தமிழ் தேசிய கட்சிகள் தமக்குள்ள எத்தகைய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் கிழக்கு தொடர்பாக ஒரு குறைந்தபட்ச ஒருமைப்பாட்டுக்காவது வந்திருக்க வேண்டும். இந்த மாபெரும் தவறின் விளைவு மிக பாதகமாகவே அமையும்.
இம்முறை கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையிலும், அம்பாறையிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தினை இழக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழர்களின் பிரதிநித்துவத்தினை குறைப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன.
கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஸவின் செல்லப் பிள்ளைகளாக இருந்தவர்கள் பல வழிகளிலும் தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கருணா களமிறக்கப்பட்டு தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டு கட்சியில் வியாழேந்திரனும், தமிழர் விடுதலைக் கூட்டணியில் அருண் தம்பிமுத்து மற்றும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் இருந்து‚ ‘கல்விமான்களும்’ களமிறக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் நிச்சயமாக தோற்போம் என்று தெரிந்தும் இவர்கள் களமிறங்கியுள்ளனர் /களமிறக்கப்பட்டுள்ளனர் என்றால், அதன் நோக்கத்தினை நாங்கள் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.
இதே போன்று பிள்ளையானின் கட்சியை தனித்து போட்டியிடச் செய்யப்பட்டுள்ளது. வியாழேந்திரன், அருண் தம்பிமுத்து, பிள்ளையான் இவர்கள் அனைவரும் மகிந்தவின் கைப்பொம்மைகள் என்று அனைவருக்கும் தெரிந்த நிலையிலும், தனித்தனியாக களமிறக்கப்பட்டுள்ளனர். மகிந்தவுக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதி வரவேண்டும் என்பதற்கு அப்பால், தமிழர்களின் பலம் சிதைக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் குறியாகவுள்ளமை புலப்படுகின்றது.
அதேபோன்று கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்று அணி வேண்டும் என்று கருதுபவர்களும், தமிழ் தேசியத்திற்காக போராடுபவர்களும் பல்வேறு வழிகளிலும் கிழக்கில் பிரிந்து நிற்பதும் தமிழர்களின் வாக்குகள் பிரிந்து செல்வதற்கான ஒரு வழியாகவே இருக்கின்றது.
வடக்கில் தேர்தல் தொடர்பான கொள்கைகள் எவ்வாறு இருந்தாலும் கிழக்கில் அனைவரும் இணைந்து போட்டியிடுவதன் மூலமே தமிழ் பிரதிநித்துவத்தினை காப்பாற்ற முடியும்.
சிங்கள சமூகமும், முஸ்லிம் சமூகமும் இன்று கிழக்கில் மிகவும் திட்டமிட்ட வகையில் காய் நகர்த்தல்களை முன்னெடுத்துள்ள நிலையில், தமிழர் தரப்பு அவை தொடர்பில் எந்த விழிப்புணர்வும் இன்றியிருப்பது தமிழ் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமையப் போகின்றது.