சிறீலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவை பிள்ளை நம்பினால் நாம் அவரிடம் இருந்து எந்ந நன்மையையும் எதிர்பார்க்கமுடியாது

0
602

இந்த மாதம் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் அதேசமயம் சிறீலங்காவில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன தமது உறவுகளுக்கு நீதி கிடைக்கக்கோரி தமிழ் மக்கள் தமது போராட்டங்களை ஐ.நா அலுவலகத்தின் முன்னிலையில் ஆரம்பித்துள்ளனர்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த புகைப்படங்களைக் கொண்ட கண்காட்சி ஒன்று மனிதநேயச் செயற்பாட்டாளர் லோகநாதன் என்பவரால் ஐ.நா முன்றலில் நடத்தப்பட்டுவருகின்றது. அது மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை மேற்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

சிரியாவில் இடம்பெற்ற இராசாயணத் தாக்குதலில் கொல்லப்பட்ட 1400 பேருக்காக கதறி அழும் மேற்குலகம் சிறீலங்காவில் இடம்பெற்ற ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் மரணத்தை மறந்தது போல் ஆடும் நாடகத்திற்கு எதிராக நிகழும் போராட்டம் தான் இது.
ele-ballot
கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையின் பயணத்திற்கு பின்னர் கூட்டப்படும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் என்பதால், பிள்ளை அவர்கள் தனது கண்ணால் கண்ட மற்றும் கலந்துரையாடிய சாட்சிகளை முன்வைத்து சிறீலங்கா அரசு மீது அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றை கொண்டுவர வேண்டும் அங்கு இடம்பெற்றது ஒரு இனஅழிப்பு என பிரகடனப்படுத்துவது என்பதே தமிழ் மக்களுக்கு ஐ.நாவிடம் இருந்து கிடைக்கக்கூடிய சொற்பமான நீதியாகும்.

ஆனால் ஐ.நா மனித உரிமை ஆனைக்குழுவின் 24 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப உரை நிகழ்த்திய நவநீதம்பிள்ளை அவர்கள் சிறீலங்காவில் தன்னை சந்தித்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர் மற்றும் சாட்சி வழங்கியவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளக்கூடாது என எச்சரித்துள்ளதுடன் தனது பயணத்தில் அவதானித்தவற்றை இந்த கூட்டத்தின் பிற்பகுதியில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் தனது அறிக்கையில் என்ன பரிந்துரைகளை முன்வைக்கபோகின்றார் என்பதே தற்போதைய கேள்வி. கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்தது போல அவரும் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவை நம்பினால் நாம் அவரிடம் இருந்து எந்ந நன்மையையும் எதிர்பார்க்கமுடியாது. ஏனெனில் கொழும்பில் அவர் வெளியிட்ட அறிக்கையை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சிறீலங்கா அரசின் வழமையான மிரட்டல்களுக்குள் தனது மன உறுதியை தொலைத்துவிட்டவராக, வந்த பணியை மறந்து, விடுதலைப்புலிகள் மீது காட்டமான கருத்துக்களை கூறிச்சென்றுள்ளார் பிள்ளை. ஆனால் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா அரசும், இந்திய அரசும் கூறிவரும் நிலையில் கண்ணுக்கு தெரிந்த போர்க் குற்றவாளிகளை கைவிட்டு கண்ணுக்கு தொரியாத இடம் நோக்கி தனது காலத்தை விரையம்செய்துள்ளார் அம்மையார்.

2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போர் உக்கிரமாக இடம்பெற்றபோது சிறீலங்காவுக்கு வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் லூயிஸ் ஆபர் அவர்களாலும் எதுவும் முடியவில்லை.

சிறீலங்காவில் இடம்பெற்ற போரை நிறுத்தவோ அல்லது அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரசன்னத்தை கொண்டுவந்து மக்களை காப்பாற்றவே அவரால் முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு அலுவலகம் ஒன்று சிறீலங்காவில் அமைக்கப்படவேண்டும் என்ற ஆபரின் கோரிக்கை முன்வைக்கப்பட முன்னரே சிறீலங்கா அரசினால் நிராகரிக்கப்பட்டது. 140 அதிகாரிகளைக் கொண்ட அலுவலகம் ஒன்றை ஐ.நா முன்னர் கொலம்பியாவில் அமைத்திருந்தது ஆனால் சிறீலங்காவில் அதனை அமைக்க முடியவில்லை. மேலும் காணமல்போன மற்றும் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உறவுகளை சந்திப்பதற்கும் அவருக்கு பல இடையூறுகள் விதிக்கப்பட்டன.

தமிழ் மக்களின் நிலை, சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணைஇராணுவக்குழுக்களின் பிரசன்னம், சிறீலங்காவின் வடக்கு – கிழக்கு பகுதியில் இடம்பெற்று வந்த நீதிக்குப்புறம்பான படுகொலைகள், காணாமல்போதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆபர் அவர்கள் வெளிப்படையாகவே மனம்வருந்தியதாக அன்றை சிறீலங்காவுக்கான ஐ.நா பிரதிநிதி நீல் பூனே அவர்கள் சிறீலங்காவுக்கான அன்றைய அமெரிக்கத்தூதுவர் றொபேட் ஓ பிளேக்கிடம் தெரிவித்திருந்தார்.
Blake-tweeting
ஆனால் ஆபரின் இந்த வருத்தம் தனக்கு ஆச்சரியமானது அல்ல அது தம்மால் எதிர்பார்க்கப்பட்டது ஒன்றே எனவும், காலத்தை கடத்துவதன் மூலம் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் செயல் இது எனவும் பிளேக் அமெரிக்க வெளியுறவுத்திணைக்களத்திற்கு அனுப்பிய செய்தியில் அன்று தெரிவித்திருந்தார்.

இன்று சிரியாவை தாக்குவதற்காக துளியளவு காரணமாவது கிடைத்தால் போதும் என தேடித்திரியும் அமெரிக்கா அன்று கண்முன் கிடந்த ஆதாரங்களை காண விரும்பாமல் கண்ணை மூடிக்கொண்டதே பிளேக்கின் இந்த செய்தியின் சாரம். ஆனால் அன்று இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதியை வழங்குவதற்கு கூட அவர்கள் இன்று விரும்பவில்லை என்பது சிறீலங்கா அரசின் மிரட்டல்களுக்கு பணிவது போன்ற அவர்களின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.

கடந்த வருடங்களில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் ஐ.நாவின் அசைவுகளை இந்திய மத்திய அரசின் உதவியுடன் சிறீலங்கா அரசு முறியடித்திருந்தது. அமெரிக்கா தீர்மானத்தை கொண்டுவந்தபோதும் அதுவும் சிறீலங்கா அரசுக்கு சாதகமாகவே அமைந்திருந்தது.

தான் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் தானே விசாரணைகளை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அவகாசம் வழங்குவதாக தெரிவித்த மேற்குலகம் தமிழ் மக்களை ஏமாற்றவும் முனைந்திருந்தது. ஆனால் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு என்பது ஒரு விசாரணைக்குழு அல்ல என்பதே உண்மையானது.

எனினும் தமிழ் மக்களின் எந்த முன்நகர்வையும் முறியடிப்பதற்கு சிறீலங்கா அரசு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டிப் போராடிவருகின்றது. ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகைப்படங்களைக் கொண்ட கண்காட்சியை கூட தடைசெய்யுமாறு சுவிற்சலாந்து காவல்துறையினரை அங்குள்ள சிறீலங்கா தூதரகம் கேட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, பிரித்தானியாவின் லண்டன் நகர காவல்துறை அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ் மொழிக்காக பயன்படுத்தியிருந்த விடுதலைப்புலிகளின் கொடியையும் நீக்குமாறு சிறீலங்கா அரசு தனது ஆதரவாளயர்கள் மற்றும் ஆதரவு அமைப்புக்கள் மூலம் பிரித்தானியா காவல்துறைக்கு நெருக்கடிகளைக் கொடுத்துவருகின்றது.

நவனீதம்பிள்ளைக்கு சிறீலங்காவில் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை போலவே சிறீலங்கா அரசின் நெருக்கடிகள் அனைத்துலகத்திற்கும் பரவி வருகின்றது. இதனை முறியடிப்பதற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டங்கள் மட்டும் போதாது, தாயகத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் வலுவான அழுத்தங்கள் ஐ.நா மீது பிரயோகிக்கப்படவேண்டும். நவநீதம்பிள்ளை நீதியை வழங்கிவிடுவார் என தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதை விடுத்து அவரால் நிறைவேற்ற இயலும் நடவடிககைகளை உள்வாங்கி அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என மக்களை தயார்படுத்த வேண்டும்.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் அவர்களின் கருத்துக்கள் ஒரே குரலில் தான் ஒலிக்கின்றது. எந்தக் கட்சியும் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கிவிடப்போவதில்லை.

மேற்குலகத்தினதும், ஐ.நாவினதும் நகர்வுகளை அவதானிக்கும் போது சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என்ற கருத்தை தோற்றுவிக்க முற்படுகின்றன. ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் என்பது மகிந்தாவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதல்ல. 1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம் பெற்றபின்னர் ஆட்சிக்குவந்த எல்ல கட்சிகளும் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைகளையே மேற்கொண்டு வந்துள்ளன.

அதன் விளைவு தான் தமிழ் மக்களின் அகிம்சைப் போரும் அதனை தொடர்ந்த ஆயுதப்போரும் எனவே ஆட்சி மாற்றம் என்பது போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதற்கு உதவினாலும், தமிழ் மக்கள் தமது சுயஉரிமை கிடைக்கும் வரையிலும் தொடர்ந்து போராடவே வேண்டும். அதற்கான முன்நகர்வுகளே புலம்பெயர் தேசத்திலும், தமிழகத்திலும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் தாயகத்தினன் பங்களிப்பே அதற்கு முக்கியமானது.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நம்தேசம், செப்ரம்பர் (2013) மாத இதழ்.