சர்வதேச விசாரணயை யார் தடுத்தார்கள்? யார் திரித்தார்கள்?

0
510

us-resoluஅமெரிக்க தீர்மானம் என்கிற ஒன்று வராமல் இருந்திருந்தால் சர்வதேச விசாரணையை ஐ.நாவின் நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கும். அதற்கான அதிகாரத்தினை ஐ.நா சட்டக் குழு, மனித உரிமைக்குழு , ஐ.நாவின் துணை பொதுச் செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள் சர்வதேச விசாரணயை யார் தடுத்தார்கள்? யார் திரித்தார்கள்?

அமெரிக்க தீர்மானத்தினை ஆதரிக்கவேண்டும் அல்லது கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்கக் கூடாது என்று கூறுபவர்களிடம் திருமுருகன் காந்தி வெளிப்படையாக முன்வைக்கும் கேள்விகளை உலகத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டி வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

“பின்வரும் நிகழ்வுகளை முழுமையாக படித்துவிட்டு பின் பேசுங்கள், பொத்தாம் பொதுவான விவாதத்திற்கு நாங்கள் வரவில்லை. விவரங்கள், நிகழ்வுகள் அடிப்படையில் பேசலாம்.

1. 2009 போர் முடிந்தவுடன் மே மாதத்தில் ஐ.நாவின் மனித உரிமைக் கமிசன் சர்வதேச விசாரணையை பான் கி மூனது அதிகாரத்தின் கீழ் (விதி எண் 99) கொண்டு வரவேண்டும் எனக்கோரியது.

2. பான் கி மூனின் சட்ட வல்லுனர் குழு 2009 ஜூலையில் இதே கோரிக்கையை முன் வைத்தது.

3.இந்தக் கோரிக்கை ஐ.நாவின் விதி. இதை மறுக்க முடியாது என்பதால், சர்வதேச விசாரணையை திசை திருப்ப உள்நாட்டு விசாரணையை கோரினார் பான் கி மூன்.

4. 2010 ஜனவரி வரையில்(தனது தேர்தல் வரை) ராஜபக்சே உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்கவில்லை.

5.ஜனவரி 2010இல் டப்ளின் தீர்ப்பாயம் இனப்படுகொலைக்கான விசாரணையை கோரியது.

6.உள்நாட்டு விசாரணையை துவக்காததால் தனக்கு “என்ன நடந்தது, என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்காக” ஐ.நா நிபுணர் குழுவினை பான் கிமூன் அமைத்தார்

7.இறுதியாக உள்நாட்டு விசாரணையை ராஜபக்சே அமைத்தார்

8. 2011 ஏப்ரலில் வெளியான ஐ.நா நிபுணர் குழு அறிக்கை சர்வதேச விசாரணையை கோரியது. பான் கி மூன், மெளனம் காத்தார். (திட்டமிட்டே ஐ.நா மனித உரிமைக் கமிசன் கூட்டத் தொடருக்கு பின்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அறிக்கை 2011 மார்ச் மாதத்தில் தயாரானதாக தகவல் உண்டு. மேலும் தமிழகத்தின் தேர்தலும் கணக்கில் எடுத்துக்கொண்டே காங்கிரஸ் திமுகவிற்கு பாதகம் விளைவிக்கா வண்ணம் பார்த்துக் கொள்ளாப்பட்டது ).

9 சர்வதேச நிபுணர் குழுவின் மீது நடவடிக்கை எடுக்க பான் கி மூன் மறுத்தார், இதனால் நெருக்கடி ஏற்பட்டது. ராஜபக்சே கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு பரிந்துரைகளை அமுல்படுத்தினால் சர்வதேச விசாரணை தேவைப்படாது என்ற முடிவு முன்வைக்கப்பட்டது.

10. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினை மனித உரிமைக் கவுன்சில் ஏற்றுகொள்ள மறுத்தது.

11. சர்வதேச விசாரணை எனும் ஐ.நாவின் விதியை நடைமுறைப் படுத்த நெருக்கடி அதிகரித்ததை கணக்கில் எடுத்துக்கொண்டு, அமெரிக்காவும்-இந்தியாவும் சேர்ந்து உள்நாட்டு விசாரணையையும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதை ஒரு தீர்மானமாக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் 2012இல் கொண்டு வந்தார்கள். இதன்படி இலங்கையின் அரசியல் சாசனப்படி தீர்வு என்பதாக உள்ளடக்கம் அமைக்கப்பட்டது. இதுவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. (எனவே தான் 2012இல் நல்லிணக்க ஆணையத்தினையும், இலங்கை அரசியல் சாசனத்தினையும் எரித்தோம்)

12. ராஜபக்சே உள்நாட்டு விசாரணையையும், நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளையும் அமுல்படுத்த மறுத்தார். இதனால் ஐ.நா தீர்மானம் 2012 அமுல்படுத்த முடியாமல் போனது.

13. மீண்டும் சர்வதேச விசாரணையை ஐ.நா ஆரம்பிக்க வேண்டுமென்றார் நவநீதம் அம்மையார். ஆக மீண்டும் சர்வதேச விசாரணைக்கான நெருக்கடி ஏற்பட்டது.

14 இந்த நெருக்கடியைத் தவிர்க்க மீண்டும் 2013 இல் உள்நாட்டு விசாரணை என்கிற தீர்மானத்தினை அமெரிக்க முன்வைத்தது. இதில் புலிகள் மீதான விசாரணையையும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனவும் இந்தியா சேர்த்தது. நவநீதம் அம்மையாரின் சர்வதேச பரிந்துரைகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் என்கிற பிரிவில் இதைச் சேர்த்து செயல்திட்டத்தில் உள்நாட்டு விசாரணையை கோரியது.

15. ஆகஸ்ட் 2013இல் இலங்கை வந்த நவநீதம் அம்மையார் தனது நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரிதும் மாற்றத்தினை முன்வைத்தார். அதாவது புலிகள் பயங்கரவாதிகள் என்றார். இவ்வாறு ஒரு அமைப்பினை விசாரிக்காமல் முத்திரைகுத்துவது ஐ.நா அதிகாரிகளின் வழக்கமல்ல என்பதை நினைவு படுத்தினோம். மீள்குடியேற்றம் நிகழாமல் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதை ஆவணம் மூலமாக அம்பலப்படுத்தினோம். நவநீதம் அம்மையார் மீண்டும் சர்வதேச விசாரணையை கோரினார். 2013 தீர்மானம் தோல்வி அடைந்ததை அவரது பெப்ரவரி 2014 அறிக்கை வெளிப்படுத்தியது.

16. இதற்கு நடுவே 2012இல் ஐ.நாவின் செயல்பாடுகளை விசாரித்த சார்லஸ் பெட்ரி அறிக்கை சர்வதேச விசாரணையை கோரியது. புலிகள் மீது ஐ.நாவின் மனித உரிமைக்கமிசன் தேவையற்ற குற்றச்சாட்டுகளை நெருக்கடி காரணமாக முன்வைத்தார்கள் என்பதை அம்பலப்படுத்தியது.

17. சார்லஸ் பெட்ரி அறிக்கையின் மீது விசாரணை நடத்திய ஐ.நாவின் மிக உயர் அதிகாரி, ஜான் இலியாசன் தனது அறிக்கையை கடந்த ஜூன் 2013இல் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் மீண்டும் சர்வதேச விசாரணையை ஐ.நா தனது அதிகாரத்தின் கீழ் உடனே துவக்கவேண்டுமென்று முன்வைத்தார்.

ஆக ஐ.நாவின் விதி எண் 99ன் கீழும் அதன் அதிகாரத்தின் கீழும் தாமாகவே 2009லேயே கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டிய சர்வதேச விசாரணையை அமெரிக்காவும், இந்தியாவும் தவிர்த்தார்கள், காலதாமதப்படுத்தினார்கள்.
இலங்கை அரசின் மீதான விசாரணையை, தமிழர் தரப்பினையும் விசாரிக்க வேண்டுமென்று மாற்றி இருக்கிறார்கள்.

ஒரு தேசிய இனத்தின் மீது இனவெறியோடு நடத்தப்பட்ட தாக்குதலை, போரை மறுத்திருக்கிறது 2014 அமெரிக்க தீர்மானம், மாறாக அங்கு மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாற்றி இருக்கிறார்கள்.

இதன்படி சர்வதேச விசாரணை வந்தாலும் அதை இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை போராக வரையறை செய்யமுடியாது என்பதாக பின்னாளில் மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் அமெரிக்காவும், இந்தியாவும் செய்திருக்கிறது.

மேலும் வடக்கு மாகாணதேர்தல் என்பது அரசியல் தீர்வினை மறுக்கும் உத்தி என்று 2013 ஆகஸ்டில் முன்வைத்தோம். ஏதோ ஒன்று கிடைக்கிறது, ஏன் எதிர்க்கிறீர்கள் என்றார்கள். ஆனால் அதே மாகாண சபைத் தேர்தலை அரசியல் தீர்வாக நவநீதம் அம்மையாரும், அமெரிக்காவும், இந்தியாவும் முன்வைக்கிறது.
மாகாண சபை முதலமைச்சரும் அமெரிக்காவின் தமிழினமறுப்பினை ஏற்றுக்கொள்கிறார். சம்பந்தன் ஈழ கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்று சென்னையில் பேட்டி கொடுக்கிறார். அமெரிக்க தீர்மானத்தினை வெளிப்படையக ஆதரிப்பவர்கள் இவற்றினை ஏன் கண்டிக்க முன்வரவில்லை.?.. கேள்வி எழுப்ப முன்வரவில்லை.?.. அன்று நாங்கள் இந்த நிலைப்படுகளை கடுமையாக எதிர்த்த பொழுது மெளனமாக் கடந்து சென்றவர்கள், இன்று அமெரிக்காவினை எதிர்க்கவேண்டும் என்கிற பொழுது பொங்குவது ஏன்?

அமெரிக்க தீர்மானம் என்கிற ஒன்று வராமல் இருந்திருந்தால் சர்வதேச விசாரணையை ஐ.நாவின் நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கும். அதற்கான அதிகாரத்தினை ஐ.நா சட்டக் குழு, மனித உரிமைக்குழு , ஐ.நாவின் துணை பொதுச் செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள் சர்வதேச விசாரணயை யார் தடுத்தார்கள்? யார் திரித்தார்கள்?

tn-student-usa
அமெரிக்க தீர்மானத்தின் பின்னனி பற்றி சொல்லி இருக்கிறோம். இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் ஏன் அமெரிக்க தீர்மானத்தினை எரிக்க கூடாது. ?…

உங்களுக்கு எங்கள் கேள்வி ஒன்று தான்… புலிகள்மீதும் விசாரணை நடத்தி அவர்களது அரசியல் செயல்பாட்டினை ஒடுக்கவேண்டும் என்கிற அமெரிக்காவின் நிலைப்பாட்டினை நீங்கள் ஆதரிக்க காரணம் என்ன?

புலிகளை ஒடுக்கவேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா முதல் அம்னெஸ்டி, திமுக வரை அனைவருக்கும் அரசியல் விருப்பம் இருக்கிறது.. இந்தக் குழுவில் நீங்களும் இணைய வேண்டுமென்கிற காரணம் என்ன?”

அமெரிக்க தீர்மானத்தினை ஏன் எரிக்க வேண்டும்?.

அமெரிக்க தீர்மானம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் , ஆகவே அதை வைத்து இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவோம் என்கிறார்கள்…

ஆனால் அமெரிக்க தீர்மானம் அடிப்படையில்

1. தமிழினம் என்கிற ஒன்றை மறுக்கிறது.

2. நிகழ்ந்தது மதசிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல் என்கிறது

3. தமிழர் மட்டுமல்ல, சிங்களவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது.

4. இலங்கை ராணுவத்தினை மட்டுமல்ல, புலிகள் அமைப்பினை (மீளக்கட்டமைக்கும் ஆற்றல்களையும் விசாரிக்கவேண்டுமென்று மறைமுகவும்) நேரடியாகவும் கோருகிறது

புலிகளை விசாரிக்கிறோம் என்கிற பெயரில், “ போரில் எஞ்சிய புலி வீரர்களையும், தமிழீழ போர்க்கைதிகளையும், புலிகளின் அரசியல் செயல்பாட்டாளர்களையும்” விசாரிக்கச் சொல்லும் அமெரிக்க தீர்மானம் இலங்கைக்கு எதிரான தீர்மானமா? தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானமா?…

புலிகளை சர்வதேச பொறிவலைக்குள் சிக்கவைக்கும் ஒரு தீர்மானத்திற்கு எவ்வாறு எதிர்ப்பினை பதிவு செய்வது?

வெறும் 32 நாடுகளில் மட்டுமே பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட புலிகளை , 180 நாடுகளிலும் ”போர்க்குற்ற விசாரணைக்குள் இருக்கும் அமைப்பு” என்று அறிவிக்கும் தீர்மானத்தினை கொண்டு வந்த நாடு அப்பாவி நாடா?

இதுவரை எந்த ஒரு சர்வதேச அறிக்கைகளிலும், சார்லஸ்பெட்ரி, நார்வே, ஐ.நா-வல்லுனர் குழு, மனித உரிமைக்குழுக்கள் புலிகளுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைக்காத பொழுது,
அமெரிக்கா மட்டும் இருதரப்பினரையும் விசாரிக்கவேண்டுமென்று கோரிக்கை வைப்பதை விமரிசிக்காமல் எங்களால் எவ்வாறு கள்ள மெளனம் சாதிக்கமுடியும்?

”புலிகள் மீது பாரம் இருந்தால் தானே பயப்படுவதற்கு, புலிகளையும் விசாரிக்கட்டும் , மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம்” என்று வாதம் வைக்கிறவர்களிடம் கேட்க விரும்புகிறேன் ,

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் புலிகளை பயங்கரவாதிகள் எனசொல்லமுடியாது என்ற பின்னர் ஏன் இங்கே தடை வந்தது?..

புலிகள் மீது தகுந்த ஆதாரம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏன் தடை வந்தது?

அமெரிக்கா ஏன் ஆதாரம் இல்லாமல் தடைசெய்தது?

இவற்றினை எவ்வாறு நம்மால் தடுக்க முடிந்தது?..

இருதரப்பினரையும் விசாரிக்கவேண்டும் என்கிற அமெரிக்க தீர்மானத்தினை புலிகள் அமைப்பு ஏற்றுகொள்ளுமா? அல்லது அவர்களது அரசியல் செயல்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?..

எங்களையும் சேர்த்து விசாரியுங்கள் என்று புலிகள் கேட்டார்களா? கேட்பார்களா? …

புலிகள் மீது விசாரணையை வலிந்து திணிக்கும் எந்த ஒரு நாட்டினையும் என் ஆற்றல் அனைத்தும் கொண்டு எதிர்க்கவே செய்வேன்… ஏனெனில் அதுவே முள்ளிவாய்க்காலில் தலையில் துப்பாக்கிக் குண்டை எந்த ஒரு பணிவும், சமரசமும் காட்டாமல் வாங்கி உயிர்க் கொடை செய்த தோழர்களுக்கு நான் செய்யும் குறைந்த பட்ச மரியாதை.

திருமுருகன் காந்தி