ban910rajaஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று நியூயோர்க்கில் இந்த ஆண்டின் இறுதி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இதன்போது, மீண்டும் ஒரு முறை சிறீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் ஐக்கியநாடுகளின் கட்டமைப்பு தோல்வி கண்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கையில் நிறைவடைந்த இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் போல வேறு எந்த நாட்டிலிலும் இனி இடம்பெறத வண்ணம் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

இனம் அழித்தொழிக்கப்பட்டதை ஒரு அறிக்கையை வெளியிட்டு ஒரு வார்த்தையூடாக கடந்து செல்ல முற்படும் இவரது அயோக்கியத்தனத்தை கேள்வி கேட்க யாருமேயில்லை. ஐநாவின் இந்த பொறுப்பற்றதனத்தால் ஒரு இனம் அழிக்கப்பட்டது மட்டுமல்ல எஞ்சியுள்ளவர்கள் தொடர் இனஅழிப்பிற்குள் சிக்கியுள்ள அவலம்தான் மிஞ்சியுள்ளது.

ஆனால் இதற்கு தீர்வாக அனைத்துலக மட்டத்தில் எந்தவிதமான சாத்தியமான பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை. மாறாக இனஅழிப்பு அரசை காப்பாற்றும் அனைத்துலக நகர்வுகளைத்தான் நம்மால் காண முடிகிறது.

நேற்று இனஅழிப்பின் முதன்மை குற்றவாளியான கோத்தபாய ராஜபக்ச அவர்களை ஐநாவின் பிரதி செயலர் சந்தித்து பேசியுள்ளார். கைது செய்யப்பட்டு போர்க்குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்களுடன் ஐநாவின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் சந்தித்து பேசும் இரகசியம்தான் என்ன?

ஐநா முன்பு மட்டுமல்ல தற்போதும் தமிழர்களுக்கு மோசடியையே செய்து வருகின்றது என்பதன் எடுத்து காட்டுக்கள் இவை.

“ஐநா மீது தமிழர் தரப்பு உடனடியாக ஒரு வழக்கை பதிவு செய்து ஐநாவிற்கு எதிராக மக்களை திரட்டி போராடுவது ஒன்றுதான் இனஅழிப்பிறகு நீதி கிடைக்கவும் தொடரும் இனஅழிப்பை கட்டுப்படுத்தவும் உதவும்” என்று கடந்த நான்கு வருடங்களாக ஒரு உளவியலாளர் குழு வாய்கிழிய கத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்ச்சூழலில் அதை செவிமடுக்க இன்னும் யாரும் தயாராக இல்லை. பான்கிமூன் தமது கட்டமைப்புரீதியான தோல்வியை ஒப்புக்கொண்ட மறுகணமே நாம் ஐநா வாசஸ்தலத்தைதான் முற்றுகையிட்டிருக்க வேண்டும். ஆனால் ஐநாவிற்கு எதிராக ஒரு கண்டன அறிக்கைகூட விட தெம்பில்லாத – அரசியல், இராஜதந்திர விவேகமற்றவர்களால் நிரம்பி வழிகிறது தமிழ்அரசியல்சூழல்.

இது மிகவும் வருத்தத்திற்குரியது.

இனியாவது தமிழ் அரசியல் தலைவர்களும் அமைப்புக்களும் விழித்து கொள்ளுமா?

ஐநா மீது வழக்கு தொடுப்பது தொடர்பாக எமக்கு அண்மையில் நேர்காணல் வழங்கிய உளவியலாளர் குழு கூறியதுபோல,

“எந்த உலகப்போர்களின் விளைவாக ஐநா தோற்றம் பெற்றதோ அதே ஐநாவின் நீதியில் நம்பிக்கையற்ற மக்களையும் நாடுகளையும் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஐநாவிற்கு எதிராக போராடுவதுதான் ஒரே வழி. இன்று ஈராக்,ஆப்கானிஸ்தான், சிரியா என்று ஐநாவின் மீது உலகளவில் பலர் நம்பிக்கையிழந்து வரும் சூழலில் ஐநாவிற்கு எதிராக அல்லது அதற்கு சமாந்தரமாக ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்ற கோசங்கள் வலுத்து வருகின்றன. நாம் அந்த போராட்டத்தின் முதல் அடியை எடுத்து வைப்போம்.”

எனவே நடந்த இன அழிப்பிற்கு ஐநாவே முழுப்பொறுப்பு என்பதை உணர்ந்து போராடுவோம். ஐநா நீதி தர மறுத்தால் அதற்கு சமாந்தரமான ஒரு அமைப்பை உருவாக்க உலகளவில் ஒடுக்கப்பட்ட அநீதி இழைக்கப்பட்ட இனக்குழுமங்களுடன், அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து போராடுவோம்.

விடுதலையை வென்றெடுப்போம்.

ஈழம்ஈநியூஸ்