சீனாவுக்கு எதிரான அடுத்த ஆயுதத்தை அமெரிக்கா தயார்படுத்தியுள்ளது

0
269

drone-1சீனாவுடன் நாம் நட்புடனே உள்ளோம் என அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடி தெரிவித்துவரும் போதும், சீனாவின் படைத்துறை வளர்ச்சியை ஈடுகட்டும் அடுத்தகட்ட நகர்வுகளில் அமெரிக்கா வெற்றியடைந்துள்ளது.

சீனாவின் எல்லைகளின் இருந்து 900 மைல் தூரத்திற்கு அப்பால் அமெரிக்க கடற்படைக் கப்பல்களை விரட்டும் டிஎஃப் 21டி (DF21D) எனப்படும் நீண்டதூர ஏவுகணைகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கான முயற்சிகளின் ஓரு அங்கமாக கடல் நடவடிக்கைகளை தளமாகக் கொண்ட ஆளில்லாத தாக்குதல் மற்றும் வேவு விமானங்களை (Drones) தயாரிக்கும் பணிகளை அமெரிக்காவின் கடற்படை கடந்த சில வருடங்களில் முடுக்கிவிட்டிருந்தது.

தரையை தளமாகக் கொண்டியங்கும் ஆளில்லாத தாக்குதல் மற்றும் உளவு விமானங்களை பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் மற்றும் யேமென் ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படடையினர் தற்போது நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதுடன், அதன் செயற்பாடுகளினால் நல்ல பலன்களையும் அடைந்தும் வருகின்றனர்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்கா உலக அளவில் அதிக கண்டனங்களை சந்தித்துவரும் போதும் தனது நடவடிக்கைகளை அது கைவிட முற்படவில்லை. அதற்கான காரணங்கள் இரண்டு.

ஓன்று தனது எதிரிகளை அவர்களின் கோட்டைக்குள் வைத்து அழித்துவிடுவது, இரண்டாவது இந்த தாக்குதல்களின் மூலம் தனது புதிய உத்திகள் மற்றும் ஆயுதங்களை அது பரீட்சித்து வருவதுடன், படையினருக்கான பயிற்சியையும் இதன் மூலம் அது பெற்றுவருகின்றது.

எனினும் தரையை தளமாகக் கொண்டியங்கும் விமானங்கள் மூலம் அணுகமுடியாத நீண்டதூர இலக்குகளையும், அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் தூரவீச்சிற்கு அப்பாற்பட்ட இலக்குகளையும் எட்டும் முயற்சிகளின் அடுத்த கட்டமாக விமானம்தாங்கி கப்பல்களில் இருந்து இயக்கப்படும் ஆளிலில்லாத விமானங்களின் தயாரிப்புக்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியிருந்தது.

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா படையினர் மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகளில் இந்த விமானங்கள் மிக முக்கிய பங்கை வகிக்கும் என அமெரிக்காவின் ஏழாவது கடற்படை பிரிவின் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் ஸ்கொட் வன் பஸ்கிர்க் 2011 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

யோகோசூகாவைத் (Yokosuka) தளமாகக் கொண்ட இந்த கடற்படைப்பிரிவு ஜோர்ச் வொசிங்டன் விமானந்தாங்கி கப்பல் உட்பட 61 கப்பல்களையும், 40,000 படையினரையும் கொண்ட பிரிவாகும்.

ஆளில்லாத விமானங்களை அமெரிக்க படையினர் தம்வசமுள்ள 11 விமானம்தாங்கி கப்பல்களில் வைத்து இயக்கமுடியும் என தெரிவித்துள்ளபோதும், அதன் பயன்பாடு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டதாகவே இருக்கும் என அமெரிக்க படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவினால் அண்மையில் வடிவமைக்கப்பட்ட டிஎ’ப் 21டி என்ற தரையில் இருந்து கடலுக்கு ஏவப்படும் ஏவுகணையானது அமெரிக்காவின் கடற்படை விமானந்தாங்கி கப்பல்களை தாக்கியழிக்கும் நோக்கத்துடனேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
uss-nimitz_si
அதன் தூரவீச்சும் (1,500 கி.மீ அல்லது 900 மைல்கள்) அமெரிக்க விமானங்தாங்கி கப்பல்களின் தாக்குதல் எல்லைப்புள்ளியும் 900 மைல்களே அதாவது கிட்டத்தட்ட ஒரே அளவானது. எனவே சீனாவின் தாக்குதலில் இருந்து தனது விமானந்தாங்கி கப்பல்களை காப்பாற்ற வேண்டுமாயின் அதிக தூரவீச்சுக் கொண்ட மற்றுமொரு ஆயுதம் அமெரிக்காவுக்கு தேவையானது.

அந்த ஆயுதம் தான் விமானம்தாங்கி கப்பல்களை தளமாகக் கொண்ட ஆளில்லாத விமானங்கள்.

அமெரிக்காவின் இந்த முயற்சி கடந்த ஜுலை மாதம் வெற்றியடைந்துள்ளது. அமெரிக்க கடற்படையின் எக்ஸ்-47பி (X-47D) என்ற ஆளில்லாத தாக்குதல் விமானம் வேர்ஜினியா கடற்பகுதியில் தரித்து நின்ற யுஎஸ்எஸ் ஜோர்ச் எச் டபிள்யு புஷ் என்ற விமானந்தாங்கிக் கப்பலில் கடந்த ஜுலை 11 ஆம் நாள் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

வெளவ்வால் போன்ற இறக்கைகளை கொண்ட இந்த விமானம் 500 கிலோ எடை கொண்டதுடன், 25,000 அடி உயரத்தில் பறக்கக்கூடியது. இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன்கொண்ட இரண்டு ஏவுகணைகளை 3,200 கி.மீ தூரத்திற்கு ஏவக்கூடியது.

விமானந்தாங்கி கப்பலில் உள்ள தொமகவ் ஏவுகணைகளின் வீச்சுக்களினால் எட்டமுடியாத இலக்குகளை எட்டுவதற்காக விமானந்தாங்கி கப்பலில் தரையிறங்கும் ஆளில்லாத விமானத்தை தயாரிக்குமாறு அமெரிக்கா நோர்த்ரெப் குருமன், போயிங், லொக்கீட் மாட்டின் மற்றும் ஜெனரல் ஓடொமிக் (Northrop, Boeing, Lockheed Martin and General Atomics) ஆகிய நிறுவனங்களிடம் தனது 1.4 பில்லியன் டொலர் திட்டத்தை 2007 ஆம் ஆண்டு ஒப்படைந்திருந்தது. எனினும் நோர்த்ரெப் குருமன் நிறுவனம் வெற்றியீட்டியுள்ளது.

கடந்த மே மாதம் அமெரிக்கா ஒரு விமானத்தை பரீட்சித்த போதும் அது தரையில் தான் இறங்கியிருந்தது. ஆனால் தற்போது எக்ஸ்-47பி விமானம் முதல் முதலாக கப்பலில் தரையிறங்கியிருந்தது.

கப்பலில் தரையிறங்கும் விமானங்கள் சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக இருக்கவேண்டும், அதாவது தரையிறங்கும் விமானம் சரியான நேரத்தில் கப்பலில் உள்ள கம்பியில் தனது சங்கிலியை பிணைக்க வேண்டும் (Arrested landing). இல்லையெனில் கடலில் சென்று விழுந்துவிடும். இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றும் உள்ளன.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு விமானங்களையும் அரும்பொருட் காட்சியகத்திற்கு வழங்கும் அமெரிக்க கடற்படை இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்களை ரடார் திரைகளில் இருந்து தப்புதல் மற்றும் நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்டு தயாரிக்க உள்ளது.

3,000 கி.மீ விட்டமுள்ள தூரவீச்சுக் கொண்ட இந்த விமானங்கள் தொடர்ச்சியாக 50 தொடக்கம் 100 மணி நேரம் இயங்கக்கூடியவை. விமானிகளால் இயக்கப்படும் தாக்குதல் விமானங்களைப் பொறுத்தவரையில் அவை தொடர்சியாக 10 மணி நேரமே பறக்கக்கூடியவை.

அமெரிக்காவினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் முதலாவது விமானம் 2018 ஆம் ஆண்டே தயாராகும் என விமான நிறுவனங்கள் தெரிவித்திருந்தபோதும், அதனை விரைவுபடுத்துமாறு அமெரிக்க கடற்படை கடந்த 2011 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.

கடற்படையின் இந்த வேண்டுகொளைத் தொடர்ந்து முதலாவது பறப்பு அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்திருந்தது.

சீனா தயாரித்துள்ள ஏவுகணையின் தூரவீச்சு எல்லையை முறியடிக்கும் நிலைக்கு அமெரிக்கா நகர்ந்துள்ள நிலையில் சீனா தனது அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதாவது தனது படைத்தளங்களின் எல்லைகளை விஸ்த்தரிக்கும் முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்பொருட்டு முதலீடுகள் மற்றும் இராணுவ உதவிகள் என்ற போர்வையில் சீனா தனது பிடியை விரைவாக விஸ்த்தரித்து வருகின்றது. தென் சீனக் கடல் பிரதேசத்தின் ஹெய்னா தீவுகள் (Hainan Island) தொடக்கம் மலாக்க (Straits of Malacca) வரையிலும் சீனாவின் படை பலம் விஸ்த்தரிக்கப்பட்டுள்ளது. இதில் பங்களாதேசத்தின் சிற்றகொங் (Chittagong) துறைமுகம், பர்மாவின் சிற்றவே (Sittwe), கொகோ (Coco), கியாங்கி (Hianggyi), மேர்கூ (Mergui), மற்றும் சடேற்கி கயூன் (Zadetkyi Kyun) துறைமுகங்கள், தாய்லாந்தின் லயம் சபங் (Laem Chabang) மற்றும் கம்போடியாவின் சிகனோகிலே (Sihanoukville) ஆகிய துறைமுகங்கள் அடங்கும்.

அது மட்டுமல்லாது, இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் பாகிஸ்த்தானின் கௌடார் துறைமுகம் (Gwadar Port), மாலைதீவு, சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அரபியன் கடற்பகுதிகளிலும் சீனா வலுவாகக் காலூன்றியுள்ளது.

அமெரிக்கப் படையினரின் நீண்டதூர தாக்குதல் திறன்கொண்ட விமானந்தாங்கி கப்பல்கள் மற்றும் ஆளில்லாத விமானங்களின் தாக்குதல் திறன்களை இந்த தளங்களின் மூலம் முறியடித்துவிடலாம் என்பது சீனாவின் திட்டம்.

அதிலும் குறிப்பாக இந்து சமுத்திரப்பிராந்தியத்தை அமெரிக்காவிடம் இழந்துவிட்டால் தனது பொருளாதார மற்றும் இராணுவ பலம் முற்றாக முறியடிக்கப்படலாம் என்ற அச்சம் சீனாவை சிறீலங்காவை நோக்கி அதிகம் திருப்பியுள்ளது.

சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனது பிடிக்குள் கொண்டுவருவதன் மூலம் இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் ஆழமான நீண்டதூரப் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும் அதன் மூலம் தனது வழங்கல் பாதைகளை தக்கவைக்க முடியும் எனவும் சீனா நம்புகின்றது.

ஆனால் சிரியா மீதான போருடன் நின்றுவிடாது, உலகம் எங்கும் ஒரே சமயத்தில் போரை நிகழ்த்தும் வல்லமைக்கு அமெரிக்கா தன்னை வலுப்படுத்திவருகின்றது.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்.
சமகால படைத்துறை ஆய்வு (16.09.2013)
அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி.