ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தென்னிலங்கை தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், தமிழர் சொத்துகளை அழித்து சூறையாடியும் , தமிழர் உயிர்களை பறித்தும், தமிழ் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்தும் என சிங்கள இராணுவ உதவியோடு சிங்கள காடையர்கள் கொலைவெறியாட்டம் ஆடிய நாட்கள் அவை…

சுமார் 3000 தமிழர்கள் தென்னிலங்கையில் இந்நாட்களில் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டார்கள்.

மறக்க முடியாத கோர படுகொலைகளை அரசின் பாதுகாப்பான இடம் என சொல்லப்படும் சிறைச்சாலைகளுக்குள் கூட சிங்கள படையின் உதவியோடு காடையரான சிங்கள கைதிகள் கட்டவிழ்த்தார்கள்.

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் ஈழ தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனஅழிப்பு நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும்.

இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படுகொலை நிகழ்வில் ஈடுபட்ட எவரும் இன்றளவும் விசாரிக்கப்படவும் இல்லை… இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவும் இல்லை..

இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது.

இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன.

முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் கூர் வாள்களினாலும் பொல்லுகளினாலும் அடித்து குத்திக் கிழித்து கொல்லப்பட்டனர்.

இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாகும். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள்.

இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களில் டேவிட் ஐயா உள்ளிட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர்.

ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூற்று உண்மையெனில் முதல் நாளும் களவெடுத்து தாக்கி அதை தொடர்ந்து இரண்டு நாளின் பின்னும் மீண்டும் களவெடுத்தார்களா? அதற்குள் பாதுகாப்பை சிறைத்துறை அதிகாரிகள் பலப்படுத்தி இரண்டாம் நாள் படுகொலைகளை தடுத்து நிறுத்த முன்வராதது ஏன்? அலட்சியமாக இருந்து கொட்டாவி விட்டு கொண்டு இருந்தார்களா? உண்மையில் இது அவர்களும் சேர்ந்து செய்த திட்டமிட்ட அரசினரின் இனப்படுகொலை.

இந்த கொடிய படுகொலைகளை அக்காலத்தில் கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா திமிராக பதிலளித்தார். உலக நாடுகளும் பேசாமல் வாய் மூடின.

மேலும் மிகப்பிரபல்யமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அறைகூவல் இக்காலத்தில் தான் ஜெயவர்த்தனவால் விடுக்கப்பட்டது.

தமிழின எக்கேடு கேட்டால் என்ன என அன்றும் இந்த உலகம் பேசாமல் பார்த்து கொண்டு இருந்தது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் சரக்கு கப்பல்களில் காற்றோட்டமின்றி அடைக்கப்பட்டு கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர்.

யாழ் வந்த உறவுகளை ஓடோடி வந்து அரவணைத்தார்கள் தாயக உறவுகள். அப்பொழுது தான் புரிந்தது தென்னிலங்கை அல்ல தமிழரின் பூர்வீகம் வடகிழக்கு தமிழீழமே எங்கள் தாயகம் என்று.

அவர்களின் சொத்துக்களனைத்தும் சூரையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை.

உலகநாடுகளினது கரிசனைப் பார்வை ஓரளவுக்குத் தமிழர்கள் மேல் திரும்பியது இந்த படுகொலையின் பின்னரே. அதனால் உலகில் பல நாடுகள் கதவு திறந்து ஈழ அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்று அடைக்கலம் கொடுத்தார்கள்.

அதே போல் எப்பொழுதும் எமக்கெனவே துடிக்கும் அன்னை தமிழகத்தின் அன்பும் கருணையும் ஈழ தமிழர்களுக்காக கனிந்து தமிழகத் தமிழரின் பூரண ஆதரவும் அனுசரணையும் ஈழத்தவருக்குக் கிடைத்ததும் அதன் துணையோடு ஈழ தமிழ் இளைஞர்கள் பொங்கி எழுந்து ஆயுதப் போராட்டமே இனி ஒற்றை வழி என தமிழீழ தாயகத்தை மீட்டெடுக்க போராட சென்றதும் இந்தியா இந்திரா தலைமையில் ஆதரவு சக்தி போல் இயங்கியதும் பின் பிரித்தாண்டு வீறு கொண்ட விடுதலை வரலாறு பின்னர் இந்திய இலங்கை அரசுகளின் துரோகங்களால் வீழ்ந்ததும் வீழ்ந்த தமிழினம் மீண்டும் எழுந்து இன்று சர்வதேச அரங்கிலான தமிழ் மக்கள் போராட்டமாக தொடர்வதும் தொடர்கின்ற வரலாற்றின் பக்கங்கள் ஆகும்..

நன்றி: பேரா பா ஆனந்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here