seeman-balaஇன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்தேசிய உணர்வாளருமான சீமானின் திருமணம் நடைபெறுகிறது. இது அவருக்கான திருமண வாழ்த்து மடல் அல்ல. இத் தருணத்தில் ஈழத்தமிழர்களாகிய நாம் அவரது ஈழ விடுதலைப் பங்களிப்பு குறித்து திருப்பி பார்க்கும் சந்தர்ப்பமாக இதைக் கருதுகிறோம்.

சம காலத்தில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் எந்த தலைவரும் சந்திக்காத விமர்மசனங்களை சீமான் சந்தித்து வருகிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் ஈழத்தமிழர்களாகிய சிலரும் அந்த விமர்சனத்தில் கணிசமாக பங்கெடுத்து வருகிறார்கள். அதுவும் தமிழீழ தேசியத்தலைவரின் வழி நடப்பதாக சொல்லும் சில புண்ணியவான்களும் இதில் அடக்கம்.

இந்த ஒட்டு மொத்த விமர்சனங்களின் மையப்புள்ளி எது? சீமான் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் விமர்சனம் எந்த நோக்கத்திற்காக – என்ன அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றது என்பது இங்கு முக்கியமானது.

இந்த பதிவில் தமிழகப்பரப்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை. அத்தோடு தமிழ்தேசிய விடுதலைப்போராட்டத்தை எதிர்க்கும் ஈழத்தமிழ்ப் பரப்பின் விமர்சனங்களையும் கணக்கிலெடுக்கவில்லை.

தமிழீழத்திற்காக போராடும் அல்லது தமிழீழ விடுதலையோடு தம்மை ஒன்றிணைத்திருக்கும் ஒரு தரப்பு சீமானை விமர்சனம் செய்வதைத்தான் நாம் இங்கு கேள்விக்குள்ளாக்க விரும்புகிறோம்.

மே 18 இற்கு பிறகு இங்கு “தடி எடுத்தவன் எல்லாம் சண்டைக்காரன்” என்ற நிலை. உண்மைகள் பொய்யாகவும் பொய்கள் உண்மையாகவும் வலம் வரும் ஒரு சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எமது நேச சக்திகளைக்கூட இனங்காண முடியாமல் அல்லது இனங்காண விடாது தடுக்கும் ஒரு நிகழச்சி நிரலுக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம். அப்படி நாம் இனங்காணத் தவறிய அல்லது அதற்கான முக்கியத்துவத்தை கொடுக்க தவறிய ஒரு ஆளுமைதான் சீமான். மாறாக ஈழத்தமிழ் பரப்பிலிருந்தே சில முட்டாள்களின் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுகொண்டிருக்கிறார்.

தமிழீழத்தின் விடுதலை என்பது தமிழகத்தில் தங்கியிருக்கும் ஒரு அரசியல் – இராஜதந்திர அம்சம். மே 18 இற்கு பிறகு இதில் மேலும் கணிசமான இடம் தமிழகத்திற்கு போய் விட்டது.

எனவே தமிழக அளவில் போராட்ட அரசியல் இராஜதந்திர வழிமுறைகள் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் புரட்சி இலிருந்து ஆட்சியை கைப்பற்றுவது வரை இறங்கி வேலை செய்ய வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான ஒரு நெருக்கடி.

இந்த புரிதலின் அடிப்படையில்தான் 2007 தொடக்கத்தில் தலைவர் பிரபாகரன் – சீமான் சந்திப்பு நிகழ்கிறது. தமிழகத்தில் வைகோ, நெடுமாறன் போன்ற தீவிர ஆதரவு சக்திகள் இருந்தாலும் காலத்தின் தேவை கருதி ஒரு இளைய போராட்ட தலைமுறை ஒன்றை உருவாhக்கும் நோக்கத்தில் பல பரிமாணங்களின் அடிப்படையில் சீமானை தலைவர் தேர்ந்தெடுக்கிறார்.

கிட்டத்தட்ட தலைவர் தமது இராணுவ பின்னடவை உணர்ந்த பின் நடந்த சந்திப்பு இது என்பதுதான் இங்கு முக்கியமானது. உண்மையில் தமது அழிவுக்கு பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதே சீமானுக்கு மறைமுகமாக உணர்த்தப்பட்டது. தலைவரின் தூர நோக்கிலான சிந்தனையில் விளைந்ததே அந்த சந்திப்பு.

ஆனால் மே 18 இற்கு பிறகு குழு – கும்பல்களாக பிளவுபட்ட நாம் தமிழகத்திற்குள்ளும் அதை கொண்டு நகர்த்தி அங்கும் பிளவுகளை விரிவுபடுத்தியதுதான் நமது சாதனை. விளவாக சீமான் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுகொண்டிருக்கிறது.

சீமான் மீது அவரது அரசியல் பிரவேசத்தினால் அவர் வெளியிட்டிருக்கும் கொள்கை பிரகடணத்தால் தமிழக அளவில் சில விமர்சனங்கள் எழுவது யதார்த்தமானது. ஆனால் ஈழத்தமிழர்களாகிய எமக்கு அவர் மீது விமர்சனம் வைப்பதற்கான முகாந்திரம் எது?

மே 18 இற்கு பிறகு எமது தலைவர்கள் மற்றும் அமைப்புக்கள் அடித்த பல்டியை விட சீமான் என்ன பல்டி அடித்து விட்டார். ஆனந்தசங்கரிக்கும் சித்தார்த்தனுக்கும் முன்னாள் போராளிகள் வாக்கு சேகரிக்கும் விபரீதமான சூழலுக்குள் நாம் வந்திருக்கோம்.

எனவே நேச சக்திகளை ஏன் நாம் விமர்சிக்க வேண்டும்? புறந்தள்ள வேண்டும்? இது அரசியல் சாணக்கியமா?

தலைவர் போர் முற்றி தமது பின்னடவை முன்னுணர்ந்த பின் மிகவும் ஆபத்தான கடற்பயணம் ஒன்றினூடாக ஏன் சீமானை வரவழைத்தார்? என்ன பல்லாங்குழி விளையாடவா? கொஞ்சம் மனம் விட்டு யோசித்தால் சில உண்மைகள் புரிய வரும்..

தமிழகத்தில் இல்லாவிட்டாலும் புதுவையின் ஆட்சியை “நாம் தமிழர்” கைப்பற்றும் என்று அரசியல் அவதானிகள் ஆருடம் கூறியிருக்கிறார்கள். இது எமது விடுதலை சார்ந்து ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கும்.

இன்று சீமான் உருவாக்க நினைக்கும்; அல்லது சாதிக்க நினைக்கும் பல வேலைத்திட்டங்கள் “தமிழீழத்தை” நோக்கியது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்று தமிழக அளவில் சீமான் போட்டிருப்பது ஒரு புள்ளி. அவரால் முடியாவிட்டாலும் அடுத்த தலைமுறை அதை சாதிக்கும் என்று நாம் நம்புகிறோம்.

எனவே சீமானிடம் இருக்கும் முரண்பாடுகளுடன் சேர்த்து நாம் அவரை அரவணைக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். எனவே அவரை விமர்சிப்பதை தவிர்த்து ஆரோக்கியமான உரையாடலாக அதை மாற்றி அவரை எமது விடுதலைக்கு உழைக்கும் ஒரு ஆளுமையாக வளர்த்தெடுப்போம்.

ஈழம் ஈ நியூஸ்.