கண்ணீரை கொள்ளையடிக்க வந்துள்ள வியாபாரி

0
685

miss-filmஅண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வருகையின் பொழுது யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு புதிதான பெண் ஒருவர் காணாமல் போன பிள்ளையை கேட்டு அழுது கொண்டிருந்த தாய் ஒருவரிடம் தன் படத்தில் ஆவணப்படத்திற்கு நடிக்கக் கேட்டுள்ளார்.

காணாமல் போனவர்களைக் கேட்டு போராட்டம் நடத்திய மேலும் சிலரை அணுகி தான் உங்களைப் பற்றி படம் எடுக்கப்போகிறேன் உங்களுடன் வந்து இரண்டு நாட்கள் தங்க வேண்டும் எனவும் அப் பெண் கேட்டுள்ளார். நீங்கள் யார்? எப்படி தமிழ்நாட்டிலிருந்து இலங்கை வந்தீர்கள்? என்று அவர்கள் கேட்ட பொழுது ஒழுங்கான பதில் அளிக்காமல் நழுவியுள்ளார்.

இன அழிப்பு அரசால் காணாமல் போனவர்களின் நிலை என்பது எவ்வளவு துயர் நிறைந்தது என்பதை நேரில் கண்ட பிறகும் எங்களை “சூட்டிங்கிற்கு” கூப்பிட இந்த பெண்ணிற்கு எப்படி மனசு வந்தது என்று மக்கள் திட்டிய பின்தான் அவர் அங்கிருந்து நழுவினார்.

லீணா மணிமேகலை என்ற அப் பெண் ஈழப் போராட்டத்திற்கு எதிராகவும் விடுதலைப் புலிகளை அவதூறும் செய்து வருபவர். ஈழப் போராட்டத்திற்கு எதிரான சக்திகளுடன் கூட்டு உறவு வைத்திருக்கும் இவர் இலங்கை அரசின் கைக்கூலியாக நாட்டிற்குள் வந்து தமிழ் மக்களை வைத்து தனது வியாபாரத்திற்கும் அரசியலுக்கும் ஏற்ற வகையில் படம் எடுக்கப் போகின்றார்.

ஏற்கனவே 2009 முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பின்னர் செங்கடல் என்று திரைப்படத்தை கடுமையான மோசடிகளுடன் இவர் தயாரித்து அப்படத்தை வெளிநாடுகளில் காண்பித்து கடந்த காலம் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு இலாபத்தைப் பெற்றிருந்தார்.

இந்த படத்தில் கூட இறுதி வன்னி இன அழிப்பை நிறுத்த கோரி எழுத்தாளர்கள், கலைஞர்கள் நடத்திய உணர்வுபூர்வமான போராட்டத்தை களாவாக படம் பிடித்து தனது படத்தில் இணைத்து அந்த போராட்டத்தை “சூட்டிங்”காக மாற்றியவர். இதனால் பெரும் கண்டனங்களையும் சந்தித்தவர்.

செங்கடல் வியாபாரத்தில் பெற்ற இலாபத்தையடுத்து இப்பொழுது காணாமல் போனவர்களின் கண்ணீரை வைத்து படம் எடுத்து அதையும் புலிகளுக்கு எதிராக காட்டி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களையும் இலாபத்தையும் பெற முற்சிக்கின்றார். விருதுகளுக்கு அலையும் இவர் இவ்வாறான படங்களை காண்பித்து தனக்கு விருதுகளையும் பணத்தையும் கோருபவர். அத்துடன் உளவுத்துறைகளிடம் இருந்தும் பணம் பெறுபவர்.

தன்னுடைய காரியங்களுக்காக அனைவரையும் மயக்கும் இவர் அதற்காக எதையும் செய்யக்கூடியவர். செங்கடல் என்ற படத்தை எடுக்கும் பொழுது பலரை மிரட்டிய சம்பவங்களும் தாக்கிய சம்பங்களும் இடம்பெற்றிருந்தன. தமிழ் நாட்டிpல் உள்ள ஈழஅகதிகளை வைத்து அந்தப் படத்தை தயாரித்து விற்பனை செய்தார். இன அழிப்பில் இருந்து தப்பியவர்களின் கதையை புலிகளுக்கு எதிராக நுட்பமாக மாற்றிக்காட்டியவர்.

தற்பொழுது இலங்கையில் தங்கியிருந்து போராளிகள், மக்கள் அனைவரையும் தான் ஒரு ஈழ அபிமானி என்று ஏமாற்றி பேட்டி கண்டு வருகிறார். மக்களின் கண்ணீரை படமாக்கும் இவருக்கு இலங்கையில் என்ன இல்லாவிட்டால் என்ன? ஈழத் தமிழர்களின் கண்ணீரும் இரத்தமும் உள்ளது என்று அதை விற்பனை பண்டமாக்க வந்துள்ளார் இவர்.

விடயம் தெரியாமல் இவரிடம் பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர். உளவுத்துறைக்கு தமது கருத்துக்கள் போய் விடும் என்று அஞ்சும் அந்நேரம் தமது கையையே கொண்டு தமது கண்ணை கொத்தும் இந்த முயற்சிக்கு தமது கண்டனத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.

தமது பேட்டியை நீக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். அவை நீக்கப்பட்டதா என்பது அவரது ஆவணப்படம் வரும்போதுதான் தெரியும். பிணம் தின்னும் பிசாசுகளுக்கு மக்கள் அவலமும் பெண் போராளிகளினது பாதுகாப்பும் ஒரு பொருட்டாக இராது என்பதே நிதர்சனம்.

தமிழகத்தில் எத்தனையோ எத்தனையோ ஈழ ஆதரவு சக்திகள் இருந்தும், இப்படியானவர்களை அடையாளம் கண்டு எமது மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்காததால் இந்த உளவாளியிடம் எமது மக்கள் சிக்கி “வாக்குமூலம்” கொடுத்து விட்டார்கள்.

இனியாவது தமிழக போராட்ட சக்திகள் இவர் போன்றவர்களை எச்சரிக்க வேண்டும். எமது கண்ணீரையும் இரத்தத்தையும் வியாபாரமாக்க நாம் யாரையும் அனுமதிக்க மாட்டோம்.

தாயகத்திலிருந்து ஓவியா.