தின் காரணமாகவும் தமது சாட்சியங்களை அனுப்ப மறுத்து விட்டார்கள். புலத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அளவு சாட்சியங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

ஈழத்தைவிட புலத்தை விட தமிழகத்தில் தான் பெருமளவு இனஅழிப்பு சாட்சிகள் தங்கியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் மேற்கொள்ள பட்ட ஐ.நா எதிர்ப்பு பிரச்சாரத்தால் ஒரு சாட்சியம் கூட அனுப்பி வைக்கப்படவில்லை என்ற உண்மை இங்கு திட்டமிட்டு மறைக்கப் பட்டிருக்கிறது பெரும் வரலாற்று தவறு.

 

இந்த சாட்சியங்களை பதிவு செய்வதென்பது ஐ.நா எமக்கு நீதியை தூக்கித் தந்து விடும் என்பதற்காக அல்ல. தமிழின அழிப்பில் ஐ.நா வும் ஒரு தரப்பு என்ற புரிதல் எமக்கு நிறையவே உண்டு என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

 

ஆனாலும் எமது வாக்கு மூலங்களை நாம் அனுப்ப வேண்டிய கடமை எமக்கிருக்கிறது. நடந்த இனஅழிப்பை அம்பலப்படுத்தவும் அதை ஒருங்கிணைத்து ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பின் கீழ் ஆவணப்படுத்தவும் என்பது தொடக்கம். எமது நீதிக்கான ஒரு சிறிய புள்ளியாவது இதன் மூலம் உருவாக்கப்படலாம் என்பது வரை ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.

 

குறிப்பாக புலிகளை குற்றவாளிகளாக்கி எமக்கான நீதியை குழி தோண்டி புதைக்க இருக்கும் அனைத்துலக – பிராந்திய சதியை முறியடிக்க வேண்டியாவது நாம் இதை அனுப்பியிருக்க வேண்டும்.

 

குறிப்பாக தமிழகத்திலிருந்து ஏராளமான வாக்கு மூலங்களை பதிவு செய்வதினூடாக மேற்குலக நலன்களை மையப்படுத்திய ஐ.நா நகர்வுகளுக்கு எதிராகவும், பிராந்திய வல்லரசான இந்தியாவையும் தமிழர் தரப்பு ஒரு இக்கட்டினுள் தள்ளி தமிழர் போராட்டத்தை வேறு ஒரு பரிமாணத்திற்குள் கொண்டு வந்திருக்கலாம்.

 

இதன் வழி தமிழர் தரப்பு ஒரு பேரம் பேசும் வல்லமையாக உருவெடுக்கலாம்.  ஆனால் நடந்தது என்ன? ஐ.நா வை எதிர்க்க வேண்டிய தெளிவை பெற்ற தமிழக போராட்ட குழுக்கள் சில ஐ.நா வோடு ஒத்தோட வேண்டிய புரிதலை வளர்க்காததால் வந்த சிக்கலா? அல்லது திட்டமிட்டு நடைமுறை படுத்தப்பட்ட சதியின் ஒரு பகுதியா ?

 

என்பதை காலம் தான் தெளிவுபடுத்த வேண்டும். ஐ.நா எதிர்ப்பு கூட்டங்களை, கருத்தரங்குகளை ஒழுங்கு செய்த தமிழக அமைப்புக்களின் இணைய வழி கூட்டங்களில் பேசிய த.தே.ம.மு மற்றும் அதன் ஆதரவு லெட்டர்பாட்  அமைப்புக்களின் பிரதிநிதிகளாவது இதைச் சுட்டி காட்டாததை என்னவென்று நாம் பரிந்து கொள்வது?

 

தற்போது ‘ஐ.நா தமது விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்’ என்று தமது லெட்டர் பாட் களில் கடிதம் எழுதுவதையும் எப்படி புரிந்து கொள்வது?

 

ஆவணங்களை அனுப்பாமல் விசாரணை குழுவிடம் நீதியை கோருவது என்ன வகையானது?

 

சட்டமும் நீதியும் அறம் சார்ந்து எழுதப்படுவதில்லை அது ஆதாரங்களைக் கொண்டே எழுதப்படுகிறது என்பது  சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு தெரியாதா?

 

புலிகளை நுட்பமாகப் போர்க் குற்றவாளிகளாக்கும் சதியின் ஒரு பகுதியாகவே நாம் இதை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

 

இவை எல்லாவற்றையும் தாண்டி தாம் வரித்துக் கொண்ட போராட்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் ஐ.நாவிற்கு ஆவணங்களை தொகுத்து அனுப்ப வேண்டிய பணியை  தமிழக மாணவர் அமைப்புக்களும், ஈழ ஆதரவு இயக்கங்களும் முன்னெடுக்காதது கவலைக்குரியது மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டியதும் கூட.

 

தெரிந்தோ தெரியாமலோ உள்ளுர் மற்றும் பிராந்திய – அனைத்துலக சதிக்குள் சிக்கிய சில தமிழக அமைப்புக்களின் தூர நோக்கற்ற செயல்களால் இன்று தமிழீழ விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது.

 

மே 17 இயக்கம்.

 

ஆரம்பம் தொட்டே தமிழின அழிப்பு தொடர்பான தெளிவான புரிதலுடன்  போராட்டங்களை முன்னெடுத்த ஒரு அமைப்பாக மே 17 இயக்கம் இருந்தது. அமெரிக்க தீர்மானம் அதன் பின்புலம் ஐ.நாவின் தமிழின பங்களிப்பு தொடர்பான பார்வை பார்வை என்று மே 17 இயக்கத்தின் புரிதலும் அதை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த முறைமையும் பாராட்டத்தக்கது. ஆனால் தமது பேராட்டத்தை எதிர்ப்பு என்ற அளவிலேயே சுருக்கிக் கொண்ட அவர்கள் ஐ.நா வுடன் மேற்குலகத்துடன் ஒத்தோட வேண்டிய புள்ளிகளை குறைந்த அளவிலேனும் கவனத்தில் கொள்ளவில்லை.

 

விளைவாக ஐ.நாவிற்கு தமிழீழத்திலிலிருந்து தப்பி வந்து தமிழகத்தில் அடைக்கலமாகியுள்ள  பல்லாயிரக்கணக்கானவர்களின் இனஅழிப்பு சாட்சியங்களை தொகுத்து அனுப்ப வேண்டியவர்கள் அதை முற்றாக புறம் தள்ளினார்கள். அதை முன்னெடுக்க முற்பட்ட மாணவர் அமைப்புக்களையும், கட்சிகளையும் தமது அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டு தொடர் பிரச்சாரத்தினூடாக கேள்விக்குட்படுத்தினார்கள். விளைவாக தமிழகத்திலிருந்து எந்த சாட்சியமும் பதிவு செய்து அனுப்படாமலேயே போய் விட்டது.

 

தமிழத்தேசிய மக்கள் முன்னணியினரதும் தமிழ் சிவில் அமைப்பு பிரதிநிதிகளினதும் ஐ.நா எதிர்ப்பு செவ்விகளையும் அறிக்கைகளையும் மேற்கோள் காட்டியதுடன் அவர்களது உரைகளையும் ஒளிபரப்பி தமது நிலைப்பாட்டிற்கு வலு சேர்த்தது மே 17 இயக்கம். ஆனால் தற்போது அதே த.தே.ம.மு யினரும் தமிழ் சிவில் சமூக பிரதிநிகளும் ஐ.நா அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பக்கம் பக்கமாக அறிக்கை விட்டு கொண்டிருப்பது வேறு ஒரு தனிக்கதை. இதற்கு மே 17 இயக்கம் என்ன பதில் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை?

 

மே 17 இயக்கம் தனது ஐ.நா எதிர்ப்பு பிரச்சாரத்திற்காக ஈழத்திலிருந்து துணைக்கு அழைத்தவர்களில் சிலர் மே 18 இற்கு முன்பு International Crisis Group போன்றவற்றின் கருத்துருவாக்க அடியாட்களாக செயற்பட்டு இனஅழிப்புக்கு துணை நின்றவர்கள் என்ற கதையாவது மே 17 அமைப்பினருக்கு தெரியுமா?

 

தற்போது கூட நடந்த இனஅழிப்பை பார்த்து திருந்தி வந்து விட்டார்கள் என்று நாம் நம்பிய அவர்கள் புலிகளை போர் குற்றவாளிகளாக்கி புலி நீக்க அரசியல் செய்ய இன்னும் முயன்று கொண்டிருக்கிறார்கள். தமது கருத்துருவாக்க அடியாள் வேலையை அவர்கள் இன்னும் விட்டு தொலையவில்லை என்பதை அவர்களே தமது பேச்சு மற்றும  நடத்தைகளினூடாக தினமும் நிருபித்து வருகிறார்கள்.

 

நாம் மே 17 இயகக்த்துடன் தொடர்புள்ளவர்களை கொண்டு “இப்படியானவர்களை முழுமையாக நம்பாதீர்கள்.. அவர்களின் கடந்த காலம் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை” என்பதை ஆதாரங்களுடன் அனுப்பியும் அதை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் ஏற்று கொள்ளாமல் பெரிய வரலாற்று தவறை இழைத்துவிட்டார். தற்போது மே 17 இயக்கத்திலிருந்து பலர் வெளியேறி பல குற்றச்சாட்டுக்களை இங்கு எமக்கு ஆதாரத்துடன் அனுப்பியுள்ளார்கள்.

 

இதற்கு யாரை நோவதென்று தெரியவில்லை. இவையெல்லாம் எமக்கு பெரிய அதிர்ச்சி தான்..

 

இப்படியானவர்களை நம்பி ஐ.நா எதிர்ப்பிலேயே குறியாக இருந்த மே 17 இயக்கத்தின் இந்த தவறினால் இந்திய அரசு தப்பித்து கொண்டதுடன் புலிகளை ஐ.நா குற்றவாளியாக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இது மே17 இயகக்த்தின் நோக்கத்திற்கு ஒரு எதிர்மறையான விளைவுதான்.

 

தமிழகத்திலிருந்து ஏராளமான வாக்குமூலங்களை பதிவு செய்வதினூடாக மேற்குலக நலன்களை மையப்படுத்திய ஐ.நா நகர்வுகளுக்கு ஒரு தடுப்பை ஏற்படுத்துவதுடன் பிராந்திய வல்லரசான இந்தியாவையும் தமிழர் தரப்பு ஒரு இக்கட்டினுள் தள்ளி தமிழர் போராட்டத்தை வேறு ஒரு பரிமாணத்திற்குள் கொண்டு வரலாம் என்ற உண்மையை எப்படி மே 17 இயக்கம் மறந்தது என்று தெரியவில்லை.

 

தமிழகத்திலிருந்து ஏராளமான வாக்குமூலங்கள் அனுப்பப்பட்டிருந்தால் ஐ.நா விசாரணை குழு இந்தியாவிற்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதற்கு இந்திய அரசு இடமளிக்க முன் வந்திருக்காது. எனவே இதனூடாக இந்திய அரசின் இனஅழிப்பு பங்களிப்பை நாம் அம்பலப்படுத்தியிருக்க முடியும். ஐநா விசாரணை குழுவும் தமிழகத்திலுள்ள சாட்சிகளிடம் விசாரணை செய்யாமல் தீர்ப்பளிப்பதை நாம் கேள்விக்குட்படுத்தி புலிகளை போர்க்குற்றவாளிகளாக்கும் மேற்குலக சதியை முறியடித்திருக்க முடியும்.

 

ஆனால் அனைத்தையும் இன்று தமிழக அமைப்புக்களும், கட்சிகளும் கோட்டை விட்டிருக்கின்றன. இது தெரிந்தே நடந்த சதியா? அல்லது தூரநோக்கற்ற குறுகிய அரசியல் பார்வையில் தெரியாமலேயே இந்த வரலாற்றுத் தவறுக்கு உடந்தையாக இருந்து விட்டார்களா? என்ற புதிரின் விடையை காலம்தான் விடுவிக்க வேண்டும்.

 

ஏற்கனவே ப்ரேமன் மக்கள் தீர்ப்பாயத்தில் கூட இந்தியாவின் இனஅழிப்பு பங்களிப்பை நிறுவமுடியாத வரலாற்று பழியை தமிழக போராட்ட சக்திகள் தமதாக்கி கொண்டுள்ளன. இப்படி இந்திய அரசு தொடாச்சியாக தப்பி வருவது தற்செயலானது தானா? அல்லது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியா? தமிழகத்திலிருந்து இனஅழிப்பு சாட்சியங்கள் அனுப்பப்படாமல் இந்திய அரசு நுட்பமாகக் காப்பாற்றப்பட்டிருப்பதையும் நாம் இதன் ஒரு பகுதியாகவே கருத வேண்டியுள்ளது.

 

நடந்த இனஅழிப்புக்கு இந்தியாவும் உடந்தை என்பது மட்டுமல்ல பிரதான ஒரு குற்றவாளியாகவும் இருக்கிறது. அத்தோடு தொடர்ந்து தமிழின விடுதலையை தடுக்க மேற்குலகத்துடன் கைகோர்த்து ஒரு சதி வலைப்பின்னலையும் பின்னி வருகிறது. இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

 

எனவே இந்தியாவை குற்றவாளியாக்காமல், அதாவது அதற்கு ஒரு நெருக்கடியை கொடுக்காமல் நாம் எமது அடுத்த கட்ட போராட்டத்தின் ஒரு அடியைக்கூட எடுத்து வைக்க முடியாது. கூட்டமைப்பு போல் இந்தியாவிற்கு அடிபணிந்து போவதும், வேறு சிலர் கூறும் வியாக்கியானங்களின் அடிப்படையில் இந்தியாவின் குற்றங்களை மறைத்து அல்லது மறந்து அதனோடு ஒத்தோடுவது விடுதலையை எமக்கு தரப் போவதில்லை.

 

நாம் இந்தியாவை குற்றவாளிகளாக்குவது அல்லது அதற்கான புறநிலைகளை தோற்றுவித்து இந்திய அரசை நெருக்டிக்குள் தள்ளி எம்மை ஒரு பேரம் பேசும் வல்லமையுள்ளவர்களாக மாற்றுவதனூடாகவே நாம் எமது நீதியை எட்ட முடியும்.

 

எனவே இதை அனைத்து தரப்பும் குறிப்பாக தமிழக போராட்ட சக்திகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

தமிழகத்திலிருந்து ஈழ விடுதலைக்கு போராடும் சக்திகளிடம் நாம் இந்த இடத்தில் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறோம். தாயக மக்களின் உளவியலையும் அங்குள்ள கள யதார்த்தத்தையும் புரிந்து கொண்டே உங்கள் கோரிக்கைகளை வைக்க வேண்டுமே ஒழிய உங்கள் வசதிக்காக அவர்களது கோரிக்கைகளை வளைக்கக்கூடாது. இது புலத்திற்கும் பொருந்தும்.

 

நடந்த ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி தாயகம், புலம், மற்றும் தமிழகத்திலிருந்து பலர் கோரிக்கை வைத்தார்கள். மக்கள் அதை புறக்கணிக்கவில்லை என்பது மட்டுமல்ல அதை பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பதே உண்மை. அது போல் தற்போது ஐ.நா விசாரணை குழுவை அந்த மக்கள் நம்புகிறார்கள். அதன் ஒட்டுமொத்த வெளிப்பாடாக யாழ் பல்கலை கழக சமூகத்தின்  தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து தமது உள்ளக்கிடக்கையை வெளியிட்டுள்ளார்கள்.

 

எனவே நாம் அந்த விசாரணை குழுவிற்கு ஆவணங்களை அனுப்பி அதை எமக்கு சார்பானதாக மாற்ற முயன்றிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?

 

ஐ.நா விசாரணை குழுவிற்கு தடையாக இருந்து, ஆவணங்களை அனுப்புவதற்கு தடையாக இருந்து விட்டு தற்போது புதிதாக ஞானம் பெற்றது போல் “‘ஐ.நா அறிக்கையை உடனடியாக” வெளியிட வேண்டும் என்று  தற்போது பலர் கிளம்பியிருக்கிறார்கள். இது மிகப் பெரிய சதியின் ஒரு வடிவம்.

 

இப்போது உண்மையில் அறிக்கை வெளிவந்தால் புலிகளை போர் குற்றவாளிகளாக்கும் அனைத்துலக பிராந்திய சதி தான் வெற்றி பெறும். புலிகளை போர் குற்றவாளிகளென தீர்ப்பு அளிக்கப்பட்டால் அது எப்படி இனஅழிப்பாக இருக்கும்? இரு ஆயுத குழுக்களின் இடையில் சிக்கி மக்கள் மடிந்த கதை என்றே எல்லாவற்றையும் ஊற்றி மூடவேண்டி வரும். அது தான் பலரின் திட்டம்.

 

இதற்கு நாங்கள் பலியாகலாமா? ஐ.நா அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோருவது தவறல்ல. அதற்கு முன்பாக நாம் எமது பக்க நியாயங்களை ஆவணப்படுத்தியிருக்க வேண்டும்.

 

ஆனால் நாம் அதை செய்தோமோ? விசாரணை குழுவில் மக்களை நம்பிக்கை இழக்க வைத்து அவர்கள் ஆவணங்களை அனுப்புவதற்கு ஒரு நுட்பமான முறையில் தடையாக இருந்து விட்டு தற்போது அறிக்கையை மட்டும் கோருவது எத்தகையது? சட்டம், அரசியல் படித்தவர்களின் இந்த தர்க்கம் புரியாமல் சமானியன் தடுமாறுகிறான்.

 

( மிகுதி அடுத்தவாரம் தொடரும்..)