கூட்டமைப்பை பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து, வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் 15வது மாநாடு வவுனியாவில் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவரால், தமிழரசுக்கட்சியை பலப்படுத்துவதை விடுத்து விட்டு, தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்துமாறு வலியுறுத்தி வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பரந்தன், கிளிநொச்சி, வவுனியா நகரப்பகுதிகளில் இன்று (06.09.2014 அன்று) துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

தந்தை செல்வா அவர்களால் செல்லமாக “மலேப்பாம்பு” என்று அழைக்கப்பட்ட வவுனியா ஓமந்தை அரசமுறிப்பில் வதியும் தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் என்பவரால் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Thamotharan-maheswaran
அத்துடன் முள்ளிவாய்க்கால் வரை சென்று தமிழ் இனம் அடைந்த துயரங்களை நேரில் கண்ட சாட்சியாக தானிருப்பதாகவும், தன் மனம் தமிழ் இனத்தின் விடிவைத்தவிர வேறு எதையும் சிந்திக்க மறுப்பதால் குறித்த துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பேராளர் மாநாடு நாளை (07.09.2014 அன்று) வவுனியாவில் நடைபெறவுள்ள நிலையில், “கட்சிகளைப் பலப்படுத்துவதை விடுத்து, கூட்டமைப்பை பலப்படுத்துங்கள்!” என்று, அக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு உரைக்கும்படியாக வேண்டுகோள் விடுத்து வெளியிடப்பட்டுள்ள அத்துண்டுப்பிரசுரங்களில் உள்ளதை உள்ளவாறே, எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றியுள்ளோம். படித்துப்பாருங்கள்.

தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் (மலேப்பாம்பு)
அரச முறிப்பு, ஓமந்தை, வவுனியா.

கட்சிகளைப் பலப்படுத்துவதை விடுத்து, கூட்டமைப்பை பலப்படுத்துங்கள்! தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினரின் அன்பான வேண்டுகோள்

தமிழினம் சிங்களப் பேரினவாதிகளின் அடிமைகளாக மாறப்போகிறது. இதனைத் தடுப்பதற்கும், தமிழினத்தின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்கும், அதன் பண்பாடு கலாசாரம் ஆகியவற்றைப் பேணிக்காப்பதற்கும், தமிழ் மக்களின் சுய நிர்ணயக் கோரிக்கையைக் கையிலெடுக்க வேண்டும் என்ற தூரநோக்குடனேயே தந்தை செல்வா தமிழரசுக்கட்சியை உருவாக்கினார். அந்த நோக்கத்திற்காகவே அவர் அயராது உழைத்தார். அதனாலேயே அவர் “ஈழத்தின் காந்தி” என்றும் “தந்தை செல்வா” என்னும் சிறப்பு அடைமொழிகளைப் பெற்றார்.

தனியொரு கட்சியினால் இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியாது என்பதை நன்கறிந்ததன் பின்னரே, “தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி”யை உருவாக்க முன்வந்ததுடன் தான் உருவாக்கிய கட்சியை பிரபல்யப்படுத்தவும் விருப்பமின்றியே தனது உயிர் பிரியும் வரையில் தந்தை செல்வா வாழ்ந்து காட்டினார். தனது இனத்தின் விடுதலைக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தாரே அன்றி, கட்சிக்காக இலட்சியத்தை விட்டுக்கொடுக்க அவர் முன்வந்ததில்லை.

“எமது இளைஞர்கள் இனியும் பொறுமையுடன் இருக்க மாட்டார்கள்” என்று, அண்ணன் அமிர் அவர்கள் இளைஞர்களின் மனோநிலையை வெளிப்படுத்தியவுடன் அன்றைய இளைஞர்கள் சிங்கள அரசிற்குப் புரிகின்ற மொழியில் பேச ஆரம்பித்தனர். அவர்களுக்குத் தலைமை கொடுக்க நாம் பின்வாங்கிவிட்டோம் என்ற உண்மையை மிகவும் ஆழ்ந்த மனக்கவலையுடன் இங்கு பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். அதன் விளைவாக நாம் அரசியல் அஞ்ஞாதவாசம் ப+ணும் நிலை ஏற்பட்டது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

ஆனால் பொறுப்பு மிக்க இளைஞர்கள் மீண்டும் எம்மையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பையும், வயதில் மூத்தவர்கள் அனுபவம் நிறைந்தவர்களாக இருப்பர் என்னும் எதிர்பார்ப்பில் அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையிடம் கையளித்தனர். பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பெயரை தனியொரு நபராக ஆனந்த சங்கரி அபகரித்துச் சென்றவுடன் உறங்கு நிலையிலிருந்த தமிழரசுக் கட்சியின் பதிவைத் தூசுதட்டி அதன் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு உதவினர். இங்கு இளைஞர்களின் ஐக்கியத்திற்கான அர்ப்பணிப்பைப் பார்க்க முடிகின்றது.

“குறைந்தபட்சம் எமது மக்களின் பிரச்சினை தீரும் வரையிலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் ஒரு பொதுவான குடை அமைப்பின்கீழ் செயல்பட்டு எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றியவுடன் கட்சி அரசியலை முன்னெடுக்கலாம்” என்னும் இளைஞர்களின் தலைமையிலான அங்கத்துவக் கட்சிகளின் உருக்கமான வேண்டுகோளை உதாசீனம் செய்து எமது கட்சியை மட்டும் முன்னிலைப்படுத்தும் செயல் நியாயமானதுதானா? தமிழர்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் எம்மைப் பற்றிய பதிவு எவ்வாறு இருக்கும் என்பதை இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைமை உணர்ந்துள்ளதா?

முள்ளிவாய்க்கால் வரை சென்று எமது இனம் அடைந்த துயரங்களை நேரில் கண்ட சாட்சியாக நானிருப்பதால், என் மனம் எமது இனத்தின் விடிவைத் தவிர வேறு எதையும் சிந்திக்க மறுக்கின்றது. இன்று நடைபெறுகின்ற அவலங்கள் தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனத்தை நன்கு எடுத்துரைப்பதாகவே அமைகின்றன. அதன் வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உளப்பூர்வமான ஐக்கியத்தை வலியுறுத்தச் சொல்கிறது. சொல்வது என்கடன். கேட்பதும் விடுவதும் உங்கள் கைகளில்.

முக்கிய குறிப்பு:

1958ம் ஆண்டு பொத்துவில் அறப்போர் குழுத்தலைவர் அரியநாயகம் அவர்களும், கோப்பாய் கோமான் வன்னியசிங்கம் அவர்களும் மட்டக்களப்புக்கு பாதயாத்திரை வந்தபோது, கல்முனை இராம கிருஸ்ணன் மிஸன் (RKM) பாடசாலையில் அவர்களை கவிஞர் பாவநாதசிவம் இயற்றிய “தமிழரசு கீதம்” பாடி வரவேற்ற எனது 16வது வயதிலிருந்து எனக்கும் இலங்கை தமிழரசுக்கட்சிக்குமான உறவு ஆரம்பிக்கிறது. (இன்று கட்சியிலுள்ள பலர் இந்த கீதத்தையே அறிந்திருக்க வாய்ப்பில்லை.)

பின்னாளில் 1960ம் ஆண்டு கட்சியின் “தமிழரசு வாலிபர் முன்னணி”யின் நிர்வாகத்தில் முக்கிய செயல்பாட்டாளராக இருந்ததோடு, கட்சியின் சார்பில் “விடுதலைப்பரணி” மாதப்பத்திரிகை அச்சிட்டு வெளியிட்டவர்களில் நானும் ஒருவன். இலங்கை தமிழரசுக்கட்சியின் சிறந்த மேடைப்பேச்சாளனாகவும் இருந்திருக்கிறேன்.

நன்றி: தமிழ் சி. என். என்