கேணல் பரிதி அவர்களின் ஓராண்டு நினைவாக பேரணி

0
532

france-rallyஅன்பான தமிழீழ மக்களே! பிரான்சு நாட்டின் மனிதநேய அமைப்புகளினதும், விடுதலை அமைப்புகளினதும் அரசியல் இராஐதந்திரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய எங்கள் மாவீரன் கேணல்பரிதி அவர்களின் ஓராண்டு நினைவாக 08.11.2013 அன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரான்சின் நீதி மன்றத்திற்கு அண்மையிலும் அதி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றான சென்மிசேல் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள எமது பேரணி ஊர்வலம் பிரதான வழியினூடாகச் சென்று பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நிறைவடையும். பின்னர் கேணல் பரிதி அவர்களின் ஒராண்டு நினைவாக மலர் ஒன்றும், பாடல் இறுவெட்டு ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படும்.

கேணல் பரிதியினதும், மற்றும் லெப். கேணல் நாதன், கப்டன் கஐன் ஆகியோரின் படுகொலைக்கு நீதி கேட்டும், அத்துடன் சிறிலங்கா அரசானது மாபெரும் தமிழினப்படுகொலையை நடாத்திவிட்டு இன்னும் தொடர்ச்சியாக எமது மக்களைக் கொடுங்கோண்மை ஆட்சிக்குள் அடிமைப் படுத்திக்கொண்டு, சர்வதேச நாடுகளுக்குத் தன்னைச் சனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு நாடாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் வகையில் நவம்பர் மாதம் நடாத்தவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டிற்குச் செல்லாது கனடா புறக்கணித்தது போன்று பிரித்தானியாவும் மற்றைய நாடுகளும் புறக்கணிக்க வேண்டும் எனக்கேட்டும் ஐரோப்பிய மக்களையும் இணைத்துப் பிரான்சின் அனைத்துக் கட்டமைப்புகளும் முன்னெடுக்கும் நீதிக்கான பேரணியில் அனைத்துத் தமிழ்மக்களும் கேணல் பரிதியை நெஞ்சில் சுமந்து குடும்பங்களாக, சொந்தங்களாக, ஊர்மக்களாக, நண்பர்களாக, தொழிலாளர்களாக இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் எமது நியாயமான கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் எம்மால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போடும் செயற்பாட்டில் தாங்கள் முன் வந்து தங்கள் கையெழுத்துகளைப் போடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். தாயகத்தில் கொடிய இராணுவ அடக்கு முறைக்கு மத்தியிலும் நடந்து முடிந்த வடமாகாணத் தேர்தலில் தமிழீழ மக்கள் தமது உறுதியான நிலைப்பாட்டினைச் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்துக்கும் தெட்டத்தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறே பிரான்சில் நடைபெறவுள்ள இந்தப் பேரணியும் மற்றும் பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெறுகின்ற தமிழீழ மக்களின் போராட்டங்களும் தாயக விடுதலையில் புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களின் ஒன்றிணைந்த உறுதியான நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன. தாய் நாட்டின் விடுதலையை வென்றெடுக்கத் தயங்காது ஒன்றிணைவோம் !!!

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு