சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறி முறையை உருவாக்குங்கள்; இலங்கை தொடர்பில் அமெரிக்க செனட்டில் தீர்மான வரைவு

0
654

usaஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட உள்ள பிரேரணைக்கான முன்னோடி வரைவு அமெரிக்க செனட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் இணைந்து சுயாதீனமான சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தத் தீர்மான வரைவு வலியுறுத்தி உள்ளது.

வடகரோலினா மாநிலத்துக்கான செனட்டர் ரிச்சர்ட் புர், இலங்கை தொடர்பான தீர்மா னத்தின் வரைவை அமெரிக்க செனட்டில் கடந்த 6ஆம் திகதி சமர்ப்பித்தார்.

“நீடித்த சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான – இலங்கைக்குள் இனநல்லிணக்கம், மீள்குடியமர்வு, உள்ளக ரீதியில் மீளக்கட்டியெழுப்புதல் என்பவற்றுக்கு ஆதரவை வெளிப்படுத்தல்’ என்ற தலைப்பில் தீர்மான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. செனட்டர்கள் ரொபேர்ட் காஸி, பற்றிக் லெகே, ய­ரோட் பிரவுண், பார்பரா பொக்ஸர், ஜோன் கார்னின் ஆகியோர் இந்தத் தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்கி அதனை செனட்டில் சமர்ப்பித்தனர்.

போரின் போதும் அதன் பின்னரும் இரு தரப்புகளாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் என்பன குறித்து சுயாதீனமான சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறை ஒன்று அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்தால் உருவாக்கப்படவேண்டும் என்று தீர்மான வரைவு கோருகின்றது.

அதில் மேலும் கோரப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன:

ஊடகங்கள், சர்வதேச மனிதாபிமான தொண்டு அமைப்புகள், மனித உரிமைகள் குழுக்கள் என்பன இலங்கையின் எப்பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்று வருவதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். போர்க் கைதிகள் மற்றும் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்குள்ளும் அனும திக்கப்படவேண்டும்.

வடக்கு – கிழக்குக்கு தகவல்கள் சென்று சேர்வதற்கான தடைக்கற்களை அகற்றி ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கும்படி இலங்கை அரசைக் கோரவேண்டும். அத்துடன் பத்திரிகையாளர்கள் மீதும் பத்திரிகை நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

அமெரிக்காவின் அக்கறைக்குரிய மனித உரிமைகளை மதித்தல், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய விடயங்களைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் இலங்கை தொடர்பில் அமெரிக்க அதிபர் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு தீர்மான வரைவு வலியுறுத்தியுள்ளது.

நன்றி: உதயன்