சிரியா மீதான படை நடவடிக்கையுடன் மேற்குலகத்தின் போர் நிறைவடையப்போவதில்லை

0
615

syriyaசிரியா மீதான மேற்குலகத்தின் தாக்குதல் திட்டங்கள் ரஸ்யாவின் எதிர்ப்பினால் ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளது. அரபு நாடுகளின் வசந்தம் என ஆரம்பித்த மேற்குலகத்தின் காய்நகர்த்தல்கள் பல அரபு நாடுகளில் ஆட்சி மாற்றங்களை கொண்டுவந்ததுடன் அதன் இறுதிக்கட்டமான சிரியா, ஈரான் ஆகிய நாடுகளின் வாசல்களைத் தட்ட ஆரம்பித்துள்ளது.

எதிரிகளை ஒரேயடியாக எதிர்கொள்ளாது, ஒன்றன் பின் ஒன்றாக வீழ்த்துவது என்ற அமெரிக்காவின் கொள்கையில் தற்போது ஈரானுக்கு முன்னதாக சிரியா மீதான தாக்குதல் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரானது மேற்குலகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும். தமது படையினரை களமிறக்காது சில டசின் சிறப்பு படையினர் மற்றும் லிபிய எதிரணி படையினரின் பலத்துடன், தனது தொழில்நுட்ப உபகரங்களின் மூலம் மேற்குலகம் அந்த போரில் வெற்றியீட்டியுள்ளது.

2001 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய ஆப்கான் போருக்குப் பின்னர் இடம்பெற்ற ஈராக் போர்களில் படையினரின் முக்கியத்துவத்தை தொழில்நுட்பமும், படைக்கலங்களும் பின்தள்ளியிருந்த போதும், நேரிடையான படை நடவடிக்கை மேற்குலகத்திற்கு பல பின்னடைவுகளையும் கொடுத்திருந்ததுடன், கணிசமான படையினர் அங்கிருந்து வெளியேறமுடியாது முடங்கியும் போயுள்ளனர்.

இந்த நிலையில் தான் படையிறக்கம் அற்ற போர் என்ற புதிய உத்தியை அரபு நாடுகளின் வசந்தம் என்ற உத்திக்குள் அமெரிக்கா புகுத்தியுள்ளது.

உலகின் எந்த மூலையிலும் ஒரு சில மணிநேரத்தில் ஒரு சமரை ஆரம்பித்து, அங்கு தனது படையினரை களமிறக்கும் நகர்வுத்தின் கொண்ட அமெரிக்கா தனது படை வளங்களில் கணிசமான குறைப்பை மேற்கொண்டு அந்த நிதியை நாட்டின் பொருளாதாரத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கடந்த வருடம் அறிவித்துள்ளபோதும் உலகில் தொடர்ந்து போரை நடத்துவதில் அது பின்வாங்காததற்கான காரணமும் அது தான்.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் மேற்குலகத்தின் அனுசரனையுடன் உருவாக்கப்பட்ட உள்நாட்டுப் போரில் இதுவரையில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். எதிரணிப் படையினருக்கு பெருமளவான உதவிகளை மேற்குலகம் வழங்கிவந்த போதும், அவர்களின் நகர்வுத்திறன் எதிர்பார்க்கப்பட்டது போல் அமையவில்லை.

எனவே தான் லிபியாவில் மேற்கொள்ளப்பட்டது போல சிரியாவின் வான்படையை முடக்கி அதன் ஆயுதவளங்கள், படைத்தளங்கள் மற்றும் படைகட்டமைப்புக்கள் போன்றவற்றை தனது ஏவுகணைகள் மூலம் தகர்த்து எதிரணிப் படையினருக்கு ஒரு சாதகமான நிலைய உருவாக்க அமெரிக்க முனைந்து வருகின்றது.

அதற்கான காரணத்தை வலைவீசித் தேடிவந்த அமெரிக்காவுக்கு கடந்த மாதம் 21 ஆம் நாள் சிரியாவில் இடம்பெற்ற இராசாயண ஆயுதத் தாக்குதலில் 1400 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டது சாதகமாக அமைந்துள்ளது. சிரியாமீதான படை நடவடிக்கைக்கு அமெரிக்காவின் செனட் சபை 10 இற்கு ஏழு என்ற ஆதரவை கடந்த புதன்கிழமை வழங்கிய போதும், அதன் நாடாளுமன்ற அங்கத்தவர்களின் வாக்களிப்புக்காக இன்று வரை படை நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ஒத்திப்போட்டுள்ளார்.

ஆனால் அந்த தாக்குதலை எதிரணிப்படையினரே மேற்கொண்டதாக ரஸ்ய அதிபர் பூட்டின் ஜி-20 மாநாட்டில் பேசும் போது தெரிவித்துள்ளார். கடந்த 30 மாதங்களில் சிரியா மீது ஐ.நா பாதுகாப்புச்சபை தீர்மானங்களை கொண்டுவர அமெரிக்கா முனைந்தபோதும் அதனை சீனாவும், ரஸ்யாவும் கடுமையாக எதிர்த்து வந்திருந்தன. தற்போதும் படை நடவடிக்கையை அவை கடுமையாக எதிர்க்கின்றன.

ஆனாலும் அமெரிக்கா தனது படை நடவடிக்கையில் உறுதியாக உள்ளதையே அதன் மெடிற்ரறேனியன் (Mediterranean) கடற்பகுதியில் குவிக்கப்படும் அதன் கடற்படைக் கப்பல்களின் பிரசன்னம் குறிக்கின்றது.

சிரியாவை கடற்பகுதியுடன் இணைக்கும் இந்த சிறிய கடற்பகுதியில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும், சிரியாவுக்கு ஆதரவான ரஸ்யாவும் தமது போர்க் கப்பல்களை நகர்த்தியுள்ளதானது எந்த சமயமும் பேரும் போர் ஆரம்பிக்கலாம் என்ற அச்சத்தையும், ரஸ்யாவின் பங்கு இதில் என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஆனாலும் தனது நாட்டின் நலன்களை பாதுகாப்பதற்கே தனது போர்க் கப்பல்கள் அங்கு அனுப்ப்பட்டுள்ளதாக பூட்டின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரையில் ஐந்து ஏவுகணைத் தங்கி கப்பல்களையும் (Arleigh Burke-class guided missile destroyers), நான்கு அணுசக்தி நீர்மூழ்க்கிக் கப்பல்களையும் (ஒவ்வொன்றும் 154 தொமகவ் ஏவுகணைகளை கொண்டவை) சிரியாவுக்கு அண்மையாக நகர்த்தியுள்ளது. இந்த கப்பல்களில் 1,150 மைல்களுக்கு பாய்ந்து சென்று துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் (Tomahawk cruise missiles) ஏவுகணைகள் உள்ளதுடன், விமானங்களை அழிக்கும் ஏவுகணைகளும் உள்ளன.

லிபியா மீதான தாக்குதலிலும் தொமகவ் ஏவுகணைகளே முக்கிய பங்கு வகித்திருந்தன. அதுமட்டுமல்லாது, யு எஸ் எஸ் சன் அன்ரோனியோ என்ற ஈரூடக துருப்புக்காவிக் கப்பல் ஒன்றும் சிரியாவுக்கு அண்மையாக நகர்த்தப்பட்டுள்ளது. பல உலங்குவானூர்திகளையும், பல நூற்றுக்கணக்கான ஈரூடகப்படையினரையும் கொண்டுள்ள இந்த கப்பல் ஒரு தரையிறக்கத்திற்கான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளபோதும் அது ஒரு சிறப்பு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க படை அதிகாரி ஒருவர் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.

ஒரு தரைத்தாக்குதல் நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை ஆனால் சிறப்பு படை நடவடிக்கை மூலம் இராசாயண ஆயுதங்களையும் அதன் தொழிற்சாலைகளையும் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
uss-nimitz_si
இதனிடையே, அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான (USS Nimitz super carrier) நிமிற்ஸ் செங்கடல் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான (USS Harry S. Truman) ரேமன் வட ஆரெபியக் கடலுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

சிரியாவின் நீண்டகால நட்புநாடும், அதன் பிரதம ஆயுத விநியோகஸ்த்தருமான ரஸ்யா தனது கடற்படையின் ஏவுகணைக்கப்பல், வேவுக்கப்பல், மிகப்பெரும் தரையிறங்கு கலம் (Nikolai Filchenkov) உட்பட பெருமளவான கப்பல்களை மெடிற்ரேனியன் கடற்பகுதிக்கு நகர்த்தியுள்ளது.

ரஸ்யாவின் ஒரே ஒரு வெளிநாட்டுக் கடற்படைத்தளமான தாற்றஸ் (Tartus) தளமும் இங்கு தான் அமைந்துள்ளது. அதிகரித்து வரும் ரஸ்யாவின் கடற்படைப் பலத்திற்கும் இந்த தளமே உதவியாக உள்ளது.

எனவே தான் மேற்குலகத்தின் படை நடவடிக்கையை ரஸ்யா பலமாக எதிர்க்கின்றது. தமது கடற்படைக்கப்பல்கள் போரைத் தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவுமே அங்கு நிலைகொண்டுள்ளதாக ரஸ்ய கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளபோதும், பல சமயங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்துக்களை கூற மறுக்கின்றனர்.

இதனிடையே, அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இத்தாலி போன்றவையும் சிரியாவை நோக்கி தமது கடற்படைக்கப்பல்களை நகர்த்தியுள்ளன.

ஏவுகணைத் தடுப்பு தாக்குதல் கப்பல் உட்பட வினியோகக்கப்பல்களை நகர்த்தியுள்ள பிரான்ஸ் அதன் தாக்குதல்களை வானில் இருந்தே மேற்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1999 ஆண்டு கொசோவோவிலும், 2011 ஆம் ஆண்டு லிபியாவிலும் பிரான்ஸ் இவ்வாறான நடவடிக்கைகளையே மேற்கொண்டிருந்தது.

லெபனானில் உள்ள தனது 1,100 ஐ.நா படையினரை பாதுகாப்பதாகக் கூறி இத்தாலியும் இரு போர்க்கப்பல்களை சிரியாவுக்கு அண்மையான லெபனான் பகுதிற்கு நகர்த்தியுள்ளது.

பிரித்தானியாவை பொறுத்தவரையில் பல தாக்குதல் கப்பல்கள் மற்றும் அணுசகத்தி நீர்மூழ்கிக்கப்பல் உட்பட பெருமளவான கப்பல்களை அமெரிக்காவுக்கு துணையாக அந்த பகுதிக்கு நகர்த்தியுள்ளதுடன் படை நடவடிக்கைக்கான முழு ஆதரவையும் தருவதாகவும் கூறியுள்ளது.

சிரியா மீதான நடவடிக்கை என்பது அங்கு இடம்பெற்ற இராசாயணத் தாக்குதலுக்காக மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறாக இருக்குமானால் சிறீலங்கா இராணுவம் இராசாயண ஆயுதங்களை பயன்படுத்தியும், கனரக ஆயுதங்களை பயன்படுத்தியும் 1750,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை படுகொலை செய்தபோது மேற்குலகம் களமிறங்கியிருக்க வேண்டும்.

எனவே இந்த போர் என்பது நாள் ஒன்றிற்கு 4 இலட்சம் பீப்பாய்களை உற்பத்தி செய்யும் சிரியாவின் எண்ணை வளங்களை கைப்பற்றவும், அரபுநாடுகளை முழுமையாக தன்வசப்படுத்தவும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே மேற்கொள்ளப்படுகின்றது.

ஆனால் இதன் பின்னனியில் பொருளாதாரரீதியில் வளர்ந்துவரும் நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதாரமும் பெரும் சிக்கலில் தள்ளப்படும் அபாயம் உள்ளது. எனவே தான் சீனா அதனை கடுமையாக எதிர்க்கின்றது. ஏனெனில் உலகின் எண்ணை வளங்களில் கணிசமான வளங்கள் மேற்குலகின் பிடியில் சென்றுகொண்டிருக்கின்றன.

ரஸ்யாவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையில் நிலவிய பனிப்போரின் போது ரஸ்யாவுடன் சேர்ந்து நின்ற யூகோஸ்லாவாக்கியாவில் இருந்து மொன்ரோநீக்குரோ, கொசோவோ என எவ்வாறு சிறிய தேசங்கள் பிரிந்து சென்றனவோ அதனை ஒத்த நிலை ஒன்று தற்போது உலகின் ஏனைய பாகங்களுக்கும் பரவி வருகின்றது.

சிரியா மீதான படை நடவடிக்கை எதிர்வரும் வாரம் ஆரம்பமாகலாம் ஆனால் அதனுடன் போர் முடிந்துவிடாது அது ஈரான் ஊடாக எதிர்பார்க்கப்படாத வேறு ஒரு களமுனையை திறக்கும். அதற்கான காரணங்களை தேடுவது மேற்குலகத்திற்கு ஒன்றும் கடினமானது அல்ல.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சமகால படைத்துறை ஆய்வு (09.09.2012)
அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி.