‘கிழக்கு மாகாண ஆளணி நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு’

0
620

eastern_province_flag304கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தின் ஆளணி நியமனத்தில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் விவாதிப்பதற்காக தன்னால் அவசர பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் கூறுகின்றார்.

மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் போட்டிப் பரீட்சை மூலம் ஆட்திரட்டலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு மாவட்ட ரீதியாக இன விகிசார அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என இது தொடர்பான அறிவித்தலில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றபோது தகுதிக்குரிய புள்ளிகளை பெற்றிருந்த தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இரா. துரைரெத்தினம் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் – 40 சத வீதம், தமிழர்கள்- 31 சத வீதம் மற்றும் சிங்களவர்கள் –27 சத வீதம் என இன விகிதாசாரம் அமைந்துள்ளது.

போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின்படி 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்த 273 தமிழர்களில் ஒருவர் கூட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. ஆனால் 172 முஸ்லிம்களில் 115 பேரும் 184 சிங்களவர்களில் 40 பேரும் தெரிவாகி நியமனம் பெறவிருக்கின்றார்கள் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கூறுகிறார்.

இதேநிலை தான் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் உள்ளது என்றும் கிழக்கு மாகாணசபை தமிழர்களை திட்டமிட்டு தொடர்ந்தும் புறக்கணிப்பதையே இது காட்டுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாணசபை அமர்வில் இது தொடர்பான விவாதத்தின்போது சாதகமான பெறுபேறுகள் கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயம் கோரி நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரிடம் கேட்டபோது இதுபற்றி தான் அறிந்திருக்கவில்லை என்றார்.

தமக்கு அநீதி இழக்கப்பட்டுள்ளதாக யாராவது முறைப்பாடு செய்தால் அதில் தலையிட்டு தன்னால் நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் தனது பதிலில் குறிப்பிட்டார்.

பி.பி.சி