oil-chunnakamசுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் வெளியேறும் கழிவு எண்ணெயினால் சுன்னாகம் மட்டும் அல்லாமல் அதன் அயற்கிரமங்களுக்கு அப்பால் வடக்கே ஏழாலையையும் தாண்டி விட்டது. தெற்கே தாவடிவரையும் வந்து விட்டதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பின் அளவை அறிந்து கொள்ள முதலே அது மிக வேகமாக எல்லா இடமும் பரவி மக்களால் கட்டுப்படுத்த முடியாத எல்லையை கடந்து விட்டது. வெறும் கிணற்று தண்ணியை அப்படியே அள்ளி குடித்த மக்கள் அந்த தண்ணியை கையாலே தொடவே அஞ்சி நிற்கிறார்கள்.

 

இது ஒரு மிக தீவிரமான பிரச்சனை என்பதை இன்னமும் உணராமலே எல்லோரும் இன்னமும் இருக்கிறார்கள் அல்லது இருப்பது போல தெரிகிறது.’கழிவு ஒயில்’ பிரச்சினை என்பது ஒன்றும் சாதாரணமானதல்ல. கொடிய விடம் அது. யாழ்ப்பாணத்தையே பூண்டோடு அழிக்கக்கூடியது. இதுவரை சுமார் 1200க்கு மேற்பட்ட கிணறுகளில் சுண்ணாகம் மின்சார நிலையத்தினால் நிலத்துக்குள் விடப்படும் கழிவு ஒயில் கலந்துள்ளது ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது. இது தனியே குடிநீர் பிரச்சினை மட்டுமல்ல.

 

1) இதிலுள்ள ஆசனிக் எனும் நச்சுப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும்.

 

2) இதில் உள்ள ஈயம் இலகுவில் உடலில் கல்நது உறுப்புச்செயற்பாட்டு குறைபாடுகளை ஏற்படுத்தும் அதே வேளை மூளை வளர்ச்சி குறைந்த பிள்ளைகள் பிறக்க ஏதுவாகும்.

 

3) இந்த தண்ணீரை குடிக்க மட்டுமன்றி விவசாயத்துக்கோ அல்லது கால்நடைகளிற்கோ கூட கொடுக்கலாகாது. இந்த நீரில் விளைந்த தேங்காயில்இ இந்த நீர் குடித்த கோழி முட்டையில்இ பசுவின் பாலில் கூட 100 வீதம் உத்தரவாதமாய் இந்த கொடிய நஞ்சுகள் இருக்கும். அதற்கு முன் அந்த உயிரினங்கள் உயிர்வாழுமா? என்பதே சந்தேகந்தான்
.

 

4) குறிப்பாக சொல்லப்போனால் பாரிய விவசாயப்பிரதேசமான சுண்ணாகம், மல்லாகம், தெல்லிப்பளை, இணுவில் (தற்போது அங்கும் ஒயில் சென்று விட்டது) போன்ற பகுதிகளில் விளையும் உணவுப்பொருட்கள் எவையுமே பாதுகாப்பற்றவை என்ற நிலை.

 

5) இந்நீரில் குளித்தல்கூட தோல்புற்று உட்பட்ட பாரிய நோய்களை தோற்றுவிக்கும்.

 

6) நகர சபை இநீர் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகம் மட்டுமே நடைபெறுகிறது எனவே விவசாயம்இகுளித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் என்ன செய்வார்கள்.?

 

7) பொறுத்திருக்கும் ஒவ்வொரு நாளும் மண்ணும் சூழலும் விசமாகிக்கொண்டே செல்கிறது.

 

இதன் விளைவுகள் மக்களை சென்றடைவதற்குள் இந்தப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப் படவேண்டும். ஆனால் எப்படி?? யாரால்?? என்பதே மில்லியன் டொலர் கேள்வியாகவிருக்கிறது.

 

இந்த கேள்விகளுக்கு விடை கூற முதல் இந்தப் பிரச்சனை தீவிரமாக்க படாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று பார்க்க வேண்டும்.யாழ் மாவட்டத்துக்குத் தேவையான மின்சாரம் இங்கே இருந்து தான் கிடைக்கிறது. இந்த பிரச்சனை தீவிரமாக்கப்படும் பட்சத்தில் மின்சாரம் இல்லாமல் போய்விடும் அல்லது சில காலத்துக்காவது இல்லாமல் போய்விடும் என்ற ஒரு பயம் மக்களிடையே காணப்படுவதையும் கூறலாம்.

 

ஆனால் உண்மையான சமூக அக்கறை உள்ளவர்கள் அல்லது சமூகத்துக்கு விழிப்புணர்வு ஊட்டிக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் அன்றே எதிர்த்திருக்க வேண்டும். மக்கள் குடியிருப்பு மிகநெருக்கமாகவுள்ளதும் யாழ் தீபகற்பத்திலேயே நீர் வளம் அதிகமுள்ளதும் விவசாயத்திற்கு மிகவும் உகந்த நிலப்பரப்பைக் கொண்டதுமான வலிகாமத்தின் மத்திய பகுதியில் இவ்வளவு பெரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுதல் எதிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

 

அதன் விளைவுகள் பற்றி அன்றே மக்களுக்கு எதிர்வு கூறப்பட்டிருக்க வேண்டும். இதில் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலை என்னவென்றால் அறிவு ஜீவிகளின் கூடாரமாகிய (?) எமது யாழ்.பல்கலைக்கழகமோ அல்லது அதன் துறைசார் நிபுணர்களோ இந்த அனர்த்தம் பற்றி எந்தவிதமான ஆய்வுகளோ அல்லது விழிப்பணர்வு நடவடிக்கை செய்யாமலிருப்பதுதான்.

 

அதுமட்டுமன்றி அரசு அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்கள் கூட இவ்விடயத்தில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதே யதார்த்தம்.
இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும் இந்த மின்நிலையம் அமைக்கப்பட்டபோது அது தொடர்பிலான சுற்றப்புற சூழல் ஆய்வறிக்கை மற்றும் சாத்தியக்கூற்றறிக்கை எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

 

மேலும் மின்சாரசபையின் தமிழ் அதிகாரிகளுக்கு இந்த கழிவு ஒயில் எவ்வாறு அகற்றப்படுகிறது எனத்தெரியாதா? சரி அதனைத்தடுப்பது தங்கள் கைகளை மீறிய விடயமாகவிருக்கலாம். ஆனால் அதனை வெளியே சொல்லாமல் மறைப்பீர்களா? கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கவேண்டாமா? பதவிகளை தக்கவைக்கவா அல்லது முன்னைய அரசுக்கு உங்கள் விசுவாசத்தைக்காட்டவா? அல்லது பயத்தாலா?

 

யாழ்ப்பாணத்தை பாலைவனமாக்கினால் இங்குள்ள தமிழரெல்லாம் யாழ்ப்பாணத்தைவிட்டு சென்றுவிட்டால் தமிழரின் போராட்டம் நசிந்துவிடும் என்றெண்ணி மகிந்தவினால் செய்யப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பின் ஒரு பாகமா? இவை எல்லாவற்றையும் மிகத்தீவிரமாக ஆராயப்படவேண்டும்.

 

இங்கு ஒரு முக்கியமான விடையத்தைக் கூறியாகவேண்டும். அதாவது இந்த விடயம் தொர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது வரை மெத்தனமாக இருப்பதேன்? பொதுவாகவே மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் பொறுபற்று இருப்பவர்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அத்துடன் இவ்விடயத்தை வரவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு சூடான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த எண்ணியிருப்பதாகவும் பேச்சடிபடுகிறது.

 

அத்துடன் ஊடகங்களும் இதனை பெரியளவில் மக்கள் முன் கொண்டுவரவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. எது எப்படியிருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில போரட்டங்கள் இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அதன் வீரியம் போதாது. இன்னும் பெரும் வீச்சுடன் அவை முன்னெடுக்கப்படவேண்டும்.

 

அவர் இவர் என்ற பேதமின்றி எல்லோரும் சேரவேண்டும். பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தனியார் துறையினர் என்று எல்லோரும் ஓரணியில் திரண்டு

 

ஏனெனில் ‘தூய நீர்’ வாழ்வாதாரத்தின் உயிர். அதனை நாம் நுகர மட்டுமல்ல நம் எதிர்காலச் சந்த்திக்கும் விட்டுச்செல்ல வேண்டும். ஊர் கூடி வடம் பிடித்தால் தேரசையும்.

 

‘நீரின்றி அமையாது உலகு’

 

தமிழர் எழுச்சி இயக்கம்