கட்டப்பட்ட ஆடுகள்

0
760

‘திவயின’பௌத்த சிங்களக் கடும் போக்குப் பத்திரிகை. சிங்களப் பேரினவாதிகளின் உளவியலையே அந்தப் பத்திரிகை எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். குறிப்பாக, தமிழகத்தின் மீதும் புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலும் எப்பொழுதும் அதற்குக் கடும் பயம். விடுதலைப் புலிகள் தொடர்பிலும் அது பல வகையான பயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். சிங்கள இனவாத ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதும் சிங்கள மக்களிடத்தில் சிங்கள இனவாதத்தை ஊட்டுவதும் அந்தப் பத்திரிகையின் முதன்மையான பணி. ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விடயங்களை எல்லாம் பயங்கரவாதம் என்கிற பெயரில் மாற்றி சித்தரிக்கும் நடவடிக்கையை அது எப்பொழுதும் செய்வதுண்டு.

அந்தப் பத்திரிகையில் பாதுகாப்புப் பத்தி என்ற பகுதி பெரும்பாலும் இலங்கைப் படைப்புலனாய்வாளர்களின் தகவல்களையும் உளவியலையும் கொண்டே எழுதப்படுகிறது அல்லது அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியவற்றை அந்தப் பத்தி எழுதுகிறது. குறித்த பத்தியை எழுதிவரும் கீரத்தி வர்ணகுலசூரிய என்பவர் அண்மையில் என்னைக் குறித்து அந்தப் பத்தியில் எழுதியிருக்கிறார். வன்னியைச் சேர்ந்த பத்திரிகையாளர் நான் என்று அறிவித்துக் கொண்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக அவர் எழுதியிருக்கிறார்.

திடீரென ஊடகத்துறைக்கு வந்துள்ளேன் என்றும், உண்மையில் நான் பத்திரிகையாளரா எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் எனது சகோதரர் விடுதலைப் புலிகள் அமைப்பினில் உயர் தரத்தில் இருந்து யுத்தத்தில் கொல்லப்பட்டவர் என்று எழுதப்பட்டுள்ளதுடன் நான் எவ்வாறு தப்பிச்சென்றேன் என்று அந்தப் பத்தியில் கீரத்தி வர்ணகுலசூரிய கேள்வி எழுப்பியிருக்கிறார்.இவ்வாறு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது என்பதை அதுல விதங்க என்ற சிங்களப் பத்தரிகையாளர் ஒருவரே எனக்குச் சொல்லியிருந்தார். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், அவதானமாக இருங்கள் என்று எனக்கு அதுல விதங்க எச்சரித்தார்.

நான் இந்தியாவுக்குக் கல்வி கற்பதற்காகவே சென்றிருந்தேன். எனது தாயகத்தை விட்டு எதற்காகத் தப்பிச் செல்ல வேண்டும். நாம் எமது தாயகத்திற்குப் போராடுவது குற்றம் இல்லையே. நான் ஒரு விடுலைப்புலி என்றும், ஊடகவியலாளர் என்ற போர்வையில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டேன் என்றும் காட்டுவதே ‘திவயின’வின் நோக்கம். நான் நாடு திரும்பமால் இருக்கவே தப்பிச்சென்றதாக எழுதப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்து கல்வி கற்றுவிட்டு எனது தாயகத்திற்குத் திரும்பியபொழுதே ‘திவயின’வில் அவ்வாறு எழுதப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கிலிருக்கும் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளாகவே பௌத்த சிங்கள இனவாதிகளின் கண்ணுக்குத் தெரிகின்றனர்.இனப்படுகொலையாளிகளின் பத்திரிகையான ’திவயின’ அதனொரு கொடூர ஆயுதமே.

000

இசைப்பிரியா விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றினார். அண்மையில் சானல்4 தொலைக்காட்சி இசைப்பிரியா தொடர்பான காணொளி ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டில் இசைப்பிரியா கொல்லப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சானல்4 தொலைக்காட்சி இம்முறை இசைப்பிரியா இராணுவத்திடம் உயிரோடிருப்பதைக் காட்டுகிறது. மனித மனங்களை உலுப்பும் விதமாக கொடியதொரு யுத்தகளத்தில் நிராதரவாகப் பிடிபட்ட ஒரு பெண்ணாக இசைப்பிரியா அந்தக் காட்சிகளில் தெரிகின்றார்.

isai-1
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றிய காலங்களில் இசைப்பிரியாவுடன் பழக நேர்ந்தது. தன்னை ஒரு ஊடகப்போராளியாகவே இசைப்பிரியா ஈழப் போராட்டத்தில் ஈடுபட்டார். இசைப்பிரியாவின் இருதயத்தில் ஒரு துவாரம் இருந்தது. அதனால் அவர் யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வில்லை.போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று இணைந்த இசைப்பிரியா ஊடகச் செயற்பாடுகளை மேற்கொள்ளவே அனுமதிக்கப்பட்டார். மென்மையும் துவாரம் கொண்ட இருதயத்தையும் கொண்ட ஒரு பெண்ணுக்கு அவரின் மனதுக்குகந்த கலையையும் ஊடகத் துறையையும் விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கியது.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் சிங்களப் படைகளிடம் சிக்கிய இசைப்பிரியா கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். மென்மையும் இருதயத்தில் துவாரமும் கொண்ட அவரால் அதையெல்லாம் எப்படித் தாங்கியிருக்க முடியும் என்பதை நம்முடைய இருதயங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பிரபாகரனின் மகள் என்று சொல்லப்பட்டே இசைப்பிரியாவை சிங்களப் படைகள் பிடிக்கின்றன. அது நான் இல்லை என்று அவள் நிராயுதக்குரலால் சொல்லுகிறாள். இசைப் பிரியா என்ற ஊடகப் போராளிக்கு நடந்த மிகப் பெரிய அநீதி என்பது ஈழத்து மக்களில் பலருக்கும் நடந்த அநீதி. அந்த அநீதிக ளுக்கு நீதி கோரும் குரல்தான் இசைப்பிரியாவினுடையது.

அது நானில்லை என்று அவள் சொல்லுகிறாள். ஆனாலும் அவர்கள் இசைப்பிரியாவைக் கொன்றார்கள். சிங்களப் படைகளுக்கு எப்பொழுதும் ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது. மக்களைக் கொல்லும்பொழுது அவர்கள் பயங்கரவாதிகள் எனப்பட்டார்கள். தமது படைகள் இசைப்பிரியாவைக் கொல்லவில்லை என்று சொல்லும் சிங்கள அரசு, அவர் புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவர் என்று சொல்லுகிறது. புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தால் எதுவும் செய்வோம் என்பதுவோ சிங்கள அரசின் நிலைப்பாடு. புலிகளாய் இருந்தால் இப்படிக் கொல்லலாம், தமிழர்களாய் இருந்தால் அவர்கள் புலிகள் எனக் கொல்லலாம் என்பதெல்லாம் சிங்கள அரசின் வாதம். குழந்தையைச் சுமந்திருந்த ஒருத்தியைப் புலியென கொடூரமாகக் கொன்றார்கள்.

இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கொல்லப்படுவதற்கு ஒரே ஒரு காரணமே இருக்கக்கூடும். அவர்கள் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாகப் பேசுகிறார்கள் என்பது மாத்திரமே. சிலநேரங்களில் தனி ஈழத்திற்கு ஆதரவளிக்காமல் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எழுதிய சில சிங்கள ஊடகவியலாளர்கள்கூட கொல்லப்படடிருக்கிறார்கள்.

000

பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு சானல்4 தொலைக்காட்சியைச் சேர்ந்த ஹாலும் மக்ரே உள்ளிட்ட சில ஊடகவியலாளர்கள் இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு வந்தார்கள்.இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்றும் அவற்றுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதுதான் எதிர்கால தமிழ் சந்ததிக்குத் தீர்வாக அமையும் என்று சொல்லிய&இலங்கை அரசாங்கத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய ஒரு ஊடகவியலாளர் இலங்கைக்கு வந்தார்.

Ch-4
சர்வதேச அளவில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதை சானல்4 ஊடகம் உரிய தருணங்களில் உரிய விதத்தில் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. சானல்4 ஊடகத்தை ராஜபக்சே புலிகளின் ஊடகம் என்று சொல்வதுபோல சிலர் மேற்குலகத்தின் அடிமை என்றும் சிலர் சொல்லுகின்றனர். ஆனால் சானல்4 வெளிப்படுத்தும் ஆதாரங்கள் வெளியாகும் இடமும் சூழலும் காலமும் முக்கியமானதாகவே தெரிகிறது.

இலங்கை வந்த ஹாலும் மக்ரேவுக்கு எதிராக கொழும்பு விமான நிலையத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்ட சிங்களவர்கள் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றும் அவர்களின் மனித உரிமை மீறல்களை சானல்4 சொல்லட்டும் என்றும் எமது தாய் நாட்டுக்கு எதிராகப் படம் வெளியிட்டவர்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

விமான நிலையம் என்பது கடும் பாதுகாப்புக் கொண்டது. உயர் பாதுகாப்பு வலயமான இந்தப் பகுதியில் விமானம் ஊடாகப் பயணிப்பவர்களும் அவர்களை அனுப்பச்செல்லும் கட்டணம் செலுத்தியவர்களும் மடடுமே அங்கு செல்ல முடியும். அப்படி இருக்கையில் ஆர்ப்பட்டக்காரர்கள் எப்படி உள்நுழைந்தனர்? ஒரு ஊடகவியலாளருக்கு எதிராக இத்தகைய போராட்டம் நடப்பது என்பது மிகவும் அதிசயமானது.

இன்னாரு கட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி ஹாலும் மக்ரேவே இந்தக் கேள்வியைத் தொடுக்கிறார். ஹாலும் மக்ரே உள்ளிட்டவர்கள் வடக்கிற்குச் செல்லுவதற்காக வடக்கு ரயில் சேவையில் வந்தபோது அனுராதபுரத்தில் வைத்து அவர்களுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அப்பொழுது சானல்4 என்பது புலிகளின் குரல் (channl4 – Voice of LTTE) என ஆர்ப்பாட்டக்காரர்கள் கத்தினார்கள். அங்கு வந்தவர்கள் எமது தாய்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என்றும் நாம் இங்கு ஐக்கியமாக வாழ்கிறோம் என்றும் சொன்னார்கள்.

ஹாலும் மக்ரேயிடம் எப்பொழுதும் தெளிவான கேள்விகள் இருந்தன. ‘நான் புலிகளிடம் பணம் வாங்குகிறேன் என்பதை உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா’ என்று விமான தளத்தில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களை நோக்கி கேட்டார். ‘நாங்கள் தங்கியிருக்கும் இடம் தொடர்பிலும் நாங்கள் வடக்கிற்குச் செல்வது தொடர்பிலும் இலங்கைப் படைபுலனாய்வுத்துறையினரே அறிவார்கள். அது உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று அவர் அனுராதபுர ஆர்ப்பாட்டக்காரர்களையும், அதனை அடக்க வந்த காவல்துறையினரையும் நோக்கி கேட்டபொழுது அவர்களிடம் பதில் இருக்கவில்லை.

ஹாலும் மக்ரேவுக்கு ராஜபக்சே கடுமையாக அஞ்சுகிறார். ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒரு ஊடகவியலாளர்மீது இத்தகைய பயம் கொள்ளுகிறார் என்பது அதிசயமானதுதான். ஆனால் அங்குதான் முக்கிய விடயங்கள் உள்ளன. தான் இழைத்த போர்க்குற்றங்களை வெளிக்காணர்வதில் ஹாலும் மக்ரே காடடும் ஆர்வம் ராஜபக்சேவை அஞ்சச் செய்கிறது. தான் இழைத்த குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் தன்னைக் குற்றவாளிக் கூண்டினில் ஏற்றுவதே சானல்4 தொலைக்காட்சியின் நோக்கம் என்றும் ராஜபக்சே நினைக்கின்றார்.

போர்க்குற்றங்கள் அம்பலமானால் நாடு பிரிந்துபோகும் என்று காட்டுவதன் மூலம் சிங்கள மக்களை அதற்கு எதிராகக் கொந்தளிக்கச் செய்து தான் தப்பித்துக்கொள்வதே ராஜபக்சேவின் நோக்கம். அதனாலேயே சானல்4 வுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டைப் பிரிக்காதே என்ற தொனியில் சிங்கள அரசே சிங்கள மக்களைக் கத்த தூண்டியது. ராஜபக்சே இப்பொழுது ஹாலும் மக்ரே பற்றியே பேசத் தொடங்கிவிட்டார். அவரது மனத்தில் ஹாலும் மக்ரே குறித்து பெரும் பயம் உருவாகிவிட்டது. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நாட்டைப் பிரிக்க நினைக்கின்றனர் என்று அச்சத்தில் பிதற்றுகிறார். இதனையே அரச பத்திரிகை தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தது. உலகத்தில் போர்க்கொலைக்காகவும் இனப்படுகொலைக்காகவும் நன்கு அறியப்பட்ட அதிபர் ஒருவர் ஊடகவியலாளருக்கு அஞ்சுகிறார் என்பது அதிசயமானது. ஆனால் ராஜபக்சேவின் இந்த அச்சம்தான் ஊடகத்தின் சக்தியைக் காட்டுகிறது.

பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு அதன் செயலாளர் கமலேஷ் சர்மாவும் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கலந்துகொண்ட ஒரு ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் நடந்தது. வழமைபோல இலங்கையில் நடந்த மாபெரும் இன அழிப்புப் போரில் தான் வெற்றி பெற்றதையே தனது தலைமையுரையாகப் பேசுவது ராஜபக்சே வழக்கம். எதிர்பாராமல் ராஜபக்சேவை நோக்கி வெளிநாடடு ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். ‘மாநாடடுக்கு வரும் இளவரசர் சார்லஸிடம் கைகொடுக்கும்போது நீங்கள் இலங்கையில் மிகப் பெரும் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதற்கான பதிவுகள் உள்ளதை ஒப்புக்கொள்வீர்களா?’ என்று கேட்டார்.

‘இளவரசர் வந்தாலும் சரி, பிச்சைக்காரன் வந்தாலும் சரி… ஆய்போவன் (சிங்களத்தில் வணக்கம்) என்று சொல்லியே வரவேற்பேன். இலங்கை வரும் யாரையும் அவ்வாறு வரவேற்பதுதான் எங்கள் வழக்கம்’ என்றார் ராஜபக்சே. முப்பது வருடங்களாக நடக்கும் படுகொலையை நாங்கள்தான் முடிவுக்குக் கொண்டுவந்தோம் என்றார் ராஜபக்சே. 2009 மே வரை பாதிக்கப்பட்ட மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்று மறுபடியும் அந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். ராஜபக்சே கொந்தளிக்கத் தொடங்கியிருந்தார். வெறியோடு அந்த ஊடகவியலாளர்களை நோக்கி மழுப்பும் பதில்களை அளிக்கத் தொடங்கியபோது அவரது குற்றத்தின் அச்சம் முகத்தில் வெளிப்பட்டது.

அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஹாலும் மக்ரே உள்ளிட்ட சானல்4 செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்களுடைய கேள்விகளால் ராஜபக்சே நிலை குலைந்திருப்பார். அந்தக் கேள்விகளுக்கு அஞ்சியே ஊடக மாநாட்டுக்கான அனுமதியை ராஜபக்சே மறுத்திருந்தார். ராஜபக்சே பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தபோது சானல்4 செய்தியாளர்களில் ஒருவரான ஜொனாதன் மில்லர்“திரு மகிந்த ராஜபக்சே! நாம் உங்களைச் சந்திக்கலாமா?” என்று அவர் குறிப்பிட்டபோது, “ஏன் சந்திக்க முடியாது. நாம் ஒரு கோப்பை தேனீர் அருந்துவோம்” என்று ராஜபக்சே பதில் அளித்தார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் போர்க்குற்றங்கள் தொடர்பில் பேச வேண்டும் என்று சானல்4 ஊடகவியலாளர்கள் விரும்பினார்கள். சானல்4 செய்தியாளர்களை சந்திக்க மறுத்த ராஜபக்சே, சானல்4 செய்தியாளர்கள் தன்னை எப்படி நெருங்கி வந்து பேசினார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தும்படி அவர்கள் கோர, அவர்கள் எப்படி தன்னை நெருங்கினார்கள் என்று ராஜபக்சே விசாரணை நடத்துகிறார்.

000

ஜொனாதன் மில்லர் பிரித்தானியா சென்ற பிறகு இலங்கைச் செய்தியாளர்களுக்குத் திறந்த கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இலங்கையில் தான் சந்தித்த ஊடகச் சூழலை அவர் தனது கடிதம் எங்கும் எழுதியிருந்தார். “உங்களின் இனிய அதிபரோடு செய்தியாளர் மாநாட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தியாளர்களின் பட்டியல்களிலிருந்து நாங்கள் நீக்கப்பட்டபோது, எங்களுக்கு ஏற்பட்ட அருவருப்பையும் அறச்சீற்றத்தையும் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்” என்று எழுதினார். ஒரு கோப்பை தேநீர் தருவதாக ராஜபக்சே வாக்களித்தபோதும் அதைத் தரவில்லை என்று மில்லர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைப் பத்திரிகையாளர்கள் எவ்வளவு இக்கட்டான நிலையில் தமது வேலையைச் செய்கிறார்கள் என்றும் எப்படியான தந்திரங்களைக் கையாள்கிறார்கள் என்றும் ஜொனாதன் மில்லர் எழுதியிருந்தார். தங்களுக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள், சிங்கள இராணுவப் புலனாய்வாளர்கள் கொடுத்த தொல்லைகள், அரசு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்கள், வடக்கிற்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

“மகிந்த ராஜபக்சே கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் உள்ளிட்ட பொதுநலவாய மதிப்பீடுகளில் கடப்பாடுடையவராகத் தன்னைக் காட்டியிருக்கிறார். உணர்ச்சியற்ற முகத்தோடு எப்படி இதை அவர் செய்தார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களில் சில பத்திரிகையாசிரியர்கள் கட்டப்பட்ட ஆடுகளைப் போலிருக்கிறீர்கள். உங்கள் அரசின் தொலைக்காட்சி பியொங்யாங்கை (கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு அல்லது வடகொரியாவின் தலைநகரம்) நோக்கி நகர்ந்தபடியிருக்கிறது.உங்களில் குறைந்தபட்சம் ஒன்பது பேராவது கடந்த பத்து வருடங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அறிகிறேன்.முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் சாவைப்போல என்னைச் சில்லிடவைத்தது எதுவுமேயில்லை. கடத்தப்பட்ட கணவர் பிரகீத் எக்னெலிகோடா குறித்து அவர் மனைவி இன்னும் விசாரித்துக்கொண்டே இருக்கிறார் எனக் கேள்விப்படும்போது நான் வலியில் சுருங்கிப்போகிறேன். எக்னெலிகோடாவின் தடயமென்று எதுவுமில்லை என்று நீங்கள் கேள்விப்பட்டதை நானும் கேள்விப்பட்டேன்.”

ஹாலும் மக்ரே மற்றும் ஜொனாதன் மில்லருக்கு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு, இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் நிராயுதக் குரல். ஈழமண்ணில் நடந்த எண்ணற்ற கொடூரங்களில் உங்கள் கைகளில் சிக்கியவை ஒரு சிலதே. அவைதான் எணணற்ற கொடூரங்களின் மறைக்கப்பட்டவற்றிலிருந்து வெளிக்கசிந்த சாட்சிகள். நாம் இனியும் இரத்தம் சிந்த முடியாது. இனியும் உயிர்களை இழக்க முடியாது. எங்களுக்கான நீதி என்பது எங்கள் குழந்தைகளுக்கு ஆக்கிரமிப்பும் வன்முறையும் இல்லாத உலகத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். அதற்காக நேர்மையான ஊடகவியலாளர்களாக இயங்கும் உங்களைப் பாராட்டுகிறோம். நீங்கள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்தபோது உங்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புக்கள் கிடைத்தபொழுதும் நான் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டேன். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையை நீங்கள் நன்குஅறிவீர்கள்.ஜொனாதன் மில்லர் குறிப்பிட்டதைப்போல நாங்கள் கட்டப்பட்ட ஆடுகளைப்போலவே இருக்கிறோம்.

தீபச்செல்வன்

நன்றி: உயிர்மை