un-hrஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது.

 

அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான ஆவணங்கள் மீதான விசாரனை நடாத்தப்பட்டது. 2013. 4. 28 அன்று எனது வாக்குமூலம், மற்றும் சில ஆவணங்கள், சில கானொளிகள் என்பன அவையில் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்களாக எந்த விசாரனையும் இன்றி இழுத்தடித்த சபை கடந்த மேற்குறித்த திகதிகளில் அழைத்திருந்தது.

 

அங்கே பல்லாயிரக்கணக்கான பதிவுகளும், ஆதாரங்களும் இத்தனை ஆண்டுகளாக தூசி படிந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இத்தனை ஆதாரங்கள் ஆவணங்கள் இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் ஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே.

 

எங்கள் சாட்சியங்கள்-

 

கேள்வி: யுத்த காலத்தில் நீங்கள் அங்கே இருந்தீர்களா?

 

பதில்: ஆம்‬ இருந்தோம் இல்லாமலா இத்தனை ஆதாரங்கள் எங்களால் வழங்கப்பட்டது.

 

கேள்வி: நீங்கள் எப்படி அந்த களத்தில் ஒரு சிறுமியாக இருந்தீர்கள்?

 

பதில்: எங்கள் குடும்பத்தில் அனைவரும் போராளிகள். அதில் அம்மா அப்பா இருவரும் இறந்த நிலையில் என்னோடு இருந்தவர் அண்ணா மட்டுமே. அவர் ஒரு மருத்துவ பிரிவு போராளி. அதனால் என்னால் எந்த இடத்திற்கும் போக முடியவில்லை.

 

கேள்வி: உங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கானொளியானது பலர் மயக்கமுற்ற நிலையிலும், இறந்த நிலையிலும், காயமுற்ற நிலையிலும் காணப்படுகிறார்கள். அதே நேரம் அதில் உள்ளவர்களில் நீங்களும் காயப்பட்டுள்ளீர்கள். அது தெளிவாக தெரிகிறது. இது எப்படி நடந்தது?

 

பதில்: மே 17 பகல் பல பிரிவுகளாக புலிகளும் மக்களும் பிரிந்து செல்ல வேண்டி எங்களுக்கு பணிக்கப்பட்டது. அதில் நாங்களும் ஒரு பிரிவாக சென்றோம். சென்ற வேளையில் தான் இந்த அசம்பாவிதம் இராணுவ பகுதியில் இருந்து நடாத்தப்பட்டது. அதில் நாங்கள் மெத்தமாக 47 பேருக்கும் மேலானவர்கள் இருந்தோம். அதில் எத்தனை பேர் உயிர் தப்பினோம் என்று தெரியாது. காரணம் நாங்கள் இராணுவ பகுதியை நோக்கி சென்ற வேளையில் அவர்கள் எங்களை நோக்கி நடாத்திய பாரிய தாக்குதல் அது. நாங்கள் நிராயுதபாணிகளாக சென்ற வேளை கண்மூடித்தனமான தாக்குதலை இராணுவம் நடாத்தியது. அதில் இராசாயண பாவனை அதிகம் எனலாம் இதனாலேயே பலர் மயக்கமுற்ற நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

கேள்வி: வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி?

 

பதில்: அதுபற்றி எனக்கு முழுவிபரம் தெரியாது. அதில் புலிகளின் உயர்மட்டத்திற்கு எந்தளவு தொடர்பு இருந்ததாக எனக்கு தெரியாது.

 

கேள்வி: அங்கு பொது மக்கள் புலிகளால் வழிமறித்து திருப்பி அனுப்பினார்களா?

 

பதில்: இதற்கு பதில் எனக்கு தெளிவாக கூறமுடியும். காரணம் மக்கள் பாதுகாப்பு சந்தேகம் வந்தவேளை புலிகள் மக்களை போக எந்த தடையும் விதிக்கவில்லை. மாறாக மக்கள் வெளியேற அரச தரப்பு இடம் கொடுக்கவில்லை என்பதே உண்மை. அந்தளவு உக்கிரமான தாக்குதல் நடாத்தப்பட்டது.

 

கேள்வி: உங்கள் பாதுகாப்பு நிலை உணர்ந்த நீங்கள் எதற்காக அங்கே இருந்தீர்கள்?

 

பதில்:  பாதுகாப்பு நிலை என்பது புரியவில்லை…..

 

கேள்வி: உங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையினை நீங்கள் உணர்ந்தும் ஏன் அங்கே இருந்தீர்கள்?

 

பதில்: அதற்கான‬ பதில் என்னால் முன்பே வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் புலிகளாகவே அரசு பார்த்து கொன்றது.

 

கேள்வி: லண்டன் வந்தது எப்படி?

 

பதில்: மே18 தப்பிய சிலரோடு அதாவது அண்ணா உட்பட இரண்டு தளபதிகள் மற்றும் அவர்கள் இரண்டு பிள்ளைகளுமாக ஒரு அகதி முகாமில் இருந்து 20 அன்று மட்டக்களப்பை அடைந்து அங்கிருந்து ஒரு மாத இடைவெளியில் லண்டன் பயணமானோம். எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியுரிமை வழங்கப்பட்டது.

 

கேள்வி:  சரி தற்போது இந்த காயம் எப்படி?

 

பதில்: முள்ளிவாய்க்கால் காயம்தான் இன்னும் குணமாகவில்லை. இது நான்காவது அறுவை சிகிச்சை.

 

கேள்வி: தற்போது ஏதாவது உதவி தேவையா?

 

பதில்: வேண்டாம். நீதி மட்டுமே வேண்டும்.

 

கேள்வி: உங்கள் வயது?

 

பதில்: 16

 

கேள்வி: ஐ.நா சபையின் பெண்களுக்கான உரிமையகம் பற்றி தெரியுமா? இணைய விருப்பமா?

 

பதில்: உடன் பதில் கூறமுடியாது. அதற்கு காலம் இருக்கிறது இன்னும்.

 

இவை என்னிடம் வினவப்பட்ட சில கேள்விகளும் பதில்களும். இந்த விசாரணை என்பது ஒரு கண் துடைப்பே. இப்படி ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பல கேள்விகள் வினவப்பட்டது. சில இரகசியத்தன்மையும் பாதுகாப்பு தன்மையும் கருதி பதிவிடவில்லை.

 

ஐ.நா அறிக்கை செப்டெம்பர் மாதம் பல ஏமாற்றங்களை மக்களுக்கு வழங்கும் என்பது அங்கே கடைப்பிடிக்கப்படும் அசமந்தப்போக்கில் தெரிகிறது.

 

நன்றி
பவித்ரா நந்தகுமார்

 

மரணித்த எம் மக்களின் ஆத்ம சாந்திக்கும் விதையான எம் மாவீரத் தெய்வங்களுக்கும் உங்கள் தார்மீக்க் கடனைச் செய்யுங்கள் . தயவு செய்து இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் நீங்களும் ஒருவராகுங்கள்.

 

The International Community: Meet the demands of the survivors of Sri Lanka’s civil war – Sign the Petition!
https://www.change.org/p/the-international-community-meet-t…