கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை விளங்க முற்படுவோம் – பரணி கிருஸ்ணரஜனி

0
689

01. சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும் : சாணக்கியர்

02. தகுதியுள்ளவை உயிர்வாழும் : டார்வின்

03. தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும் : சிக்மன்ட் ப்ராய்ட்

இதை புரியாததன் விளைவுதான் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இனஅழிப்புக்குள் சிக்கி நாம் இரையாகவேண்டியுள்ளது. எனவே அபிவிருத்தி, நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை என்ற நுண்மையான இன அழிப்பு மாய வலைகளை அறுத்தெறிந்துவிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். சுயநிர்ணய உரிமை ஒன்றே இன அழிப்பில் இருந்து எம்மை முழுமையாக பாதுகாக்கும் என்பதை புரிந்து கொள்வோம்.

parani
இந்த தொடர் பத்திகள் மிக எளிமையாக சிக்கலற்ற மொழி நடையில் மக்களுக்கு புரியும் வண்ணம் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு குறித்து பேச விழைகிறது. ஏனென்றால் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் இனஅழிப்பு குறித்து பாதிக்கப்பட்ட மக்கள்தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பத்தியில் இரண்டு நுண்மையான இனஅழிப்பு அம்சம் குறித்து விளக்குகிறோம்.

01. இனஅழிப்பிற்காக களமிறக்கப்படும் யானைகள்.

கடந்த மே மாதம் அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவத்தையும் தென்தமிழீழ எல்லையோர கிராமங்களில் யானைகளின் நடமாட்டத்தையும் நாம் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பின் வரையறைக்குள் குறிப்பிட்டதை பலர் வேடிக்கையாக பார்த்தார்கள். எல்லாவற்றிற்கும் சிறீலங்கா அரசை குற்றம் சுமத்தும் போக்கு என்று கண்டித்தும் எழுதினார்கள்.

ஆனால் நாம் தமிழ்அரசியல்வாதிகளுக்கும் சில ஊடக நண்பர்களுக்கும் இது குறித்து விரிவாக விளக்கினோம். அனால் அதை பெரிதாக யாரும் கணக்கெடுக்கவில்லை. கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பது வெளியாக தெரியாது. நுட்பமாக அது நடைபெறும். நாம்தான் வேறு பிரித்து அதை அறிந்து மக்கள் அதை எதிர்கொள்ளத் தயார்படுத்த வேண்டும்.

புதிதாக ஒரு மரத்தை புடுங்குவதோ, புதிதாக ஒரு குழிதோண்டுவதோ, ஒருத்தர் நோய்வாய்படுவதோ, ஒரு வீதி விபத்தோ அதை நுட்பமாக ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அதன் இன அழிப்பு பின்புலம் தெரியும். சிறீலங்கா அரசு மிக வேகமாக அதை செய்துவருகிறது.

ஆனால் நமது அரசியல்வாதிகள் நடந்ததும் இன அழிப்பு இல்லை நடப்பதும் இனஅழிப்பு இல்லை என்று இன அழிப்பு அரசிற்கு நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் ஓரளவு விழிப்படைந்து காணப்படுகிறார்கள்.. ஏதோ சதிபோல் தெரிகிறதே என்று மக்கள் இந்த யானைகள் விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பிடம் முறையிட்டபோதும் அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை.

mannar-87
தற்போதுதான் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் இது இனஅழிப்பின் ஒரு பகுதியாக இருக்குமோ என்று அதுவும் அரைகுறை சந்தேகத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒருத்தர் யானை தாக்கி சாவது எப்படி இன அழிப்பாக இருக்க முடியும்?

விளக்கம் இதுதான். யானைகள் அதிகம் நடமாட்டமில்லாத இடத்தில் எப்படி திடீரென்று யானைகள் வர முடியும்? வேறு ஒரு பகுதியிலிருந்து கொண்டுவந்து விடப்பட்டது என்பதே உண்மை. குறிப்பாக தமிழீழ எல்லையோரக்கிராமங்களில் இது நடக்கிறது. இதன் விளைவாக மக்கள் அங்கிருந்து வெளியேறவோ அல்லது அங்கு தமது விவசாய நிலங்களையோ கைவிட நேரிடும். இதை பயன்படுத்தி அந்த நிலங்களை அரசுக்கு சொந்தமான காட்டு இலாக்காவிற்குள் கொண்டுவரும் முயற்சி இது.

அல்லது யானைகளை விரட்ட – மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தல் என்ற பேரில் படைமுகாம்களை நிறுவுவார்கள். குறிப்பிட்ட காலத்தில் அது நிரந்தரமாகவே பறிபோகும். சிங்கள குடியேற்றங்களை செய்ய சிங்களம் கையாண்டிருக்கும் புதிய இன அழிப்பு உத்தி இது.

நிலத்தையும் பறிகொடுத்து தமது வாழ்வாதாரங்களையும் இழந்து வெளியேறும் மக்கள் புதிதாக இன்னொரு தமிழர் பகுதிக்குள் குடியேறுவதால் நிகழும் வாழ்வியல் பொருண்மிய மாற்றங்கள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தொடர்ந்து அந்த சமூகத்தில் பிரதிபலித்துக்கொண்டேயிருக்கும்.

“போர் முடிந்து விட்டதால் யானைகள் கிராமங்களுக்குள் வருகின்றன ” என்று கிழக்கு மாகாணசபை அமைச்சர் ஒருவர் அண்மையில் இதற்கு ஒரு காரணம் கூறியிருந்தார். “யானைகள் எப்படி தமிழர்கள் இருக்கும் எல்லையோரப் பகுதியை நோக்கி மட்டும் வருகின்றன?” என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல தயார் இல்லை..

தற்போது வன்னி எல்லையோரக்கிராமங்களிலும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுவதன் பின்னணியும் இந்த இன அழிப்பு உத்திதான்..

எல்லையோர கிராமங்களை நாம் இழப்பது வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயக தேசிய கோட்பாட்டையே சிதைத்துவிடும் பேராபத்து நிறைந்தது.

02. இறப்பர் பயிர்செய்கையும் இனஅழிப்பும்.

வடக்கில் பனை மரங்களுக்கு பதிலாக இறப்பர் செய்கை ஊக்குவிக்கப்படவுள்ளது. இதற்கென முதற்கட்டமாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் 600 ஏக்கர் நிலத்தில் பயிர்செய்யப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த செய்தி கிடைத்த நேரத்திலிருந்து நாங்கள் மே 18 அன்றிருந்த மனநிலைக்கு போய்விட்டோம். இன அழிப்பின் அதி உச்ச கட்டம் இது. இன்னும் 10000 சனத்தை கொலை செய்திருந்தால் கூட இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டோம். இது எப்படி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பதை மிக சுருக்கமாக விளக்குகிறோம்.

01. பனைக்கு பதிலாக இறப்பர் என்பதே அடிப்படையில் தமிழுக்கு எதிராக சிங்களம் என்பதற்கான குறியீட்டு நிலை அது. பனை என்பது பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வியல் ஆதாரமாக இருக்கிறதென்பதற்கப்பால் தமிழர்களின் பண்பாட்டு அடையாள வடிவமும் கூட. தமிழர்களின் பாரம்பரியமும் தொன்மமும் தொடர்ந்து பேணப்படும் ஒரு மரபியல் வடிவம் இது. தமிழர்களை குறியீட்டுரீதியாக சிதைக்கும் ஒரு இன அழிப்பு வடிவம் என்பதுடன் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நீண்ட கால நோக்கில் வாழ்வியல்ரீதியாக முடக்கும் முயற்சி இது.

02. ஏற்கனவே ஒரு பயிர்ச்செய்கை செய்து கொண்டிருக்கும் தமிழர்களின் நிலத்தை இறப்பர் பயிரிடுகிறோம் என்ற போர்வையில் நிலப்பறிப்பு செய்து ஆக்கிரமிப்பதுடன் அவர்களது நிலமும் பறிபோய் அவர்களது வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் முயற்சி இது.

03. இறப்பர் பயிர் செய்கை தொடர்பாக தமிழர்களுக்கு போதிய பயிற்சியில்லை. எனவே இதையே ஒரு காரணமாக்கி சிங்களவர்களை புதிதாக தமிழர் நிலத்தில் குடியேற்றும் நுண்ணிய இன அழிப்பு முயற்சி இது.

04. இவை எல்லாவற்றையும் விட தமிழர் வாழ்நிலத்தை – சிறுபயிர் விளை நிலத்தை ( இந்த இரண்டும் இணைந்துதான் தமிழ் விவசாயியின் வாழ்வுள்ளது) இறப்பர் பயிர் செய்கைக்குட்படுத்துவதால் அவர்கள் இடம்பெயரவோ அல்லது புலம் பெயரவோ நேரிடும். இதைத்தான் சிங்களம் எதிர்பார்த்து இதை செய்கிறது.

இப்படி நிறைய எழுதலாம்.

தமிழர்களின் தொன்மத்தை,மரபை, பண்பாட்டை சிதைக்கும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும், நிலப்பறிப்புக்கு, சிங்கள குடியேற்றத்திற்கு வழிகோலும் இந்த முயற்சி சிங்களத்தின் அப்பட்டமான இன அழிப்பு நோக்கத்தை கொண்டது.

மே 18 அன்று கூட உணராத தோல்வியை இந்த செய்தியின் பின் நாம் உணரநேரிட்டது. எனவே தாயகத்தில் காது குத்திலிருந்து கருமாதி வரை இனஅழிபபு அரசின் நுண்மையான பின்னணிகள் இருக்கின்றன. எனவே நாம் விழிப்படைவோம்.

அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் நம்பிக்கொண்டிருக்காமல் மக்கள் சுயமாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். உங்களை சுற்றி நடக்கும் ஒவ்வொரு அசைவையும் நுட்பமாக வேறுபிரித்து அறிந்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு எதிர்வினையாற்ற வேண்டும். மிகவும் கடினமான செயல்தான். ஆனால் வேறு வழி இல்லை.

விழிப்படைவோம். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுப்போம்..

பரணி கிருஸ்ணரஜனி

(கட்டுரையாளர் பல்கலைக்கழக மட்டத்தில் போருக்கு பின்னான பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்தும் இன அழிப்பு குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்)
ஈழம்ஈநியூஸ்.