சிறீலங்கா ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு தீர்வல்ல

0
641

mahi-908தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகத் துடைத்தழிக்கின்றபோது சிங்களப் பேரினவாதம் இப்படியரு பேரிடி எதிர்காலத்தில் தங்கள் தலைகளில் வந்திறங்கும் என்று எண்ணிப் பார்த்திருக்காது. அப்படி எண்ணியிருந்தால் ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகளை அழிக்கின்ற முடிவுக்கும் அது வந்திருக்க மாட்டாது. பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டிவிட்டதாகத் தம்பட்டம் அடித்த சிங்களப் பேரினவாதம், இப்போது அதற்காக நிச்சயமாக வருத்தப்படத் தொடங்கியிருக்கும். விடுதலைப் புலிகளின் கொஞ்சப் பேரையாவது விட்டுவைத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதே, ஒட்டுமொத்த உலகத்தையும் அவர்களை நோக்கிச் சுட்டுவிரலை நீட்ட வைத்திருக்கலாமே என்று இப்போது மகிந்த ஆட்சியாளர்கள் எண்ணிக்கொண்டிருப்பார்கள்.

சிங்களப் பேரினவாத அரசு இனஅழிப்புப் போரை, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் முன்னெடுத்தபோது உலகின் பல நாடுகளும் அதற்கு முண்டுகொடுத்து நின்றன. நாடுகள் மட்டுமன்றி போரைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்புவாய்ந்த ஐக்கிய நாடுகள் சபைகூட அதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இத்தனை பேரும் இணைந்து செய்துவிட்ட இந்த இனஅழிப்புப் போரில், இப்போது குற்றச்சாட்டுக்கள் மகிந்த கூட்டத்தை மட்டும் சுற்றியே மையம் கொண்டுள்ளதால், இதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் அவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

அடித்தபோது அடி அடி என உற்சாகம் கொடுத்தவர்களும், அடிப்பதற்கு தடியெடுத்துக் கொடுத்தவர்களும் தங்கள் மீது மட்டுமே முழுமையான குற்றச்சாட்டுக்களை இறக்கிவைக்க முனைவது சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது. காப்பாற்றுவார்கள் என்று நம்பியவர்களும் இப்போது கைவிட்டுப்போவதால் மகிந்த கூட்டம் தடுமாறி நிற்கின்றது. இதனால், சிறிய சிறிய நாடுகளின் கால்களில் எல்லாம் விழவேண்டிய நிலைமைக்குள் சிறீலங்கா அரசு வந்துநிற்கின்றது.

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரில், சிறீலங்கா மீது மூன்றாவது தடவையாக இன்னொரு தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது. கடந்த இருமுறைகளும் கொண்டுவந்த தீர்மானங்களைவிடவும் இது கடுமையாக இருக்கும் என இப்போதே மிரட்டல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. என்னதான், ஜெனீவாவில் வெற்றிக்கொடியை நாட்டுவோம் என்று வீரப்பிரதாபங்களை சிங்கள ஆட்சியாளர்கள் பேசினாலும், யாதார்த்த நிலைமையை அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.

ஆனால், நடந்தது ஓர் இனப்படுகொலை என்பதை இன்றுவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் உலகம், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றவை மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள்தான் இன்னமும் நிற்கின்றன. போர்க்குற்றங்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்பதுதான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகினது கண்டிப்பான நிலைப்பாடாக உள்ளது. நம்பகமான – சுதந்திரமான பொறுப்புக்கூறும் முயற்சிகளை உள்நாட்டிலேயே முன்னெடுக்குமாறு மகிந்த அரசிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி தீர்மானங்களைக் கொண்டுவந்த அமெரிக்காவும், அதற்கு ஆதரவாக நின்ற மேற்குலகமும் தங்களது கோரிக்கைகளை மகிந்த ஆட்சியாளர்களால் பொருட்படுத்தப்படாமையாலேயே சினமடைந்து புதிய தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கின்றன. தமது கருத்துக்களை சிங்களப் பேரினவாத அரசு மதிப்பதில்லை என்பதே மேற்குலகத்தின் இந்தச் சீற்றத்திற்கு முழுமுதற் காரணம். இதனைவிடுத்து தமிழர்கள் மீதான அனுதாபமோ அல்லது தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அவசரமோ மகிந்த ஆட்சியாளர்கள் மீதான இந்த அழுத்தத்திற்கு காரணமில்லை என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தங்களது கருத்துக்களை உள்வாங்காத அல்லது தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்காத இந்த ஆட்சியாளர்களை அகற்றிவிட்டு, இன்னொரு ஆட்சியாளர்களை அமர்த்துவதே மேற்குலகத்தின் இலக்காக இருக்கின்றது. அவ்வாறானதொரு ஆட்சி மாற்றத்தை நோக்கியே தற்போதைய நகர்வுகளும் இருக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம், சர்வதேச விசாரணை என்ற போர்வையில் மகிந்த ஆட்சியாளர்கள் மீது நிச்சயமாக ஒரு பாரிய அழுத்தமாகவே இறங்கும். அது இலங்கைத் தீவில் குழப்பங்களை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தை நோக்கியே தள்ளும். அந்த ஆட்சிமாற்ற அறுவடைக்கு இப்போதே ஏனைய சிங்களத் தலைமைகள் தயாராகி வருகின்றன. இதற்குள் ஆட்சி மாற்றம் ஒன்று தேவை என்று தமிழர் தரப்பில் இருந்தும் ஒருசில குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளமைதான் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. சிங்கள தேசத்தில் நிகழும் ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு என்ன தீர்வைப் பெற்றுத் தந்துவிடப்போகின்றது..?

இலங்கைத் தீவில் கடந்த அறுபது ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்த சிங்களத் தலைமைகள் அனைவரும் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதிலும், அழிப்பதிலுமேயே கங்கணம்கட்டி நின்றவர்கள். இதில் மகிந்த போய் இன்னொரு சிங்கள ஆட்சியாளர் வந்தால்கூட தமிழர்களின் அடக்குமுறை வாழ்வில் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. இதனை இந்த உலக நாடுகளுக்கு தெளிவாக எடுத்துவிளக்க வேண்டிய கடப்பாடு தமிழர்களிடமே உள்ள நிலையில், இவ்வாறான குரல்கள் தமிழர் தரப்பில் இருந்து எழுவது ஆபத்தானதும்கூட.

66வது சுந்திர தினத்தைக் கொண்டாடும் சிறீலங்கா, கடந்த 66 ஆண்டுகளாக தமிழர்களை எவ்வாறெல்லாம் அழித்தொழித்தது என்பதை ஆதாரபூர்வமாக உலக சமூகத்திடம் எடுத்துவைக்கவேண்டும். ஆட்சி மாற்றங்கள் தமிழர்களுக்கு தீர்வைத் தந்துவிடப்போவதில்லை என்பதையும், மீண்டும் தமிழர்களைத் தமிழர்கள் ஆள்வதே இலங்கைத் தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என்பதையும் அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும். இதுவே இப்போது தமிழர்கள் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கையும்கூட.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு