சர்வதேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் வாக்குகளால் தமிழர்கள் சொன்ன செய்தியும் கூட்டமைப்புக்கான பொறுப்பும்

0
615

TNA-after-the-win-001தீயினில் வெந்து, உடல் கருகி மரணித்து, அந்த சாம்பலில் இருந்து மீள் பிறப்பெடுக்கும் பீனிக்ஸ் பறவையின் புராணக் கதைகளைக் கேட்டிருக்கிறோம். முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட உச்சக் கட்ட இன அழிப்புக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் பீனிக்ஸ் பறவையும் பேசுபொருளாகவும் விளங்கியது.

வட மகாணசபை தேர்தலின் முதலாவது முடிவாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு வெளிவந்தது. தாபால் மூல வாக்களிப்பிலேயே ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு தமிழர்களின் 500 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

எங்கு தமிழர்களும் அவர்களது போராட்டமும் குழிதோண்டி புதைக்கப்பட்டதாக எதிராளிகளால் அறிவிக்கப்பட்டதோ, அந்த மண்ணிலிருந்தே, இடைவெளியை நிரப்பலாம் என நம்புகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வெற்றியை, தோற்றுவித்தார்கள் தமிழர்கள். முல்லைத் தீவு தேர்தல் முடிவோடு முளைவிட்ட வெற்றிச் செய்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களை கைப்பற்றியதென்ற அறிவிப்பு வெளிவரும் வரை தொடர்ந்தது. இந்த வரலாற்று வெற்றியூடாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வைத்துள்ளார்கள்.
இதனூடாக, மகாவம்ச சிந்தனையை மையமாகக் கொண்ட மகிந்த சிந்தனைக்கும், அபிவிருத்தி என்னும் சலுகை அரசியலுக்கும் தக்க பதிலை, உரிமைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட தமிழர்கள் வழங்கியுள்ளார்கள். அத்துடன், தென்னிலங்கை சிங்கள கட்சிகளை வாக்கு என்னும் ஆயுதத்தால் வடக்கைவிட்டு விரட்டியடித்துள்ளார்கள்.

தமிழ் வாக்காளர்கள் தோற்றுவித்த இந்த வெற்றி, முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற பழமொழியை நடைமுறையில் காட்டியது. 2010 சனவரி மாதம் இடம்பெற்ற சிறீலங்காவின் சனாதிபதிக்கான தேர்தலில், வடகிழக்கு மக்களின் பெரும்பான்மையான வாக்கு சரத் பொன்சேகாவிற்கு இடப்பட்டது. சனாதிபதித் தேர்தலில், இன அழிப்புப் போரின் நாயகன் யார் என்ற பேய்க்கும் பிசாசுக்குமான போட்டியில், மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றாலும், அளிக்கப்பட்ட தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கே வீழ்ந்தது. இது இன அழிப்பு போரின் போது சிறீலங்காவின் இராணுவத் தளபதியாகவிருந்த போர்க்குற்றவாளி சரத்பொன்சேகாவிற்கான தமிழர்களின் அங்கீகாரமோ ஆதரவோ அல்ல. மாறாக, எமது தேசத்திற்கு வலியையும் அவலத்தையும் தந்ததில் பிரதானமானவரான மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்ச்சிவசப்பட்ட வெறி. இது கட்டுநாயக்க விமானநிலையத்தில் மகிந்த ராஜபக்ச மண்ணை முத்தமிட்டபோது வலுவடைந்தது.

அரசியல் தெளிவோடு காலம் வரும் வரை காத்திருந்து, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது போல, முக்கிய இனஅழிப்பு அரக்கர்களுக்கு வாக்குகள் மூலம் வேட்டு வைத்து, எமது தேசத்துக்கு புதைகுழி தோண்டிய போர்க்குற்றவாளி சரத்பொன்சேகாவை முற்றாக புறக்கணித்து, சமாதானம் என்ற போர்வையில் எமது தேசத்துக்கு பொறிவைத்த ஐக்கிய தேசியக் கட்சியை உலக சமாதான தினத்தில் தோற்கடித்ததனூடாக மாயையான மீள்நல்லிணக்கத்திற்கு பதிலடி வழங்கியுள்ளார்கள் தமிழர்கள்.

இந்த தருணத்தில், கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், கருத்தியல் ரீதியாக புலம்பெயர் தளத்தில் பிரிந்து நிற்கின்ற பல்வேறு அமைப்புகளும், தாயகத்திலுள்ள மக்களும், தமிழ் சிவில் சமூகமும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக சிறீலங்காவின் ஒற்றையாட்சி முறைமை அரசியலமைப்பை கேள்விக்குட்படுத்தி, மாகாணசபை முறைமை என்பது இனப்பிரச்சினைக்கு ஆரம்பப்புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ அல்லது இறுதித் தீர்வாகவோ அமையாது என்பதை உறுதிப்படத் தெரிவித்தார்கள். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெளிப்படையாகக் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. மேலும் ராஜபக்ச அரசாங்கத்தையும் அதன் கூட்டணியையும் தோற்கடிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் செயற்படும் பல்வேறு அமைப்புகளும் ஒருமித்த கருத்துடன் இருந்தன.

முப்பது வருட தியாகங்கள் வீண் போகக்கூடாது எனக் கூறி, இனஅழிப்பின் சாட்சியாக, மரணத்திற்கு மத்தியில் வாழ்கின்ற திருமதி.அனந்தி சசிதரன் அவர்கள் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டதும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி வேட்பாளர்களுக்கான ஆதரவுக் கூட்டங்களில் பேசியமை போன்ற கருத்துக்களும், கருத்தியல் ரீதியாக வேறுபாடுகளைக் கொண்ட புலம்பெயர் அமைப்புகள் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்று அறிக்கை விடுமளவிற்கு தூண்டியது.

ஆகமொத்த்த்தில், முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், தாயகமும் புலம்பெயர் தமிழர்களும் ஒன்றிணைந்த முதல் களமாக இதனைக் கருதலாம். இந்த கூட்டு முயற்சி ஊடாகவே இந்த வராற்று வெற்றி சாத்தியமாயிற்று எனலாம். இத்தருணத்தில், ஓற்றுமையைப் பற்றி பேசுபவர்கள், இந்த ஒற்றுமையென்பது, யார் யார் என்ற விடயத்திலும் பார்க்க, இவர்கள் எல்லாம் என்ன செயற்பாட்டை முன்னெடுக்கிறார்கள் அல்லது முன்னnடுப்பார்கள் என்ற அடிபடையிலேயே உருவானதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பை மேற்கொண்ட பின், வெற்றி மமதையுடன் இருந்த ராஜபக்சவிற்கு ஏற்பட்ட இரண்டாவது பெருத்த அவமானம் இது. முதலாவது அவமானம் 2010 ன் இறுதியில் புலம்பெயர் தமிழர்களால் பிரித்தானியாவில் ஏற்பட்டது. இது உலகப் புகழ்மிக்க ஒக்ஸ்போட் யூனியன், ராஜபக்சவின் உரையை இடைநிறுத்தியதோடு, ராஜபக்ச இலண்டனை விட்டு அவசரமாக வெளியேற வேண்டிய சூழலையும் உருவாக்கியது. இதனை வெளியக அவமானம் எனலாம். இரண்டாவது அவமானத்தை திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள எமது தாயகத்திலுள்ள மக்கள், நேற்று இடம்பெற்ற தேர்தலின் ஊடாக வழங்கியுள்ளார்கள். இதனை, உள்ளக ரீதியாக ராஜபக்ச சந்தித்த படுதோல்வி எனலாம்.

இத்தருணத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் மீது சுமத்தப்பட்டுள்ள பெரும் வரலாற்று பொறுப்பை சரிவர விளங்கி செயற்பட வேண்டும். ஏனெனில், தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்தமையானது, மகாவம்ச சிந்தனையை மையமாகக் கொண்ட மகிந்த சிந்தனைக்கும், அபிவிருத்தி என்னும் சலுகை அரசியலுக்கும் அடிக்கப்பட்ட சாவுமணி மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலத்திற்குமான எச்சரிக்கை ஒலியும் கூட. வரலாற்று ரீதியான தமிழர்களின் வாக்களிப்பு முறை மனப்பாங்கினை அவதானிப்பதனுடாக இதனை புரிந்துகொள்ள முடியும்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் எமக்குத்தான் ஆணை வழங்கியுள்ளார்கள் என்ற மனோபவத்தில் செயற்படுவதோ, விமர்சனங்களுக்கு முத்திரை குத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதோ, அவர்களின் எதிர்கால அரசியல் இருப்புக்கு உத்தரவாதம் வழங்காது.

ஏனெனில், கூட்டமைப்பானது, தனக்கென்றொரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்த போதும், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன்மைப்படுத்தாமல், தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை மற்றும் கடந்த கால தியாகங்களை முன்வைத்தே, பெரும் பிரச்சாரக் கூட்டங்களிலும், மக்கள் சந்திப்புகளிலும் கூட்டமைப்பின் பெரும்பான்மை வேட்பாளர்களும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்கு கேட்டார்கள்.

இதனூடக, தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துபவர்களையும், ஏன் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான சொல்லாடல்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முற்பட்டவர்களையும், அச்சத்தோடு பார்க்காமல், நடைமுறை அறிந்து ஆக்கபூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும். மக்களின், அபிலாசைகளே நடைமுறையின் அடிநாதம். அத்துடன், விமர்சனங்கள் சனநாயக சூழலில் முக்கிய தூண்கள். தமிழின உரிமையை மறுக்கும் சிறீலங்கா அரசின் தற்போதைய அரசாங்கம், வட மாகாண சபையை சுதந்திரமாகக் செயற்பட அனுமதிக்கப் போவதில்லையென்பதற்கு அப்பால், மேற்கூறப்பட்ட விடயங்களை கவனத்திற்கொள்ள வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இருப்புக்கும் தமிழ்த் தேசியத்தின் உறுதிப்பாட்டுக்குமான காலத்தின் தேவை.

நம்பிக்கை, மரியாதை, சர்சைக்குரிய பேச்சுக்கள், மறுப்பறிக்கைகள், முரண்பட்ட கருத்துக்கான தெளிவுபடுத்தல்களுக்கு மத்தியில், சட்டத் துறையில் மேதையும், ஆன்மீகத்தில் போற்றுதலுக்கு உரியவரும் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற மதிப்பிற்குரிய முன்னால் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், தன்னாட்சி உணர்வையும் போரின் வடுவையும் சுமக்கும் தமிழர்களால் வட மாகாண முதலமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். மக்கள் சேவையே தனது பணி என கருத்துரைத்த மதிப்பிற்குரிய விக்னேஸ்வரன் அவர்கள், காலத்தின் தேவையையும், வரலாறு சுமந்து நிற்கின்ற மக்களின் ஆணையையும், அபிலாசைகளையும் முன்னெடுக்கும் தார்மீக கடமையை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறார் என்பதே செப்டெம்பர் 21ற்குப் பின்னரான பிரதான கேள்வி.

பாலசுந்தரம் நிர்மானுசன்
(ஊடகவியலாளர் – மனித உரிமைச் செயற்பாட்டாளார், ஐரோப்பா)
http://nirmanusan.wordpress.com