காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றாக புறக்கணிக்க வேண்டும்- தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்!

0
604

Jayalalithaa_pointing_finger_295இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

சட்டசபையில் தீர்மானங்கள்

இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழக அரசின் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பாக 2011ஆம் ஆண்டும் சட்டசபையில் இலங்கையின் போர்க்குற்றங்கள், இலங்கை மீதான பொருளாதாரத் தடை, நட்பு நாட்டின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், தமிழீழத்துக்கு பொதுவாக்கெடுப்பு ஆகியவற்றுக்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பின்னர் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து சஸ்பென்ட் செய்ய வேண்டும். காமன்வெல்த் மாநாட்டில் பெயரளவில் கூட இந்தியா கலந்து கொள்ள கூடாது. இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினோம். அதை மத்திய அரசுக்கு அனுப்பியும் வைத்தோம்.

பிரதமர் பங்கேற்காதது சாதாரண ஒன்றுதான்

இவை உணர்ச்சிவயப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்கள் ஆனால் மத்திய அரசு தமிழர்களுக்கு சாதகமான முடிவை மேற்கொள்ளவில்லை.

தமிழினப் படுகொலையை நிகழ்த்திய சிங்கள அரசு நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதுவரை 10 காமன்வெல்த் மாநாடுகளில் 5-ல் இந்தியாவின் சார்பில் பாரத பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அதனால் தற்போது பிரதமர் கலந்து கொள்ளாதது என்பதும் ஒரு சாதாரண நிகழ்வுதான்.

இலங்கையை ஆதரிக்கிறது

ஆனால் தமிழக சட்டசபையில் பெயரளவில்கூட பங்கேற்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் கூட மத்திய அரசு பிரதிநிதியை அனுப்புகிறது. அப்படி அனுப்புவது என்பது இலங்கையின் மனிதாபிமற்ற செயலை இந்தியா அங்கீகரிக்கிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழர்களை இன்னமும் இலங்கை ராணுவம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களவர்கள் வசிக்கின்றனர்.இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் இடம்பெயர்ந்த தமிழர்களாகவே இருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசுக்கு போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது என்பது போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை பாதுகாப்பதாகும்.

இந்தியாவுக்கு அவலம்

அத்துடன் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு 2 ஆண்டுகாலம் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவர் பதவி அளித்த அவலத்தையும் இந்தியாவுக்கு வழிவகுக்கும்.மத்திய அரசின் முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். சிங்கள இனவாத அரசுக்கு ஆயுதங்கள், பயிற்சி கொடுத்திருந்தாலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டோரை தண்டிக்க வழிவகை செய்யும் வகையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதிநிதி கலந்து கொள்ளக் கூடாது.

தமிழர்களை வஞ்சித்துவிட்டது

ஆனால் தமிழர்களை வஞ்சித்து விட்டது மத்திய அரசு.. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வார். இலங்கை காமன்வெல்த் மாநாட்டுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அனுப்பி வைப்பது தமிழர் உணர்வுகளை காயப்படுத்தும் செயல்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம்.

தீர்மானம் என்ன?

அதனால் கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிகிறேன். தீர்மானம் விவரம்:
இலங்கை நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.. பெயரளவில் கூட இந்திய நாட்டின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள கூடாது. இதுகுறித்து இலங்கை நாட்டுக்கு இந்தியா உடனே தெரிவிக்க வேண்டும். சிங்களருக்கு இணையான உரிமைகளுடன் தமிழர்கள் வாழ வகை செய்யும் வரை காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையிலான குழு கலந்து கொள்ளும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசின் சட்டசபை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய அரசின் முடிவு மிகுந்த மனவேதனை தரும் செயல். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை இந்தியா அங்கீகரிக்கிறது என்ற நிலைதான் உருவாகும்,.காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இலங்கை அதிபர் 2 ஆண்டுகாலம் பதவி வகிக்க இந்தியா உதவியது என்ற தீரா பழிச்சொல்லை இந்திய அரசு ஏற்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை.

தமிழக மக்களின் ஒருமித்த கருத்துக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இலங்கையில் நாளை நடைபெறும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்திலோ வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிலும் பெயரளவில் கூட இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் இந்த காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழக சட்டசபை மீண்டும் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதைத் தொடர்ந்து திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா இடிக்க துடிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
vaiko-arrest5656-600-jpg
தமிழகத்தில் இன்று, ம.தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட 21 அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ரயில் மறியல் போராட்டத்திற்கு இன்று காலை 6.05 மணிக்கு முதல் ஆளாக மதுரை ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்திற்கு வந்த வைகோ, சென்னைக்குப் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை தனது தொண்டர்களுடன் மறித்தார்.

இந்த போராட்டத்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் வைகோ உட்பட 300க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினரை கைது செய்தனர். இதனால் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.ஈழத்தமிழர்களுக்கு துரோகம்கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘‘ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த சேனியா காந்தி, மன்மோகன் சிங் இவர்களுடன் கைகோர்க்கும் அனைத்து தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் தான்.

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே, தமிழர்களின் நினைவிடங்களை இடித்ததுபோல், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தஞ்சையில் திறக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிக்க பார்க்கிறார்” என்றார்.

தொடர்ந்து அவர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்சே உள்ளிட்டவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவர், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கடுமையாக கோஷங்களை எழுப்பினார். வைகோ ரயில் மறியலை ஆரம்பிக்கும் முன்னதாக, மாநில உளவுத்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி, மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டதோடு, வைகோவிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் தெரிகிறது.

இதனால் கோபம் கொண்ட வைகோ பதிலுக்கு, உன் உடம்பில் ஓடுவது சிங்கள ரத்தமா?, உளவுத்துறைக்கு இங்கு என்ன வேலை, உங்க வேலையை இங்கு காட்டாதீர்கள். நீ தமிழன் இல்லையா?, இறந்த தமிழர்கள் உங்கள் உறவுகளாக இருந்தால் இப்படி நடந்துகொள்வாயா? என்று கடுமையாக பேசினார்.