சுயநிர்ணய உரிமைக்காக தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்த வட மாகாண சபைத் தேர்தல்!

0
571

நடந்து முடிந்த வட மாகாண சபைக்கான தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மிகப்பெரியளவில் வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிப்பதற்கான தமது விருப்பை மீண்டும் ஒரு முறை பலமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளனர்.

தமிழ் தேசியப் பிரச்சனையையும்,தொடரும் மனித உரிமை மீறல்களையும், தீர்ப்பதாயின் தமிழ் மக்கள், தாம் எவ்வாறு, யாரினால் ஆளப் படவேண்டுமென்று தீர்மானிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்; வட மாகாண வாக்காளர் வழங்கிய செய்திக்கு சர்வதேச சமூகம் செவிமடுக்க வேண்டுமென்று பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது.

வட மாகாண சபை (NPC) என்பது ஒரு வலுவற்ற, மிக சொற்பமான அதிகாரமே கொண்ட அமைப்பென்பது பரவலாகவே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, மிச்சமிருந்த ஒரு சில அதிகாரங்களைக் கூட, பறித்தெடுக்கப் போவதாக இலங்கையரசு பகிரங்கமாகவே அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்தத் தேர்தலானது, ஒரேயொரு காரணத்திற்காக வரலாற்று ரீதியான, முக்கியத்துவம் அடைகிறது, முள்ளிவாய்க்கால் மண்ணில் எமது மக்கள் மீது 2009ல் கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய கொடூரங்களின் பின்னர், வட மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள், பின்வரும் தெரிவுகலில் ஒன்றை செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது;

அ) 1977 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில், சுய நிர்ணய உரிமை வேண்டி, மக்கள் கொடுத்த ஆணையினை, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதன் மூலம் மீளுறுதி செய்தல்; அல்லது

ஆ) சிங்கள ஆதிக்கம் நிறைந்த, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிப்பதன் மூலம், சுய நிர்ணய உரிமைக்கான தமது விருப்பை கை விடுதல்.

இத் தேர்தலில் 38 ஆசனங்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை கைப்பற்றியதன் மூலம், தமிழ் மக்களின் தெரிவு என்ன என்பது ஐயத்திற்கிடமின்றி வெளிப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்றும், அதனை அண்மித்த காலங்களிலும், பரவலாக கட்டவிழ்த்துவிடப்பட்ட, அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியிலும், மக்கள் பெருவாரியாக, தமிழ் ஆட்சிக்கு ஆதரவு வழங்கியது மிகவும் குறிப்பிடத்தகது.
உதராணமாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவரின் படுகொலை, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் குழப்பம் விளைவித்தது, மற்றும் கூட்டங்களுக்கு செல்வோரை அச்சுறுத்தியது, போட்டியாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அதனை விசாரிக்க சென்ற தேர்தல் கண்காணிப்பாளரை தாக்கியது, அடையாளம் காணப்படாத, ஆயுததாரிகளினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின், சுவரொட்டிகள் அகற்றப்பட்டதுடன், வாக்களர்கள் அச்சுறுத்தப்பட்டது, வேட்பாளர்கள் பற்றிய போலிச் செய்திகள் தாங்கிய, போலிப் பத்திரிக்கையைப் பிரசுரித்து, விநியோகம் செய்தமை மேலும், மக்களுக்கு ‘கையூட்டு’ மற்றும் ‘உள்கட்டுமான, அபிவிருத்திகள்’ செய்து தருவதாக, வெட்கமற்ற முறையில் பரப்புரை செய்தமை.

‘லஞ்சம்’ மற்றும் ‘அச்சுறுத்தல்களுக்கு’ முகம் கொடுக்க வேண்டியிருந்தும், தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு அளித்த இந்த பாரிய தோல்வியானது, தமிழ் மக்கள் தங்கள் கொள்கை மீது வைத்திருந்த பற்றிற்கும், அவர்களின் தைரியத்திற்கும் சாட்சியமாகிறது.

தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகங்களின் முன்னிலையிலேயே, தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மக்கள் உள்ளாக்கப்பட்டமை, தாயகத்தில் வாழும் எமது உறவுகளுக்காக, புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது, புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழகத்தின் ஒருமித்த ஆதரவு எம் மக்களை வலுப்படுத்தும்.

சர்வதேசம் தமிழ் மக்கள் விரும்பும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல், பாராமுகம் காட்டி வருகிறது. மாறாக, சர்வதேச சமூகமானது, இலங்கையரசினால் நடாத்தப்படும் அனைத்துக் கொடுமைகளையும், ‘மனித உரிமை மீறல்கள்’ மற்றும் ‘நல்லாட்சி’ என்ற வரைமுறைகளுக்குள் மட்டுமே வைத்து நோக்குகிறது.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக முன்வைக்கும், இனவழிப்பு குற்றச்சாட்டினை, சர்வதேசம் மிகைப்படுத்தப்பட்டதாக கருதி தட்டிக்கழித்து வருகிறது.

ஆயினும், இத்தேர்தல் முடிவுகளின் பின்னராவது, பெரும்பான்மையான தமிழ் மக்களின் விருப்புக்கு செவி சாய்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சர்வதேச சமூகம் உள்ளது. பல்லாண்டு காலமாகவே, வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கல் உள்ளிட்ட கட்டபைப்பு ரீதியான இன அழிப்பிற்குள்ளாகி வரும் தமிழ் மக்கள் விரும்புவது, தம்மை தாமே ஆளும் உரிமையே ஆகும்.

மேலும், படு தோல்வியை தழுவிக்கொண்ட இலங்கையரசு, ஆத்திரமடைந்து பாலியல் மற்றும் உடலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேலும் அதிகரிக்கலாம், தமிழ் மக்களின் நிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் பெரியளவில் அபகரிக்கப்படலாம். இப்படியான, இனவழிப்பு நடவடிக்கைகளிலிருந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு தேவை. அத்துடன், இதுவரை நடைபெற்ற இனவழிப்பை விசாரிக்க, சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படல் வேண்டும்.

வட-கிழக்கு மக்கள், அதிகரித்துக் கொண்டிருக்கும் ஆபத்தினை எதிர்கொண்டு வாழும் சூழ்நிலையில், சர்வதேசம் தமிழ் மக்களோடும், தமிழ் மக்களால் ஆணை வழங்கப்பட்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்போடும் இணைந்து, தமிழ் மக்களினது மனித உரிமை, அரசியல் உரிமை மற்றும் கலாச்சார உரிமைகளையும் அவர்கள் விரும்பும் சுயநிர்ணய உரிமையை வழங்கி, சிறிலங்கா அரசின் இனவழிப்பிலிருந்து அவர்களை பாதுகாப்பதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அவசியாமாகிறது,

மேற்படி நோக்கங்களுக்காக செயற்படும்,அமைப்புகளோடோ அல்லது தனி நபர்களுடனோ பிரித்தானியத் தமிழர் பேரவை, தோளோடு தோள் கொடுத்து நிற்கும்.