சனல் 4 ன் புதிய சிறீலங்கா கொலைக்களம் ஒரு மதிப்பீட்டுப் பார்வை

0
654

நின்று கொல்லும் தெய்வம் அங்கே சென்றுவிட்டது..
miss-88
நேற்று முன்தினம் சிறீலங்கா கொலைக்களம் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட காணொளி 51 நிமிடங்கள் 16 செக்கன்கள் மறுபடியும் வன்னிப் போர்க்களத்திற்குள் நம்மை கூட்டிச் சென்றது.

சிங்கள இராணுவம் நடாத்திய மனித இறைச்சிக்கடையும், அரைத்த இறைச்சி சக்கையும், பாலியல் வக்கிரமும், பிணந்தின்னும் பேயாட்டமும், நரபலி பேய்களின் நடனமும் ஒரு மணி நேரமாக அரங்கேறின..

இது மனிதர்கள் வாழும் நாட்டில் நடந்ததா..? இல்லை பேய்களின் தேசத்தில் நடந்ததா..? என்ற பிரமையை ஏற்படுத்தியது காணொளி.

சனல் 4 ன் முன்னைய காணொளிகளுக்கும், இதற்கும் இடையில் பாரிய காட்சி வேறுபாடுகள் காணப்படவில்லை.

இசைப்பிரியா உயிருடன் கைது செய்யப்பட்டு, பின் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுவது, சவேந்திரசில்வாவிடம் நிருபர் ஒருவர் ” நீ போர்க்குற்றவாளியா..?” என்று வினவுவது ஆகிய இரு காணொளிகள் புதிதாக இருக்கின்றன.

பழைய சம்பவங்களை காட்டினாலும் சனல் 4ன் முன்னைய காலத்துப் பார்வைக்கும் இப்போதைய பார்வைக்கும் இடையே பலமான கூர்மையும், சட்ட வாதாட்ட வித்தியாசமும் தெரிகிறது.

முழுநேர காணொளியிலும் அச்சாணியாக ஓடுவது, போருக்குத் தலைமைதாங்கிய மகிந்த ராஜபக்ஷ, அவருடைய சகோதரரான பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, பெரும்; கொலைகளுக்கு தலைமைதாங்கிய சர்வேந்திரா சில்வா போன்றவர்கள் இன்றுவரை யாதொரு வழக்கையும் சந்திக்கவில்லை.

சுதந்திர மனிதர்களாக பூமிப்பந்தில் நடமாடுகிறார்கள்.. இது உலகத்தின் சட்டத்திற்கும், நீதிக்கும், மனித குலம் அடைந்த நாகரிக முன்னேற்றத்திற்கும் எத்தனை பெரிய இழுக்கு..

இத்தகைய மோசமான மனிதர்களுடன் உலகத்தின் மூன்றில் ஒரு பங்கு மனிதர்களை உள்ளடக்கிய பாரிய அமைப்பான பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் கைகுலுக்கப்போகிறார்கள்.

இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து..

இவர்கள் எல்லாம் கைகுலுக்கினாலும் காரியமில்லை நமது நாட்டு பிரதமர் டேவிட் கமரோன், அரச குடும்பத்தின் சார்பில் இளவரசர் சாள்ஸ் ஆகியோரும் இரத்தம் தோய்;த மகிந்த ராஜபக்ஷவின் கைகளைப் பற்றிக் குலுக்கப்போகிறார்களே..

ஐயோ.. என்று பதைபதைக்கிறார் கலம் மக்ரே..

இதுதான் மரியாதைக்குரிய உலக நீதியா..? இதுதான் உலகம் கதைக்கும் மனித உரிமையா..? என்று விரக்தி கேள்வியாக எழுப்புகிறது… உறைந்து கிடக்கும் உலக சமுதாயத்தின் சுவர்களில் மனச்சாட்சி ஓங்கி உதைக்கிறது.

இன்றைய உலகம் சிறீலங்கா விடயத்தில் எவ்வளவு பிழையாக நடந்தது, நடக்கிறது என்பதை வார்த்தைக்கு வார்த்தை புட்டுப்புட்டு வைக்கிறார் கலம் மக்ரே.

இதற்காக தனது வாதங்களை மிகச்சிறப்பாக, மற்றவர்கள் வாய்திறக்க முடியாதபடி இறுக்கியிருக்கிறார்.

சிறீலங்காவும், இந்தியாவும் வார்த்தைகள் இன்றி உறைந்துபோய் கிடக்க அதுவே காரணம்.

முதலாவது..

சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் தமது இராணுவம் ஒரு பொது மக்களைக்கூட இந்தப் போரில் கொல்லவில்லை, வன்னி மக்களை பத்திரமாக மீட்டுவிட்டதாக தெரிவிக்கும் வடிகட்டிய பொய்யை காட்டுகிறார்.

சிறீலங்காவின் அமைச்சர் அனைத்து தமிழ் மக்களும் பத்திரமாக புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுடுவிட்டதாக தெரிவிக்கும் காட்சி அடுத்து அரங்கேறுகிறது.
missi09
அதன் பின்னர் இசைப்பிரியா கொலை, பாலச்சந்திரன் கொலை, கொத்துக்கொத்தாக சிறுபிள்ளைகளைக் கொல்வது, வைத்தியசாலை மீது குண்டு மழை பொழிவது என்று மனித குலக் கொலைகள் சரமாரியாக நிறைவேற்றப்படுகிறது.

பாதுகாப்பு வலயம் என்று போலியான வலயத்தை அறிவித்துவிட்டு மறுபடியும் அதன் மீதே குண்டு வீசுகிறார்கள்.

புதுமாத்தளனில் கீலமான பகுதிக்குள் சிக்குப்பட்டவர்களை இரண்டாகப் பிரிப்பதற்காக மறுபடியும் மோசமான ஷெல்களை வீசி பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று அப்பகுதியை துண்டாடுகிறார்கள்.

மக்கள் தப்பி ஓட அவர்களை நோக்கி சகட்டுமேனிக்கு சுடுகிறார்கள்… ஆபிரிக்கக் காடுகளில் மிருகங்கள் ஓடும்போதுகூட இப்படி சுடுவதில்லை.. அதுவே பெரும் குற்றச் செயல்..

” லைசென்ஸ் ரு கில் ” என்ற அதிகாரத்தை சிறீலங்காவுக்கு வழங்கியது யார்..?

ஆபிரிக்கக் காட்டில் யானைகளை கொன்று தந்தங்களை எடுப்பதை குற்றமாகக் கண்டு ஓலமிடும் உலகம்..

இசைப்பிரியா போன்ற பெண்களை போரில் கைது செய்து வன்புணர்வு கொண்டு கொல்வது, போரில் இறந்த சடலங்களை மரியாதையின்றி ஏறி மிதிப்பது போன்ற செயல்களை பார்த்துவிட்டும் மாநாடு நடத்துவது எதற்காக..?

பார்ப்பவர்கள் உள்ளங்கள் பாதகர்களை நினைத்து பதைபதைக்கிறது.

சிறீலங்கா இராணுவத் தலைமை, பாதுகாப்பு உயர் பீடம் யாவும் வரையறையற்ற திட்டமிட்ட இனப் படுகொலை செய்து..

கொலை செய்யவில்லை என்று உலகத்திற்கு அப்பட்டமான பொய் உரைத்து..

அந்தப் பொய்களை மறைக்க பிணங்களை எரியூட்டி..

அழிக்கப்பட்ட தமிழர் நிலங்களை சூறையாடி..

வன்னியைப் போல மற்றய பகுதிகளை போரின்றி அழிக்கும் கலாச்சார பேரழிவை தொடங்கிவிட்டார்கள் என்று வாதிடுகிறது காணொளி.

அதைவிட முக்கியம் நடேசன், புலித்தேவன் சரணடைய சென்றபோது பாதுகாப்பு செயலருடைய அனுமதியுடனேயே சரணடைய சென்றார்கள், ஆனால் அவர்கள் சுடப்பட்டார்கள்.

ஆகவே புலிகள் சரணடைவது தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்திலும் சதியே அரங்கேறியதல்லாமல் சர்வதேச நியமங்கள் கடைப்பிடிக்கப்படவில்லை.

அதைவிட கேவலம் என்னவென்றால்…

இத்தனை கொலைகளையும் செய்த சர்வேந்திரசில்வா போன்ற சர்வதேச போர்க்குற்றவாளிகள் எல்லாம் சிறீலங்காவின் ஐ.நா ஊழியர்களாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா கட்டிடத்தில் பணியாற்றுகிறார்கள்.

அதைவிட மோசமான கேவலம்..

இந்த நாட்டிற்கு பொதுநலவாயத்தின் தலைமையை தாரை வார்க்கப்போகிறார்…

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சர்வதேச போர்க்குற்ற நீதிமன்று என்ன செய்கிறது..?

ஐ.நா என்ன செய்கிறது..?

இனி பொதுநலவாய நாடுகள்தான் என்ன செய்யப்போகிறது..?

கேள்விகளை அள்ளி வீசுகிறார் கலம் மக்ரே..

மேலும் பாலச்சந்திரனை சிங்கள இராணுவ பங்கரில் வைத்திருப்பது, பின் இரண்டு மணி நேரத்தில் கொல்வது, அவருடைய மெய்ப்பாதுகாவலரை கொன்று வீசுவது யாவும் அப்பட்டமான போர்க்குற்றம்..

“பொதுமக்கள் வாழிடங்களையும், பாதுகாப்பு வலயத்தையும் குறிவைத்து வேண்டுமென்ற சிங்கள இராணுவம் மோசமான ஆட்டிலறி தாக்குதல்களை நடாத்தியது” என்று ஐ.நா பணியாளர் கூறுவது.. யாவும் சிறீலங்காவுக்கு துணைபோன சர்வதேசத்தின் ஒழுக்கம் விபச்சாரம் நிறைந்தது என்பதை அம்மணமாக்குகிறது.

கலம் மக்ரேயால் சமர்ப்பிக்கப்படும் அத்தனை ஆவணங்களும் சர்வதேச தரத்தில் சட்ட நுணுக்கங்களுடன் முன் வைக்கப்பட்டுள்ளன.

போர்க்குற்றம் குற்றமே..!! அதை மறுத்து வாதாட யாதொரு ஓட்டையும் இல்லாமல் ஆதாரங்கள் கச்சிதமாகப் பின்னப்பட்டுள்ளன.

முன்னர் போர்க்குற்றவாளியாகி சிறைக்கொட்டடியில் மடிந்த யுகோசுலோவியா அதிபர் சொலபொடான் மிலேசெவிச்சுக்கு மேல்கூட இவ்வளவு வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

மகிந்த றெஜீம் சர்வதேசத்தின் பிடிக்குள் வளைக்கப்படுவது தெரிகிறது..

எப்படி வன்னியை சிறீலங்கா இராணுவம் திட்டமிட்டு சுற்றி வளைத்ததோ இப்போது அதுபோல சிறீலங்கா சுற்றிவளைக்கப்படுவதையே சனல் 4 காட்டுகிறது.

பொதுநலவாய நாடுகளின் செயலரும், இந்திய பிரதிநிதியுமான கமலேஸ் சர்மா போர்க்குற்றம் சாத்தியமில்லை என்று சொல்லுவது பூனையொன்று கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று கூறுவதைப்போல கேலிக்குரியதாக இருக்கிறது.

சிறீலங்காவிற்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணைப் பொறி முறை அவசியம் என்று ஜெனீவாவில் நவிப்பிள்ளை சொன்னது சரியே என்பதற்கு இன்னொரு சாட்சியமே சனல் 4 காணொளியாகும்.

அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது.. அது பழைய கதை..

இன்றோ… நின்று கொல்லும் தெய்வம் சிறீலங்கா சென்றுவிட்டது.. இது புதுக்கதை..

நன்றி : அலைகள்