தமிழரசுக் கட்சி தமிழர் தேசத்தை ஒரு மோசமான வரலாற்றை நோக்கி இழுத்துச் செல்வது அதன் தேர்தல் அறிக்கையில் பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. குறிப்பாக புலிகள் தூக்கியெறிந்த ஒஸ்லோ பிரகடணத்தை தூக்கிப் பிடித்திருப்பது இதன் ஒரு சோற்றுப் பதம்.

கீழே உள்ளது தராகி சிவராம் ஒஸ்லோ பிரகடனத்தின் ஆபத்துக் குறித்து எழுதிய கட்டுரை.

சிவராமுக்கு மாமனிதர் விருதை தலைவர் இதற்காகத்தான் வழங்கினார் என்ற ஒரு கருத்தும் அந்த நேரத்தில் பேசப்பட்டது. அந்தளவு கனதியான வரலாற்று எச்சரிக்கை இந்தக் கட்டுரை. இதைப் படியுங்கள் புரியும்.

வட கிழக்குத் தமிழ் பேசும் மக்களுடைய இன்னல்களுக்கான தீர்வு ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையிலேயே காணப்படவேண்டும். அதற்கமையவே புலிகள் தமது தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் மிக ஆணித்தரமாகக் கூறிவருகின்றன.

சிறிலங்காப் பிரதமர் அமெரிக்கா சென்றிருந்த வேளையில் அந்நாட்டின் பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் றிச்சேட் ஆர்மிரேஜ் ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படைகள் என்ன என்பதை தெட்டத்தெளிவாக வலியுறுத்தியிருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவரைக் காணப்புறப்படுவதற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள சர்வதேசக் கற்கைகளுக்கான நிறுவனத்தில் உரையாற்றியபோது கிறிஸ் பற்றனும் ஒஸ்லோப் பிரகடனத்தின்படியே புலிகள் இனச்சிக்கலுக்கான தீர்வு பற்றியது தமது முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் எனக்கூறியது மட்டுமன்றி, ஒரு படி மேற்சென்று அவர்கள் தயாரித்திருக்கும் சமஷ்டித் தீர்வு பிரிந்து செல்லும் உரிமை எனும சற்றே திறந்த கதவிடுக்கினுள் காலை வைத்துக்கொண்டு முன்வைக்கப்படுவதாக இருக்கக்கூடாது என மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.

அதாவது ஒஸ்லோப் பிரகடனத்தினடிப்படையில் தமிழ் பேசும் மக்களுடைய இன்னல்களுக்கு ஒரு சமஷ்டித் தீர்வை புலிகள் முன்வைப்பதாயின் அதனுள் எமது சுயநிர்ண உரிமை பற்றிய பேச்சுக்கு இடமேயில்லை என்பதே கிறிஸ் பற்றனுடைய கூற்றின் சாராம்சம். அமெரிக்க பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆர்மிரேஜ் இதை வேறு விதமாக வலியுறுத்தியிருந்தார்.

புலிகள் மிகக் கவனமாக ஆராய்ந்து தயாரித்துச் சமர்ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை பற்றிய வரைவு ஒஸ்லோப் பிரகடனத்தின் வரையறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே அது ஏற்கக் கூடியதல்ல என்பதே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் திட்டவட்டமான நிலைப்பாடு என்பதை கிடைக்கும் சந்தர்ப்பங்களின் போதெல்லாம் அவை இப்போது வலியுறுத்தி வருகின்றன.

(புலிகளை இனிப்போருக்குப் போகாமல் பார்த்துக்கொண்டால் அவர்கள் தீர்வைப்பற்றிப் பேசிப் பேசிக் களைத்துபோய், காலவோட்டத்தில் ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சியினுள் வாழப்பழகிவிடுவார்கள் என்பது டெல்லியில் நிலவும் எண்ணம் போல் தெரிகிறது. இது பற்றிப் பின்னர் பார்ப்போம்) இலங்கையின் ஒருமைப்பாட்டினுள் (Unity) உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதன் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் சிக்கலுக்கு தகுந்த சமஷ்டித் தீர்வொன்றினைத் தேடுவதென 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி ஒஸ்லோவில் ஸ்ரீலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் பிரகடனம் செய்தனர்.

இப்பிரகடனமே இனித் தமிழ் பேசும் மக்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற எந்தவொரு அரசியல் தீர்வுத்த்திட்டத்தினதும் பேச்சுவார்த்தைகளினதும் கோட்பாட்டு அடிச்சட்டமாக இருக்கவேண்டும் என்பதே அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் திட்டவட்டமான நிலைப்பாடாகும்.

இந்த வகையில் ஒஸ்லோ பிரகடனம் என்பது எமது நியாயமான போராட்டத்தை முடக்கவும், எமது மக்களின் உண்மையான அரசியற் பாரம்பரியத்தை தமது நோக்கங்களுக்குச் சாதகமான ஒரு பொய்மைத்தளத்திற்கு மாற்றவும் அமெரிக்கா மற்றும் அதைச் சார்ந்த நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஒரு பொறி என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதாவது ஸ்ரீலங்கா அரசு தனது அரசியல் யாப்பை மாற்றி தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்காமல் அல்லது நாம் முன் வைப்பதை ஏற்றுக்கொள்ளாமல் பேசிப் பேசியே எமது இன்னொரு தலைமுறையை வீணடித்துக் கொண்டு போனாலும் நாம் எமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதற்கான எந்த நடைமுறையிலும் இறங்காமல் நல்ல பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்பதே அந்நாடுகளின் நோக்கமாகும்.

** FILE ** Merchants return to their burned out businesses in the Pettha area of downtown Colombo, Sri Lanka on Aug. 1, 1983, to see what can be salvaged following a week of rioting. More than 1,000 businesses and homes of Tamil’s were destroyed in the racial riots. As Sri Lanka marks the 25th anniversary of the riots Wednesday, July 23, two exhibits by artists from the Sinhalese majority seek to prod their countrymen into acknowledging a quarter century of suffering, in the hopes of offering a path out of the violence. (AP Photo)

பிரித்தானியா இலங்கைத் தீவை விட்டுச் சென்ற பின்னர் நாம் தேடிய அரசியல் முதுசத்தை கைவிடப்பண்ணும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பொறியே ஒஸ்லோ பிரகடனமாகும். 1972 இல் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் யாப்பை நாம் நிராகரித்தமையும், 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் 1977 இல் எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிட எமது மக்கள் ஜனநாயக hPதியாக வழங்கிய ஆணையும், அதைக் கோட்பாட்டடிப்படையில் மீளுறுதி செய்த திம்புப் பிரகடனமுமே எமது கைவிடப்படமுடியாத அரசியல் முதுசமாகும்.

எம்மை இவ் அரசியல் முதுசத்தைக் கைவிடச் செய்து ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சிச் சகதிக்குள் மாட்டவைப்பதற்கு 1987 இல் இந்திய – ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட முயற்சியை தோற்கடித்த நாம் ஒஸ்லோ பிரகடனம் என்ற பொறிக்குள் எப்படிச் சிக்குண்டோம்?

எமது போராட்டத்தைச் சுற்றி வலைவிரிக்கும் சர்வதேசச் சக்திகளையும் அவற்றினுடைய கேந்திர உள்நோக்கங்களையும் உலகில் நடைபெற்ற வேறு விடுதலைப் போராட்டங்களின் இதுபோன்ற அனுபவங்களையும் கவனமாகக் கற்று அலசி ஆராய்ந்து நாம் செயற்படவேண்டிய அவசியத்தையே இது காட்டுகிறது. இது எமது மக்களின் பிரச்சினை.

தமது உரிமைப் போராட்டங்களின் அரசியல் முதுசங்களைக் கைவிட்டவர்கள் இவ்வாறான பொறிகளுக்குள் சிக்கி தமது மக்களை படுகுழிக்குள் வீழ்த்திய கதைகள் பல உண்டு.

1964 ஆம் ஆண்டின் பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் அனைத்துமாக இணைந்து பாலஸ்தீன விடுதலையின் அடிப்படைக்கோட்பாடுகளை ஒரு பிரகடனமாக்கின. இது Palestinian Charter என அறியப்படுகின்றது. பாலஸ்தீன மக்களின் பாரம்பரியத் தாயகத்திலிருந்து அவர்களை அகதிகளாக விரட்டியடித்துவிட்டு அங்கு சட்டவிரோதமாக இஸ்ரேல் நிறுவப்பட்ட அடிப்படை உண்மையின் தளத்தில் பாலஸ்தீனச் சாட்டர் பிரகடனப்படுத்தப்பட்டது. இஸ்ரேலின் படைபலம் அமெரிக்க உதவியுடன் பல்கிப்பெருகியபோதும் பாலஸ்தீனச் சாட்டரின் மேற்படி அடிப்படை அரசியல் மற்றும் சட்டாPதியாக அந்நாட்டிற்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்து வந்தது.

1990 களில் நோர்வேயின் அனுசரணையோடு பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இஸ்ரேலிய அரசுக்குமிடையில் நடைபெற்ற முன்னோட்டத் திரைமறைவுப் பேச்சுக்களின்போது யாசீர் அரபாத்தின் சில முக்கிய ஆலோசகர்கள் ‘வளைத்துப்’ போடப்பட்டனர். இஸ்ரேலுக்குச் சார்பாகப் பேச்சுக்களின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க மற்றும் நோர்வே ஜிய சக்திகளின் வேலைப்பாடுகளால் மேற்படி மதியுரைஞர்கள் அரபாத்தையும் திசைமாற்றினர்.

அவர்கள் அதை செய்வதற்கு எந்தத் தடங்கலும் இருக்கவில்லை- ஏனெனில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் ஊழலில் ஊறிய ஒரு அரசியற் சந்தர்ப்பவாதி. இப்படியான ஆலோசனைகளின் விளைவாக அமெரிக்காவும் இஸ்ரேலும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை தமக்குச் சாதகமாகப் பின்தள்ளும் விடயத்தில் ஒரு பெரும் வெற்றியை ஈட்டின. 1993 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இஸ்ரேல் அரசம் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் வைத்து ஒரு பிரகடனத்தை வெளியிட்டன.

இதுவும் ஒஸ்லோப் பிரகடனம் என்றே அறியப்படுகிறது. இப்பிரகடனத்தில் பாலஸ்தீன மக்களின் முழுச்சுயநிர்ணய உரிமை, அவர்களது பாரம்பரியத் தாயக உரிமை, பாலஸ்தீனத் தனியாட்சி ஆகிய அடிப்படைகள் என்பன குறிப்பிடப்படவில்லை.
அரபாத்தினுடைய ஆலோசகர்களையும் அவர்களுடாக அவரையும் வளைத்துப் போட்டதால் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கிடைத்தவெற்றியே அந்த ஒஸ்லோப் பிரகடனமாகும்.

** FILE ** Merchants return to their burned out businesses in the Pettha area of downtown Colombo, Sri Lanka on Aug. 1, 1983, to see what can be salvaged following a week of rioting. More than 1,000 businesses and homes of Tamil’s were destroyed in the racial riots. As Sri Lanka marks the 25th anniversary of the riots Wednesday, July 23, two exhibits by artists from the Sinhalese majority seek to prod their countrymen into acknowledging a quarter century of suffering, in the hopes of offering a path out of the violence. (AP Photo)

நீண்டகாலமாகப் பொருட்செலவு மிகுந்த போரினால் சாதிக்க முடியாமற் போனதை ஒஸ்லோப் பிரகடனத்தின் ஊடாக இஸ்ரேல் சாதித்தது எனக் கூறின் மிகையாகாது. பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை அரசியல் ஆவணமான பாலஸ்தீன சாட்டர் கைவிடப்பட்டது.

இங்ஙனம் அரபாத்தும் அவருடைய ஆலோசகர்களும் ஒஸ்லோப் பிரகடன விடயத்தில் சோரம் போனதை கடுமையாகக் கண்டித்து எழுதிய போராசிரியர் எட்வேர்ட் சயீட் போன்றவர்கள் சமாதானத்தின் விரோதிகளாக காட்டப்பட்டனர்.

பாலஸ்தீனத் தரப்பு நியாயங்களையும் தரவுகளையும் ஆழமாக ஆராய்ந்து, சேகரித்து அவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தையின்போது இஸ்ரேலின் சூழ்ச்சிகளை முறியடிப்பதில் அரபாத்தினுடைய ஆலோசகர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை என பேராசிரியர் எட்வர்ட் சயீட் கூறுகிறார்.

பாலஸ்தீன சாட்டரின் அடிப்படைக் கோட்பாடுகளை அரபாத்தின் ஆலோசகர்கள் கைவிட்டதன் காரணமாக இன்று பாலஸ்தீன மக்களின் போராட்டம் திசை தடுமாறுகிறது. இவ்வகையான ஒரு தந்திரோபாயத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய அரசு வட அயர்லாந்துப் போராட்டத்தை அரசியல் hPதியாக மடக்கிப்போட முனைந்தது.

வட அயர்லாந்தின் பிரச்சினை அங்கு வாழும் கத்தோலிக்கருக்கும் புரட்டஸ்தாந்திகளுக்குமிடையிலான முரண்பாட்டைத் தணிக்கும் அதிகாரப் பரவலாக்கல், வன்முனையை அனைவரும் முற்றாகக் கைவிடல் போன்றவற்றின் அடிப்படையில் வரையறை செய்யப்படவேண்டும் என்பது பிரித்தானியாவின் நிலைப்பாடு. இந்த அடிப்படையிலேயே 1996 இலிருந்து வடஅயர்லாந்து சமாதானப் பேச்சுக்களை அது முன்னெடுக்க விரும்பியது.

இதன் உள்நோக்கத்தை தெளிவாக இனங்கண்டு கொண்ட ஜரிஷ் விடுதலை இயக்கம் தனது போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மீண்டும் மீண்டும் மிகத்தெளிவாகப் பிரகடனப் படுத்தியது. வடஅயர்லாந்தை பிரித்தானியா ஆக்கிரமித்திருப்பதே பிரச்சினையின் அடிப்படை என்பதை ஐரிஷ் விடுதலை இயக்கம் கைவிடவில்லை. அதை கைவிடப்பண்ணுவதற்கு பிரித்தானியா எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன.

இவற்றையெல்லாம் இங்கு கூறுகையில் ஒரு ஆட்சேபணை எழலாம். மேற்படி உதாரணங்கள் எதுவும் தமிழ்பேசும் மக்களின் பிரச்சி;னையுடன் ஒப்பிடக்கூடியவையல்ல- ஏனெனில் இங்கு புலிகளிடம் பெரும் படைவலு இருக்கிறது என்பதே அது.

ஒரு மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் அவர்களிடமுள்ள படைவலு என்பது அவர்களுடைய முழு இறைமை என்ற அரசியல் குறிக்கோளை அடையும் ஒரு கருவியாகவே தொழிற்படுகிறது.

எனவே முழுச்சுயநிர்ணய உரிமை என்ற எமது அரசியல் முதுசத்தை நாம் கை கழுவிவிட்டு, இலங்கையின் ஒருமைப்பாட்டிற்குள் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற ஒஸ்லோ பிரகடனத்தின்பாற்பட்டு ஒழுகுவதாயின் அக்குறிக்கோளை அடைந்திட புலிகளின் படைவலு தேவையற்றது என்ற எண்ணம் மக்களின் உள்ளத்தில் உண்டாகலாம்.

அறுகம் புல்லைத்தான் வெட்டப்போகிறோம் என்று முடிவெடுத்த பின் கோடாலி எதற்கு என்ற எண்ணத்தை காலப்போக்கில் எமது மக்களிடம் தோற்றுவிக்கலாம் என ஒஸ்லோப் பிரகடனத்தின் சூத்திரதாரிகள் கருதுகின்றனர்.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவின் முன்னுரையில் புலிகள் ஒஸ்லோப் பிரகடனத்தை து}க்கி ஒருபுறம் வைத்துவிட்டு எமது போராட்டத்தின் சரியான அரசியல் அடித்தளத்தை தெளிவாக இனங்காட்ட முற்பட்டுள்ளனர். ஒஸ்லோப் பிரகடனத்தைக் கிழித்தெறிந்து அதை ஒரு கெட்ட கனவாய் மறந்து அடுத்த கட்டத்தில் நாம் காலடியெடுத்து வைக்கவேண்டும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here