கூட்டமைப்பு பொறுப்புடன் செயற்படவில்லை! – சண்முகலிங்கம் சஜீவன்

0
660

ஜெனீவா மனித உரிமை அவையின் உத்தியோக அமர்வுகளுக்கு வெளியே நடாத்தப்படும் ஓர நிகழ்வுகளில் சில முக்கியமான தயாரிப்பு வேலைகளுக்கான கருத்துப்பரிமாறல்கள் நடைபெறும். இவ்வாறான கூட்டங்களை பலவிதமான அமைப்புகள் நடாத்துவது வழமை.இவ்வாறான ஒரு சந்திப்பில், அதுவும் 18 நாடுகளைக்கொண்ட ஓர் அரங்கில் கலந்து கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு முன்வைக்கப்பட்டபோது, சர்வதேச விசாரணையை திரு சுமந்திரன் அவர்கள் வேண்டவில்லை.மாறாக, வரப்போகும் தீர்மானம ஸ்ரீ லங்கா அரசாங்கத்திற்கெதிரான ஒரு தீர்மானமாக அமைந்தாலே போதுமானது என்ற கருத்துப்படவே அவர் உரையாற்றியிருந்தார்.

sajeevan
இரண்டு பக்கமும் செய்த போர்க்குற்றம் என்ற பொருள்படவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை இருந்தது.எனவே, ஈழத் தமிழத் தேசிய இனத்தின் பார்வையையும் கோரிக்கையையும் முன்வைப்பதில் தவறான அணுகுமுறையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிறிய குழு, ஆனால், கூட்டமைப்பின் தலைமையாகத்தம்மைச் சித்தரித்துக்கொண்டு,ஜெனீவாவில் பெரும் தவறிழைத்திருக்கிறார்கள்.

அடிப்படையில் இங்கு 60 ஆண்டுகாலமாக நடைபெறும் இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை இவர்கள் முன்னெடுக்கத் தவறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.ஸ்ரீ லங்கா குறித்த நகல் தயாரிக்கப்படும் போது எமது நிலைப்பாட்டை முன்வைப்பதை பல சக்திகளும், குறிப்பாக ஈழத்தமிழருக்கு நடந்த, நடந்துவரும் இனரீதியான அடக்குமுறை விடயத்தில் தமிழர் தரப்பின் நியாயத்தைப்புரிந்துகொண்டுள்ள பல மனிதர்களும் ஐ.நா.வின் மனித உரிமை அவையில் இருக்கிறார்கள்.

வல்லரசுகளினதும், பிராந்திய சக்திகளினதும் அநீதியான போக்குகளை விளங்கிய மனிதர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு குறித்த கருத்துநிலையை கூட்டமைப்பும் புலம் பெயர் சமூகமும் பலமாக முன்வைக்கும் போதுதான் அவர்களால் ஐ.நா.வுக்கு உள்ளிருந்து செய்யக்கூடிய சில அடிப்படையான வேலைகளை இலகுவாக்கும். இதைப்புரிந்துகொண்டு செய்யப்படவேண்டிய ஒரு முக்கியமான வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துக்கொள்ளாது தமிழர் தரப்பு செயற்படுவதே மிக முக்கியமான சிக்கலாக உள்ளது என்பதை நான் ஜெனிவாவில் நேரே சென்று பார்த்தபோது புரிந்துகொள்ளமுடிந்தது.

அங்கு சமுகமளித்திருந்த பல புலம்பெயர் தமிழர்கள் தனிப்பட்ட ரீதியில் கதைக்கும் போது கூட்டமைப்பில் ஒரு சிலர் எடுத்திருக்கும் நிலைப்பாடு பெரிய தடங்கலாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அங்கு நான்கு முறை உரையாற்றிய ஒரு விடயம் மட்டுமே உறுதியான கருத்தை முன்வைத்ததாக அவர்கள் சொன்னார்கள். வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் தமது நட்பையும் ஆதரவையும் அனந்தியிடம் வெளிப்படுத்தினார்கள். எமது கருத்தை மனித உரிமை அவையின் அதிகாரபுர்வமான அமர்வுகளில் பங்கெடுத்து வெளிப்படையாக முன்வைப்பதற்கு ஏன் இதுவரைகாலமும் தவறினோம்? மாகாணசபை உறுப்பினரான அனந்தியும், உள்ளுராட்சி சபையின் உறுப்பினரான நானும் மொத்தம் 6 தடவைகள் மனித உரிமைகள் சபையில் பேசக்கூடியதாக இருந்த போது, ஏன் இவ்வளவு காலமும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட அங்கு தோன்றி நேரடியாக உரையாற்றவில்லை என்ற கேள்வி மிகவும் பாரதூரமானது.

ஆகவே, ஏதோ ஒரு சக்தியின் பேச்சுக்கு இணங்க ஓரநிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, நேரடியாக ஈழத்தமிழரின் கோரிக்கையை பகிரங்கமாக முன்வைப்பதற்கு ஏன் கூட்டமைப்பின் தலைமை என்று சொல்லிக்கொள்பவர்கள் தடையாக இருந்தார்கள் என்ற கேள்வி அங்கு எழுந்தது.அது மட்டுமல்லாமல் அனந்திக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை இவர்கள் கட்டவிழ்த்துவிட சில தமிழ் இணையத்தளங்களையும் பயன்படுத்தியது தெளிவாகத்தெரிந்தது. இந்த ஆபத்தான போக்கில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைக் காப்பாற்ற வேண்டிய கடமை மக்களாகிய உங்களுக்கே இருக்கிறது. உண்மையான, நேர்மையான ஊடகப் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமுகத்திற்கும் இதிலே முக்கிய பங்கு இருக்கிறது.

எமது தேசிய இனத்தின் அரசியல் தலைவிதி இன்று இரண்டு கூரிய வாள்களினால் அறுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. முதலாவது வாள் 13ம் சட்டத்திருத்தத்தைப் பற்றி மட்டுமே பேசியவாறு எமது தேசிய இனப்பிரச்சனையை ஒற்றையாட்சி சிறிலங்கா அரசியல் யாப்புக்குள் மட்டுப்படுத்த முனைகிறது. இரண்டாவது வாள் போர்க்குற்றம் புரிந்த இரண்டு தரப்பை பற்றிய விசாரணை, அதுவும் போரின் கடைசிக்கட்டத்துக்கு மட்டும் அதைக்குறுக்கிவிடுவது என்பது.

எம்மை நாளாந்தம் அறுக்கும் இந்த இரண்டு வாள்களின் பற்களில் இருந்து எமது தேசிய இனத்தைக் காப்பாற்றிச்செல்லவேண்டிய கடமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வரலாற்றுக்கடமை. இதில் தாம் தவறுவது மட்டுமல்ல, ஒழுங்காகச் செயற்படுபவர்களைத் தடுத்து, அவர்கள் மீது கேவலமான தமது அரசியலைத் திருப்பிவிடும் போக்கைத்திருத்தியமைக்கவேண்டியது எமது கடமை.இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு அனந்திபோன்றவர்களை அந்நியப்படுத்தும் நடவடிக்கையை தமிழ் மக்கள் அனுமதிக்கக்கூடாது.

அனந்தி அவர்களையும் என்னையும் தவிர தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அவர்களும் ஜெனிவாவில் தனது நிலைப்பாட்டை முன்வைத்தார். தவிரவும்,புலம் பெயர் பிரதிநிதிகள் சிலரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும், வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும் கூட ஈழத்தமிழர் மீதான இன அழிப்புத்தொடர்பான தமது நிலைப்பாட்டை பதிவுசெய்தார்கள்.ஜெனிவா சென்ற அனைவரும் முன்வைத்த கருத்துக்கள் இன்றும் ஐ.நா. இணையத்தளத்தில் வீடியோ பதிவாக பேணப்படுகிறது. எவரும் சென்று பார்க்கலாம். அங்கே முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் வீடியோவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பார்த்து அது தொடர்பான மாற்றுக்கருத்து இருந்தால் அதை முன்வைக்கலாம். அல்லது,ஜெனிவா போவதற்கு முன்னதாக இப்படியானதொரு விவாதத்தை நடாத்தி முடிவுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இது இரண்டுமே சரியான ஜனநாயக வழிகள். இதைச்செய்வதற்குப் பதிலாக, தனிமனிதத்தாக்குதலைச் சிலர் தொடுத்திருக்கிறார்கள்.இதை ஒட்டுமொத்த தமிழ்ச் சமுகமும் சரியாக அடையாளங்கண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சரியான வழியில் இயங்குவதற்கு அதைப் பலப்படுத்திவிடவேண்டும் என்ற பகிரங்க வேண்டுகோளை இங்கு முன்வைக்கிறேன்.

அடுத்ததாக அரசியல் தீர்வு குறித்த நிலைப்பாடு. குறிப்பாக,அரசியல் தீர்வு குறித்து பேசும்போது ஏற்கனவே நடந்துமுடிந்த நோர்வேயின் மத்தியஸ்தத்தின்போது இடைக்காலத் தீர்வு குறித்த ஒரு நகல் முன்வைக்கப்பட்டது.இப்போது பேச்சுவார்த்தைக்கான நிலைப்பாடு எவ்வாறு அமையவேண்டும் என்பதில் 13ம் திருத்தச் சட்டம் என்பதை ஒரு கருவியாக வைத்து செயற்பட முடியாது என்ற நிலைப்பாட்டைத் தெளிவாக சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைக்கவேண்டும். நாமே எமது பிரச்சனை என்ன என்பதைத் தெளிவாக முன்வைக்கவேண்டும்.இதைப்போலவே நோர்வே மத்தியஸ்தம் வகித்தபோது உள்நாட்டுப் பொறிமுறையிலேயே தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தும் போக்கு காணப்பட்டது. இதையும் நிராகரித்த நிலையிலேயே ,இடைக்கால நிர்வாகம் ஒன்றைக்கோரும் மாதிரி வரைபு ஒன்று தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டது.

இன அழிப்புப் போர் ஒன்று நடந்து முடிந்திருக்கிற நிலையில், மனிதாபிமானத்திற்கெதிரான பெருங்குற்றங்கள் ,இழைக்கப்பட்டிருக்கிற நிலையில், அதுவும் குறிப்பாக ஒரு தேசிய இனமும் அதன் வளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிற நிலையில் எந்தவிதமான அரசியல் கொள்கையை நாம் கொண்டிருக்கவேண்டும்.குறிப்பாக, தென்னாபிரிக்க முயற்சி என்று ஒன்றுகூறப்பட்டுவருகிறது. இதுவும் எமது அரசியற்கொள்கையை ஒரு உள்நாட்டு விவகாரமாக மட்டுப்படுத்திவிடும் போக்கில் முன்வைக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இதனால், அரசியல் கொள்கையைத்தெளிவாக முன்வைக்கவேண்டும். சர்வதேச விசாரணை, எமது மக்களின் பாதுகாப்பான சூழலுக்கான சர்வதேச உத்தரவாதம், இன அழிப்பில் இருந்து எமது தேசத்தைப் பாதுகாக்கும் பொறிமுறை, எமது மக்களின் ஜனநாயக ரீதியான அபிலாசையைத் தீர்மானிக்கும் ஒரு ஐ.நா. பொறிமுறை போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஒரு தெளிவான வேலைத்திட்டத்தை நாம் முன்வைக்கவேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடாக இக்கிறது.

இதை ஒரு வழுவிய போக்கில் இழுத்துச்செல்லும் நிலையைக்கண்டு நாம் வேதனையடைகிறோம். எனவே, ஊடகங்களிடமும்,சிவில் சமுகத்திடமும், கல்விச் சமுகத்திடமும் இதற்கான உந்துதலை வேண்டுகிறேன். வடக்கிலும் கிழக்கிலும் ,இன்னலுறும் எமது மக்களின் புனர்வாழ்வுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு புலம் பெயர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை நான் அங்கு சென்றபோது நேரடியாக பார்த்து வந்திருக்கிறேன்.

சில நாடுகளின் வெளிவிவகார அதிகாரிகள் உட்பட பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து இந்த மனிதாபிமான வேலைத் திட்டங்களில் பங்கெடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை அவர்களுக்கு முன்வைத்தேன்.குறிப்பாக வலி வடக்கு மக்களின் காணி அபகரிப்பின் யதார்த்தமான நிலை என்ன என்பது குறித்த ஒரு விளக்கத்தை அவர்களுக்கு கொடுக்கமுடிந்தது. புள்ளிவிபரங்கள் எவ்வாறு திரிக்கப்படுகின்றன. இந்த மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்ற விடயங்களை ஆவணங்களோடு எடுத்துக்காட்டியபோது மிகுந்த அக்கறையோடு அவர்கள் கேட்டார்கள். இந்தவகையில், எம்மிடம் ஆவணங்கள் சரியாக ஒழுங்குபடுத்தப்பட்டு, எமது நிலைமையை வரைபடங்களோடும் சட்ட ஆவணங்களோடும் செய்தித் தொகுப்புகளோடும் தொடர்ச்சியாகத் தொகுத்து வழங்கவேண்டிய தேவையையும் நான் அடையாளங்கண்டுள்ளேன். ஒட்டுமொத்தமாக, வேலைத்திட்டங்களை அடையாளங்கண்டு அவற்றைப்பொறுப்பெடுத்து நடாத்துவதில் ஆர்வம் மிக்க ஒரு சமுகம் எமக்குப் பக்கபலமாக அங்கு இருக்கிறது. அதைச்சரியாக பயன்படுத்தும் ஆற்றலை நாம் இங்கே வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இது குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் நாங்கள் முன்னுதாரணமாகச்செயற்பட்டு சில முன்னோடி வேலைகளை இங்கு செய்யும்போது எமது மக்களின் புனர்வாழ்வை நாம் உறுதிப்படுத்தலாம். முக்கியமாக, வடக்கு கிழக்கு இரண்டுமாகாணங்களிலும் புனர்வாழ்வும் அபிவிருத்தியும் தொடர்பாக எமது கல்விமான்களும், பல்கலைக்கழக சமுகமும், சிவில் சமுகமும் சமுகப் பொறுப்புடன் இந்த விடயத்தில் செயலாற்றவேண்டும்.

அறிவுரீதியான அணுகுமுறைகளையும் எமது தமிழ்த்தேசத்தின் புனர்வாழ்வு, மேம்பாடு குறித்த ஒரு அணுகுமுறையை இங்கிருக்கும் நாமே வகுத்துக்கொண்டிருக்கவேண்டும். அப்படியான ஒரு வேலைத்திட்டத்தை ஏன் இதுவரை எவரும் முன்வைக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஒரு தேசமாக எமது சமுகம் ,இயங்கினால் தான் எமது சமுகம் மேம்பாடு காணமுடியும். புனர்வாழ்வும், மேம்பாடும், ஜனநாயக வழியிலான எமது அரசியல் செயற்பாட்டையும் பார்க்கின்றபோதுதான் எமது புலம் பெயர் சமுகம் கூட தனது பங்கை சரியான வழியில் ஆற்றமுடியும். நாங்கள் எல்லோருக்கும் முன்னுதாரணமாக நடப்பதற்கான அறிவியல் அணுகுமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக, எனக்குள் கேட்டுக்கொண்ட கேள்வி, ஒரு உள்ளுராட்சி உறுப்பினனாக நான் மேற்கொண்ட ஒரு பிரயாணத்தில் இவ்வளவு விடயத்தைச் செய்யமுடிகிறது,படிக்கமுடிகிறது என்றால், இவ்வளவு காலமும் எத்தனையோ திக்குவிஜயங்களை மேற்கொண்டுவருகின்ற எமது அரசியல் பிரதிநிதிகள் எவ்வளவு விடயங்களைச்செய்திருக்கமுடியும்.

இனியாவது அவர்கள் அனைவரையும் சரியாக ஆற்றுப்படுத்தவேண்டுமானால், எமது அறிவுச்சமுகம் சமுகம் சார்ந்த செயற்பாட்டில் இறங்கியாகவேண்டும். ஊடகங்கள் சரியான ஆய்வுகளில் ஈடுபடவேண்டும். உள்ளுர் ஊடகவியலாளர்களும் சர்வதேசப் பரிமாணத்துடன் விடயங்களைப் பார்க்கவேண்டுமானால், நீங்களும் வெளியே சென்று என்ன நடக்கிறதென்பதை நேரிடையாகப் பார்த்துவந்து மக்களுக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

(வலி.வடக்கு கூட்டமைப்பு பிரதேச சபை தலைவரும் வலி.வடக்கு மீள்குடியேற்ற அமைப்பின் தலைவருமான சண்முகலிங்கம் சஜீவன் யாழ்.ஊடக அமைய பத்திரிகையாளர் மாநாட்டினில் ஆற்றிய உரையின் சுருக்க வடிவம்)