கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பில் இலங்கை தொல் பொருள் திணைக்களமும் குதித்தது..

0
641

mannar-mass7மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் இருந்த பகுதியை, அது ஒரு “புராதன மயானம்” என்று இலங்கை தொல்பொருள் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மரபை கடைப்பிடிப்பவர்கள். அவர்கள் தமது சமய மரபுப்படி பிணங்களை எரிப்பதுதான் வழமை. ஒரு வேளை அது கிறிஸ்தவ மரபை கடைப்பிடித்த தமிழர்களின் பிணங்கள் என்று வைத்துக்கொண்டாலும் அந்த எலும்புத் தொகுதிகள் எப்படி இவ்வளவு காலம் கழித்தும் முழுமையாக கிடைத்திருக்கும்.? சில எலும்புத்தொகுதிகளுடன் உக்காமல் ஆடைகள் வேறு கிடைத்திருக்கின்றன. இது எப்படி சாத்தியம்.?

மயானம் என்றால் உடல்கள் ஒரு வரிசைக்கிரமத்தில் அடுக்கப்பட்டு போதிய இடைவெளிகளுடனேயே புதைக்கப்பட்டிருக்கும். ஆனால் கிடைத்த எலும்பு தொகுதிகள் ஒன்றன்மேல் ஒன்றாக பின்னப்பட்டு காணப்படுகின்றன.

இத்தனைக்கும் இந்த புதைகுழிகள் தொடர்பாக தமிழர் தரப்பு அனைத்துலக விசாரணை கோரியும் அது நடக்கவில்லை. சிங்கள இன அழிப்பு அரசே எல்லா விசாரணைகளையும் போல இதையும் நடத்தி கொண்டிருக்கிறது.

எனவே அனைத்துலக விசாரணை இல்லாமல் சிங்கள நிர்வாக அரச எந்திரங்கள் சொல்லும் எந்த முடிவையும் நாம் ஏற்க முடியாது.

தாமே கொன்றுவிட்டு தாமே விசாரணை நடத்திவிட்டு இப்படி யாரும் எதிர்பார்க்காத கோணத்தில் உண்மையை குழிதோண்டிப்புதைக்கும் சமாத்தியத்தை இனக்கொலையாளர்கள் இனி சிங்கள இனஅழிப்பு அரசிடம் இருந்து கற்று கொள்ளலாம்.

தொல் பொருள் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ள கருத்து பல சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. தற்போது வெளித்தரப்பால் உள்நுழைய முடியாத இந்த மனித புதை குழி விவகாரத்தின் உண்மைத்தன்மையை மடைமாற்றி குழிதோண்டிப்புதைக்கும் சாத்தியம் தொல்பொருள் திணைக்களத்திற்கு நிறையவே இருக்கிறது.

புராதன மயானம் என்பதை நிறுவ அந்த மயானப்பகுதியை அகழ்ந்து ஏதேனும் முன்னைய வேறு எலும்பு எச்சங்களை எடுக்கலாம் அல்லது தம்மிடம் உள்ள பல பத்து வருடங்களுக்கு முந்தைய எலும்பு தொகுதிகளை மன்னார் புதைகுழிகளுடன் மீட்கப்பட்ட புதிய எலும்பு தொகுதிகளுடன் கலந்து விடலாம். அதற்கான முன்னறிவிப்பாகவே தொல் பொருள் திணைக்களத்தின் இந்த அறிவிப்பை நாம் பார்க்க வேண்டும்.

அடுத்து நம் எல்லோருக்கும் தெரியும், ஆரம்ப காலத்தில் தமிழீழத்தில் சிங்கள இன அழிப்பு இராணுவம் தமிழர்களை வகைதொகையின்றி கைது செய்து கொலை செய்யும்போது நகரப்பகுதிகளில் வைத்து படுகொலை செய்வது இல்லை. ஊரின் எல்லையிலுள்ள மயானங்களில், தரவை நிலங்களில், சிறுகாட்டுப்பகுதிகளை அண்டித்தான் மக்கள் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள் அல்லது புதைக்கப்ட்டார்கள்.

சிங்கள இன அழிப்பு இராணுவம் மன்னாரிலும் தமது கட்டுப்பாட்டில் இருந்த இந்த மயானப்பகுதியில் கடத்தபட்ட மக்களை கொலை செய்து புதைத்திருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.

எனவே தொல்பொருள் திணைக்களம் அது ஒரு “புராதன மயானம”; என்ற கருதகோளை வைத்து இனஅழிப்பு அரசின் புதிய மனிதப்புதைகுழியை மறைக்க களமிறங்கியிருக்கிறது.

இதனூடாக தமிழர்தரப்பு படித்து கொள்ள வேண்டியது ஒரு பாடம்தான். சிங்கள அரசு மட்டுமல்ல அரசுக்கு அப்பாலும் அனைத்து சிங்கள எந்திரமும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினூடாக தமிழினத்தை அழிக்க களமிறங்கியிருப்பதை இது சுட்டி நிற்கிறது.

தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும். தாயகத்தில் கட்டமைக்கபட்ட இன அழிப்பிற்கு எதிராக போராடும் அதே தருணத்தில் அனைத்துலக மட்டத்தில் நடந்த இனஅழிப்பிற்கு ஒரு அனைத்துலக விசாரணை பொறிமுறையை உருவாக்கி விரைவில் நீதியை பெற போராட வேண்டும்.

காலம் தாழ்த்தும் ஒவ்வொரு கணமும் சிங்களத்தின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு விரிவடைந்துகொண்டேயிருக்கும்.

சிங்களத்தின் சுயவிசாரணை மூலம் கிடைக்கும் “நீதிக்கு” தற்போது மன்னார் புதைகுழி விவகாரம் ஒரு எடுத்துக்காட்டாக நம்முன் இருக்கிறது.

இதற்கு பிறகும் நடந்த இன அழிப்பை அதையும் போர்க்குற்றமாக மாற்றி மனித உரிமை மீறல் பிரச்சினைகளாக சுருக்கி குறைத்து சிங்கள அரசிடமே விசாரிக்க ஒப்படைக்குமாறு வருடாவருடம் சடங்கு போல அறிவிக்கப்படும் ஐநா மன்ற தீர்மானங்களை என்னவென்று சொல்வது?

நாம் போராடினால் மட்டுமே நமக்கு வாழ்வு. இதை தமிழர் தரப்பு எப்போது புரிந்து கொள்ளப்போகிறது..?

பரணி கிருஸ்ணரஜனி.