ஒரு பாதிரியாரின் பதிவு இது
மெரினா கடலில் தடியடி நடத்தப்பட்ட அந்தக்காலை குப்பத்துசாலைகள் வழியே மெரினாவிற்குள் நுழைய முற்பட்டு போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறோம்.

 

அப்போது எவனோ ஒரு மாணவன் மெரினா களத்திலிருந்து கால் உடைக்கப்பட்டு மயக்க நிலையில் தூக்கிவரப்படுவது கண்டு குப்பத்து பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறார்கள்.

 

அதனைத்தொடர்ந்து குப்பத்து சனங்கள் எல்லாம் சேர்ந்து போலீசாரை எதிர்த்து மெரீனாவிற்குள் நுழைந்து போராட்டக்காரர்களை காப்பாற்றிவிட துடிக்கிறார்கள். நாங்கள் செய்வதறியாது நின்றபோது “நம்ம உசுர கொடுத்தாவது காப்பாத்த வேணாமாடா”னு போலீசாரிடம் மல்லுக்கட்டி எங்களுக்கு அரணாக இருந்து தடியடி வாங்கியது இந்த பெண்களும், கிழவிகளும்தான்.

 

அதனைத் தொடர்ந்து கடல் வழியாக போராட்டக்களத்தை அடைய முயற்சி செய்கிறொம்.

 

படகுகள் ஏதும் கடலில் இறங்கக்கூடாதென்று போலீசார் மிரட்டிச்சென்று, 3 ரோந்து படகுகளில் போலீசார் காவல் காத்த போதிலும் அங்குள்ள மீனவகுப்ப மக்கள் போலீசாரை எதிர்த்து எங்களை போராட்டக்களத்திற்கு கூட்டிச்சென்றனர்.

 

எங்களுக்கு சாப்பாடும் தண்ணீரும் எடுத்துவந்தோர் விரட்டி அடிக்கப்பட்டபோது, தங்கு தடையின்றி எங்களுக்கு சாப்பாடும் தண்ணீரும் பிஸ்கட்டும் படகுகள் மூலம் எடுத்துவந்தது இந்த மீனவ மக்கள்தான்.

 

இன்று அவர்கள் சூறையாடப்படுகிறார்கள். அமைதி போராட்டம் என்ற பேரில் அதிகாரபலத்தை நாம் ஆட்டிப்பார்த்திருக்கிறோம் அந்த ஆத்திரங்கள் அத்தனையும் இந்த எளிய மக்கள் மீது காட்டப்படுகிறது.

 

இதுதான் போலீசாரின் உண்மை முகம். நேற்று முழுவதும் குப்பத்து மக்களின் வாகனங்களும் கூரைகளும் தீயிட்டு கொளுத்தப்படும் அந்த காணொளிகாட்சியே மனதை விட்டு அகலாத நிலையில் தற்போது நள்ளிரவில் குப்பங்களிலும், மீனவ குடிசைகளிலும் போலீசார் புகுந்து அடித்து நொறுக்குகிறார்கள். Triplicane, Ice House காலனிகளில் வீடு வீடாகச் சென்று ஆண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கிற நிலையில் தற்போது நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், அய்யோத்திக்குப்பம், சிவராஜபுரம் ஆகிய மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுருக்கின்றனர்.

 

மீனவர் குடியிருப்பு பகுதிகளுக்கு உள்ளே யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விடிவதற்குள் அனைவரும் கைது செய்யப்படவிருப்பதாகவும் தகவல் வருகிறது.

 

அவர்களுக்கும் மெரினா போராட்டத்துக்கும் சம்பந்தமேயில்லை. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் உடன் நின்றார்கள், மாணவர்களை தாக்குதலில் இருந்து காத்தார்கள். அதற்கான பலனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். “இந்த பிள்ளைகள் கடலுக்குள் இறங்குவதை பார்த்ததும் மனசு கேட்காம ஓடி வந்தோம். இவனுங்களுக்கு கடலை பத்தி என்ன தெரியும்.. சொல்லுங்க” என்று பதறியடித்து கூட்டம் கூட்டமாக மாணவர்களை நோக்கி ஓடிவந்த மீனவ மக்கள் இப்போது கதறுவது நமக்கு கேட்கவில்லையா.

 

நள்ளிரவில் செய்யப்படும் கைதுகளில் எத்தனைபேர் எவ்வாறெல்லாம் சித்ரவதைக்கு உள்ளாக இருக்கிறார்களோ. எளிய மக்கள் அவர்கள். தயவு செய்து காப்பாற்றுங்கள். இப்போதுதான் நம் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.