கறுப்பு ஜுலையும் – இரத்த ஞாயிறும்

0
638

A-British-soldier-drags-a-001கறுப்பு ஜுலை என்பது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் உச்சக்கட்டம். சிறீலங்கா அரச தலைவரின் நேரிடையான வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இந்த இனப்படுகொலையில் 3,000 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், பல கோடி ரூபாய்கள் பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்களும் பெரும்பான்மை சிங்களக் காடையர்களால் கொள்ளையிடப்பட்டன மற்றும் அழிக்கப்பட்டன.

சிங்கள இனவாதிகளின் இந்த இனஅழிப்பு நடைபெற்று 30 வருடங்கள் தற்போது கடந்துவிட்டன. ஆனால் அதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்பதுடன் தமிழ் இனம் தொடர் இன அடக்கு முறைகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றது.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 40 மடங்கு அதிகமான தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டு வன்னியில் படுகொலை செய்யப்பட்டனர். அதனைக் கூட அனைத்துலக சமூகம் தடுப்பதற்கு முனையவில்லை.

மாறக சிங்கள படைகளின் படுகொலைகளை வேடிக்கை பார்த்ததுடன், அதனை முன்னின்று நடத்திய சிங்கள படை அதிகாரிகளை ஐக்கிய நாடுகள் சபையிலும் பதவிகளை கொடுத்து கௌரவித்தது அனைத்துலக சமூகம்.

சாட்சிகள் அற்ற படுகொலைகளை நடத்துவதற்கு சிங்கள தேசத்தை அனுமதித்துவிட்டு (வன்னியில் இருந்து ஐ.நா தனது அதிகாரிகளை விலக்கிக் கொண்டது அதற்காகவே) தற்போது சாட்சிகளை தேடி அலைவது போல பாசாங்கு செய்கின்றது மேற்குலகம்.

இந்த சமயத்தில் வடஅயர்லாந்தில் இடம்பெற்ற படுகொலை ஒன்றை ஆய்வு செய்வது இங்கு பொருத்தமாது.

1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வடஅயர்லாந்தின் டெரிப் பகுதியில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட கத்தோலிக்க மக்கள் மீது பிரித்தானியா இராணுவத்தின் பரசூட் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டிருந்தனர், பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவத்தை இரத்த ஞாயிறு (Bloody Sunday) என அயர்லாந்து மக்கள் அழைப்பதுண்டு. 41 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பல விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50,000 பவுண்ஸ்கள் வழங்கப்பட்டது, பிரித்தானியா பிரதமரும் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேரியிருந்தார். எனினும் சுயாதீன விசாரணைகள் தற்போதும் நடைபெறுகின்றன.

ஆனால் ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் எந்த அனுதாபத்தையும் யாரும் காண்பிக்கவில்லை என்பதுடன் மேலும் பல மடங்கு வேகத்துடன் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. சத்தமற்ற இனஅழிப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் வேண்டும், அங்கு ஒரு நல்லிணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துவரும் மேற்குலகம் மறுபுறம் சிறீலங்கா அரசின் சிங்கள மயமாக்கல்களையும், தமிழ் மக்கள் மீதான இராணுவ அழுத்தங்களையும் தொடர்ந்து அனுமதித்தே வருகின்றது.

இன்று நாம் உலகெங்கும் கறுப்பு ஜுலையை நினைவுகூர்ந்து வருகிறோம், ஆனால் சிந்திக்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன.

கறுப்பு ஜுலை விட மோசமான இன அழிப்புக்கள் எவ்வாறு தொடர்கின்றன? அதனை தடுத்து நிறுத்த ஏன் எம்மால் இயலவில்லை?

வட அயர்லாந்துடன் ஒப்பிடும் போது எம்மிடம் வலுவான மற்றும் அர்பணிப்புள்ள அரசியல்வாதிகள் தாயகத்தில் இல்லை, அவ்வாறனவர்களை உருவாக்கும் அரசியல் முதிர்ச்சியும் எம்மிடம் இல்லை என்பதை கடந்தகால தேர்தல் அனுபவங்களில் இருந்து புரிந்துகொள்ள முடிந்துள்ளது.

அனைத்துலக சமூகத்துடனான தொடர்புகள், தமிழகத்துடனான பிணைப்புக்கள், உலகத்தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை என்பன எமது போரட்டத்திற்கு அவசியமானவை. அவற்றில் கணிசமான அளவை நோக்கி நாம் நகர்ந்துள்ள போதும், அதனை முறியடிப்பதிலும் எம்மவர்கள் பின்னிற்பதில்லை.

அதன் வெளிப்பாடே தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளரான திரு விக்கினேஸ்வரனின் தமிழகம் தொடர்பான கருத்து. தமிழகத்திற்கும் – ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவுகள் உடைக்கப்படுமானால் அது எமது போரட்டம் சந்திக்கப்போகும் அடுத்த முள்ளிவாய்க்கால் பேரழிவாகவே இருக்கும்.

ஈழம் ஈ நியூஸ்