சிறீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலையே என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்பளித்துள்ளது

0
562

tribunal-germanஜேர்மனியில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற சிறீலங்கா அரசின் இனப்படுகொலை தொடர்பான தீர்ப்பாய விசாரணையில் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பை மேற்கொண்டது தெளிவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு பாரிய அளவில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதை உறுதிப்படுதியுள்ள இத்தாலியின் தலைநகரை தலமையகமாகக் கொண்ட இந்த அனைத்துலக விசாரணை அமைப்பு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் சிறீலங்காவின் இனப்படுகொலைக்கு உதவியதாகவும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியைத் தளமாகக் கொண்ட பேர்மன் அனைத்துலக மனித உரிமை அமைப்பு மற்றும் சிறீலங்காவில் சமாதானத்திற்கான பேரவை போன்றவை இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அயர்லாந்தின் தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற முதற்கட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்டது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்(Crime Against Humanity) ஆகும். எனவே இதன்வழி சிறீலங்கா அரசு இனப்படுகொலை(Genocidal Crime) குற்றவாளியாகிறது.

தீர்ப்பு:

1) சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது.

2) இனப்படுகொலைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் சிறீலங்கா அரசுக்கு துணைப்போயுள்ளன.

3) விடுதலைப்புலிகள் அமைப்பை முழுமையாக தீவிரவாத அமைப்பாக கருதமுடியாது.

ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும்(பிரித்தானியா) இனவழிப்பில் தொடர்புபட்டிருந்தன. பிரித்தானியா ஆயுதங்களை வழங்கி சிறீலங்கா அரசை பலப்படுத்தியிருந்தது, அமெரிக்கா சமாதான காலத்தில் உள்நுளைந்து இரு தரப்பினருக்கும் இடையில் இருந்த சமநிலையை சிறீலங்கா அரசுக்கு சார்பாக மாற்றியிருந்தது.இந்தியாவின் பங்கு பற்றி மேலும் விரிவான விசாரணை தேவை.

ஐக்கிய நாடுகள் சபை ஈழத் தமிழர்கழைப் பாதுகாக்கத் தவறியது. ஐநா அவையும் இனவழிப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம்.

பிரித்தனியவைத் தளமாகக் கொண்ட சனல் போர் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் கலம் மக்ரே உட்பட பல அரசியல் மற்றும் மனித உரிமை அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உலகின் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.

நிரந்தர மக்கள் நீதிமன்றின் இந்தத் தீர்ப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்கா அரசு அந்த நட்டு மக்கள் மீதே(ஈழத்தமிழர்கள்) ஒரு இனவழிப்பை செய்தது என்பதைப் புரிந்து கொண்டோம். 1948ஆம் ஆண்டு இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தமது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டன. எனவே சிறீலங்கா அரசிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தனிநாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே ஈழத்தமிழர்களுக்கு ஏற்புடைய தீர்வு. பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனிநாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும் என பேராசிரியர் பிரான்சில் ஏ போயில் (Professor Francis A. Boyle) முன்பு தெரிவித்திருந்ததும் நாம் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.