கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுப்போம்: பரணி கிருஸ்ணரஜனி

0
653

idp098முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.

பெரியளவில் கவனத்தை பெறாத அந்த ஆய்வை முன்வைத்து தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான ஒரு தொடக்கமாக இந்த பத்தி எழுதப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஒரு ஈழத்தமிழ் உயிரியை தனிமனித உயிரியாகவும் சமுகமாகவும் இருவேறு தளங்களில் பாதித்திருக்கிறது. இந்தப் பாதிப்பு வெளிப்படையாக அரசியல்சார்ந்தது போல் தோற்றமளித்தாலும் உண்மை அதுவல்ல. அது சமுக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் என்று பன்மைத்தன்மையைக் கொண்டது. தனியாகவும் சமூகமாகவும் எவ்வாறு இந்த பாதிப்பின் தொடர்ச்சி இருக்கின்றது என்பது நீண்ட ஆய்வுக்குரியது.

இந்த பாதிப்புக்களை தனித்தனியாக நாம் கண்டறிவதும் அதிலிருந்து உடனடியாக மீள்வதுமே எமது உடனடித் தேவையாக இருக்கிறது. அரசியல் ரீதியாக எம்மைத் திடப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் மேற்படி சிக்கல்களிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். எமது அரசியலின் அடிப்படை இதுதான் என்பதே இதன் மறுவளமான உண்மை.

நாம் முன்பே குறிப்பிட்டது போல் முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் இராணுவ – அரசியல் ரீதியாக மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. எமது நிலம், இனம், மொழி சார்ந்து சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது.

இது சாதாரணமானதல்ல. இந்த பேரவலத்தை எதிர் கொண்டு எஞ்சியிருக்கும் நாம் இதன் விளைவை குறைந்தது மூன்று தலைமுறைக்காவது அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று எமது ஆய்வின் முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இந்த அடிப்படையில்தான் பூமிப் பந்தின் எந்த மூலையில் இருந்தாலும் அரசியலுக்கும் அப்பால் சாதாரண மனிதர்களாக எமது மீதி வாழ்வை கழிப்பதற்கே அல்லற்பட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

ஒரு சமூகத்தை நிலம், இனம், மொழி என்பவற்றை மையப்படுத்தி அதன் சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்களை அழிப்பதென்பது தான் அந்த இனத்தைப் பொறுத்த வரையில் அதன் அரசியல் அழிப்பு என்பதாகவிருக்கிறது.

எனவே நாம் எமது அடுத்த கட்ட அரசியல் என்னவென்பது குறித்து குடுமிச் சண்டை போடுவதை நிறுத்தி எமது சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்களை மீண்டும் கண்டடைவதும் அதை மீளொழுங்கு செய்வதிலும்தான் எமது அரசியல் அடையாளம் இருக்கின்றது.

இந்த அடிப்படையில்தான் அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் பண்பாட்டிற்குமிடையிலான உறவுகளை – தொடர்புகளை மையப்படுத்தி (Global transformations: politics, economics and culture) எமது ஆய்வை முன்வைத்தோம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியலை இன்றைய உலக ஒழுங்கின் அடிப்படையில் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் முன்வைத்து நாம் செய்த ஆய்வின் முடிவு அதிர்ச்சியூட்டக் கூடியவை மட்டுமல்ல அவை ஒரு ஊழிக்காலத்தையும் நினைவுபடுத்துகின்றன.

அவற்றை இங்கு முழுமையாக முன்வைக்காவிட்டாலும் அதன் விளைவின் ஒரு சிறு பகுதியை மையப்படுத்தி இன்றைய கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நாம் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்று சிந்திப்போம்.

பொருளாதாரம் (Economics)  என்பது ஒற்றைத் தத்துவம் கிடையாது. அது பல கூறுகளை உள்ளடக்குவதனூடாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நிதி – பணம் (Finance) இருக்கிறது. இந்த சிறு அலகை முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் சந்திக்கும் சவால்களையும் பாதிப்புக்களையும் இன அழிப்பை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தடுமாறுகிறோம் என்பதையும் கூறலாம் என நினைக்கிறோம்.

நாம் ஏறத்தாழ 25 வருடங்களாக “தமிழீழம்” என்ற ஒரு நிழல் அரசின் குடிமக்களாக இருந்தோம். இந்த நிழல் அரசின் ஆட்சியாளர்களான விடுதலைப் புலிகளை எதிர்த்தவர்கள் கூட விரும்பியோ விரும்பாமலோ இந்த அரசின் பங்காளிகளாகவே இருந்தார்கள்.

ஒரு அரசிற்குரிய (நிதி, நீதி, நிர்வாகம், காவல்துறை, இராணுவம் இன்ன பிற..) அனைத்து கட்டமைப்புக்களும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை செயற்பட்டுக் கொண்டேயிருந்தன. இந்த நிழல் அரசின் அடிப்படையில் தான் புலத்தில் கூட தமிழர்களின் வாழ்வும் கட்டமைக்கப்பட்டிருந்தது.

இங்கு புலத்தில் புலிகளை எதிர்த்தவர்கள் கூட ஏதோ ஒரு வகையில் விரும்பியோ விரும்பாமலோ இந்த கட்டமைப்புக்குள் சிக்கியவர்களாகவே இருந்தார்கள். எனவே எமது பொருளாதாரம் சார்ந்த வாழ்வும் உழைப்பும் நிதி சேகரிப்பும் பங்கீடும் கடந்த மூன்று தசாப்தங்களாக சிறீலங்கா என்ற அரசாங்கத்தை மையப்படுத்தி இருக்கவில்லை. அதிலிருந்து விலத்தியே இதுவரை காலமும் இருந்து வந்தது. புலிகளே இதன் மையமாக இருந்தார்கள்.

அங்கீகரிக்கப்படாத ஒரு தேசம் என்ற வகையில் உலக சட்ட ஒழுங்குகளுக்குள் – வரையறைக்குள் உட்பட்டும் உட்படாமலும் இந்த பிணைப்பும் தொடர்பும் இருந்தது.

சில பேருக்கு உண்மை இன்னும் உறைக்கவில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் மூலம் ஒரு நாட்டிற்குரிய கட்டமைப்பு நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு அங்கீகாரத்துடன் இயங்கவில்லை என்பதைத் தவிர மற்றபடி அது ஒரு தனித் தேசம். நாம் அந்த தேசத்தை அடையாளப்படுத்தும் குடிமக்கள்.

புலிகள் பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினார்கள், பணயக்கைதியாக தடுத்து வைத்திருந்தார்கள் என்ற கோசங்களையெல்லாம் ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டு பார்த்தாலும் கூட நாம் அத்தகைய ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரு மக்கள் சமூகம்.

எனவே எமது வாழ்வு அந்த தேச வரையறைக்குள் தான் கட்டமைக்கப்பட்டிருந்ததேயொழிய சிறீலங்கா என்ற தேசத்திற்குரிய எந்த வரையறையையும் கொண்டிருக்கவில்லை.

எமது இனப் பிரச்சினையின் அடித்தளமே இதுதான். இது குறித்து பின்பு பேசுவோம். திடீரென்று ஒரு தேசத்தின் நாட்டிற்குரிய கட்டமைப்பு நிர்மூலமாக்கப்படும் போது அந்த நாட்டு குடிமக்கள் என்ன செய்வார்கள்? பதில் குழப்பமானது. இன்று நாம் அதைத்தான் சந்திக்கிறோம்.

பொருளாதாரத்தின் ஒரு கூறான நிதிவளம் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே அதை மட்டும் பேசுவோம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அடுத்து ஒவ்வொரு ஈழத்தமிழனும் பெரும் கடன்காரனாக்கப் பட்டிருக்கிறான். இன்று நாம் உணராமல் இருக்கும் பெரும் உண்மை இது. வெகு சீக்கிரத்தில் அதை ஒவ்வொரு ஈழத்தமிழனும் உணர வேண்டியிருக்கும்.

பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீடு என்பது பொருளாதாரத்தின் மிக முக்கியமான அம்சம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு பிறகு இச் சுழற்சி ஈழத்தமிழர்களிறகிடையே தடைப்பட்டிருக்கிறது.

இதை வெளியாக உணரமுடியாது. ஆனால் உடனடியாக உணரப்பட வேண்டியதும் மிக முக்கியமானதுமான அம்சம் இது.

நாம் வன்னிப் போரிலிருந்து பார்க்காமல் புரிந்துணர்வு உடன்படிக்கை முறிவடைந்து போர் தொடங்குவதற்கு முன்புவரை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வடக்கு கிழக்கு நிலப்பரப்பு மீதான புலிகளின் நிர்வாக ஆளுமை எல்லைகளை கவனத்தில் கொண்டே மேற்படி அம்சத்தை ஆராய வேண்டும்.

அவ்வளவு நிலப்பரப்பு மீதும் புலிகள் செலுத்திய ஆளுகைக்குட்பட்டே தாயக மக்களும் சரி புலத்து மக்களும் சரி தமது பொருளாதாரத்தை பேணினார்கள். புலிகள் நிலங்களை இழக்கத் தொடங்க மறுவளமாக நாம் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கிறோம் என்பதை அப்போது யாருமே உணரவில்லை. இப்போதுகூட அது உணரப்பட்டது மாதிரி தெரியவில்லை.

புலிகளின் நில இழப்பு முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்தவுடன் நாம் பொருளாதார ரீதியாக முழுவதுமாக முடக்கப்பட்டு விட்டோம்.

ஒரு அரசிற்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீடு இல்லாது போய்விட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் வாழும் நாடுகளை மனதில் நிறுத்தி கற்பனை செய்து பாருங்கள், விபரீதம் புரியும். எமக்கு நடந்திருப்பது இதுதான்.

புலிகள் – புலிகளின் நிழல் அரசு – தாயக மக்கள் – புலம் பெயர் மக்கள் என்ற இந்த வலைப் பின்னல் போராட்ட ஆதரவு சார்ந்தும் குடும்ப உறவுகள் சார்ந்தும் ஒரு பொருளாதார – பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீட்டை கொண்டிருந்தது. தற்போது அது தகர்ந்திருக்கிறது.

தாயகத்தில் பெரும் போரை முன்னெடுத்து எமது அசையா சொத்துக்களை நிர்மூலம் செய்துவிட்டது சிங்கள அரசு. புலிகளின் சொத்துக்கள் என்ற போர்வையில் மக்களின் அசையும் சொத்துக்களை சிங்கள அரசு கபளீகரம் செய்யத் தொடங்கிவிட்டது. போதாதற்கு அதே பாணியில் புலத்தில் இருக்கும் மக்களின் சொத்துக்களை குறிவைக்கவும் தொடங்கிவிட்டது. இது ஒரு பக்கப் பிரச்சினை.

மறுபக்கம் மக்கள் பெரும் போருக்கு முகம் கொடுத்து அழிவைச் சந்திதித்து முட்கம்பிக்குள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதால் தமது தொழிலையும் அதற்கான எத்தனங்களையும் இழந்து விட்டார்கள்.

இவர்களை யார் பராமரிப்பது? போரில் தொழில் புரியக்கூடிய உடல்வலுவுள்ளவர்களை பல குடும்பங்கள் இழந்திருப்பதால் நிரந்தரமாகவே யாரிலும் தங்கியிருக்க வேண்டிய நிலையில் பலர் இருக்கிறார்கள். இவர்களை யார் பராமரிப்பது? புலிகளின் நிர்வாகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பணி புரிந்து மாத வருவாயை ஈட்டிக்கொண்டிருந்தார்கள்.

இனி இவர்களின் நிலையும் வேலைவாய்ப்பும் எத்தகையது? 15,000 போராளிகள் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. விடுதலைப் போரில் ஈடுபட்டதால் தமது கல்வியை, தொழில் வாய்ப்புக்களை இழந்தவர்கள் இவர்கள். இவர்களின் எதிர்காலமும் வேலைவாய்ப்பும் எத்தகையது?

இப்படி எண்ணற்ற கேள்விகள் அரசியலுக்கும் அப்பால் எமது நிதிப்பலத்துடன் தொடர்புபட்டது. ஆனால் இவற்றை ஈடுசெய்யக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோமா? பதில் கசப்பானது. புலிகளின் ஆட்சியை மையப்படுத்திய எமது பணப்புழக்கம் அல்லது பணப் பங்கீடு முடிவுக்கு வந்திருக்கும் தருணத்தில் மேற்படி கேள்விகளின் யதார்த்தம் எம்மைப் பேயாய் அறைகிறது.

இந்த யதார்த்தத்தின் அடிப்படையில்தான் இன்னொரு போர் குறித்தோ அல்லது ஈழத்தமிழர்களுக்கான புதிய அரசியல் கட்டமைப்பு குறித்தோ பேச பலர் தயங்குகிறார்கள். இந்தத் தயக்கத்தையே ஈழத்தமிழர்களின் நிரந்தரத் தோல்வியாகவும் அடிபணிவு அரசியலாகவும் கட்டமைக்க வேறு சிலர் முற்படுகிறார்கள். இதுவே இன்றைய ஈழ அரசியலின் யதார்த்தம்.

போரில் பாதிக்கப்பட்ட மக்களின் – போராளிகளின் மேற்படி தேவைகளை நிறைவுசெய்யக்கூடிய நிலையில் புலம்பெயர் தமிழர்களும் இல்லை என்பதும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் புலம்பெயர் தமிழர்களைப் பொருளாதார ரீதியில் முடக்கியிருக்கிறது என்பதும் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

புலிகளின் போராட்டத்தின் – நிழல் அரசின் பொருளாதார மையமாக செயற்பட்டவர்கள் புலம்பெயர் தமிழர்கள். இதை ஒரு மையத்தில் குவித்து வைத்து விளக்கம் செய்ய முடியாது. பல கோணத்தில் பல கட்டங்களாக பல பரிமாணமங்களில் விளக்கம் செய்யப்பட வேண்டியது இது.

ஒரு நாட்டிற்குரிய அன்னிய செலாவணி, தனிநபர் வருமானம், பொருளாதார சுட்டெண் என்று இன்ன பிற பொருண்மிய சொல்லாடல்களினூடாக இதை தெளிவாக விளக்கம் செய்யலாம். ஆனால் சாதாரண மக்களுக்கு இதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய பிரச்சினையை மக்களின் மொழியிலேயே விளக்கம் செய்வதுதான் பொருத்தமானது. அவர்களின் வசதிக்காகச் சிலவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறோம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு சிறீலங்காவில் மட்டுமல்ல அனைத்துலக மட்டத்திலும் புலிகள் குறித்துப் பேசுவதும் அவர்களுடனான தொடர்பைப் பகிரங்கப்படுத்துவதும் ஆபத்தான போக்காக அறியப்படுகிறது.

இப்புற யதார்த்தத்தில் புலிகளை மையப்படுத்திய நிதிப்புழக்கம் குறித்து பேசுவது பல சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களை கொண்டு போய்ச் சேர்க்கும்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தடை செய்யப்பட்ட சொத்துக்கள் உட்பட தாயகத்தில் மக்களின் செயற்பாட்டிற்கென – போராட்டத்திற்கென அனுப்பப்பட்ட புலம் பெயர் மக்களின் எந்த நிதியும் மீள்சுழற்சிக்குட்படாதவையாக திரும்ப முடியாத இடத்திற்கு சென்று விட்டன.

தனிப்பட்ட தேவைகளுக்காக – தொழில் சார் உதவிகளுக்காக என்று தமது குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கு நணபர்களுக்கு என்று புலம் பெயர் உறவுகளினால் அனுபப்பட்ட நிதிமூலங்களும் கடந்த போரில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன.

போதாதற்கு தற்போது போரில் பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கு நணபர்களுக்கு உதவி செய்வதற்காக பெரும் தொகை பணத்தை தினமும் செலவழித்தபடி இருக்கிறார்கள். ( முகாமிலிருந்து வெளியேறுவதற்கு, எந்தவித தொழில்வாய்ப்பும் இல்லாத – வருமானம் இல்லாதவர்களின் அன்றாட தேவைகளுக்காக, மருத்துவ தேவைகளுக்கு, முகாமிலிருந்து வெளியேறியர்களை வேறு ஒரு நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு என்று அதன் செலவுப் பட்டியல் நீளம்)

இனித்தான் முக்கியமான விடயத்திற்கு வரப்போகிறோம். முன்பு ஒருவருக்கு மேற்படி செலவுகளிற்கு நிதி உதவி தேவைப்படும்போது வேறு ஒரு ஈழத்தமிழர் ஏதேனும் ஒரு அடிப்படையில் அந்த உதவியைச் செய்யக்கூடிய நிலை இருந்தது. தற்போது அது இல்லை. ஏனெனில் இது ஒரு கூட்டுப்பிரச்சினை. ஏனெனில் ஒட்டுமொத்த இனமுமே ஏதோ ஒரு விதத்தில் மேற்படி சிக்கலிற்குள் சிக்கித் தவிக்கிறது.

இதன் அடிப்படையில்தான் ஈழத்தமிழர்களிடையே பணப்புழக்கமும் பணப்பங்கீடும் அறவே இல்லாமல் போய்விட்டது. வருமானம் இல்லாத ஒரு செயற்பாட்டிற்கு – அதுவும் எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கணக்கு தெரியாமல் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ச்சியாக வழங்க முடியாது.

ஏற்கனவே பணப்புழக்கமும் பணப்பங்கீடும் இல்லாத ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களால் இது எப்படி முடியும்? முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஏற்படுத்தியிருக்கிற சமூகத்தாக்கம் இது.

இந்த அடிப்படையில்தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வழி ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இந்தப் புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற தகவல்களை முன்பு சுட்டியிருந்தோம்.

இதில் என்ன அவலம் என்றால் இப்படியொரு சமூக பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொண்டுள்ள காலப்பகுதியில்தான் இந்த உலகமும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கத்தவிக்கிறது. “பனையிலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிச்ச” கதை இது. எனவே வெளியிலிருந்தும் போதியளவு நிதியை பெற முடியாத நெருக்கடி.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் இராணுவ அரசியல் பரிமாணங்களை விளக்குவது எமது முதன்மையான நோக்கமல்ல. அது எமது வேலையும் அல்ல. எனெனில் நாம் அரசியல் ஆய்வாளர்களோஇ படைத்துறை வல்லுனர்களோ கிடையாது. உளவியலாளர்களாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின்னணயில் ஒரு இனத்தின் சமூகஇ பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் சிதைவுகளையும் அழித்தொழிப்பையும் கண்டடைந்திருக்கிறோம்.

இந்த அடிப்படையில்தான் இதை காலங்கடந்தாவது இதன் விளைவுக்குள் முழுமையாக சிக்குமுன் முன்கூட்டியே உணர்த்த விரும்புகிறோம். ஒரு இனம் மேற்படி சிதைவுகளிலிருந்து – அழிவுகளிலிருந்து தன்னை மீட்டெடுக்காமல் அது அரசியல் விடுதலை குறித்து பேசுவதிலுள்ள அபத்தத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உலகத்தில் தீர்வில்லாத பிரச்சினை என்று ஒன்றில்லை. இன்றைய சிக்கலின் அடிப்படையாக ஒரு நிழல் அரசாக இயங்கிய புலிகளுக்கும் புலம் பெயர் தமிழர்களுக்குமிடையிலான பணப்பங்கீடு குறித்து முன்பு குறிப்பிட்டிருந்தோமல்லவா! ஈழத்தமிழர்களின் பொருளாதார பலம் என்பது புலம்பெயர் தமிழர்கள்தான். எனவே புலத்திலுள்ள தமிழர்களிடையே தீவிரமான பணப் பங்கீடும் – பணப்புழக்கமும் பெருகும் போது நாம் மேற்படி சிக்கலிலிருந்து வெளியேறிவிடுவோம்.

சிக்கலுக்கு தற்போதுள்ள தீர்வாக புலிகளின் பணம் அல்லது சொத்துக்கள் என்பவை உடனடியாக மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். அவை ஏதாவது ஒரு வழியில் மக்களின் கையைச் சென்றடையவேண்டும்.

ஏனெனில் அவை மக்களினுடையவை. மக்கள்தான் போராட்டம். போராட்டம்தான் மக்கள் என்பதன் அடிப்படை இதில்தான் இருக்கிறது. மக்கள் பலமாக இருந்தால்தான் போராட்டம். மக்களை பலவீனமாக வைத்துக்கொண்டு எந்தப் போராட்டத்தையும் நடத்த முடியாது.

சம்பந்தப்பட்டவர்கள் காழ்ப்புக்களையும் குரோதங்களையும் சுயநல நோக்குகளையும் கைவிட்டு உடனடியாகச் செய்ய வேண்டியது இது.

புலத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்குப் பிறகு பணப்புழக்கம் உடனடியாகத் தடைப்பட்டதற்கு காரணம். புலிகளின் சொத்துக்களோடு தொடர்புடையவர்கள் பெரும்பாலானவர்கள் அவற்றைப் பதுக்கியது தான். திருட்டை விட மோசமான செயல் இது. கறுப்புப் பணங்களின் பிரச்சினை பெரிய நாடுகளுக்கே இன்னும் தலையிடியாக இருக்கும்போது ஒரு சிறிய இனத்திற்கு எவ்வளவு பாதிப்பைக் கொடுக்கும்.

தங்களின் சக்தியை மீறி இன விடுதலைக்காக தமது சுயவிருப்பின் பேரில் பல கோடிக்கணக்கான பணத்தை புலத்திலிருக்கும் பல மக்கள் கொடுத்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்குப் பிறகு அவர்களில் பலர் வீதிக்கு வந்திருக்கிறார்கள்.

வெகு விரைவில் இதிலிருந்து மீளாதுவிடின் பல புலம்பெயர் நாடுகளில் பல தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ஒரு கூட்டுத் தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

போராட்டத்தைத் தூண் போல் தாங்கிய வன்னி மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டதும் புலத்தில் பெரும் துணையாக நின்ற மேற்படி மக்கள் கடன்காரர்களாக வீதிக்கு வந்ததும் போராட்டத்தை இரு வேறு தளங்களில் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் விளைவாக ஒரு இனம் அடைந்திருக்கும் அடையாள வடிவம் இது. இனி வரும் காலங்களில் ஒரு ஈழத்தமிழ் உயிரி எதிர்கொள்ளும் பிரச்சினை தனிப்பட்டதாக இராது. அது ஒரு இனத்தின் பொது வடிவத்தையே ஏதோ ஒரு வழியில் அடையாளப்படுத்தும்.

அது முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வழி உலகத்தின் முன் எம்மை அடையாளப்படுத்தும் ஒரு பொது வடிவமும் கூட. இதுவே ஒரு அரசியல் வெற்றிதான். ஆனால் எம்மிடையே இங்கு கும்பல்இ குழு அரசியல் நடத்துபவர்கள் யாருமே உணராத ஒரு விடயமாக இது இருப்பது துரதிஸ்டவசமானது மட்டுமல்ல பெரும் துயர் தருவதும் கூட…

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிலிருந்து மீள்வதுதான் எமது அவசரமானதும் அவசியமானதுமான தேவையாக இருக்கிறது. ஏனெனில் எல்லாவற்றிற்கும் எமது இருப்பு முக்கியமானது. மே 18 இற்கு பிறகும் நாம் நுண்மையாக அழிந்து கொண்டிருக்கிறோம்.

முதலில் எந்த நிலையில் நாம் தற்போது இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வது முக்கியமானது. அந்த அடிப்படையில்தான் இந்த பதிவை எழுதியிருக்கிறோம். இது எமது பொருளாதாரம் என்ற ஒரு கூறான பணப்பங்கீடு தொடர்பான எமது நிலை பற்றிய பதிவு. இப்படி சமுக, பண்பாட்டு, உளவியல், வாழ்வியல் என்ற பல கூறுகளை மையப்படுத்தி எமது இருப்பை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் சிறீலங்கா அரசு எம்மை மேற்படி அனைத்து வழிகளிலும் கட்டமைக்கப்ட்ட இன அழிப்புக்குட்படுத்தியிருக்கிறது. எனவே தொடர்ந்து உரையாடுவோம். விவாதிப்போம். சாத்தியமான வழிகளை கண்டடைந்து தொடரும் இன அழிப்பை தடுத்து நிறுத்துவோம்.