என் தாய் போல வாழும் ஒவ்வொரு தாயின் கண்ணீரும் துடைக்கப்பட வேண்டும் என்பதே என் ஆசை.

0
504

santhan-brotherராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரின் விடுதலையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இன்று புதன்கிழமை காலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், சாந்தனின் சகோதரர் தன்னுடைய மனநிலை தொடர்பில் எழுதியுள்ள
கடிதத்தின் முழுமையான வடிவம்.

வணக்கம்..!

இன்றைய நாள் தான் என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். இதை கொண்டாட அப்பா இல்லை என்ற குறை ஒன்றைத் தவிர எமக்குள் எந்த சந்தோசத் தடைகளும் இல்லை. இதே தான் ஏனைய ஐந்து பேரின் குடும்பத்திலும் இருக்கும் என்று தெரியும்.

அதை விட என் முக்கிய சந்தோசம் என்னவென்றால் அம்மா இனி 3 நேரமும் சாப்பிடுவார். அதே போல நாம் உண்ணும் உணவுகளையும் உண்ணுவார். காரணம் அவர் ஒரு நேரம் தான் உண்பதுண்டு, அதுவும் அங்கு அண்ணா சாப்பிடாத சாப்பாடெதுவும் அவர் சாப்பிடுவதில்லை. அது கூட பல தடவை விரதம் என்றால் வெறும் சாணி நிலத்தில் போட்டுத் தான் சாப்பிடுவார். நரகத்தில் வாழ்வது வேறு நரகத்தை பார்த்து வாழ்வது வேறு என்ற சொல்வார்கள்.

நாம் இப்போது சொர்க்கத்திற்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறோம். அதே போல என் தாய் போல வாழும் ஒவ்வொரு தாயின் கண்ணீரும் துடைக்கப்பட வேண்டும் என்பதே என் ஆசை. அண்ணாவின் ஆசையும் தன் இறுதிக்காலத்தை தான் பிறந்த மண்ணில் முடிக்க வேண்டும் என்பதே. பல நூல்களை எழுதிய ஒரு சிறந்த இலக்கியவாதியான அவரை எம் சட்டமும் அனுமதித்து எம்மோடு சந்தோசமாக வாழ வழி அமைத்துத் தர வேண்டும் என்பதே என் ஆசை!

அண்ணனின் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் என்னுடைய குடும்பத்தின் சார்பில் நன்றிகளும், வணக்கங்களும்…!

தில்லையம்பலம் சுதாகரன்
(சாந்தனின் இளைய சகோரதன்)
உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
பெப்ரவரி 19, 2014