நாடாளுமன்றத் தேர்தலைக் காணும் இந்த ஆண்டில், ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட காங்கிரஸ், படுதோல்வியைச் சந்திக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்கள் காப்பாற்றப்படவும், ஊழல் அற்ற அரசியல் வெற்றி பெறவும் சூளுரைப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி…

ஆதி அந்தம் இல்லாத கால வெள்ளத்தில், எழுந்து விழும் அலைகளுள் ஒன்றாக எழுகிறது 2014 ஆம் ஆண்டு.

விண்ணில் பறந்து, நிலவில் கால் பதித்து, செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யும் அளவுக்கு அறிவியலில் மனிதன் சாதனை புரிந்தான்.ஆனால், இயற்கையின் அற்புதப் படைப்பான சுற்றுச் சூழலை மாசுபடுத்தி நாசமாக்கியதால் அச்சுறுத்தும் அபாயம்; பசியின் பிடியிலும், நோயின் மடியிலும் துன்புறும் கோடிக்கணக்கான மக்கள்; மனித உரிமைகளை நசுக்கி, தேசிய இனங்களை ஒழிக்கத் துடிக்கும் இனவாத அடக்குமுறை; அரசியலில் தமிழகத்திலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் தலைவிரித்து ஆடுகின்ற ஊழல் இவையெல்லாம் நாம் எதிர்கொள்ளும் அறைகூவல்கள்.எனவே, சுற்றுச் சூழலைக் காக்கவும், பசி இல்லாத, நோய் இல்லாத வாழ்வைப் பெறவும், மனித நேயம் எங்கும் தழைக்கவும், பூக்கும் புத்தாண்டில் வழி அமைப்போம்.நாடாளுமன்றத் தேர்தலைக் காணும் இந்த ஆண்டில், ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட காங்கிரஸ், படுதோல்வியைச் சந்திக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்கள் காப்பாற்றப்படவும், ஊழல் அற்ற அரசியல் வெற்றி பெறவும் சூளுரைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.