கறுப்பு யூலை – முப்பது வருடங்கள் கழிந்தன

0
646

black-julyகடந்த முப்பது வருடங்களாக பல்லாயிரம் மாவீரர்களும் பொதுமக்களும் தமது இன்னுயிர்களைக்கொடுத்து பல இலட்சம் மக்கள் தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்ததுடன் தமது சொந்த இடங்களிற்கே திரும்பிப்போக முடியாதளவிற்கு சிங்களவர்கள் எமது தாயகத்தில் தாண்டவமாடுகிறார்கள். இதே காலப்பகுதிக்குள் உலகமே அதிசயிக்கக்கூடிய பாரிய இராணுவ வெற்றிகளை கண்டுகொண்டது தமிழீழம். இவ்வெற்றிகள் மூலம் இராணுவ சமபலத்தை வெளிப்படுத்தியதுடன் பேச்சுவார்த்தைகளுடான அரசியற்தீர்வு முயற்சிகளிற்கும் வழிசமைத்தது. தமிழர்களுடைய இராணுவ பலம் நிரூபிக்கப்பட்ட நேரங்களிலெல்லாம் மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள இனவாத அரசுகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தன.

ஆரம்பத்தில் சிங்கள அரசுடன் நேரடிப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அம்முயற்சிகள் பலனளிக்காமையினாலேயே தமிழினம் சர்வதேசத்தின் உதவியை நாடியது. இதன் மூலம் சிங்களவர்களின் போலித்தனத்தை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டக்கூடியதாக அமைந்தது. இன்று சர்வதேசம் சிங்கள ஆட்சியாளர்கள் மீது கொடுக்கும் பலமான அரசியல் ரீதியிலான அழுத்தங்களிற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

சிங்கள இராணுவம் எந்தவொரு காலத்திலும் தமிழினத்தின் காவலர்களாகவிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளை போரில் வெல்லக்கூடியவர்களாக இருக்கவில்லையென்பது உலகறிந்த உண்மை. தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாக திறமையையும், சமூக கட்டமான வளர்ச்சியையும், போர் ஆற்றலையும் கண்டு பிரமித்த சிங்களதேசம் உல-கில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை சாதகமாக்கி எமது இனத்தையும் அதன் பாதுகாவலர்களையும் அழித்தது.

தொடர்ந்தும் எமது மக்களை அடிமைகளாக்கி அவர்களின் நிலங்களை பறிமுதல் செய்வதுடன் சிங்கள குடியேற்றங்களையும் கட்டியெழுப்பி தமிழர்களிற்கெதிரான இனப்படுகொலையினை மேற்கொண்டுவருகின்றது சிங்களதேசம். போர் முடிந்து நான்கு வருடங்களின் பின்னரும் எந்தவொரு அரசியல் தீர்வுகூட கொடுக்காமல் வைத்திருப்பதன் மூலம் மீண்டுமொரு போராட்டத்திற்கே தள்ளுகின்றது.

சிங்களதேசம் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளும் இனப்படுகொலையினை சர்வதேச சமூகம் கண்டிக்கவேண்டுமானால், புலம்பெயர் தமிழினம் அதற்குத்தேவையான அழுத்தத்தினை கொடுக்கவேண்டும். இனப்படுகொலையின் அடையாளங்களாகவுள்ள போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், நிலஅபகரிப்பு, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் போன்றவற்றிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்தவேண்டும். எமது தொடர்ச்சியான அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள் மூலமே தமிழீழத்தை நாம் அடையமுடியும்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் சார்பில்

 பொன். மகேஸ்வரன்