குண்டு சப்தம் கேட்டாலே அவள் பயப்படுவாள்! கலங்கவைக்கும் இசைப்பிரியாவின் அக்கா

0
563

Isaippireas-mother-ch4-352-001இசைப்பிரியா… சிங்கள பேரினவாதத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ்ப்பெண். அரச பயங்கரவாதத்தின் அழியாத சாட்சி. அவரைப் பற்றி அறிய வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்தைத் தொடர்புகொண்டோம். இசைப்பிரியாவின் அக்கா தர்மினி வாகீசன் நம்மிடம் பேசினார். சொந்த சகோதரியைக் கொடூரமாய் பலிகொடுத்த சோகமும் அது சம்பந்தமான காட்சிகள் ஊடகங்களில் காணும் வேதனையுடனும் தர்மினி பேசினார்.

இதோ அவரது வாக்குமூலம்..

அன்பான பாசமான குடும்பத்துல எல்லாப் பெண்களையும் போலதான் இசைப்பிரியாவும் வளர்ந்தாங்க. சின்ன வயசில இருந்து நல்லா படிச்சுக்கொண்டு இருந்தாங்க. இசைப்பிரியாவின் கூடப்பிறந்தவங்க நாங்க மொத்தம் ஐந்து பேர். இசைப்பிரியா நாலாவது பெண். மூன்று அக்கா ஒரு தங்கை. தங்கையும் போராளிதான். அவங்க பெயர் சங்கீதா. அவங்க போர்ல கலந்துகொண்டு காயப்பட்டு முகாமில் தங்கி இருந்தாங்க. ஊனமுற்றவர்கள் என்ற வகையில் ஆர்மியிடம் சிக்காமல் வெளிவந்துட்டாங்க. இசைப்பிரியா ப்ளஸ் டூ வரை படிச்சு இருக்காங்க. அப்புறமா அவங்களேதான் இயக்கத்துக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்யணும்னு சொல்லி இயக்கத்துல இணைஞ்சாங்க. ஆனா, அவங்களுடைய உடல் அதற்கு ஏற்றபடி இல்லாததுனால பயிற்சி எடுக்க முடியலை.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. சொன்னது மட்டும் இல்லாம களத்துல இறங்கியும் சேவை செஞ்சாங்க. அவங்க நல்லா பாட்டுப் பாடுவாங்க. நல்லா நடனமாடுவாங்க. கவிதையும் எழுதுவாங்க. அழகான கையெழுத்து அவங்களுக்கு. ரொம்ப மென்மையான குணம் கொண்டவங்க. ‘நிதர்சனம்’ ஊடகத்துல பணிபுரிஞ்சாங்க. அவங்களுக்கு 25 வயதாக இருக்கும்போது அருட்செல்வனை காதலித்து கல்யாணம் பண்ணினாங்க. அவரும் போராளிதான். அவங்க இருவரும் ரொம்ப சந்தோஷமாக இருந்தாங்க. அவங்களுக்கு குழந்தையும் இருந்தது. குழந்தையின் பெயர் அகழ்யாழ்.

கடும்போர் சூழ்ந்து பதுங்கு குழிகளை வாழ்விடமாக்கி முதுகு வளைந்து மக்கள் நடமாடிய காலத்தில்கூட, அவங்க தன் குழந்தைகளையும் மறந்து உறவிழந்து தவிப்போரையும், காயமடைந்து மருந்தின்றி கிடப்போரையும் ஆற்றுப்படுத்துவதிலேயே தன் நாட்களைக் கழித்தாங்க. பதுங்கு குழியில்தான் அந்தக் குழந்தையின் வாழ்க்கையும் இருந்தது. அஞ்சு மாசம் இருக்கும்போது நோய் தாக்க, மருந்து இல்லாம, பணம் இல்லாம அந்தக் குழந்தை தவித்தது. சின்னக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்துகூட இல்லாம பெரியவங்களுக்குக் கொடுக்கும் மருந்தைக் கொடுத்ததால் அந்தக் குழந்தை பதுங்குகுழியிலயே இறந்துடுச்சு. அருட்செல்வனைப் பற்றி இப்போது எந்த தகவலும் இல்லை.

வன்னியில போர் நடந்துகொண்டு இருக்கும் போது நாங்க வெளிநாடு வந்தோம். வன்னியில உச்சக்கட்ட யுத்தம் நடந்ததால் சரணடைய ஒருபாதை வேணும்தானே… ஆனா, அப்படி ஒரு பாதையே அங்கு இல்லை. ஆர்மியை கடந்துதான் வெளியேற முடியும். இசைப்பிரியாவுக்கு அங்கு இருந்து வெளியே வருவதற்கு பயம் இருந்தது. அதுனால அங்கே இருந்தாங்க. பயம் மட்டும் காரணம் இல்லை.. கஷ்டப்படும் மக்களுக்கு இங்க இருந்து உதவிசெய்ய வேண்டும்னு நினைச்சாங்க. அதுனாலதான் வரல.

எல்லாருக்கும் உதவணும்னு நினைச்சாங்களே தவிர, ஆர்மி உடன் சண்டை பிடிக்கணும் என்ற எண்ணம் எல்லாம் அவங்களுக்கு இல்லை. குண்டுகள் தூரத்தில் வெடிக்கும்போதே ரொம்ப பயப்படுவாங்க. அதனால் முகாமுக்கு வராமல் அங்கயே இருந்தாங்க. ஆர்மி என்றால் அவர்கள் தமிழ் ஆட்களுக்கு செய்த கொடுமை எல்லாம் ஞாபகத்துக்கு வரும். அதுதான் ஆர்மியிடம் சரணடைய பயம். இனி வழி இல்லை குண்டு அடிப்பட்டு சாகப்போறோம் இனி ஒன்றும் செய்ய இயலாதென்று ஆர்மியிடம்தான் எல்லோரும் சரணடையப் போனாங்க. நாங்களும் சரணடைஞ்சோம். கடைசி தங்கச்சிதான் அவகூட கடைசியாக இருந்துட்டு வந்தாங்க. ‘அம்மாகூட போ. எல்லோரையும் நல்லா பார்த்துக்கோ’னு மட்டும் சொல்லி இசைப்பிரியா, தங்கையையும் அனுப்பிட்டாங்க. அதன் பிறகு யாருமே அவங்களைப் பார்க்கல. இப்போது சேனல் 4 வெளியிட்ட வீடியோவில் இருப்பது இசைப்பிரியாதான். என் தங்கை இருக்கும் அந்த வீடியோவைத் திரும்பத் திரும்ப காட்டி எங்களை ரொம்ப காயப்படுத்துறாங்க.

உங்க பத்திரிகை மூலமாக எல்லா ஊடங்களுக்கும் ஒரு தகவல் சொல்ல விரும்புறேன்… நாங்க தமிழர். எங்களுக்கென்று கலாசாரம் இருக்கு. நாங்க வீரத்தோடு, மானத்தையும், பாசத்தையும் எங்க குடும்பம் ஒருசேர வளர்த்து இருக்கு. எங்க சமுதாயம் அப்படிதான் இன்னும் இருக்கு. ‘நாங்க ஒரு பிரச்னைக்குத் தீர்வு காணப்போகிறோம். சிங்களத்துக்கு எதிராக செய்யறோம்’னு சொல்லிட்டு, பெண்களுடைய ஆடை இல்லாத படங்களை, காட்சிகளை அப்படியே வீடியோவாகப் போடுறது, படமாகப் போடுறது ஆகியவற்றை எல்லாத் தமிழரும் எல்லா ஊடகங்களும் தவிர்க்கணும்.

இசைப்பிரியாவை மட்டும் நான் சொல்லவில்லை… ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களுக்கும் சேர்த்து சொல்றேன். இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப்பாக வாழ்ந்து, நம் தமிழ் சமூகத்துக்காகவே உயிர் நீத்த ஒரு தமிழ்ப் பெண். அவளை இப்படிக் கொச்சையாக தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப காட்டி வருவது தர்மமா… நியாயமா? பூவினும் மென்மையான அந்தத் தாயின் காட்சிகளை கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகளாக்க வேண்டுமா? அவளது சகோதரியானதால் நான் மட்டுமல்ல… அவளை நேசித்த தாய்மடி உறவுகளும் இதை விரும்பவில்லை.

கண்மை விளம்பரத்துக்கு ஒரு பெண்ணைக் காட்டுவாங்க… கார் விளம்பரத்துக்குப் பெண்ணைக் காட்டுவாங்க. பெண்ணை விளம்பரப் பொருளாகப் பார்க்கிறாங்க. இங்கயும் ஒரு பெண் சம்பந்தமாக எந்தச் செய்தி வந்தாலும், பெண்களின் உடம்புகளைத்தான் போட்டுக் காட்டுறாங்க. இது வக்கிரமான சிந்தனை. இதுக்கு மிகுந்த மன வருத்தம் தெரிவிக்கிறேன். வர்ணனை செய்ய வேண்டிய விஷயங்கள் வேற இருக்கு. இதனை வர்ணனை செய்ய வேண்டாம்.

இப்போது வெளிநாட்டில் அம்மாவும் நானும் தங்கையும் இருக்கிறோம். ஆனா, எங்க உயிருக்கு பாதுகாப்பு இல்லதானே? அந்த நாட்டுல எங்களுக்குப் பாதுகாப்பு இல்லாததுனாலதான் அந்த நாட்டை விட்டு ஓடிவந்தோம். ஆனா அச்சுறுத்தல் இன்னமும் இருக்கு. எங்க குடும்பத்துக்கு எப்போதுமே அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்யுது. இந்தியா எதாவது செய்யும் என்று எதிர்பார்த்தோம். எங்களை வந்து காப்பாற்றும் என்று நினைத்தோம். ஐ.நா. வந்து எங்களைக் காப்பாற்றும் என்று காத்திருந்தோம். ஆனா, யாருமே கை கொடுக்கல. ஜெயலலிதா அம்மா ஆட்சி வந்ததும் நமக்கு ஏதாவது பண்ணுவாங்க, உதவுவாங்க என்று எதிர்பார்த்தோம். யாருமே உதவல. எல்லோரும் தங்களது அரசியல் நோக்கத்துக்காகத்தான் பயன்படுத்துனாங்க. யாரும் எங்களுக்கு தீர்வு தருவார்கள் என்று இனி நாங்க நம்பவில்லை!” -தவிக்கும் வார்த்தைகளால் சொல்லி முடித்தார் தர்மினி.

நா.சிபிச்சக்கரவர்த்தி

http://www.vikatan.com